அதிகாரத்தைப் பாழாக்காதீர்!

இஸ்லாமிய மார்க்கம் என்பது முழுமையான வாழ்க்கை நெறி. வாழ்வோடு தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் பேசுகின்ற இந்த மார்க்கம், சமூகத்தின் அனைத்து மட்டத்திலுள்ள மக்களுக்கும் தெளிவான வழிகாட்டல்களை வழங்குகிறது.

அந்த வகையில் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தேவையான அறிவுரைகளும், எச்சரிக்கைகளும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு பார்க்கவிருக்கிறோம்.

உயர்வளிப்பவன் அல்லாஹ்வே!
ஒன்றுக்கு மேற்பட்ட மக்கள் எங்கு இணைந்து செயல்படுகிறார்களோ அங்கு சிலர் அதிகாரம் செலுத்தும் இடத்திலும், சிலர் கட்டுப்படும் இடத்திலும் இருக்கிறார்கள். அனைவருக்கும் அனைத்தையும் இறைவன் கொடுப்பதில்லை. அதிகாரம் செலுத்தும் இடத்தில் அமரும் வாய்ப்பை இறைவன் தான் நாடியவர்களுக்கு வழங்குகிறான்.

அவனே உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கினான். அவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக உங்களில் சிலரை விட சிலருக்குத் தகுதிகளை உயர்த்தினான். உமது இறைவன் விரைவாகத் தண்டிப்பவன்; அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 6:165

உமது இறைவனின் அருட்கொடையை அவர்கள்தான் பங்கிடுகிறார்களா? இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் வாழ்க்கை வசதிகளை நாமே பங்கிடுகிறோம். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பணியாளராக ஆக்குவதற்காகச் சிலரை விட சிலரின் தகுதிகளை உயர்த்தினோம். அவர்கள் திரட்டுவதைவிட உமது இறைவனின் அருள் சிறந்தது.
திருக்குர்ஆன் 43:32

இவர் ஆட்சியில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது அதற்கு மாற்றமாக நடக்கும். எவர் ஆட்சிக்கு வரவே கூடாது என்று நினைக்கிறோமோ அவர் வந்துவிடுவதுண்டு. இதெல்லாம் இறைவனின் ஏற்பாடு, நாட்டம் என்ற புரிதல் நம்மிடம் இருக்க வேண்டும்.

அதிகாரம் பற்றி விசாரிக்கப்படும்
மனிதர்களில் சிலருக்குத் துன்பங்களைக் கொடுத்து இறைவன் சோதிப்பான். சிலருக்குக் கல்வி, செல்வம் போன்ற அருட்கொடைகளை அள்ளிக் கொடுத்து சோதிப்பான். அவ்வாறு தரப்படும் அருட்கொடைகளுள் ஒன்றுதான், அதிகாரம் என்பது. அந்த அருட்கொடை பற்றியும் இறைவன் மறுமையில் விசாரிப்பன்.

பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 102:8

அனைவரும் விசாரிக்கப்படுவோம்
நாட்டுக்குப் பிரதமராக, மாநிலத்திற்கு முதலமைச்சராக இருப்பவர்கள் மட்டும்தான் தமது அதிகார விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று எண்ணிவிடக் கூடாது. மனிதன் ஏதேனும் ஒரு இடத்திலாவது அதிகாரம் செலுத்தும் இடத்தில் இருக்கவே செய்கிறான்.

அந்த அதிகாரம் வெளிவாழ்விலும் இருக்கலாம். தனிப்பட்ட வாழ்விலும்கூட இருக்கலாம். எங்கு இருந்தாலும் சரி! தமக்குரிய அதிகாரம் எனும் பொறுப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவற்றைச் சரியாகக் கையாள வேண்டும். இது பற்றி இறைவன் விசாரிப்பான் என்று நபிகளார் நமக்கு எச்சரித்து இருக்கிறார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர்தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 7138

கீழிருப்போரிடம் வரம்பு மீறாதீகள்!
ஒருவர் அதிகாரம் செலுத்தும் இடத்தில் இருப்பதால் தம்மைத் தாமே அவர் பெருமையாக எண்ணிக் கொள்ளக் கூடாது. சிலர் தங்களது திறமையால், உழைப்பால் இந்த அதிகாரம் கிடைத்தது என்று பெருமிதப்பட்டுக் கொள்கிறார்கள்.

இதனால் தமக்குக் கீழுள்ளவர்களிடம் எல்லை மீறும் நபர்களாக மாறி விடுகிறார்கள். தமது பொறுப்புக்கு உட்பட்ட ஆட்களைக் கேவலமாக என்ணுவதும் இழிவாக நடத்துவதும் என்று வரம்பு மீறி விடுகிறார்கள். இத்தகைய போக்கை நபிகளார் கடுமையாகக் கண்டித்து இருக்கிறார்கள்.

மஉரூர் பின் சுவைத் அவர்கள் கூறியதாவது: நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) ‘ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர்மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமைமீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எஜமானரும் ஒரேபோல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:
“நான் ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசிவிட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள் “அபூதர்! அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின்கீழ் கொண்டு வந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (30)

இறைவன்தான் நமக்கு அதிகாரம் அளித்து, கண்ணியத்தை அளித்திருக்கிறான் என்பதை உணர்ந்து, கீழிருக்கும் மக்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஊதியம் போன்ற அவர்களுக்குரிய உரிமைகளை சரிவரக் கொடுத்து விட வேண்டும்.

அவர்களின் சக்திக்கு மீறிய வேலைகளைக் கொடுத்து அவர்களை வதைக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக வேலையைக் கொடுத்ததோடு ஒதுங்கிக் கொள்ளாமல் அந்த வேலையை அவர்கள் சரிவரச் செய்வதற்கு ஆலோசனை அளிப்பது, ஒத்தாசையாக இருப்பது போன்ற காரியங்களை நபிகளார் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இரக்கம் காட்டுங்கள்!
அடுதவர்களுக்கு ஆணையிடும் இடத்தில் இருப்பவர்கள் தங்களது பொறுப்புக்குக் கீழுள்ள மக்களிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக நம்மிடம் கைகட்டி வேலை செய்பவர் தானே! கைநீட்டி ஊதியம் வாங்குபவர் தானே என்று எண்ணிக் கொண்டு கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. இதோ நபிகளாரின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் (அன்றைய பஸ்ராவின் ஆட்சியராயிருந்த) உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் சென்று, “அன்புக் குழந்தாய்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நிர்வாகிகளில் மிகவும் மோசமானவர், இரக்கமற்ற கல் நெஞ்சக்காரர்தாம்’ என்று கூறியதை நான் கேட்டேன். அவர்களில் ஒருவராக நீ ஆகிவிட வேண்டாம் என உன்னை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹசன் பின் அபில்ஹசன் யசார்
நூல்: முஸ்லிம் (3736)

பொறுப்பில் தேவை பொறுப்புணர்வு!
எந்தப் பணியைச் செய்வதற்காகப் பொறுப்பு வழங்கப்பட்டதோ அதில் அவர் கவனமாக இருக்க வேண்டும். அந்த இடத்தில் இருந்து செய்ய வேண்டிய பணிகளை, சேவைகளை சிறப்பாகச் செய்ய வேண்டும். அதற்கு வாய்ப்பு இருந்தும் தட்டிக் கழிப்பவர்கள் விஷயத்தில் அல்லாஹ்வும் அவ்வாறு நடந்து கொள்வான் என்று நபிகளார் எச்சரித்து இருக்கிறார்கள்.

“முஸ்லிம்களின் விவகாரங்களில் ஏதாவது ஒன்றை ஒருவருக்குப் பொறுப்புக் கொடுத்து, அவர், மக்களின் தேவைகளை, அவசியத் தேவைகளையும் வறுமைகளையும் (கண்டு கொள்ளாமல்) தடுத்துக் கொண்டால் அவரது தேவைகளையும், அவசியத் தேவைகளையும், வறுமையையும் அல்லாஹ் கண்டுகொள்ளாமல் தடுத்துவிடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி),
நூல்: அபூதாவூத் (2559)

ஆட்சி மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அந்தப் பொறுப்பைக் கொண்டு மக்களுக்கு நல்லது செய்வதற்குப் பதிலாகத் துன்பம் விளைவிப்பதைப் பார்க்கிறோம். சுயநலத்திற்காக அந்தப் பதவியை தவறாகப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். என்ன நேர்ந்தால் நமக்கென்ன என்று அதை அலட்சியமாகக் கையாண்டு, அடுத்தவர்களுக்கு அநீதி இழைப்பதை, சிரமம் ஏற்படுத்துவதைப் பார்க்கிறோம். இதை நபிகளார் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, “இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்கு உள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 3732

பொறுப்பை வீணடிக்க கூடாது
அதிகாரம் செலுத்தும் வகையில் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் சரி! அதில் சரிவர செயல்பட வேண்டும். பொடும்போக்குத் தனமாக இருந்து கொண்டு அந்தப் பொறுப்பை வீணாக்கி விடக் கூடாது. இதுகுறித்து நபியவர்கள் கடுமையாக எச்சரித்து இருக்கிறார்கள்.

தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்” என்று நபியவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலீ)
நூல்: அபூதாவூத்1442

சொர்க்கம் செல்வது தடைபடும்
அதிகாரம் செலுத்தும் இடத்தில் இருப்பவர்கள் அதைக் கொண்டு, தமக்குக் கீழிருப்போரின் நலனைக் காக்க வேண்டும். இல்லையெனில் மறுமையில் மோசமான சூழலில் சிக்க வேண்டியிருக்கும். இதோ நபிகளாரின் கூற்றைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்’ என்று சொல்ல கேட்டேன்’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஅகில் இப்னு யஸார் (ரலி)
நூல்: புகாரி 7150, முஸ்லிம் 229

‘முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரனால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஅகில் இப்னு யஸார் (ரலி)
நூல்: புகாரி 7151, முஸ்லிம் 227

சிறு பொறுப்பில் இருந்து பெரும் பொறுப்பு வரை எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அந்த அதிகாரத்தைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும். அதைக் கொண்டு நல்லது செய்ய வேண்டுமே தவிர ஒருபோதும் அடுத்தவர்களுக்கு அநீதி இழைத்துவிடக் கூடாது. இல்லையெனில் இறைவனின் கோபப் பார்வைக்கும் தண்டனைக்கும் ஆளாகிவிட வேண்டியிருக்கும். ஆகவே அனைவரும் நம்மால் இயன்றளவு பொறுப்புணர்ந்து செயல்படுவோமாக!