அத்தூர் – தூர் மலை

அத்தியாயம் : 52

வசனங்களின் எண்ணிக்கை: 49

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. தூர் மலையின்மீது சத்தியமாக!
2, 3, 4. விரிக்கப்பட்ட மென்தோலில் எழுதப்பட்ட வேதத்தின்மீது சத்தியமாக! பைத்துல் மஃமூர்மீது சத்தியமாக!504
5. உயர்த்தப்பட்ட முகட்டின்மீது சத்தியமாக!
6. பொங்கும் கடல்மீது சத்தியமாக!
7. உமது இறைவனின் தண்டனை நிறைவேறியே தீரும்.
8. அதைத் தடுப்பவர் யாருமில்லை.
9. அந்நாளில் வானம் மிகக் கடுமையாக நடுங்கும்.
10. மலைகள் அடியோடு பெயர்ந்து செல்லும்.
11. பொய்யெனக் கூறியோருக்கு அன்று கேடுதான்.
12. அவர்கள் வீணானவற்றில் விளையாடுகின்றனர்.
13. அந்நாளில் அவர்கள் நரக நெருப்பில் கடுமையான முறையில் தள்ளப்படுவார்கள்.
14. நீங்கள் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்த அந்த நரகம் இதுதான்.
15, 16. “இது சூனியமா? அல்லது நீங்கள் பார்க்கவில்லையா? இதில் நீங்கள் கருகுங்கள்! (இதை) நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்! அல்லது பொறுத்துக் கொள்ளாதிருங்கள்! (இரண்டும்) உங்களுக்குச் சமமே! நீங்கள் செய்து கொண்டிருந்ததற்குத்தான் உங்களுக்குக் கூலி தரப்படுகின்றது” (என்று கூறப்படும்.)
17. இறையச்சமுடையோர் சொர்க்கங்களிலும், இன்பத்திலும் இருப்பார்கள்.
18. அவர்களின் இறைவன், அவர்களுக்கு வழங்கியவற்றின் மூலம் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களின் இறைவன், நரக வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி விட்டான்.
19. “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்காக மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்!” (என்று கூறப்படும்.)
20. வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களின்மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு ஹூருல் ஈன்களை இணைகளாக்குவோம்.
21. யார் இறைநம்பிக்கை கொண்டார்களோ அவர்களையும், அவர்களை இறைநம்பிக்கையில் பின்பற்றிய அவர்களின் வழித்தோன்றல்களையும் (சொர்க்கத்தில்) சேர்த்து வைப்போம். அவர்களின் செயல்களில் எதையும் அவர்களுக்குக் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றுக்கே பிணையாக்கப்பட்டுள்ளான்.
22. அவர்கள் விரும்பும் பழத்தையும், இறைச்சியையும் அவர்களுக்கு வழங்குவோம்.
23. அங்கு (மதுரசக்) கிண்ணத்தை ஒருவருக்கொருவர் வழங்கிக் கொள்வார்கள். அதில் வீணானதோ, பாவமோ இருக்காது.
24. அவர்களுக்குரிய (பணிவிடை செய்யும்) சிறுவர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அ(ச்சிறு)வர்கள் மறைக்கப்பட்ட முத்துகளைப் போன்று இருப்பார்கள்.
25. ஒருவரையொருவர் முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.
26, 27, 28. “இதற்கு முன் நமது குடும்பத்தாரிடம் (இருந்தபோது நரகத்தை) அஞ்சியோராகவே இருந்தோம். அல்லாஹ் நமக்கு அருள்புரிந்து, கடும் நெருப்பின் வேதனையிலிருந்து நம்மைக் காப்பாற்றி விட்டான். இதற்குமுன் நாம் அவனையே பிரார்த்திப்போராக இருந்தோம். அவனே உதவி செய்பவன்; நிகரிலான அன்பாளன்” என்று கூறுவார்கள்.
29. (நபியே!) அறிவுரை கூறுவீராக! உமது இறைவனின் அருளால் நீர் குறி சொல்பவர் அல்ல; பைத்தியக்காரரும் அல்ல!
30. “இவர் கவிஞர். இவரின் அழிவுக் காலத்தை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்” என அவர்கள் கூறுகிறார்களா?
31. “நீங்கள் எதிர்பாருங்கள்! உங்களுடன் நானும் எதிர்பார்க்கிறேன்” என்று கூறுவீராக!
32. அல்லது அவர்களின் சிந்தனைகள்தான் அவர்களுக்கு இவ்வாறு ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறும் கூட்டத்தினரா?
33. அல்லது “இதை இவர் புனைந்துரைத்து விட்டார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? அவ்வாறல்ல! அவர்கள் இறைநம்பிக்கை கொள்வதில்லை.
34. அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதைப் போல ஒரு செய்தியைக் கொண்டு வரட்டும்.
35. அல்லது எதுவுமே இல்லாமல் அவர்கள் படைக்கப்பட்டு விட்டார்களா? அல்லது அவர்களே படைக்கக் கூடியவர்களா? 505
36. அல்லது அவர்கள்தான் வானங்களையும் பூமியையும் படைத்தார்களா? அவ்வாறல்ல! அவர்கள் உறுதியாக நம்புவதில்லை.
37. அல்லது உமது இறைவனின் கருவூலங்கள் அவர்களிடம் உள்ளனவா? அவர்கள் (அதில்) அதிகாரம் செலுத்தக் கூடியவர்களா?
38. அல்லது அவர்களிடம் ஏணி இருந்து, அதன் மூலம் (விண்ணுலகச் செய்திகளைச்) செவியேற்கிறார்களா? அவ்வாறெனில் அவர்களில் செவியுற்றவர் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வரட்டும்.
39. அல்லது அவனுக்குப் பெண் மக்களும், உங்களுக்கு ஆண் மக்களுமா?
40. அல்லது அவர்களிடம் நீர் ஏதேனும் கூலி கேட்டு, அதனால் அவர்கள் கடன் சுமத்தப்பட்டு விட்டார்களா?
41. அல்லது அவர்களிடம் மறைவானவை (பற்றிய அறிவு) இருந்து, (அதை) எழுதுகிறார்களா?
42. அல்லது அவர்கள் ஏதேனும் சூழ்ச்சியை நாடுகிறார்களா? ஆனால் இறைமறுப்பாளர்களே சூழ்ச்சிக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
43. அல்லது அல்லாஹ் அல்லாத கடவுள் யாரேனும் அவர்களுக்கு உண்டா? அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.
44. அவர்கள் வானம் துண்டு துண்டாக விழுவதைக் கண்டாலும் (அதை) ‘ஒன்று திரட்டப்பட்ட மேகம்’ என்றே கூறுவார்கள்.
45. எனவே அவர்கள் மூர்ச்சையாக்கப்படும் நாளைச் சந்திக்கும் வரை அவர்களை விட்டுவிடுவீராக!
46. அந்நாளில் அவர்களின் சூழ்ச்சி அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது. அவர்கள் உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
47. அநியாயக்காரர்களுக்கு இதுவல்லாத வேறு வேதனையும் உண்டு. எனினும் அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்வதில்லை
48. (நபியே! உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! நீர் நமது கண்காணிப்பில் இருக்கிறீர். நீர் எழுந்திருக்கும்போது உமது இறைவனின் புகழைக் கொண்டு போற்றுவீராக!506
49. இரவிலும், விண்மீன்கள் மறையும் வேளையிலும் அவனைப் போற்றுவீராக!