அத்தலாக் – மணவிலக்கு

அத்தியாயம் : 65

வசனங்களின் எண்ணிக்கை: 12

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…

 1. நபியே! (நீர் கூறுவீராக!) நீங்கள் பெண்களை மணவிலக்குச் செய்தால் அவர்களின் காத்திருப்புக் காலத்தைக் கணக்கிடுவதற்கு ஏற்ற வகையில் மணவிலக்குச் செய்யுங்கள். நீங்களும் அக்காத்திருப்புக் காலத்தை கணக்கிட்டு வாருங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அப்பெண்கள் பகிரங்க மானக்கேட்டைச் செய்தாலே தவிர அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றி விடாதீர்கள்! அப்பெண்கள் (தாமாக) வெளியேறவும் வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். யார் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ அவர் தனக்கே அநியாயம் செய்து கொண்டார். இதன்பின்னர் (இணக்கத்திற்கான) ஏதேனும் ஓர் ஏற்பாட்டை அல்லாஹ் உருவாக்கக்கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.570
 2. அவர்கள் தமது தவணையை நெருங்கும்போது நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது (தவணை முடிந்ததும்) நல்ல முறையில் பிரிந்து விடுங்கள். உங்களில் இரு நடுநிலையாளர்களைச் சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புவோருக்காக இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது. யார் அல்லாஹ்வை அஞ்சுகிறாரோ அவருக்கு ஒரு வழியை அவன் ஏற்படுத்துவான்.
 3. அவர் நினைத்துப் பார்க்காத விதத்தில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைப்பவருக்கு அவனே போதுமானவன். அல்லாஹ் தனது செயலை நிறைவேற்றியே தீருவான். ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான்.
 4. உங்கள் பெண்களில் மாதவிடாய் நின்றுவிட்டவர்கள் குறித்து நீங்கள் சந்தேகித்தால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் அவர்களின் காத்திருப்புக் காலம் மூன்று மாதங்களாகும். கருவுற்ற பெண்களுக்குரிய தவணை அவர்கள் தமது குழந்தையைப் பெற்றெடுப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுபவருக்கு அவரது செயலை அவன் எளிதாக்குவான்.571
 5. இது அல்லாஹ்வின் ஆணையாகும். அதை உங்களுக்கு அருளியுள்ளான். அல்லாஹ்வை அஞ்சுபவரின் தீமைகளை அவரிடமிருந்து அவன் அழித்து விடுவான். அவருக்கான கூலியை மகத்தானதாக ஆக்குவான்.
 6. உங்களின் வசதிக்கேற்ப, உங்கள் வசிப்பிடத்தில் அவர்களையும் வசிக்கச் செய்யுங்கள். அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் கருவுற்றவர்களாயிருந்தால் தமது குழந்தையைப் பெற்றெடுக்கும்வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள். உங்களுக்காக(க் குழந்தைக்கு) அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலியைக் கொடுத்துவிடுங்கள்! உங்களுக்கிடையே நல்லமுறையில் ஆலோசித்துக் கொள்ளுங்கள். (இதில்) உங்களுக்குச் சிரமம் இருந்தால் அக்குழந்தைக்கு மற்றொருத்தி பாலூட்டட்டும்.
 7. வசதியுள்ளவர், தனது வசதிக்கேற்ப செலவு செய்யட்டும். யாருக்கு வாழ்வாதாரம் குறைத்து வழங்கப்பட்டுள்ளதோ அவர், தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும். எவருக்கும் தான் வழங்கியதைத் தவிர (அதற்கு மேல்) அவரை அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். கஷ்டத்திற்குப்பின் அல்லாஹ் எளிதானதை ஏற்படுத்துவான்.
 8. எத்தனையோ ஊரார் தமது இறைவனின் ஆணைக்கும், அவனது தூதர்களுக்கும் மாறு செய்தனர். அவர்களைக் கடுமையான முறையில் கணக்கிட்டுக் கடும் வேதனையால் தண்டித்தோம்.
 9. அவர்கள், தமது செயலுக்குரிய விளைவை அனுபவித்தனர். அவர்களின் அசசெயலின் முடிவு நஷ்டமாகவே அமைந்தது.
 10. அவர்களுக்குக் கடும் வேதனையை அல்லாஹ் தயார்படுத்தியுள்ளான். இறைநம்பிக்கை கொண்ட அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! உங்களுக்கு அல்லாஹ் அறிவுரையை அருளியுள்ளான்.
 11. ஒரு தூதரையும் (அனுப்பி வைத்தான்). இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்தோரை இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு செல்வதற்காக, தெளிவுபடுத்தும் அல்லாஹ்வின் வசனங்களை அவர் உங்களுக்கு ஓதிக் காட்டுகிறார். அல்லாஹ்வை நம்பி, நற்செயல்கள் செய்வோரை சொர்க்கங்களில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஒடும். அதில் என்றென்றும் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள். அவர்களுக்குரிய உணவை அல்லாஹ் சிறந்த முறையில் ஏற்படுத்தியுள்ளான்.
 12. அல்லாஹ்வே ஏழு வானங்களையும், பூமியில் அவற்றைப் போன்றதையும் படைத்துள்ளான். அவற்றுக்கிடையே (அவனது) கட்டளை இறங்கிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பொருளின்மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன் என்பதையும், ஒவ்வொரு பொருளையும் தனது அறிவால் அல்லாஹ் சூழ்ந்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.572