அஸ்ஸுஹ்ருஃப் – அலங்காரம்

அத்தியாயம் : 43

வசனங்களின் எண்ணிக்கை: 89

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. ஹா, மீம்.
2. தெளிவான இவ்வேதத்தின்மீது சத்தியமாக!
3. நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் அமைந்த குர்ஆனாக இதை ஆக்கியுள்ளோம்.
4. இது நம்மிடமுள்ள மூலப் பதிவேட்டில் உள்ளது. (இது) உயர்ந்தது; ஞானம் நிறைந்தது.
5. நீங்கள் வரம்புமீறும் சமுதாயமாக இருப்பதால் உங்களை விட்டும் இந்த அறிவுரையை நாம் நிறுத்திவிடுவோமா?
6. முன்சென்றோருக்கு எத்தனையோ நபிமார்களை நாம் அனுப்பி இருக்கிறோம்.
7. அவர்களிடம் எந்த நபி வந்தாலும் அவரைக் கேலி செய்வோராகவே இருந்தனர்.
8. இவர்களைவிட மிகவும் வலிமை வாய்ந்தவர்களை அழித்துள்ளோம். முன்னிருந்தோரின் உதாரணம் சென்றுவிட்டது.
9. “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “நன்கறிந்தவனான மிகைத்தவனே அவற்றைப் படைத்தான்” என்றுதான் அவர்கள் கூறுவார்கள்.
10. அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக ஆக்கினான். நீங்கள் வழியறிந்து கொள்வதற்காக அதில் உங்களுக்குப் பாதைகளையும் ஏற்படுத்தினான்.
11. அவனே வானிலிருந்து அளவுடன் மழையைப் பொழிவிக்கிறான். இறந்த பூமியை அதன் மூலம் உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறே நீங்கள் (உயிர்ப்பித்து) வெளிப்படுத்தப்படுவீர்கள்.
12. அவனே அனைத்து ஜோடிகளையும் படைத்தான். நீங்கள் சவாரி செய்யும் கப்பல்களையும், கால்நடைகளையும் உங்களுக்காக உண்டாக்கினான்.
13, 14. அவற்றின் முதுகில் நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும், பின்னர் அவற்றில் நீங்கள் அமர்ந்ததும் உங்கள் இறைவனின் அருளை நினைவு கூர்ந்து, “நாங்கள் இதற்குச் சக்தியற்றவர்களாக இருந்த நிலையில் எங்களுக்கு இதை வசப்படுத்தியவன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே மீண்டு செல்லக்கூடியவர்கள்” என்று நீங்கள் கூறுவதற்காவும் (அவற்றைப் படைத்தான்.)461
15. அவனது அடியார்களில் சிலரை அவனுக்கு(ப் பிள்ளையென்று கூறி அவனது) அங்கமாக ஆக்கி விட்டனர். மனிதன் பகிரங்கமான நன்றி கெட்டவன்.
16. தான் படைத்ததில் பெண்மக்களை எடுத்துக் கொண்டு, உங்களுக்காக ஆண்மக்களைத் தேர்ந்தெடுத்து விட்டானா?
17. அளவிலா அருளாளனுக்கு அவர்கள் எடுத்துக்காட்டாகக் கூறிய (பெண் குழந்தையான)து அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தியாகக் கூறப்பட்டால் அவன் துக்கமடைந்து, அவனது முகம் கருத்துப் போய்விடுகிறது.
18. நகைகளில் வளர்க்கப்பட்டு, வாதத்தில் தெளிவாக எடுத்துரைக்க முடியாதவர்களையா (இறைவனுக்கு இணையாக்குகின்றனர்)?
19. அளவிலா அருளாளனின் அடியார்களான வானவர்களை இவர்கள் பெண்கள் என ஆக்குகின்றனர். அவர்கள் படைக்கப்படுவதை இவர்கள் பார்த்தார்களா? இவர்கள் கூறுவது பதிவு செய்யப்படும். மேலும் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
20. “அளவிலா அருளாளன் நாடியிருந்தால் நாங்கள் இவர்களை வணங்கியிருக்க மாட்டோம்” எனக் கூறுகின்றனர். இதைப் பற்றி அவர்களுக்கு எவ்வித அறிவும் இல்லை. அவர்கள் பொய்யுரைப்போர் தவிர வேறில்லை.
21. இதற்கு முன் அவர்களுக்கு வேதத்தை நாம் வழங்கி, அவர்கள் அதை பற்றிப் பிடித்துக் கொண்டார்களா?
22. அப்படியல்ல! “எங்களின் முன்னோரை ஒரு வழிமுறையில் கண்டோம். அவர்களின் அடிச்சுவடுகளின்மீதே வழிநடக்கிறோம்” என்றே அவர்கள் கூறுகின்றனர்.
23. (நபியே!) இவ்வாறே உமக்கு முன்னர் நாம் எந்த ஊருக்கு எச்சரிக்கையாளரை அனுப்பினாலும், அங்குள்ள சுகவாசிகள் “நாங்கள் எங்கள் முன்னோரை ஒரு வழிமுறையில் கண்டோம். அவர்களின் அடிச்சுவடுகளில் நாங்கள் பின்பற்றிச் செல்வோர்” என்றே கூறினார்கள்.
24. “உங்கள் முன்னோரை எதில் கண்டீர்களோ அதைவிடச் சிறந்த வழியை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா?” என்று (அத்தூதர்) கேட்டார். “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் மறுக்கக் கூடியவர்கள்” என்று அவர்கள் கூறினர்.
25. எனவே அவர்களை நாம் தண்டித்தோம். பொய்யெனக் கூறியோரின் முடிவு எப்படி ஆனது என்பதைக் கவனிப்பீராக!
26, 27. “என்னைப் படைத்தவனையன்றி நீங்கள் வணங்குவனவற்றை விட்டும் விலகிக் கொண்டேன். அவனே எனக்கு நேர்வழி காட்டுவான்” என்று இப்ராஹீம் தமது தந்தையிடமும், சமுதாயத்தினரிடமும் கூறியதை நினைவு கூர்வீராக!
28. அவரது தலைமுறையினர் (இறைவனை நோக்கி) மீள வேண்டும் என்பதற்காக அவர்களிடம் இதை நிலைத்து நிற்கும் கொள்கையாக ஆக்கி வைத்தான்.
29. எனினும், அவர்களிடம் உண்மையும், தெளிவுபடுத்தும் தூதரும் வரும்வரை அவர்களையும், அவர்களின் முன்னோரையும் இன்பம் அனுபவிக்கச் செய்தேன்.
30. உண்மை அவர்களிடம் வந்தபோது “இது சூனியம். நாங்கள் இதை மறுப்போரே” என அவர்கள் கூறினர்.
31. “இவ்விரண்டு ஊர்களிலுள்ள யாரேனும் ஒரு பெரிய மனிதருக்கு இந்தக் குர்ஆன் அருளப்பட்டிருக்க வேண்டாமா?” என அவர்கள் கேட்கின்றனர்.
32. உமது இறைவனின் அருளை இவர்களா பங்கீடு செய்கிறார்கள்? இவ்வுலக வாழ்வில் அவர்களுக்குரிய வாழ்வாதாரத்தை அவர்களிடையே நாமே பங்கீடு செய்கிறோம். அவர்களில் ஒருசிலர், வேறுசிலரைப் பணியாளராக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் சிலரை, மற்ற சிலரைவிடத் தகுதிகளால் உயர்த்துகிறோம். உமது இறைவனின் அருள், அவர்கள் சேகரிப்பதைவிட மிகச் சிறந்தது.
33, 34, 35. மனிதர்கள் (அனைவரும் இறைவனை மறுக்கும்) ஒரே சமுதாயமாக மாறி விடுவார்கள் என்பது இல்லையெனில், அளவிலா அருளாளனை மறுப்போரின் வீட்டுக் கூரைகளையும், அதன்மீது அவர்கள் ஏறிச் செல்லும் படிக்கட்டுகளையும், வீட்டு வாசல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் வெள்ளியாலும், தங்கத்தாலும் ஆக்கியிருப்போம். இவை அனைத்தும் இவ்வுலக வாழ்வின் அற்ப இன்பத்தைத் தவிர வேறில்லை. உமது இறைவனிடம் இருக்கும் மறுமையோ இறையச்சமுடையோருக்கு உரியதாகும்.462
36. அளவிலா அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிப்பவருக்காக ஒரு ஷைத்தானை ஏற்படுத்துவோம். அவன் அவருக்கு நண்பனாகி விடுவான்.
37. (ஷைத்தான்களான) அவர்கள் நேர்வழியை விட்டும் இவர்களைத் தடுக்கின்றனர். இவர்களோ தாம் நேர்வழியில் நடப்பதாக நினைக்கின்றனர்.
38. இறுதியாக, அவன் நம்மிடம் வரும்போது “எனக்கும், உனக்குமிடையே கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடைப்பட்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே! இந்த நண்பன் மிகவும் கெட்டவன்” என்று (ஷைத்தானை நோக்கிக்) கூறுவான்.
39. வேதனையில் நீங்கள் கூட்டாக இருப்பது இன்று உங்களுக்குப் பயனளிக்காது. ஏனெனில் நீங்கள் அநியாயம் செய்து விட்டீர்கள்.
40. (நபியே!) நீர் செவிடர்களைச் செவியேற்கச் செய்வீரா? குருடர்களையும், பகிரங்க வழிகேட்டில் இருப்பவர்களையும் நேர்வழியில் செலுத்துவீரா?
41, 42. (நபியே!) உம்மை நாம் (இவ்வுலகிலிருந்து) எடுத்துக் கொண்டாலும் அவர்களைத் தண்டிப்போம். அல்லது அவர்களுக்கு நாம் வாக்களித்ததை உமக்குக் காட்டினாலும் அவர்கள்மீது நாம் ஆற்றலுடையோரே!
43. (நபியே!) உமக்கு அறிவிக்கப்படுவதை உறுதியாகப் பிடித்துக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர்.
44. இது உமக்கும், உமது சமுதாயத்திற்கும் உரிய நல்லுரையாகும். நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
45. “அளவிலா அருளாளனையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை நாம் ஏற்படுத்தியுள்ளோமா?” என்று உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக!
46. மூஸாவை நமது சான்றுகளுடன் ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயப் பெரியோர்களிடமும் அனுப்பினோம். “நான் அகிலங்களின் இறைவனுடைய தூதர்” என்று அவர் கூறினார்.
47. அவர்களிடம் நமது சான்றுகளுடன் அவர் வந்தபோது, அவர்கள் அவற்றைப் பார்த்து சிரித்தனர்.
48. நாம் அவர்களுக்குக் காட்டிய ஒவ்வொரு சான்றும் அதற்கு முந்தியதைவிட மிகப் பெரியதாகவே இருந்தது. அவர்கள் மீள்வதற்காக வேதனையின் மூலம் அவர்களைப் பிடித்தோம்.
49. “சூனியக்காரரே! உமது இறைவன் உமக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் எங்களுக்காக பிரார்த்திப்பீராக! நாங்கள் நேர்வழி அடைவோம்” என அவர்கள் கூறினர்.
50. நாம் அவர்களின் வேதனையை நீக்கும்போது, உடனே (வாக்குறுதியை) முறித்து விடுகின்றனர்.
51. ஃபிர்அவ்ன், தனது சமுதாயத்தினரை அழைத்து, “என் சமுதாயமே! எகிப்தின் ஆட்சி என்னுடையதல்லவா? இந்த ஆறுகளும் எனக்குக் கீழ் ஓடுகின்றனவே! நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” என்று கூறினான்.
52. “அற்பமானவரும், தெளிவாகப் பேச இயலாதவருமான இவரைவிட நான் மேலானவன் அல்லவா?”
53. “தங்கத்தாலான காப்புகள் இவருக்கு அணிவிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது இவருடன் வானவர்கள் சேர்ந்து வந்திருக்க வேண்டாமா?” (என்றும் கூறினான்)
54. அவன் தனது கூட்டத்தினரை இழிவாக நினைத்தான். அவர்களும் அவனுக்குக் கட்டுப்பட்டனர். அவர்கள் பாவம் செய்யும் கூட்டத்தினராக இருந்தனர்.
55. அவர்கள் நம்மைக் கோபமூட்டியபோது அவர்களைத் தண்டித்தோம். அவர்கள் அனைவரையும் (நீரில்) மூழ்கடித்தோம்.
56. அவர்களை (அழிவில்) முந்தியவர்களாகவும், பின்வருவோருக்கு எடுத்துக்காட்டுகளாகவும் ஆக்கினோம்.
57. மர்யமின் மகனை எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டபோது, அதைப்பற்றி உமது சமுதாயத்தினர் (கேலி செய்து) கூச்சலிட்டனர்.
58. “எங்கள் தெய்வங்கள் சிறந்தவையா? அல்லது அவரா?” என அவர்கள் கேட்டனர். (வீண்)தர்க்கம் செய்வதற்காகவே அவரை உம்மிடம் எடுத்துக்காட்டாகக் கூறுகின்றனர். மேலும் அவர்கள் விதண்டாவாதம் செய்யும் கூட்டமாகவே உள்ளனர்.
59. அவர், நாம் அருள்புரிந்த அடியாரைத் தவிர வேறில்லை. அவரை இஸ்ராயீலின் தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக ஆக்கினோம்.
60. நாம் நாடியிருந்தால் பூமியில் வானவர்களை உங்களுக்குப் பதிலாக ஆக்கியிருப்போம். அவர்கள் (பூமியில்) தலைமுறையினராக இருப்பார்கள்.
61. “(ஈஸாவாகிய) அவர் உலகம் அழியும் நேரத்தின் அறிகுறியாவார். நீங்கள் அதில் ஐயம் கொள்ளாதீர்கள்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேரான வழியாகும்” (என்று நபியே கூறுவீராக!)463
62. ஷைத்தான் உங்களை (நேர்வழியிலிருந்து) தடுத்துவிட வேண்டாம். அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.
63. தெளிவான சான்றுகளுடன் ஈஸா வந்தபோது “நான் உங்களிடம் ஞானத்துடனும், நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவும் வந்துள்ளேன். எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்படுங்கள்!” என்று கூறினார்.
64. “என் இறைவனும், உங்கள் இறைவனும் அல்லாஹ்தான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழியாகும்” (என்றும் கூறினார்.)
65. அவர்களுக்கிடையே பல பிரிவினர் கருத்து வேறுபாடு கொண்டனர். அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் நாளின் வேதனையால் கேடுதான் உண்டு.
66. அவர்கள் அறியாத விதத்தில் திடீரென உலகம் அழியும் நேரம் தம்மிடம் வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்களா?
67. அந்நாளில் உற்ற நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பர், இறையச்சமுடையோரைத் தவிர!
68. “என் அடியார்களே! இன்று உங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்” (என்று கூறப்படும்.)
69. அவர்களே நமது வசனங்களை நம்பி, முஸ்லிம்களாக இருந்தனர்.
70. “சொர்க்கத்தில் நுழையுங்கள்! நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்விக்கப்படுவீர்கள்” (என்றும் கூறப்படும்.)
71. தங்கத் தட்டுகளும், குவளைகளும் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும். அங்கு மனம் விரும்புபவையும், கண்கள் மகிழக்கூடியவையும் உண்டு. நீங்கள் அங்கு நிரந்தரமாக இருப்பீர்கள்.
72. நீங்கள் செய்து கொண்டிருந்த (நல்ல)வற்றுக்காக உங்களுக்கு உடைமையாக்கப்பட்டுள்ள சொர்க்கம் இதுதான்.
73. அங்கே உங்களுக்கு ஏராளமான பழங்கள் உண்டு. அதிலிருந்து நீங்கள் உண்பீர்கள்.
74. குற்றம் புரிந்தோர், நரக வேதனையில் நிரந்தரமாக இருப்பார்கள்.
75. அவர்களுக்கு (வேதனை) குறைக்கப்பட மாட்டாது. அவர்கள் அதில் நம்பிக்கையிழந்து விடுவார்கள்.
76. அவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை. மாறாக அவர்களே அநியாயக்காரர்களாக இருந்தனர்.
77. “மாலிக்கே! உமது இறைவன் எங்களுக்கு முடிவு கட்டட்டும்” என்று அவர்கள் (நரகத்தின் காவலரை) அழைத்துக் கூறுவார்கள். “நீங்கள் (நிலையாகத்) தங்கியிருப்பவர்களே!” என்று அவர் பதிலளிப்பார்.464
78. உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தோம். ஆனால் அந்தச் சத்தியத்தை உங்களில் பெரும்பாலோர் வெறுத்தீர்கள்.
79. அவர்கள் ஏதேனும் ஒரு செயல் திட்டம் தீட்டியிருக்கிறார்களா? நாமும் திட்டம் தீட்டுவோம்.
80. அவர்களின் இரகசிய எண்ணங்களையும், இரகசியப் பேச்சுகளையும் நாம் செவியுற மாட்டோம் என எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல! அவர்களிடமுள்ள நமது தூதர்கள் பதிவு செய்கின்றனர்.
81. “அளவிலா அருளாளனுக்குப் பிள்ளை இருந்தால் (அதை) வணங்குவோரில் நான் முதல்வனாக இருப்பேன்” என்று கூறுவீராக!
82. அவர்கள் வருணிப்பவற்றை விட்டும் வானங்கள், பூமியின் இறைவனான அர்ஷின் அதிபதி தூயவன்.
83. வாக்களிக்கப்பட்ட அவர்களின் (இறுதி) நாளைச் சந்திக்கும்வரை (வீணானவற்றில்) மூழ்கியிருக்குமாறும், விளையாடுமாறும் அவர்களை விட்டுவிடுவீராக!
84. அவனே வானத்திலும் கடவுள்; பூமியிலும் கடவுள். அவன் நுண்ணறிவாளன்; நன்கறிந்தவன்.
85. வானங்கள், பூமி, அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் ஆட்சி யாருக்குரியதோ அவன் பாக்கியமிக்கவன். உலகம் அழியும் நேரம் பற்றிய அறிவு அவனிடமே உள்ளது. அவனிடமே நீங்கள் மீட்டுக் கொண்டு வரப்படுவீர்கள்.
86. அவனையன்றி அவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் பரிந்துரை செய்ய அதிகாரம் பெற மாட்டார்கள். அறிந்தோராக உள்ள நிலையில் வாய்மைக்குச் சாட்சியளித்தோரைத் தவிர!
87. அவர்களைப் படைத்தது யார் என அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே கூறுவார்கள். ஆயினும், அவர்கள் எங்கே திசைதிருப்பப்படுகின்றனர்?
88. “என் இறைவனே! இவர்கள் இறைநம்பிக்கை கொள்ளாத கூட்டமாக உள்ளனர்” என்று அவர் கூறியதையும் (அவன் அறிவான்.)
89. (நபியே!) அவர்களைப் பொருட்படுத்தாதீர்! ‘ஸலாம்’ என்று கூறுவீராக! அவர்கள் (விரைவில்) அறிந்து கொள்வார்கள்.