அத்தியாயம் : 42
வசனங்களின் எண்ணிக்கை: 53
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. ஹா, மீம்.
2. ஐன், ஸீன், காஃப்
3. (நபியே!) உமக்கும், உமக்கு முன்னிருந்தோருக்கும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ் இவ்வாறே இறைச்செய்தி அறிவிக்கிறான்.
4. வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும். அவன் உயர்ந்தவன்; மகத்தானவன்.
5. (மனிதர் செய்யும் பாவங்களால்) வானங்கள், அவற்றின் மேலிருந்து வெடித்துவிட முனைகின்றன. வானவர்கள் தமது இறைவனின் புகழைக் கொண்டு போற்றி, பூமியில் உள்ளோருக்காகப் பாவ மன்னிப்புக் கோருகின்றனர். அல்லாஹ்வே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
6. தன்னையன்றி வேறு பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரை அல்லாஹ் கண்காணிக்கின்றான். (நபியே!) நீர் அவர்களுக்குப் பொறுப்பாளராக இல்லை.
7. (நபியே!) நீர் ஊர்களின் தாயா(ன மக்காவில் வசிப்போ)ரையும், அதைச் சுற்றியுள்ளோரையும் எச்சரிப்பதற்காகவும், சந்தேகமே இல்லாத ஒன்றுதிரட்டப்படும் நாள் குறித்து எச்சரிப்பதற்காகவும் இவ்வாறே அரபு மொழியில் அமைந்த குர்ஆனாக (இதை) உமக்கு அறிவித்துள்ளோம். (அந்நாளில்) ஒருசாரார் சொர்க்கத்திலும், மற்றொரு சாரார் நரகத்திலும் இருப்பார்கள்.
8. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும், தான் நாடியோரைத் தன் அருளில் நுழைவிக்கிறான். அநியாயக்காரர்களுக்கு எந்தப் பாதுகாவலரும் உதவியாளரும் யாருமில்லை.
9. அவனல்லாத (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டனரா? அல்லாஹ்வே பாதுகாவலன். அவனே இறந்தோரை உயிர்ப்பிக்கின்றான். அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் ஆற்றலுடையவன்.
10. “நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறீர்களோ அதன் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது. அந்த அல்லாஹ்வே என் இறைவன். அவன்மீதே நான் நம்பிக்கை வைத்து, அவனிடமே மீள்கிறேன்” (என்று நபியே! கூறுவீராக!)
11. (அவனே) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். உங்களிலிருந்தே உங்களுக்கு இணைகளையும், கால்நடைகளிலிருந்து (அவற்றிற்குரிய) இணைகளையும் படைத்தான். உங்களைப் பூமியில் பரவச் செய்கிறான். அவனைப் போன்று எதுவுமில்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
12. வானங்கள், பூமியின் சாவிகள் அவனுக்கே உரியவையாகும். அவன், தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை வாரி வழங்குகிறான்; அளவுடனும் கொடுக்கிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.
13. நூஹுக்கு அவன் எதை அறிவுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கியுள்ளான். (நபியே!) உமக்கு நாம் இறைச் செய்தியாக அறிவித்ததும், இப்றாஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு அறிவுறுத்தியதும் “மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள்! அதில் பிரிந்து விடாதீர்கள்!” என்பதுதான். எதை நோக்கி நீர் இணைவைப்போரை அழைக்கிறீரோ அது அவர்களுக்குப் பாரமாகத் தெரிகிறது. அல்லாஹ், தான் நாடியோரைத் தன் பக்கம் தேர்ந்தெடுக்கிறான். தன்னிடம் மீள்வோருக்கு அவன் நேர்வழி காட்டுகிறான்.458
14. தம்மிடம் (வேத) அறிவு வந்தபின்னும் தமக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே பிளவுபட்டனர். குறிப்பிட்ட தவணைவரை உமது இறைவனின் வாக்கு முந்தியிருக்கா விட்டால் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். அவர்களுக்குப் பின்னர், அவ்வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டோர் அதைப் பற்றிக் கடும் சந்தேகத்தில் உள்ளனர்.
15. (நபியே!) இ(ம்மார்க்கத்)தை நோக்கி அழைப்பீராக! உமக்கு ஆணையிடப்பட்டவாறு உறுதியாக இருப்பீராக! அவர்களின் சுய விருப்பங்களைப் பின்பற்றாதீர்! “அல்லாஹ் அருளிய வேதத்தை நம்பினேன். உங்களுக்கிடையே நீதி வழங்குமாறு ஏவப்பட்டுள்ளேன். எங்களின் இறைவனும், உங்களின் இறைவனும் அல்லாஹ்வே! எங்களுக்கு எங்கள் செயல்கள்! உங்களுக்கு உங்கள் செயல்கள்! எங்களுக்கும், உங்களுக்கும் இடையே எந்தத் தர்க்கமும் வேண்டாம். அல்லாஹ்வே நம்மை ஒன்றுதிரட்டுவான். அவனிடமே மீளுதல் உள்ளது” என்று கூறுவீராக!
16. அல்லாஹ்வின் அழைப்புக்குப் பதிலளிக்கப்பட்டு (இஸ்லாத்தை ஏற்ற) பின், அவனைப் பற்றித் தர்க்கம் செய்வோரின் தர்க்கம் அவர்களின் இறைவனிடம் வீணாகக் கூடியதே! அவர்கள்மீது கோபமும், அவர்களுக்குக் கடும் வேதனையும் உண்டு.
17. உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தையும், தராசையும் அல்லாஹ்வே இறக்கி வைத்தான். உலகம் அழியும் நேரம் சமீபத்தில் இருக்கலாம் என்பதை (நபியே!) உமக்கு எது அறிவிக்கும்?
18. அ(ந்த நேரத்)தை நம்பாதோர் அதை அவசரமாகத் தேடுகின்றனர். ஆனால், இறைநம்பிக்கை கொண்டோர் அதைக் குறித்து அஞ்சுகின்றனர். அவர்கள், அது உண்மை என்பதை அறிவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! உலகம் அழியும் நேரத்தைக் குறித்துச் சந்தேகத்தில் இருப்பவர்கள் தூரமான வழிகேட்டிலேயே உள்ளனர்.
19. அல்லாஹ், தனது அடியார்கள்மீது அன்புமிக்கவன். தான் நாடியோருக்கு அவன் வாழ்வாதாரத்தை வழங்குகிறான். அவன் வலிமைமிக்கவன்; மிகைத்தவன்.
20. யார் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருக்கு, அவரது விளைச்சலை நாம் அதிகப்படுத்துவோம். யார் இவ்வுலக விளைச்சலை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம். அவருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை.
21. அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கத்தில் சட்டமாக்கும் இணைக் கடவுள்கள் அவர்களுக்கு உள்ளனரா? (மறுமையின்) தீர்ப்பு பற்றிய வாக்கு இல்லையேல் அவர்களுக்கிடையே (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
22. அநியாயக்காரர்கள், தாம் செய்தவற்றின் விளைவாக அச்சத்திலிருப்பதைக் காண்பீர். அதுவோ அவர்களுக்கு நிகழ்ந்தே தீரும். இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தோர் சொர்க்கப் பூஞ்சோலைகளில் இருப்பார்கள். அவர்கள் விரும்பியவை எல்லாம் அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குண்டு. இதுவே பெரும் அருளாகும்.
23. இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்த தன் அடியார்களுக்கு அல்லாஹ் நற்செய்தியாகக் கூறுவது இதைத்தான். (நபியே!) “உறவினர்களுக்கிடையில் பாசத்தைத் தவிர (வேறு) எந்தக் கூலியையும் இதற்காக உங்களிடம் நான் கேட்கவில்லை” என்று கூறுவீராக! நன்மையைச் செய்பவருக்கு அதில் நன்மையை அதிகரிப்போம். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நன்றி பாராட்டுபவன்.459
24. “இவர் அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்துரைத்தார்” என அவர்கள் கூறுகிறார்களா? அல்லாஹ் நாடினால் உமது உள்ளத்தின்மீது முத்திரையிட்டிருப்பான். அல்லாஹ்வோ, பொய்யை அழித்து தனது ஆணைகளைக் கொண்டு உண்மையை உறுதிப்படுத்துகிறான். அவன் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.
25. அவனே தனது அடியார்களின் பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்கிறான். தீமைகளை மன்னிக்கிறான். நீங்கள் செய்பவற்றையும் அறிகிறான்.460
26. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோரின் பிரார்த்தனையை ஏற்கிறான். அவர்களுக்குத் தனது அருளை அதிகரிக்கிறான். இறைமறுப்பாளர்களுக்குக் கடும் வேதனை இருக்கிறது.
27. அல்லாஹ் தனது அடியார்களுக்கு வாழ்வாதாரத்தை வாரிவழங்கினால் அவர்கள் பூமியில் அநியாயம் செய்திருப்பார்கள். எனினும் தான் நாடியவாறு அளவின்படியே இறக்கி வைக்கிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவன்; பார்ப்பவன்.
28. அவர்கள் விரக்தியுற்ற பின் அவனே மழையைப் பொழிவித்துத் தனது கருணையைப் பரவலாக்குகிறான். அவன் பாதுகாவலன்; புகழுக்குரியவன்.
29. வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், அவ்விரண்டிலும் உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றாதாரங்களில் உள்ளதாகும். தான் நாடும்போது அவர்களை ஒன்றுதிரட்டுவதற்கும் ஆற்றலுடையவன்.
30. உங்களுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் (அது) உங்களது கைகள் செய்த (தீ)வினைகளால் ஏற்பட்டதாகும். அவன் பெரும்பாலானவற்றை மன்னித்து விடுகிறான்.
31. நீங்கள் பூமியில் (அவனிடமிருந்து) தப்பிப்போர் அல்ல. உங்களுக்கு அல்லாஹ்வையன்றி எந்தப் பாதுகாவலரும், உதவியாளரும் இல்லை.
32. கடலில் பயணிக்கும் மலைக்குன்றுகளைப் போன்ற கப்பல்களும் அவனது சான்றுகளில் உள்ளவையாகும்.
33. அவன் நாடினால் காற்றை நிறுத்தி விடுவான். அப்போது அவை அதன் மேற்பரப்பில் அசைவற்றதாக நின்றுவிடும். நன்றி செலுத்தும் ஒவ்வொரு பொறுமையாளருக்கும் இதில் சான்றுகள் உள்ளன.
34. அல்லது அவர்கள் செய்த (தீய)வற்றின் காரணமாக அவைகளை அழித்திருப்பான். ஆயினும் அவன் பெரும்பாலானவற்றை மன்னித்து விடுகிறான்.
35. நமது வசனங்களில் வீண் விதண்டாவாதம் புரிவோர் தப்பிச் செல்வதற்கு இடம் எதுவுமில்லை என்பதை (அந்நேரம்) அறிந்து கொள்வார்கள்.
36. உங்களுக்கு வழங்கப்பட்ட எப்பொருளாயினும் அது இவ்வுலக வாழ்வின் (அற்ப) வசதியே! இறைநம்பிக்கை கொண்டு, தமது இறைவனையே சார்ந்திருப்போருக்கு அல்லாஹ்விடம் இருப்பதுதான் மிகச் சிறந்ததும், நிலையானதுமாகும்.
37. அவர்கள் பெரும்பாவங்களையும், மானக்கேடானவற்றையும் விட்டு விலகிக் கொள்வார்கள். அவர்களுக்குக் கோபம் ஏற்படும்போது மன்னிப்பார்கள்.
38. அவர்கள் தமது இறைவனின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுத் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். தமது காரியங்களில் தமக்குள் ஆலோசிப்பார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து செலவிடுவார்கள்.
39. (பிறரால்) தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (நேர்மையான முறையில்) பழிதீர்த்துக் கொள்வார்கள்.
40. தீமைக்குரிய தண்டனை அதுபோன்ற தீமையே ஆகும். மன்னித்து இணக்கமாகச் செல்பவருக்கு, அல்லாஹ்விடம் அவருக்கான கூலி உண்டு. அநியாயக்காரர்களை அவன் நேசிக்க மாட்டான்.
41. தமக்கு அநீதி இழைக்கப்பட்ட பின் யார் பழிதீர்த்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு எதிராக(க் குற்றம் காண) எந்த வழியும் இல்லை.
42. மக்களுக்கு அநியாயம் செய்து, பூமியில் நியாயமின்றி வரம்புமீறுவோருக்கு எதிராகவே (குற்றம் காண) வழி உண்டு. அவர்களுக்கே துன்புறுத்தும் வேதனை உள்ளது.
43. யாரேனும் பொறுத்துக் கொண்டு மன்னித்தால் அது உறுதியான செயல்களில் உள்ளதாகும்.
44. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அதன் பின்னர் அவனுக்குப் பாதுகாவலர் யாருமில்லை. அநியாயக்காரர்கள் வேதனையைக் காணும் சமயத்தில் “மீண்டு செல்ல ஏதேனும் வழியிருக்கிறதா?” என்று கேட்பதை நீர் காண்பீர்.
45. இழிவின் காரணமாகப் பணிந்து, கடைக்கண்ணால் பார்ப்பவர்களாக அவர்கள் நரகத்திற்குக் கொண்டு வரப்படுவதைக் காண்பீர். “நஷ்டமடைந்தோர் யாரெனில், தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் மறுமை நாளில் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களே!” என்று இறைநம்பிக்கை கொண்டோர் கூறுவர். அறிந்து கொள்ளுங்கள்! அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள்.
46. அவர்களுக்கு அல்லாஹ்வையன்றி உதவி செய்யும் பாதுகாவலர்கள் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு வழியேதும் இல்லை.
47. அல்லாஹ்விடமிருந்து எவராலும் தடுக்கமுடியாத நாள் வருவதற்கு முன் உங்கள் இறைவனுக்குப் பதிலளியுங்கள்! அந்நாளில் உங்களுக்கு எந்தப் பாதுகாப்பிடமும் இல்லை. நீங்கள் மறுக்கவும் முடியாது.
48. (நபியே!) அவர்கள் புறக்கணித்தால், உம்மை அவர்களுக்குப் பாதுகாவலராக நாம் அனுப்பவில்லை. எடுத்துச் சொல்வதைத் தவிர உம்மீது (வேறு) எதுவுமில்லை. மனிதனுக்கு நமது அருளைச் சுவைக்கச் செய்தால் அதற்காக மகிழ்ச்சியடைகிறான். அவர்கள் கைகள் செய்தவற்றால் அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் மனிதன் மிகவும் நன்றி கெட்டவனாகி விடுகிறான்.
49, 50. வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன், தான் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (பிள்ளை)களைக் கொடுக்கிறான். தான் நாடியோருக்கு ஆண் (பிள்ளை)களைக் கொடுக்கிறான். அல்லது ஆண் (பிள்ளை)களையும், பெண் (பிள்ளை)களையும் சேர்த்தே கொடுக்கிறான். தான் நாடியோரை மலடாகவும் ஆக்கி விடுகிறான். அவன் நன்கறிந்தவன்; ஆற்றல் மிக்கவன்.
51. வஹீ மூலமோ அல்லது திரைக்கு அப்பாலிருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பியோ அல்லாமல் எந்த மனிதருடனும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் நாடியதை அவனது அனுமதியுடன் அத்தூதர் அறிவிப்பார். அவன் உயர்ந்தவன்; நுண்ணறிவாளன்.
52. (நபியே!) நமது கட்டளையாகிய இறைச்செய்தியை இவ்வாறே உமக்கு அறிவித்தோம். நீர் வேதம் என்றால் என்ன, இறைநம்பிக்கை என்றால் என்ன என்பதை அறிபவராக இருக்கவில்லை. எனினும் இ(வ்வேதத்)தை நாம் ஒளியாக ஆக்கி, இதன்மூலம் நமது அடியார்களில் நாம் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறோம். நீர் நேரான பாதைக்கு வழிகாட்டுகிறீர்.
53. (அது) அல்லாஹ்வின் வழி. வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் அவனுக்கே உரியன. செயல்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீள்கின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்!