அஸ்ஸஜ்தா – சிரம் பணிதல்

அத்தியாயம் : 32

வசனங்களின் எண்ணிக்கை: 30

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. அலிஃப், லாம், மீம்.394
2. இவ்வேதம் அகிலங்களின் இறைவனால் அருளப்பட்டதாகும். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
3. “இவர் இதைப் புனைந்து கூறி விட்டார்” என அவர்கள் கூறுகிறார்களா? அவ்வாறல்ல! (நபியே!) உமக்கு முன் எச்சரிக்கை செய்பவர் எவரும் வராத சமுதாயத்திற்கு நீர் எச்சரிக்கை செய்வதற்காக இது உமது இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையாகும். இதனால் அவர்கள் நேர்வழி பெறக் கூடும்.
4. அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின்மீது அமர்ந்தான். அவனையன்றி உங்களுக்குப் பாதுகாவலரோ, பரிந்துரையாளரோ இல்லை. சிந்திக்க மாட்டீர்களா?
5. அவன் வானத்திலிருந்து பூமிவரை காரியங்களை நிர்வகிக்கிறான். பின்னர் அது ஒருநாளில் அவனிடம் ஏறிச் செல்கிறது. அந்நாளின் அளவு உங்கள் கணக்கின்படி ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும்.
6. அவன் மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிபவன்; மிகைத்தவன்; நிகரிலா அன்பாளன்.
7. தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான். மனிதப் படைப்பை களிமண்ணிலிருந்து தொடங்கினான்.
8. அற்பமான நீரின் மூலப்பொருளிலிருந்து அவனது வழித்தோன்றலைப் படைத்தான்.
9. பின்னர் அவனை ஒழுங்குபடுத்தித், தன் உயிரை அவனிடத்தில் ஊதினான். உங்களுக்குச் செவிப் புலனையும், பார்வைகளையும், உள்ளங்களையும் அமைத்தான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
10. “நாங்கள் (இறந்து) பூமியில் மக்கிப் போன பின்னர், புதிய படைப்பாக ஆவோமோ?” என்று கேட்கின்றனர். எனினும், அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பதை மறுப்போராக உள்ளனர்.
11. “உங்களுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் மரணத்தின் வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக!
12. (நபியே! மறுமை நாளில்) நீர் பார்க்க வேண்டுமே! அப்போது குற்றவாளிகள், “எங்கள் இறைவனே! நாங்கள் பார்த்து விட்டோம்; செவியுற்று விட்டோம். எனவே எங்களைத் திருப்பி அனுப்புவாயாக! நாங்கள் நற்செயல்களைச் செய்வோம். நாங்கள் உறுதியாக நம்பி விட்டோம்” என்று (கூறித்) தமது இறைவனுக்கு முன் தலைகுனிந்து நிற்பார்கள்.
13. நாம் நாடியிருந்தால் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய நேர் வழியை வழங்கியிருப்போம். எனினும் “ஜின்களிலும் மனிதர்களிலும் உள்ள (குற்றவாளிகள்) அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து வாக்கு உறுதியாகி விட்டது.
14. “எனவே, உங்களுக்கான (தீர்ப்பு கூறப்படும்) இந்நாளின் சந்திப்பை நீங்கள் மறந்ததால் (வேதனையைச்) சுவையுங்கள்! நாமும் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களுக்காக நிலையான வேதனையைச் சுவையுங்கள்!” (என்று கூறப்படும்).
15. நமது வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் ஸஜ்தாவில் விழுந்து, தமது இறைவனின் புகழைக் கொண்டு போற்றுவோரே அவற்றை நம்பியவர்கள். அவர்கள் கர்வம் கொள்ள மாட்டார்கள்.
16. அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டு விலகிவிடும். அவர்கள் அச்சத்துடனும், ஆவலுடனும் தமது இறைவனைப் பிரார்த்திப்பார்கள். அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்கள்.395
17. எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (நல்ல) செயல்களுக்குக் கூலியாக, அவர்களுக்கென மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சியை யாரும் அறிய மாட்டார்கள்.396
18. இறைநம்பிக்கையாளராக இருப்பவர், பாவம் செய்து கொண்டிருப்பவரைப் போல் ஆவாரா? அவர்கள் சமமாக மாட்டார்கள்.
19. இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தோருக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு விருந்தாக தங்குவதற்குச் சொர்க்கங்கள் உள்ளன.
20. பாவம் செய்தோரின் தங்குமிடம் நரகமாகும். அவர்கள் அங்கிருந்து வெளியேற முற்படும்போதெல்லாம் மீண்டும் அ(ந்நரகத்)திலேயே தள்ளப்படுவார்கள். அவர்களிடம், “நீங்கள் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்த நரக வேதனையைச் சுவையுங்கள்!” எனக் கூறப்படும்.
21. அவர்கள் (மறுமையின்) மிகப் பெரிய வேதனைக்கு முன்பு (இவ்வுலகில்) குறைந்த வேதனையைச் சுவைக்குமாறு செய்வோம். இதனால் அவர்கள் (பாவத்திலிருந்து) மீளக் கூடும்.397
22. தன் இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு, (அதன்)பின் அவற்றைப் புறக்கணிப்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? இக்குற்றவாளிகளை நாம் தண்டிப்போம்.
23. நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். (நபியே!) அவரைச் சந்தித்தது குறித்து நீர் சந்தேகத்தில் ஆகி விடாதீர்! அ(வ்வேதத்)தை இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நேர்வழி காட்டியாக ஆக்கினோம்.398
24. அவர்கள் பொறுமையை மேற்கொண்டு, நமது வசனங்களை (ஏற்று) உறுதி கொண்டபோது, நமது ஆணைப்படி நேர் வழிகாட்டும் தலைவர்களை அவர்களில் ஏற்படுத்தினோம்.
25. அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவற்றில் உமது இறைவன் அவர்களுக்கிடையே மறுமை நாளில் தீர்ப்பளிப்பான்.
26. இவர்களுக்கு முன்பு எத்தனையோ தலைமுறைகளை அழித்துள்ளோம் என்பது இவர்களை நேர்வழியில் செலுத்தவில்லையா? அவர்கள் வசித்த இடங்களில்தான் இவர்கள் நடமாடுகின்றனர். இதில் சான்றுகள் உள்ளன. இவர்கள் செவியுற வேண்டாமா?
27. நாமே வறண்ட பூமியில் தண்ணீரைப் பாய்ந்தோடச் செய்து, அதன்மூலம் பயிர் விளைச்சலை வெளிப்படுத்துகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களின் கால்நடைகளும், அவர்களும் அதிலிருந்து உண்ணுகிறார்கள். அவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்களா?
28. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்தத் தீர்ப்பு (நாள்) எப்போது?” என்று கேட்கின்றனர்.
29. “அந்தத் தீர்ப்பு நாளில் இறைமறுப்பாளர்களுக்கு அவர்களின் நம்பிக்கை பயனளிக்காது; அவர்கள் அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டார்கள்” என்று கூறுவீராக!
30. எனவே அவர்களைப் புறக்கணிப்பீராக! நீர் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்ப்பவர்கள் தான்.