அத்தியாயம் : 61
வசனங்களின் எண்ணிக்கை: 14
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. வானங்கள், பூமியில் உள்ளவை அல்லாஹ்வைப் போற்றுகின்றன. அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
2. இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் கூறுகிறீர்கள்? 557
3. நீங்கள் செய்யாததைக் கூறுவது அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்பிற்குரியதாக உள்ளது.
4. உறுதியாகப் பிணைக்கப்பட்ட கட்டிடத்தைப் போன்றவர்களாகவும், அணிவகுத்தவர்களாகவும் அவனது பாதையில் போரிடுவோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
5. “என் சமுதாயத்தினரே! நான் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ள அல்லாஹ்வின் தூதர் என்பதை நன்கறிந்து கொண்டே என்னை ஏன் துன்புறுத்துகிறீர்கள்?” என்று மூஸா தமது சமுதாயத்தினரிடம் கூறியதை நினைவூட்டுவீராக! அவர்கள் நெறிதவறிச் சென்றபோது அல்லாஹ்வும் அவர்களின் உள்ளங்களை நெறிதவறச் செய்து விட்டான். பாவிகளின் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.558
6. “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களிடம் அனுப்பப் பட்டுள்ள அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துபவனாகவும், எனக்குப் பின் வரவிருக்கின்ற ‘அஹ்மத்’ எனும் பெயருள்ள தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவனாகவும் இருக்கிறேன்” என மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் அவர் வந்தபோது “இது பகிரங்க சூனியம்” என அவர்கள் கூறினர்.559
7. இஸ்லாத்தை நோக்கி அழைக்கப்படும் நிலையிலும், அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அநியாயக்காரக் கூட்டத்தாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
8. அவர்கள் தமது வாய்களால் அல்லாஹ்வின் ஒளியை அணைத்துவிட விரும்புகின்றனர். இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான்.
9. இணைவைப்பாளர்கள் வெறுத்தபோதும், அவனே எல்லா மார்க்கங்களைவிட இ(ம் மார்க்கத்)தை மேலோங்கச் செய்வதற்காக நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் தனது தூதரை அனுப்பினான்.560
10. இறைநம்பிக்கை கொண்டோரே! துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் ஒரு வியாபாரத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?
11. (அந்த வியாபாரம்,) அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நீங்கள் நம்பி, உங்களின் செல்வங்களாலும், உயிர்களாலும் அவனது பாதையில் போரிடுவதாகும். நீங்கள் அறிவோராக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.
12. அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான். கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும், நிலையான சொர்க்கங்களிலுள்ள தூய்மையான இல்லங்களிலும் உங்களை நுழையச் செய்வான். இதுவே மகத்தான வெற்றியாகும்.
13. நீங்கள் விரும்பக் கூடிய மற்றொன்றும் உண்டு. (அது) அல்லாஹ்வின் உதவியும், அருகிலுள்ள வெற்றியுமாகும். (இதன்மூலம்) இறைநம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
14. மர்யமின் மகன் ஈஸா, (தனது) நெருக்கமான தோழர்களிடம் “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” எனக் கேட்டபோது “நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோம்” என்று அந்தத் தோழர்கள் கூறினர். இறைநம்பிக்கை கொண்டோரே! அவ்வாறே நீங்களும் அல்லாஹ்வுக்காக உதவுவோர் ஆகிவிடுங்கள்! இஸ்ராயீலின் வழித்தோன்றல்களில் ஒருசாரார் இறைநம்பிக்கை கொண்டனர். மற்றொரு சாரார் மறுத்தனர். இறைநம்பிக்கை கொண்டோருக்கு, அவர்களின் எதிரிகளுக்கு எதிராக உதவினோம். எனவே அவர்கள் வெற்றியாளர்களாகி விட்டனர்.