அஷ்ஷம்ஸ் – சூரியன்

அத்தியாயம் : 91

வசனங்களின் எண்ணிக்கை: 15

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. சூரியன்மீதும், அதன் வெளிச்சத்தின்மீதும் சத்தியமாக!640
2. அதைத் தொடர்ந்து வரும் சந்திரன்மீது சத்தியமாக!
3, 4. (சூரியனாகிய) அதை வெளிப்படுத்திக் காட்டும் பகலின்மீது சத்தியமாக! அதை மூடிக்கொள்ளும் இரவின்மீது சத்தியமாக!
5. வானத்தின்மீதும், அதைக் கட்டமைத்தவன்மீதும் சத்தியமாக!
6. பூமியின்மீதும், அதை விரித்தவன்மீதும் சத்தியமாக!
7. உள்ளத்தின்மீதும், அதை நெறிப்படுத்தியவன்மீதும் சத்தியமாக!641
8. அதன் பாவத்தையும், நன்மையையும் அதற்கு உணர்த்தினான்.
9. அ(வ்வுள்ளத்)தைத் தூய்மைப்படுத்தியவர் வெற்றி பெற்று விட்டார்.
10. அதை மாசுபடுத்தியவர் தோல்வியடைந்து விட்டார்.
11. ஸமூது சமுதாயத்தினர் தமது வரம்புமீறலால் பொய்யெனக் கூறினர்.
12, 13. அவர்களில் பாக்கியமிழந்த ஒருவன் விரைவாக எழுந்து வந்தபோது, “அல்லாஹ்வின் ஒட்டகத்தையும், அது நீரருந்துவதையும் (தடுக்காதீர்கள்)!” என்று அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) கூறினார்.642
14. ஆனால், அவரைப் பொய்யரெனக் கூறி அதை அறுத்து விட்டனர். எனவே அவர்களின் பாவத்தின் காரணமாக அவர்களை இறைவன் அடியோடு அழித்துத் தரைமட்டமாக்கினான்.
15. அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.