அஸ்ஸுமர் – கூட்டங்கள்

அத்தியாயம் : 39

வசனங்களின் எண்ணிக்கை: 75

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
2. (நபியே!) நாம் உண்மையுடன் இவ்வேதத்தை உமக்கு அருளியுள்ளோம். எனவே, அல்லாஹ்வுக்கே வணக்கத்தை உரித்தாக்கி அவனை வணங்குவீராக!
3. தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவனையன்றிப் பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோர், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் பக்கம் மிகவும் நெருக்கமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவே தவிர நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்களோ அதுபற்றி அவர்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். பொய்யர்களுக்கும், இறைமறுப்பாளர்களுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
4. அல்லாஹ், (தனக்குப்) பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ள நாடியிருந்தால், தான் படைத்தவற்றிலிருந்து, தான் விரும்பியவரைத் தேர்வு செய்திருப்பான். அவன் தூயவன். அவனே அல்லாஹ். தனித்தவன்; அடக்கியாள்பவன்.
5. அவன் வானங்களையும், பூமியையும் நியாயமான காரணத்துடன் படைத்துள்ளான். அவன் இரவைப் பகலின்மீது போர்த்துகிறான்; பகலை இரவின்மீது போர்த்துகிறான். சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தியுள்ளான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைவரை ஓடுகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அவன் மிகைத்தவன்; மன்னிப்புமிக்கவன்.
6. அவனே ஒரேயொரு மனிதரிலிருந்து உங்களைப் படைத்தான். பின்னர், அவரிலிருந்தே அவரின் இணையை உருவாக்கினான். கால்நடைகளில் எட்டு இணைகளை உங்களுக்காக அருளினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில், ஒரு படைப்புக்குப் பின், மற்றொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களை உருவாக்குகிறான். அவனே உங்கள் இறைவன் அல்லாஹ். அவனுக்கே ஆட்சி உரியது, அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. நீங்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?
7. நீங்கள் (அவனை) மறுத்தால் உங்களை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன். அவன் தன் அடியார்களிடம் இறைமறுப்பை ஏற்றுக் கொள்ள மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களிடம் அதை ஏற்றுக் கொள்வான். ஒருவர், பிறரது சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் இருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அப்போது உங்களுக்கு அறிவிப்பான். அவன், உள்ளங்களில் இருப்பவற்றை நன்கறிபவன்.
8. மனிதனுக்கு ஏதேனும் ஒரு துன்பம் ஏற்படும்போது, தனது இறைவனிடம் மீண்டு, அவனிடம் பிரார்த்திக்கின்றான். பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு வழங்கினால் இதற்குமுன் அவன் யாரிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தானோ அவனை மறந்துவிட்டு, அல்லாஹ்வின் பாதையை விட்டு(ப் பிறரை) வழிகெடுப்பதற்காக அவனுக்கு இணைகளை ஏற்படுத்துகிறான். “உன் இறைமறுப்பின் மூலம் சிறிது காலம் இன்பம் அனுபவித்துக் கொள்! நீ நரகவாசிகளில் உள்ளவன்” என்று கூறுவீராக!
9. (இறைவனுக்கு இணைவைப்பவன் சிறந்தவனா?) அல்லது மறுமைக்கு அஞ்சி, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு நேரங்களில் ஸஜ்தா செய்தவாறும், நின்றவாறும் வணங்குப(வன் சிறந்த)வனா? “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? அறிவுடையோரே படிப்பினை பெறுவர்” என்று கூறுவீராக!439
10. “இறைநம்பிக்கை கொண்ட என் அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நற்கூலி உண்டு. அல்லாஹ்வின் பூமி விரிந்து பரந்தது. பொறுமையாளர்களின் கூலி கணக்கின்றி, நிறைவாக அவர்களுக்கு வழங்கப்படும்” என்று (இறைவன் கூறுகிறான் எனக்) கூறுவீராக!440
11, 12. “வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கி, அவனையே வணங்க வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டோரில் நான் முதல்வனாக இருக்க வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளேன்” என்று (நபியே!) கூறுவீராக!
13. “நான், என் இறைவனுக்கு மாறு செய்தால் மகத்தான ஒருநாளின் வேதனைக்கு அஞ்சுகிறேன்” என்றும் கூறுவீராக!
14, 15. “அல்லாஹ்வுக்கே எனது வணக்கத்தை உரித்தாக்கி அவனையே வணங்குவேன். நீங்கள் அவனையன்றி எதை விரும்புகிறீர்களோ அதை வணங்கிக் கொள்ளுங்கள்!” எனக் கூறுவீராக! “நஷ்டப்பட்டோர் யாரெனில் தமக்கும், தம் குடும்பத்தினருக்கும் மறுமை நாளில் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள்தான். அறிந்து கொள்ளுங்கள்! இதுதான் தெளிவான நஷ்டமாகும்” என்றும் கூறுவீராக!
16. அவர்களுக்கு மேற்பகுதியிலும் நெருப்பு அடுக்குகள் இருக்கும். அவர்களுக்குக் கீழ்ப் பகுதியிலும் (நெருப்பு) அடுக்குகள் இருக்கும். இதன்மூலம் அல்லாஹ் தன் அடியார்களை அச்சுறுத்துகிறான். என் அடியார்களே! என்னையே அஞ்சுங்கள்!
17, 18. ஷைத்தானை வணங்குவதை விட்டும் விலகி, அல்லாஹ்விடம் மீண்டுவருவோருக்கே நற்செய்தி உண்டு! எனவே, என் அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (தமக்குச்) சொல்லப்படுவதை அவர்கள் செவிமடுத்து, அதில் மிக அழகானவற்றைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்கள் தான் அறிவுடையோர்.
19. (நபியே!) வேதனை பற்றிய வாக்கு யார்மீது உறுதியாகி விட்டதோ அவனா (நேர்வழி பெற்றவன்)? நரகில் இருக்கும் ஒருவனை நீர் காப்பாற்றுவீரா?
20. எனினும், தமது இறைவனை அஞ்சுவோருக்கு மாளிகைகள் உண்டு. அவைகளுக்கு மேலும் (அடுக்கடுக்காகக்) கட்டப்பட்ட மாளிகைகள் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஒடும். (இது) அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அந்த வாக்குறுதிக்கு அல்லாஹ் மாறுசெய்ய மாட்டான்.441
21. அல்லாஹ்வே வானிலிருந்து மழையை இறக்கி, அதைப் பூமியில் நீரூற்றுகளாக ஓடச் செய்கிறான் என்பதை நீர் சிந்திக்கவில்லையா? பின்னர், அதன்மூலம் பற்பல நிறங்களில் பயிரினங்களை வெளிப்படுத்துகிறான், பின்னர் அவை உலர்ந்து, மஞ்சள் நிறமாவதைக் காண்கிறீர். பின்னர், அதனைக் காய்ந்த சருகுகளாக ஆக்கி விடுகிறான். இதில், அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.
22. இஸ்லாத்திற்காக எவரது உள்ளத்தை அல்லாஹ் விரிவுபடுத்தி விட்டானோ அவரா (வழிகேட்டில் இருப்பவர்)? அவர் தமது இறைவனுடைய ஒளியின் மீதிருக்கிறார். யாருடைய உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் இறுகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். அவர்களே பகிரங்கமாக வழிகேட்டில் இருக்கின்றனர்.
23. அல்லாஹ்வே மிக அழகிய செய்தியை வேதமாக அருளினான். (அது) ஒன்றுக்கொன்று ஒப்பானதாகவும், திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் மெய்சிலிர்த்து விடுகின்றன, பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைவுகூர்வதற்காக மிருதுவாகி விடுகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழி. இதன் மூலம், தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். அல்லாஹ், யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவனுக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.
24. மறுமை நாளில், கொடிய வேதனையைத் தமது முகத்தால் யார் எதிர்கொள்கிறாரோ அவரா (நேர்வழி பெற்றவர்)? “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைச் சுவையுங்கள்!” என்று அநியாயக்காரர்களிடம் கூறப்படும்.
25. இவர்களுக்கு முன்சென்றோரும் பொய்யெனக் கூறினர். எனவே, அவர்களுக்கு அறியாத விதத்தில் தண்டனை வந்தடைந்தது.
26. இவ்வுலக வாழ்வில் அவர்களுக்கு அல்லாஹ் இழிவைச் சுவைக்கச் செய்தான். அவர்கள் அறிவோராக இருந்திருந்தால் மறுமை வேதனையே மிகப் பெரியது.
27. மனிதர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு எடுத்துக்காட்டையும் இக்குர்ஆனில் அவர்களுக்குக் கூறியுள்ளோம்.
28. (இது) எவ்விதக் கோணலும் இல்லாத அரபு மொழியில் அமைந்த குர்ஆனாக உள்ளது. இதனால் அவர்கள் இறையச்சமுடையோராகலாம்.
29. முரண்பட்ட கருத்துடைய பல பங்காளிகளுக்கு (அடிமையாக) இருக்கும் ஒருவனையும், ஒரே மனிதருக்கு உரிமைப்பட்ட மற்றொருவனையும் அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். உதாரணத்தால் அவ்விருவரும் சமமாவார்களா? அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
30. (நபியே!) நீர் மரணிக்கக் கூடியவர்தான். அவர்களும் மரணிக்கக் கூடியவர்களே!
31. பின்னர், நீங்கள் மறுமை நாளில் உங்கள் இறைவனிடம் ஒருவருக்கொருவர் தர்க்கித்துக் கொள்வீர்கள்.442
32. அல்லாஹ்வின்மீது பொய் கூறி, மேலும் தன்னிடம் உண்மை வந்தபோது அதைப் பொய்யெனக் கூறியவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? இறைமறுப்பாளர்களுக்குத் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?
33. உண்மையைக் கொண்டு வந்தவரும், அதை உண்மையென்று நம்பியவரும் ஆகிய இவர்களே இறைச்சமுடையவர்கள்.
34. அவர்களுக்கு, அவர்கள் விரும்பியவை அவர்களின் இறைவனிடம் உள்ளன. இது நன்மை செய்வோருக்குரிய கூலியாகும்.
35. அவர்களின் தீய செயல்களை அவர்களை விட்டும் அல்லாஹ் அழித்து, அவர்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்காக, அவர்களின் கூலியை அவர்களுக்கு அவன் வழங்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.
36. அல்லாஹ், தன் அடியானுக்குப் போதுமானவனாக இல்லையா? அவனல்லாத மற்றவர்களைக் கொண்டு அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர். யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாருமில்லை.
37. யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ அவரை வழிகெடுப்பவர் யாருமில்லை. அல்லாஹ் மிகைத்தவனாகவும், கடுமையாகத் தண்டிப்பவனாகவும் இல்லையா?
38. (நபியே!) “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்றே கூறுவார்கள். “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிச் சிந்தித்தீர்களா? அல்லாஹ் எனக்கு ஒரு துன்பத்தை நாடினால் அத்துன்பத்தை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு ஒரு அருளை நாடினால் அவனது அருளை அவர்கள் தடுத்து விடுவார்களா?“ என்று கேட்பீராக! “அல்லாஹ் எனக்குப் போதுமானவன். நம்பிக்கை வைப்போர் அவன்மீதே நம்பிக்கை வைப்பார்கள்!” என்று கூறுவீராக!
39, 40. “என் சமுதாயமே! உங்கள் நிலைப்பாட்டின்படி நீங்கள் செயல்படுங்கள்! நானும் செயல்படுகிறேன். இழிவுபடுத்தும் வேதனை யாருக்கு வரும் என்பதையும், நிலையான வேதனை யார்மீது இறங்கும் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று கூறுவீராக!
41. (நபியே!) மனிதர்களுக்காக இவ்வேதத்தை உண்மையுடன் உமக்கு அருளியுள்ளோம். யார் நேர்வழி நடக்கிறாரோ அவருக்கே (நன்மை) ஆகும். வழிகேட்டில் செல்பவர் தனக்கு எதிராகவே வழிகேட்டில் செல்கிறார். அவர்கள்மீது நீர் பொறுப்பாளராக இல்லை
42. உயிர்கள் மரணிக்கும்போதும், மரணிக்காமல் உறக்கத்தில் இருக்கும்போதும் அவற்றை அல்லாஹ்வே கைப்பற்றுகிறான். யாருக்கு மரணத்தை விதியாக்கி விட்டானோ அவற்றை அவன் பிடித்து வைத்துக் கொள்கிறான். மற்றவற்றை நிர்ணயிக்கப்பட்ட தவணைவரை அனுப்பி விடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.443
43. அல்லாஹ்வையன்றி வேறு பரிந்துரையாளர்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்களா? “அவர்கள் எதற்கும் அதிகாரம் பெறாதவர்களாகவும், (எதையும்) விளங்கிக் கொள்ளாதவர்களாகவும் இருந்தாலுமா?” என்று கேட்பீராக!
44. “அனைத்துப் பரிந்துரைகளும் அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக! வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டுவரப்படுவீர்கள்.
45. அல்லாஹ்(வை) மட்டும் (தனித்துக்) கூறப்பட்டால் மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதவர்க(ளின் பெயர்க)ள் கூறப்பட்டால் உடனே மகிழ்கின்றனர்.
46. “அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவனே! மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! உன் அடியார்கள் கருத்து வேறுபாடு கொண்டிருப்பவற்றில் நீயே அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவாய்!” என்று கூறுவீராக!444
47. அநியாயக்காரர்களுக்கு இப்பூமியில் உள்ள அனைத்து(ச் செல்வங்களு)ம் இருந்து, அதனுடன் அதைப் போன்ற இன்னொரு மடங்கு இருந்தாலும் மறுமை நாளில் கொடிய வேதனைக்கு ஈடாக அவைகளைக் கொடுத்து விடுவார்கள். அவர்கள் நினைத்துப் பார்க்காதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளிப்படும்.
48. அவர்கள் செய்த தீமைகள் அவர்களுக்கு வெளிப்பட்டு விடும். அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சுற்றிவளைத்துக் கொள்ளும்.
49. மனிதனுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் நம்மிடம் இறைஞ்சுகிறான். பின்னர் நமது அருட்கொடையை அவனுக்கு நாம் வழங்கினால், “இது எனக்கு வழங்கப்பட்டதற்கு (என்) அறிவாற்றலே காரணம்” என்று கூறுகிறான். அவ்வாறல்ல! இது ஒரு சோதனையாகும். எனினும் அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்வதில்லை.
50. அவர்களுக்கு முன்னிருந்தோரும் இதைத்தான் கூறினார்கள். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
51. அவர்கள் செய்த தீமைகள் அவர்களைப் பிடித்துக் கொண்டன. இவர்களிலும் யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் செய்த தீமைகளே அவர்களைப் பிடித்துக் கொள்ளும். அவர்கள் தப்பிப்போர் அல்ல.
52. அல்லாஹ், தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை வாரி வழங்குகிறான். (நாடியோருக்கு) அளவுடனும் கொடுக்கிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? இறைநம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.
53. “தமக்குத் தாமே வரம்பு மீறிய என் அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் அருளில் விரக்தியடைந்து விடாதீர்கள்! அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான். அவனே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்” என்று (இறைவன் கூறுகிறான் என நபியே!) கூறுவீராக!445
54. உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னர் உங்கள் இறைவனிடம் மீண்டுவந்து, அவனுக்கே கட்டுப்படுங்கள்! (வேதனை வந்துவிட்டால்) பின்னர் நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
55. நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னர், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட மிக அழகியதைப் பின்பற்றுங்கள்!
56. “அல்லாஹ்வுக்குரிய கடமையைப் பாழாக்கியதால் எனக்கு ஏற்பட்ட துயரமே! நான் கேலி செய்வோரில் ஒருவனாக இருந்தேனே!” என்று யாரும் கூறாதிருக்கவும்,
57. “அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருந்தால் நான் இறையச்சமுடையோரில் ஆகியிருப்பேனே!” என்று கூறாதிருக்கவும்,
58. வேதனையை அவன் காணும்போது, “(உலகிற்கு) மீளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்குமானால், நான் நன்மை செய்வோரில் ஆகிவிடுவேன்” என்று கூறாதிருக்கவும் (உங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டதைப் பின்பற்றுங்கள்!)446
59. “ஆனால் உன்னிடம் எனது வசனங்கள் வந்தன. அவற்றை நீ பொய்யெனக் கூறிக் கர்வம் கொண்டாய். இறைமறுப்பாளர்களில் ஒருவனாக இருந்தாய்” (என இறைவன் கூறுவான்.)
60. (நபியே!) அல்லாஹ்வின்மீது பொய்யுரைத்தவர்களை மறுமை நாளில் நீர் காண்பீர். (அப்போது) அவர்களின் முகங்கள் கருத்துப் போயிருக்கும். கர்வம் கொண்டோருக்கான தங்குமிடம் நரகத்தில் இல்லையா?
61. இறையச்சமுடையோரை அவர்களின் வெற்றியைக் கொண்டு அல்லாஹ் ஈடேற்றம் பெறச் செய்கிறான். அவர்களை எந்தத் தீங்கும் அணுகாது. அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
62. அல்லாஹ்வே அனைத்துப் பொருட்களையும் படைத்தவன். அவனே ஒவ்வொரு பொருளின்மீதும் பொறுப்பாளன்.
63. வானங்கள், பூமியின் சாவிகள் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் வசனங்களை யார் மறுக்கிறார்களோ அவர்களே நஷ்டமடைந்தோர்.
64. “அறிவீனர்களே! அல்லாஹ் அல்லாதவற்றை நான் வணங்க வேண்டுமென்று எனக்கு ஆணையிடுகிறீர்களா?” என்று (நபியே!) கேட்பீராக!
65. “நீர் இணை வைத்தால் உமது நற்செயல் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தோரில் ஆகி விடுவீர்” என (நபியே!) உமக்கும், உமக்கு முன்னிருந்தோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
66. எனவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவீராக!
67. அல்லாஹ்வை, அவனது தகுதிக்குத் தக்கவாறு அவர்கள் மதிக்கவில்லை. மறுமை நாளில் அவனது பிடியில் பூமி முழுவதும் இருக்கும். வானங்கள் அவனது வலது கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் உயர்ந்தவன்.447
68. ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் மூர்ச்சையாகி (மரணித்து) விடுவார்கள். பின்னர் அது மற்றொரு முறை ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.448
69. தன் இறைவனின் ஒளியால் பூமி ஒளிர்ந்திடும். பதிவேடு வைக்கப்படும். நபிமார்களும் சாட்சியாளர்களும் கொண்டு வரப்படுவார்கள். அவர்களுக்கிடையே நீதியுடன் தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
70. ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்தவை நிறைவாக வழங்கப்படும். அவர்கள் செய்பவற்றை அவன் நன்கறிந்தவன்.
71. இறைமறுப்பாளர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்தை நோக்கி ஓட்டிச் செல்லப்படுவார்கள். முடிவில், அவர்கள் அங்கு வரும்போது அதன் வாயில்கள் திறக்கப்படும். அதன் காவலர்கள், அவர்களிடம் “உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்கு எடுத்துரைத்து, உங்களது இந்த நாளின் சந்திப்பைப் பற்றி உங்களை எச்சரிக்கும் தூதர்கள் உங்களிலிருந்தே உங்களுக்கு வரவில்லையா?” எனக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் “ஆம்!” என்று கூறுவார்கள். எனினும் இறைமறுப்பாளர்கள்மீது வேதனை பற்றிய வாக்கு உறுதியாகிவிட்டது.
72. “நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள்! அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். கர்வம் கொண்டோரின் தங்குமிடம் மிகக் கெட்டது” என்று கூறப்படும்.
73. தமது இறைவனை அஞ்சியோர் கூட்டம் கூட்டமாகச் சொர்க்கத்தை நோக்கி அழைத்துச் செல்லப்படுவார்கள். அதன் வாயில்கள் திறந்து வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கு வரும்போது (மகிழ்ச்சியடைவார்கள்.) அதன் காவலர்கள் அவர்களிடம் “உங்கள்மீது அமைதி உண்டாகட்டும்! நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள். இதில் நிரந்தரமாகத் தங்கியிருப்பவர்களாக நுழையுங்கள்” என்று கூறுவார்கள்.
74. “அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவன் தனது வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி, நாங்கள் விரும்பியவாறு சொர்க்கத்தில் வசிப்பதற்காக இப்பூமியை எங்களுக்கு உரிமையாக்கினான்” எனக் கூறுவார்கள். நற்செயல் செய்வோரின் கூலி சிறந்ததாகி விட்டது.
75. வானவர்கள் அர்ஷைச் சுற்றிலும் சூழ்ந்து நிற்கக் காண்பீர். அவர்கள் தமது இறைவனின் புகழைக் கொண்டு அவனைப் போற்றுவார்கள். மக்களுக்கிடையே நீதியுடன் தீர்ப்பளிக்கப்படும். “அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறப்படும்.