தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் அறிவிப்பு மார்க்கத்திற்கு எதிரானதா?

தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் அறிவிப்பு மார்க்கத்திற்கு எதிரானதா?

பிறையைக் கண்களால் பார்ப்பதன் அடிப்படையில் தான் மாதங்களின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிக, மிக உறுதியாக வலியுறுத்தி உள்ளார்கள்.
பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். “அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்’’ எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:189
‘அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1909
‘பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1906
‘நீங்கள் பிறையைக் காணும் போது நோன்பு பிடியுங்கள். பிறையைக் காணும் போது நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்
‘மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1907
‘‘(முப்பதாக) எண்ணிக்கையை முழுமைப்படுத்தும் வரை அல்லது பிறையைக் கண்ணால் பார்க்கும் வரை மாதத்தை முற்படுத்தி விடாதீர்கள். (முப்பதாக) எண்ணிக்கையை முழுமைப்படுத்தும் வரை அல்லது பிறையைக் கண்ணால் பார்க்கும் வரை நோன்பு வையுங்கள். நோன்பை விட்டுவிடாதீர்கள்’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை நபித்தோழர்களில் ஒருவரிடமிருந்து ரிப்யீ இப்னு ஹிராஸ் அறிவிக்கின்றார்.
நூல்: அஹ்மத் (18825)
நாங்கள் (பிறையை) கண்களால் பார்த்து வணக்க வழிபாட்டைச் செய்ய வேண்டும். நாங்கள் அதைக் கண்ணால் பார்க்கவில்லையென்றால் நீதமான இருவர் சாட்சி கூறினால் அந்த இருவரின் சாட்சியின் அடிப்படையில் நாங்கள் வணக்கவழிபாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதி மொழி எடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அல்ஹாரிஸ் இப்னு ஹாதிப்(ரலி)
நூல்: அபூதாவூத் (1991)
மேற்கண்ட நபிமொழிகள் அனைத்தும் பிறையைக் கண்களால் பார்த்துத் தான் நோன்பின் ஆரம்பத்தையும், முடிவையும், மாதங்களின் துவக்கத்தையும், முடிவையும் தீர்மானிக்க வேண்டும் என்பதை மிகத் தீர்க்கமாக அறிவிக்கின்றன.
‘‘பிறையைப் பார்த்து வையுங்கள்! பார்த்து விடுங்கள்!”
என்று உடன்பாடாகவும்
‘‘பிறையை பார்க்காமல் வைத்துவிடாதீர்கள்! பார்க்காமல் விட்டுவிடாதீர்கள்!”
என்று எதிர் மறை வாக்கியமாகவும்
‘‘பார்க்கும் போதுதான் வைக்க வேண்டும்! பார்க்கும் போதுதான் விட வேண்டும்”
என்று நிபந்தனை வாக்கியமாகவும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதிலிருந்தே கண்களால் பார்த்து முடிவு செய்வதைத் தவிர வேறு வழிமுறைகள் அனைத்தும் நபிவழிக்கு எதிரானது என்பதை எள்ளளவும் சந்தேகமின்றி முடிவு செய்து கொள்ளலாம்.
அதிகாரம் பெற்றவர்களே அறிவிக்க வேண்டும்
பிறையை மக்கள் கண்களால் பார்த்தால், அல்லது நீதமான இரண்டு சாட்சிகள் கண்களால் பார்த்தால் பார்த்தவர்கள் அவர்களாக நோன்பையோ, நோன்புப் பெருநாளையோ ஆரம்பம் செய்ய முடியாது.
பிறை பார்த்தவர்கள் மக்களுக்கு நோன்பையும், பெருநாளையும் முடிவு செய்து அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர்களிடம் அத்தகவலை சாட்சி கூற வேண்டும்.
அந்தப் பொறுப்பாளர்கள்தான் அதை மக்களுக்கு முறையாக அறிவிப்பார்கள், அறிவிக்க வேண்டும். இதுதான் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைஆகும்.
நபி (ஸல்) அவர்களுடைய கால கட்டத்தில் பிறை பார்த்தவர்கள் அவர்களாகவே நோன்பையும், பெருநாளையும் தீர்மானித்து விடவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களிடம் தான் வந்து சாட்சி கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் பிறைத் தகவலை உறுதி செய்து மக்களை நோன்பு நோற்குமாறும், நோன்பை விடுமாறும், பெருநாள் கொண்டாடுமாறும் கட்டளையிட்டுள்ளார்கள்.
இதனைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இரண்டு கிராமவாசிகள் பிறைபார்த்த தகவலை நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாட்சி சொன்னார்கள். அவருடைய தகவலை ஏற்று நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு நோன்பை விடுமாறு கட்டளையிட்டார்கள் என்ற செய்தி அபூதாவூத் (1992) என்ற நூலில் பதிவாகி உள்ளது.
அதுபோன்று, வாகனக் கூட்டத்தினர் பிறை பார்த்து விட்டு அத்தகவலை நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாட்சி சொன்னார்கள். அவர்களின் சாட்சியை ஏற்று அவர்கள் நோன்பை விட வேண்டும் என்றும் அவர்களின் பெருநாள் திடலிற்குச் செல்ல வேண்டும் என்றும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற செய்தி இப்னுமாஜா 1653வது செய்தியாகப் பதிவாகி உள்ளது. இன்னும் பல நூற்களிலும் இச்செய்தி பதிவாகி உள்ளது.
மிக உறுதியான சாட்சியாக இருந்த இப்னுஉமர் (ரலி) அவர்கள், பிறை பார்த்து நபி (ஸல்) அவர்களிடம் பிறைத்தகவலை சாட்சி சொன்னார்கள். சாட்சியை ஏற்று நபி (ஸல்) அவர்கள்தான் மக்களுக்கு நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். இச்செய்தி அபூதாவூத் 2344வது செய்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஆதாரங்கள் அனைத்துமே பிறை பார்த்த தகவலை மக்களின் பொறுப்புதாரி தான் தீர்மானித்து மக்களுக்கு நோன்பு என்றும் பெருநாள் என்றும் அறிவிக்க வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக, சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்துகின்றது.
தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் அறிவிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பது நமது தலைமைக்கு உட்பட்ட அனைத்து மாவட்ட மக்களுக்கும், நம்முடைய கருத்தில் உள்ள மக்களுக்கும் பெருநாள் தொடர்பாகவும், நோன்பு தொடர்பாகவும் வழிகாட்டி வருகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.
இதன் அடிப்படையில்தான் இந்த ஆண்டும் ரமலான் 29ஆம் நாள் முடிந்த உடன் 30ஆம் இரவில் தமிழகம் முழுவதும் ஷவ்வால் மாதத்திற்கான பிறைத் தகவல் வருகிறதா என மாநிலத் தலைமை எதிர்பார்த்தது. ஆனால் குறித்த நேரத்தில் எங்கிருந்தும் பிறைத் தகவல் வரவில்லை.
கன்னியாகுமரி கோட்டார் பகுதியில் ஒருவர் பிறை பார்த்ததாகத் தகவல் கிடைத்தது. ஆனால் அவருடைய வாக்குமூலங்கள் அடிப்படையில் மிக உறுதியான சாட்சியாகத் தீர்மானிக்க முடியாத நிலை இருந்தது.
சுன்னத் ஜமாஅத்தினர் தலைமை காஜியின் அறிவிப்பை அடிப்படையாக வைத்து நோன்பையும், பெருநாளையும் தீர்மானிக்கின்றனர். தலைமை காஜி அறிவிப்பது நபிவழிக்கு உட்பட்டதா? எதிரானதா? என்பதைக் கூட அவர்கள் சிந்திப்பது இல்லை. அந்தத் தலைமை காஜி என்பவர் நாளை பெருநாள் கிடையாது என அறிவித்துவிட்டார்.
ஆனால் மாநிலத் தலைமை பிறைத்தகவல் எங்கிருந்தாவது வருகிறதா? என்பதை நீண்ட நேரம் எதிர்பார்த்திருந்தனர். பிறை பார்த்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எங்கிருந்தும் வராத காரணத்தினால் நாளை பெருநாள் இல்லை. எனவே ரமலானை முப்பதாக முழுமைப்படுத்துவோம் என்ற அறிவிப்பை தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டது.
தாமதமாக வந்த தகவல்
நமது மாநிலத் தலைமை, நாளை பெருநாள் இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டு அது அதிகமான மக்களைச் சென்றடைந்த பின்னர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் சில பெண்கள் பிறை பார்த்ததாக சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிய செய்தி மாநிலத் தலைமையின் கவனத்திற்கு வந்தது.
செய்தி வந்தவுடன் நமது நிர்வாகிகள் மூலம் உறுதிப்படுத்தும் நடவடிக்கையினை மாநிலத் தலைமை மேற்கொண்டது. பிறை பார்த்ததாகக் கூறிய பெண்களைச் சந்தித்து அவர்களின் வாக்கு மூலத்தை மாநிலத் தலைமை உறுதிப்படுத்தியது.
இவ்வாறு உறுதிப்படுத்தும் போது நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டது.
மாநிலம் முழுவதிலும் உள்ள நபிவழியைப் பின்பற்றும் இலட்சக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டும் பணியைச் செய்யும் தவ்ஹீத் ஜமாஅத் சில தனிநபர்கள் செயல்படுவதைப் போன்று ஏனோ தானோவென்றோ, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியிலோ செயல்படமுடியாது.
தவ்ஹீத் ஜமாஅத் நாளை பெருநாள் இல்லை என்று அறிவித்த காரணத்தினால் பல ஊர்களிலும் நாளை பெருநாள் இல்லை என முடிவு செய்து அடுத்த கட்டக் காரியங்களில் மக்கள் கவனம் செலுத்தத் துவங்கி விட்டனர்.
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை சுன்னத் ஜமாஅத்தினரைப் போன்று கிடையாது.
சுன்னத் ஜமாஅத்தினர் பெண்கள் பெருநாள் தொழுகைக்கு வருவதை வலியுறுத்துவது கிடையாது. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் நபிவழி அடிப்படையில் மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களும் பெருநாள் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
பெருநாள் இல்லை என்ற முதல் அறிவிப்பின் படி பலரும் பயணம் மேற்கொண்டு இருப்பார்கள்.
இந்நிலையில் நாளை பெருநாள் தொழுகை நடத்துங்கள் என்று அறிவித்தால் கணிசமானோருக்கு நபிவழி அடிப்படையில் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ளக் கூடிய நிலை இல்லை என்பதையும் மாநிலத் தலைமை கவனத்தில் கொண்டது.
இதற்கு மார்க்க அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்பதை குர்ஆன், சுன்னா அடிப்படையில் கலந்தாலோசனை செய்தது.
பெருநாள் தொழுகைக்கான அடிப்படைகள்
பெருநாள் தொழுகை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் பல அடிப்படைகளை வலியுறுத்தி உள்ளார்கள்.
வயது வந்த பெண்களும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களும் மாதவிடாயுள்ள பெண்களும் (பெருநாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் காரியங்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்செய்தி புகாரி 324வது செய்தியாகப் பதிவாகி உள்ளது.
தலைமுக்காடு இல்லாத பெண்கள் கூட இரவல் வாங்கி அணிந்து கொண்டாவது பெருநாள் திடலுக்கு வரவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘‘எங்களில் ஒரு பெண்ணுக்கு தலைமுக்காடு இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘(ஒரு பெண்ணிடம் தலைமுக்காடு இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது தலைமுக்காடுகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரங்களிலும் கலந்து கொள்ளட்டும்!’’ என்று சொன்னார்கள்.
இச்செய்தி புகாரி 324வது செய்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் பெருநாள் தொழுகையில் பங்கெடுக்க வேண்டும் என்பதையும் மார்க்கம் வலியுறுத்துகிறது.
தீர்மானிக்கும் உரிமை
“நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ (633)
பிறை பார்த்து நோன்பு நோற்க வேண்டும், பிறை பார்த்து பெருநாளைத் தீர்மானிக்க வேண்டும் என்று வழிகாட்டிய நபி (ஸல்) அவர்கள் இந்தச் செய்தியில் ‘‘நீங்கள் நோன்பையும், நோன்புப் பெருநாளையும், ஹஜ்ஜுப் பெருநாளையும் முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று மக்களுக்கு கூறுகின்றார்கள்.
நீங்கள் முடிவு செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது பிறை பார்க்காமல் நோன்பையோ, பெருநாளையோ, தீர்மானிப்பதாக நிச்சயமாக இருக்க முடியாது.
அப்படியென்றால் ‘‘நீங்கள் முடிவு செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வழங்கும் அதிகாரம் நிச்சயமாக மக்களுக்கு இலகுவை நாடக்கூடிய ஒரு விசயம்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
ஒரு பகுதியில் பார்க்கப்பட்ட பிறை மிகத் தூரமான மற்றொரு பகுதியை கட்டுப்படுத்தாது என்பது நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் ஆகும்.
சிரியாவில் பார்க்கப்பட்ட பிறையை மதீனாவில் வாழ்ந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக ‘‘மதீனாவில் நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும்வரை நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்போம். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்’’ என்றும் இப்னு அப்பாஸ் (ரலி) தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இது தொடர்பான விரிவான செய்தி முஸ்லிம் (1983)ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாகனக் கூட்டத்தினர் பிறை பார்த்த செய்தியை அறிவிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அந்த வாகனக் கூட்டத்தினர் நோன்பை விடுமாறும், மறுநாள் காலையில் அவர்களின் பெருநாள் திடலுக்கு செல்லுமாறும் உத்தரவிட்டார்கள். இது தொடர்பான செய்தி இப்னுமாஜா 1653வது செய்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘உங்களில் அம்மாதத்தை அடைபவர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்” என்று அல்குர்ஆன் 2:185வது வசனம் குறிப்பிடுகிறது.
உலகின் ஒரு பகுதியில் பார்க்கப்பட்ட பிறையை தூரத்தில் உள்ள மற்றொரு பகுதியினரும் ஏற்கலாம் என்றால் இந்த திருமறை வசனம் பொய்யாகிவிடும். ஏனெனில் ‘‘உங்களில் அம்மாதத்தை அடைபவர் நோன்பு நோற்கட்டும்” என்று திருமறைக் குர்ஆன் குறிப்பிடுவதிலிருந்து மாதத்தைத் தாமதமாக அடைபவர்களும் இருப்பார்கள். மேலும் மாதம் ஆரம்பமாவது ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் வித்தியாசப்படும் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து ஒரு பகுதியில் பிறை பார்க்கப்பட்டால் தூரமான மற்றொரு பகுதியை அப்பிறைத்தகவல் கட்டுப்படுத்தாது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இந்நிலையில் நமது பகுதியாக எதைக் கருதுவது? எவ்வளவு தூரத்திலிருந்து பிறைத்தகவல் வந்தால் அதனை ஏற்று மக்கள் ஒன்றுபட வேண்டும்? என்ற கேள்வி ஏற்படுகிறது.
இதற்கு மேற்கண்ட ஹதீஸ் விடைதருகின்றது.
‘‘நீங்கள் நோன்பை முடிவு செய்து கொள்ளுங்கள், நீங்கள் பெருநாளை முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதின் மூலம் நபி வழிக்கு முரணில்லாத வகையில் எப்பகுதியிலிருந்து பிறைத் தகவல் வந்தால் ஏற்று ஒன்றுபடலாம் என்பதை மக்களே முடிவு செய்து கொள்ளலாம் என்பதற்கு ஆதாரமாக மேற்கண்ட நபிமொழி திகழ்கிறது.
அது போன்று பிறைத்தகவல் தாமதமாகக் கிடைக்கும் போது, மக்கள் அனைவரும் ஒன்றுபட முடியாத சூழல் ஏற்படும் என்றால் ஒருநாள் தாமதமாகப் பெருநாளைக் கொண்டாடுவோம் என்று தீர்மானிக்கும் உரிமையும் மக்களுக்கு உள்ளது.
மக்கள் ஒன்றுபடுதற்கான சாத்தியக் கூறுகளை மக்களுக்குப் பொறுப்பாளர்களாக உள்ளவர்கள் தான் தீர்மானிக்க முடியும்.
நபி (ஸல்) அவர்கள் வாழும் காலகட்டத்தில் பிறை பார்த்த சாட்சிகளின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள்தான் நோன்பு வையுங்கள், பெருநாள் கொண்டாடுங்கள், முடியாத நிலையில் மறுநாள் பெருநாள் கொண்டாடுங்கள் என்று மக்களுக்கு அறிவிப்புச் செய்துள்ளார்கள்.
பிறை பார்த்த தகவல் கிடைத்தவுடன் மக்கள் சிரமமில்லாத வகையில் ஒன்றுபட முடியுமென்றால் உடனே பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறும் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
பிறை பார்த்த தகவல் கிடைத்தவுடன் மக்கள் ஒன்றுபடமுடியாத நிலை இருந்தால் மறுநாள் பெருநாளைக் கொண்டாடுங்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்.
பின்வரும் செய்தியிலிருந்து காலை நேரத்தில் பிறைத் தகவல் கிடைத்தவுடன் உடனடியாகப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டனர். பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்,
நூல்: அபூதாவூத் (1992)
அது போன்று மக்கள் ஒன்றுபட்டு நிறைவேற்ற முடியாத நிலையில் பிறைத் தகவல் வரும் போது நபி (ஸல்) அவர்கள் மறுநாள் பெருநாள் கொண்டாடுமாறு கட்டளையிட்டார்கள் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமைர்
நூல்கள்: இப்னுமாஜா, அபூதாவூத்,, நஸயீயின் அல்குப்ரா, பைஹகீ, தாரகுத்னீ,அல்முன்தகா, இப்னு ஹிப்பான், நஸயீ, அஹ்மத்
மாலை நேரத்தில் வந்த காரணத்தினால் தான் நபி (ஸல்) அவர்கள் மறுநாள் காலை நிறைவேற்றுமாறு சொன்னார்கள். காலையிலேயே வந்திருந்தால் உடனே தொழுகை நடத்துமாறு கட்டளையிட்டிருப்பார்கள் என்று சிலர் வாதிக்கின்றனர்.
இவர்களின் வாதம் அறவே தவறானதாகும். பெருநாள் தொழுகையைக் காலை நேரத்தில் தான் நிறைவேற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் மற்ற ஃபர்ளான தொழுகைகள் தவறி விட்டால் ஞாபகம் வந்தவுடன், அல்லது தூங்கி எழுந்தவுடன் உடனே நேர, காலம் பார்க்காது நிறைவேற்ற வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
உதாரணமாக ஒருவர் சுபுஹு நேரத்தில் தொழ மறந்து விட்டார். அவருக்கு லுஹருக்குப் பிறகுதான் தான் சுபுஹ் தொழவில்லை என்று ஞாபகம் வருகிறது. இப்போது என்ன சட்டம்? அவர் மறுநாள் சுபுஹ் நேரத்தில்தான் அதை நிறைவேற்ற வேண்டுமா? அல்லது லுஹர் நேரம் என்று பாராமல் உடனே சுபுஹைத் தொழவேண்டுமா?
இக்கேள்விக்கு என்ன பதில் வரும்? ‘‘லுஹர் நேரமாக இருந்தாலும் ஞாபகம் வந்தவுடன் உடனே தொழுது விட வேண்டும்” என்றுதான் பதில் கூறுவார்கள். அதுதான் சரியான பதிலும் கூட.
அப்படியென்றால் வாகனக் கூட்டத்தினர் பெருநாள் பிறையைப் பார்த்துவிட்டு பெருநாள் தொழால் அஸர் நேரத்தில் வருகிறார்கள். அவர்களை, உடனே நீங்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுங்கள் என்று சொல்லாமல் மறுநாள் காலையில் திடலுக்குச் சென்று நிறைவேற்றுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதன் நோக்கம் என்ன?
பெருநாள் தொழுகை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறிய அனைத்து நடைமுறைகளையும் கவனத்தில் கொள்ளும் இறையச்சமுள்ள மார்க்க அறிஞர் ஒருவர் ‘‘மக்கள் ஒன்று பட்டுத் தொழவேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் மறுநாள் காலையில் தொழுங்கள்” எனக் கூறியுள்ளார்கள் என்ற முடிவிற்கே வரமுடியும்.
மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் பெருநாள் தொழுகையை காலையில் நிறைவேற்ற வேண்டும். மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு காலையில் நிறைவேற்ற முடியவில்லை என்றால் மதியமோ, மாலையிலோ, இரவிலோ நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்று கூற முடியாது. மாறாக மறுநாள் காலை நேரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நிறைவேற்றுங்கள் என்றே கூறமுடியும்.
எனவே தாமதமாக வரும் பிறைத்தகவல் எந்நேரத்தில் வருகிறது என்பதைப் பொறுத்து, பெருநாள் தொழுகையை உடனே நிறைவேற்றுவதா? அல்லது நாளை நிறைவேற்றுவதா? என்பது முடிவு செய்யப்படாது.
மாறாக, மக்கள் ஒன்றுபட முடியுமா என்பதைத் தான் கவனிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் தான் நபி (ஸல்) அவர்கள் வாகனக் கூட்டத்தாரை மறுநாள் காலையில் நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள்.
நபிவழிக்கு எதிரானது
பெருநாள் தொழுகை தொடர்பான அனைத்து ஹதீஸ்களையும் உற்று நோக்காத சிலர் காலையில் வந்தால் காலையிலேயே தொழுது விட வேண்டும். மாலையில் வந்தால் மறுநாள் தொழவேண்டும் என்று தவறான வழிமுறையை மக்களுக்குப் போதித்து, ஒன்றுபடுதலைக் கெடுத்து நபிவழிக்கு எதிரான நடைமுறையை உருவாக்குகின்றனர்.
மக்கள் ஒன்றுபட முடியாத சூழல் ஏற்படும் போது மறுநாள் தொழுகையை நடத்திக் கொள்வோம் என பொறுப்பாளர்கள் முடிவு செய்யும் போது, ‘நாங்கள் இன்று தான் தொழுகை நடத்துவோம்’ என ஒரு சிலர் ஒன்றுபட்டுத் தொழுவதற்கு எதிராகச் செயல்பட்டால் நிச்சயமாக அவர்கள் அந்த விஷயத்தில் தவறிழைக்கின்றனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
மக்கள் ஒன்றுபடும் சூழல் உள்ளதா இல்லையா என்பதை சில தனிமனிதர்களை விட ஒரு நிர்வாகம் தான் சரியாக தீர்மானிக்க முடியும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்தது இறையச்சத்தின் அடிப்படையில் தான். நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு என்னென்ன அடிப்படைகளைக் கவனிக்க வேண்டும் என்று சொன்னார்களோ அந்த அடிப்படைகளைக் கவனத்தில் கொண்டு தான் தவ்ஹீத் ஜமாஅத் தீர்மானித்தது.
ஆனால் சிலர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொள்ளாமல், அல்லது அறிந்தும் அறியாதவர்களைப் போன்று சில எதிர்வாதங்களை வைத்துள்ளனர்.
அவர்கள் வைக்கும் வாதங்களில் ஒன்று ‘‘பிறைத் தகவல் மாலை நேரத்தில் வந்த காரணத்தினால் தான் நபி (ஸல்) அவர்கள் மறுநாள் தொழுதார்கள். ஆனால் உங்களுக்கோ ஸஹர் நேரத்திலேயே தகவல் வந்துவிட்டது. எனவே நீங்கள் மறுநாள் தொழுதது தவறு” எனக் கூறுகின்றனர்.
இவர்களின் அடிப்படையான வாதமே பிறைத்தகவல் கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதை முடிவு செய்ய வேண்டுமே தவிர சிரமத்தை கவனத்தில் கொள்ளக் கூடாது என்பதுதான்.
இந்த அடிப்படை குர்ஆன் சுன்னா அடிப்படையில் சரியா எனக் காண்போம்.
மையக்கரு அறிதல்
பொதுவாகத் திருமறைக் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆய்வு செய்யும் போது ‘மையக்கரு அறிதல்’ என்றொரு அடிப்படை உள்ளது.
இதனை நன்கு உள்வாங்கிக் கொண்டவர்களே மக்களுக்குச் சரியான வழிகாட்டுதலை வழங்க இயலும். இல்லையென்றால் தானும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுக்கும் நிலைதான் உருவாகும்.
ஒரு காரியங்கள் அதிகமாக எந்நேரத்தில் நிகழுமோ, அல்லது யாருக்கு நிகழுமோ அல்லது எந்த நிலையில் நிகழுமோ அதனைக் குறிப்பிட்டு அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் பேசியுள்ளனர்.
அவ்வாறு பேசிய காரணத்தினால் அது அந்த நேரத்திற்கு மட்டும்தான், அல்லது அவருக்கு மட்டும்தான் அல்லது அந்த நிலைக்கு மட்டும்தான் என்று முடிவு செய்வது மிகப்பெரும் வழிகேட்டில் தள்ளிவிடும்.
உதாரணமாக சில வசனங்களைச் சுட்டிக் காட்டலாம்.
அறியாமைக் காலத்தில் வறுமையின் காரணமாகக் குழந்தைகளைக் கொலை செய்யும் செயல் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் திருமறைக் குர்ஆன் பின்வருமாறு மக்களுக்குக் கட்டளையிட்டது.
வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்!
(அல்குர்ஆன் 6:151)
குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்பதுதான் மேற்கண்ட வசனத்தின் மையக் கரு. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் அதிகமாக வறுமையின் காரணத்தினால் கொன்ற காரணத்தினால் வறுமைக்காகக் கொல்லாதீர்கள் என குர்ஆன் பேசுகிறது.
வறுமைக்காகத் தான் கொல்லக் கூடாது என குர்ஆன் கூறுகிறது. எனவே குழந்தை ஊனமாகப் பிறந்தால், புத்தி சுவாதீனமாகப் பிறந்தால் கொல்லலாம். அதில் குற்றமில்லை என்று ஒருவர் வாதிட்டால் அது நிச்சயமாக மிகப்பெரும் வழிகேடு என்பதில் யாரிடமும் மாற்றுக் கருத்து கிடையாது.
அது போன்று அறியாமைக் காலத்தில் அதிகமான அடிமைப் பெண்கள் நல்லொழுக்கத்தை விரும்பிய நிலையிலும் அவர்களை விபச்சாரத்திற்கு நிர்பந்தம் செய்தார்கள். அப்போது அம்மக்களைப் பார்த்து திருமறைக் குர்ஆன் பின்வருமாறு வழிகாட்டியது.
கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்!
(அல்குர்ஆன் 24:33)
எப்பெண்களையும் விபச்சாரத்திற்கு நிர்பந்திக்கக் கூடாது என்பதுதான் மேற்கண்ட வசனத்தின் மையக் கரு. கற்பொழுக்கம் நாடும் பெண்களை நிர்பந்திப்பது அதிகமாக இருந்ததால் அதனைக் குறிப்பிட்டு இந்த வசனம் பேசுகிறது.
இந்த அடிப்படையை சிந்திக்காமல், ‘விபச்சாரத்தை விரும்பும் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தலாம். அதனை மேற்கண்ட வசனம் தடுக்கவில்லை’ என ஒருவன் வாதிட்டால் அவனுடைய அந்த வாதம் மிகப்பெரும் வழிகெட்ட வாதமாகும்.
அதுபோன்று பயணத்தில் இருக்கும் போது கடன் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் எழுத்தர் கிடைக்காத நிலை அதிகமாக இருந்தது. இதனால் குர்ஆன் பின்வருமாறு மக்களுக்கு வழிகாட்டியது.
நீங்கள் பயணத்தில் இருக்கும்போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அல்குர்ஆன் 2:283
எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானம் செய்து கொள்ளலாம் என்பதுதான் மேற்கண்ட வசனத்தின் மையக் கருவாகும். பயணத்தில் அதிகமாக இந்த நிலை ஏற்பட்டதால் அல்லாஹ் பயணம் என்று குறிப்பிடுகின்றான்.
பயணத்தில் இருக்கும் போது எழுத்தர் கிடைக்காவிட்டால் தான் அடைமானம் வாங்கலாம். ஊரில் இருக்கும் போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானம் வைக்கக் கூடாது என ஒருவர் வாதிட்டால் அது அவருடைய மார்க்க அறியாமையின் வெளிப்பாடாகும்.
இவ்வாறு சில நேரங்களில் சில சட்டங்களைக் கூறும் போது நேரம், இடம் போன்ற காரணங்கள் இருந்தாலும் மையக் கரு வேறொன்றாக இருக்கும். அது போன்ற நேரங்களில் மையக் கருவை கவனத்தில் கொண்டுதான் மார்க்கச் சட்டங்களை வகுக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களுடைய கால கட்டத்தில் அஸர் தொழுகைக்குப் பிறகு செய்யும் வியாபாரங்களில் பொய் சத்தியம் செய்யும் பழக்கம் அதிகமாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரிடம் (மறுமை நாளில்) அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உள்ளது…..
………இன்னொருவர், ஒரு மனிதரிடம் அஸர் தொழுகைக்குப் பிறகு ஒரு பொருளுக்கு விலை கூறி, அந்தப் பொருளுக்கு இன்ன விலையைக் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது (பொய்) சத்தியம் செய்ய, (அதை நம்பி) அந்த மனிதர் (அவர் சொன்ன விலைக்கு) அதை எடுத்துக் கொள்ளும்படி செய்தவர் ஆவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (2672)
பொதுவாகவே எந்நேரத்திலும் பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்யக் கூடாது என்பதுதான் இச்செய்தியின் மையக் கரு ஆகும். ஆனால் அஸருக்குப் பிறகு அவ்வாறு நடந்து கொண்ட காரணத்தினால் அந்த நேரத்தைக் குறிப்பிட்டுக் கூறுகிறார்களே தவிர அஸருக்குப் பிறகுதான் பொய் சத்தியம் செய்யக் கூடாது. லுஹருக்குப் பிறகு செய்தால், முற்பகல் நேரத்தில் செய்தால் தவறில்லை என்ற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடவில்லை.
சில நேரங்களில் சம்பவம் நிகழும் நேர, காலங்கள் கூறப்பட்டாலும் மையக்கரு வேறொன்றாக இருக்குமென்றால் மையக் கருவைக் கவனித்துதான் அடிப்படைச் சட்டங்களை வகுக்க வேண்டும். நேர, காலம் என்பது கவனத்தில் கொள்ளப்படாது.
அதுபோன்று தான் வாகனக் கூட்டம் அஸர் நேரத்தில் வந்து சாட்சி சொன்ன காரணத்தினால் மறுநாள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக மக்கள் ஒன்றுபட்டுச் செய்ய முடியாது என்பதுதான் இங்கு அடிப்படையான மையக் கரு ஆகும்.
ஜும்ஆ தொழுகை கூட்டாகச் சேர்ந்து நிறைவேற்றும் தொழுகை தான். அந்த ஜும்ஆ தவறிவிட்டால் லுஹராகத் தொழுது கொள்ளலாம்.
மற்ற எந்த ஒரு பர்லான, சுன்னத்தான தொழுகைகளையும் தூக்கம், மறதி, நிர்பந்தம் போன்ற காரணங்களினால் நேரம் தவறி விடும் என்றால் முடியும் நேரத்தில் உடனே தொழுதுவிட வேண்டும் என்றுதான் மார்க்கம் வழிகாட்டுகிறது.
சுபுஹின் முன்சுன்னத்தைக் கூட தவறும் போது அதன் நேரத்தை விடுத்து சுபுஹுக்குப் பின்னர் தொழுது கொள்வதை நபியவர்கள் அங்கீகரித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூட சில நாட்களில் சுன்னத்தான தொழுகைகளை, குறித்த நேரத்தில் தொழ முடியாத போது மற்ற நேரங்களில் தொழுதுள்ளார்கள்.
ஏன்? எக்காரணமும் இல்லாமல் வாழ்நாளில் ஒரு தடவை உள்ளூரில் இருக்கும் போது லுஹரையும், அஸரையும், அதுபோன்று மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதுள்ளார்கள்.
இப்படியெல்லாம் செய்து காட்டிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகை தவறிவிட்டால் வேறு நேரங்களில் தொழலாம் என வழிகாட்டாமல் அடுத்த நாள் அதற்குரிய நேரத்தில் தொழச் சொல்வதன் காரணம் என்ன? என்பதைச் சிந்தித்தாலே, தாமதமாக வரும் பிறைத் தகவல் எந்நேரத்தில் வருகிறது என்பதை வைத்து முடிவு செய்வதல்ல. மாறாக தகவல் எந்நேரத்தில் வந்தாலும் மக்கள் ஒன்று கூடுவதில் சிரமம் ஏற்படுமென்றால் தாமதப் படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் இதன் மையக் கரு ஆகும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
அதிகாலை நேரத்தில் வந்த போதும் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டிய பிரகாரம் பெருநாள் தொழுகைக்குரிய நேரத்தில், திடலில், மாதவிடாய் பெண்கள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் இயலுமென்றால் தொழுவதில் தவறில்லை.
மக்ரிப் நேரத்திலேயே பிறை பார்க்கப்பட்டாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக பெருநாள் தொழுகைக்குரிய நேரத்தில், திடலில், பெண்கள் உட்பட அனைவரும் ஒன்று கூடக்கூடிய வகையிலே நிறைவேற்ற முடியாத நிலை இருந்தால் ஒரு நாள் தாமதிக்கலாம் என்பதும் நபிவழியே.
மக்களுக்குச் சிரமம் என்பதை, தனிநபர்களை விட மக்களின் பொறுப்புதாரிகளே தீர்மானிக்க இயலும்.
தவ்ஹீத் ஜமாஅத் எந்த மக்களுக்குப் பொறுப்புதாரியாக உள்ளதோ, அம்மக்களின் சிரமத்தைக் கவனத்தில் கொண்டே நபிவழி அடிப்படையில் முடிவெடுத்து அறிவித்தது. இதில் அறியாமை விமர்சனங்கள் எள்ளளவும் எம்மைப் பாதிக்காது.
நம்முடைய நிலைப்பாடு இறையச்சத்தின் அடிப்படையில் நபிவழிக்கு உட்பட்டு இருக்கும் போது இதற்கு எதிராக எத்தனை பேர் பழித்தாலும், அவதூறு கூறினாலும் இறையச்சவாதிகளிடம் அவற்றிற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதே உண்மையாகும்.
-ஏகத்துவம் ஜூலை 2018 இதழ்