ஓயட்டும் ஒழியட்டும் மீலாதும் மவ்லிதும்

ஓயட்டும் ஒழியட்டும் மீலாதும் மவ்லிதும்

இதோ ரபிய்யுல் அவ்வல் மாதம் வரப் போகின்றது. ரபீஃ என்றால் வசந்தம் என்று பொருள். அவ்வல் என்றால் முதல் என்று பொருள். ஆலிம்களுக்கான முதல் வசந்தம் துவங்கி விட்டது. ஆம்! ஆலிம்களின் வருவாய்க்கான வாசல் திறந்து விட்டது. அதனால் முதல் வசந்தம் ஆலிம்களுக்கே முழு சொந்தம். 12 நாட்களுக்கு பாடல் மழை தான்! பணமழை தான்!

புதிய தலைமுறையினரை ஈர்ப்பதற்குப் புத்தம் புதிய படங்களிலிருந்து ஹிட்டான புதுப்பாடல் ராகங்களிலும் பழைய தலைமுறையினரைத் தக்க வைக்க இலங்கை வானொலி ஒலிபரப்பிய, ‘நினைவில் நின்றவை’யை மலரும் நினைவாக மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்ற வகையில் பழைய பாடல் ராகங்களிலும் மவ்லிது சபைகள் களை கட்டி நிற்கும்.
இரவுவேளைகளில் சந்தனம், சாம்பிராணி, பத்தி, நறுமணத் திரவியங்களின் வாசனையிலும், மேற்கட்டியில் தொங்கும் பூ மணத்திலும் சுப்ஹான மவ்லிது முடிகின்ற வரை பாடுகின்ற பாடகர்களும் ரசிக்கின்ற பக்த கோடிகளும் தூக்கத்தில் சொக்கி விடக் கூடாது என்பதற்காக இடையிடையே சூடான டீ, காஃபீ, பாயசம் என வகை வகையான குடிபானங்களை அடிக்கடி வீட்டார்கள் பரிமாறவும் பசியாறவும் செய்து கொண்டே இருப்பார்கள். இறுதியில் ஆலிம்களுக்குக் காணிக்கைகள் அளிக்கப்படும். அன்று விடிந்ததும் மதியம் புலவுச் சோறு விருந்து அளிக்கப்படும்.

இப்போது சொல்லுங்கள்! இந்த முதல் வசந்தம் ஆலிம்களுக்குத்தான் என்று சொல்வதற்கு இது எவ்வளவு பொருத்தம் என்று! வீடுகளில் நடக்கும் இதே மவ்லிதுப் பாடல்கள் அல்லாஹ்வை மட்டும் நினைவு கூர்வதற்காக எழுப்பப்பட்ட பள்ளிவாசல்களில் அமர்க்களமாக நடைபெறும். பன்னிரண்டு நாட்களும் நெய் சோறு விநியோகம். இப்படி ஒரு பக்கம் மவ்லிது! இன்னொரு பக்கம் மீலாது!

இது ஒவ்வொரு ஊரிலும் படுவிமரிசையாக நடைபெறும். பொதுக்கூட்டங்கள் என்ன? பேரணிகள் என்ன? சொல்ல வேண்டியதில்லை. இதிலும் வசந்தகாலம் தான். வருவாய் காலம் தான்.
ஆனால் இது எல்லா ஆலிம் பெருமக்களுக்கும் கிடைப்பதில்லை. பேசத்தெரிந்த உலமாக்களே பிழைக்கத் தெரிந்த பெருமக்கள். மற்றவர்கள் மவ்லிதுகளில் தான் பிழைப்பைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இது ரபீஉவுல் அவ்வல் எனும் முதல் வசந்தம் காலம் கழிந்ததும் அடுத்தது ரபீஉல் ஆகிர் எனும் இரண்டாம் வசந்தம் காலம். அது முஹ்யித்தீன் மவ்லிது காலம். அதுவும் இதுமாதிரியான வருவாய் காலம் தான்.

மொத்தத்தில் மவ்லிதும், மீலாதும் வருவாயை மையமாகக் கொண்டவை என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். இரண்டுமே இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்ற பெயரில் செய்யப்படும் பித்அத்துகளாகும். இவ்விரண்டில் மவ்லிது என்பது வணக்கம் என்ற அடிப்படையில் வலம் வந்து கொண்டிருக்கின்ற மிகப் பெரிய பித்அத் ஆகும்.

அதிலும் குறிப்பாக அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களைக் கடவுளாக்கும் இணைவைப்பு வரிகள் பாடலுக்குப் பாடல் இடம் பெறுகின்றன. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் ‘அன்த்த கஃப்ஃபாருல் கதாயா’, ‘அன்த்த சத்தாருல் மஸாவி’ போன்ற வரிகள். ‘நீங்களே பாவங்களை மன்னிக்கக் கூடியவர்! குறைகளை மறைக்கக் கூடியவர்!’ என்பது இவற்றின் பொருள். இவை பாடல் வரிகள் அல்ல! நாளை நரகப்படுகுழியில் தள்ளுகின்ற நெருப்புப் பொறிகள்.

இதுமாதிரியான வரிகள் சுப்ஹான மவ்லிது பாடல்களில் நிரம்பி வழிகின்றன. இவை இணைவைப்பு இல்லை, புகழ்ச்சிதான் எனும் பசப்பு வாதம் பேசி சப்பைக் கட்டு கட்டுகின்ற பக்கா பரேலவிய, ஷியாவிஸ(ஷ)க் கொள்கையைக் கொண்ட அறிவிலிகள் ஆலிம்கள் என்ற பெயர்களில் உள்ளனர். இவர்களை மக்கள் அடையாளங்கண்டு வருகின்றனர் என்றாலும் ஒவ்வொரு ஏகத்துவவாதியும் இந்த மாதத்தில், இந்த மவ்லிதில் வண்டி வண்டியாக மண்டிக் கிடக்கும் இணைவைப்பு வரிகளை மக்களிடம் அள்ளிப் போட்டு விளக்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக பித்அத் ஒழிப்பு மாநாட்டை ஒட்டி கொள்கைவாதிகள் இதில் வரிந்துகட்டிக் களமிறங்க வேண்டும். மவ்லிதுக்கு பழைய மவுசும் மரியாதையும் தேய்ந்து போய் விட்டது என்றாலும் வருவாய்க்கும் வயிற்றைக் கழுவுவதற்கும் இதை ஒரு வாசலாக இந்த ஆலிம் வர்க்கத்தினர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

புகழ்ந்து விட்டாய்! போய் வா என்று வெறுங்கையுடன் இந்த ஆலிம்கள் அனுப்பப்பட்டால் போதும். அடுத்த நிமிடம் மவ்லிது கூடாது என்ற ஃபத்வாக்கள் பறக்க ஆரம்பித்து விடும். அல்லது இவர்களே பாய் மடக்கி விடுவார்கள். அந்தக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்றாலும் மவ்லிதும் மீலாதும் ஓய்கின்றவரை, ஒழிகின்ற வரை அதற்கு எதிரான யுத்தத்தைத் தொடர்ந்து தொய்வின்றி நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போதும் கடவுள் கிடையாது. இதோ அல்லாஹ் பிரகடனம் செய்யச் சொல்கின்றான்.
“நான் உங்களைப் போன்ற மனிதனே! ‘உங்கள் கடவுள் ஒரே கடவுள்தான்’ என்று எனக்கு (தூதுச்செய்தி) அறிவிக்கப்படுகிறது. எனவே தமது இறைவனைச் சந்திக்க விரும்புபவர் நற்செயல் செய்யட்டும். தமது இறைவனை வணங்குவதில் யாரையும் அவர் இணையாக்க வேண்டாம்” என்று (நபியே!) கூறுவீராக! (18:110)

இந்த ஏகத்துவ முழக்கத்தை உரத்து முழங்குவோமாக!

-சத்திய முழக்கம் (செப்டம்பர் 2022)