திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்

இஸ்லாம் மார்க்கத்தில் ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை நாட்டில் மிகப்பெரிய விவாதப் பொருளாக ஆக்கப்பட்டுள்ளது.

தலாக் எனும் விவாகரத்துச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லியே இது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது.

கணவன் மனைவியர் சேர்ந்து வாழ்ந்து விட்டு பிரியும் போது பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். சில வேளை ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தக் காரணம் அனைவருக்குமானதே தவிர முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது அல்ல. முஸ்லிம் ஆண்கள் தமது மனைவியரை விவாகரத்து செய்தால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவது போல், இந்து ஆண்கள் விவாகரத்து செய்தால் இந்துப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். கிறித்தவ ஆண்கள் விவாகரத்துச் செய்தால் கிறித்தவப் பென்கள் பாதிக்கப்படுவார்கள். எந்த மதத்தைச் சேர்ந்த ஆண்கள் விவாகரத்து செய்தாலும் அந்தந்த மதத்துப் பெண்கள் பாதிக்கப்படுவார்கள். மதத்தை நம்பாதவர்கள் விவாகரத்துச் செய்தாலும் அவர்களின் மனைவியர் பாதிக்கப்படுவார்கள்.

பொதுவான இந்தப் பிரச்சனையில் கருத்து சொல்பவர்கள் நியாயமானவர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் யாரும் விவாகரத்து செய்யக் கூடாது என்று கூற வேண்டும்.

அப்படி ஒருவரும் கூறுவதில்லை. கூற முடியாது. ஏனெனில் திருமண உறவு என்பது தாய், தந்தை, அண்ணன் தம்பி போன்ற பிரிக்க முடியாத உறவு அல்ல.

ஆண்களும் பெண்களும் தங்களின் தேவைகள் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளும் உறவாகும்.

திருமணம் செய்த பின்னர் பெரும்பாலும் தம்பதிகள் மகிழ்வோடு வாழ்கிறார்கள். சிலர் குறைகளைச் சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள். மிகச் சிலர் சேர்ந்து வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலைக்கு ஆளானவர்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை இல்லாவிட்டால் அவர்களை எந்தச் சட்டத்தின் மூலமும் சேர்த்து வைக்க முடியாது.

விவாகரத்து செய்ய முடியாது என்று வலியுறுத்தினால் அந்த ஆண் பெயருக்குத் தான் அவளுக்குக் கணவனாக இருப்பான். அவளுடன் இல்லறம் நடத்த மாட்டான். வேண்டாத மனைவி என்பதால் சித்திரவதை செய்வான். மனைவியைக் கவனிக்காமல் கள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு மனைவியை மனம் நோகச் செய்வான்.

கள்ள உறவு வேண்டாம்; முறையாக இன்னொருத்தியை திருமணம் செய்து வாழலாம் என்று அவன் நினைத்தால் முதல் மனைவி அதற்குத் தடையாக நிற்கிறாள் என்பதால் மனைவியை தந்திரமான வழிகளில் கொலை செய்து விடுகிறான். இப்படி ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் கணவனால் கொல்லப்படுகிறார்கள். அல்லது கணவன் இருந்தும் வாழாவெட்டியாக நரக வாழ்க்கை வாழ்கிறார்கள்.

இதற்கான ஒரே தீர்வு எளிதான விவாகரத்து தான்.

இது ஆணுக்கு மட்டுமல்ல; மனைவிக்கு கணவனைப் பிடிக்காமல் போனால் அவள் கணவனையும் பிள்ளைகளையும் விட்டு விட்டு இன்னொருவனுடன் ஓடிப் போகிறாள். அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக் காட்டுகிறாள்.

இது போன்ற சம்பவங்களும் ஆண்டு தோறும் நூற்றுக் கணக்கில் நடக்கின்றன.

மிகப் பெரிய தீமைகள் பெண்களுக்கோ ஆண்களுக்கோ ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் விவாகரத்து சட்டம் உள்ளது. இதனால் சிறிய அளவில் பாதிப்பு இருந்தாலும் பெரிய பாதிப்புகளைத் தவிர்க்க சிறிய பாதிப்புகளைச் சகித்துக் கொள்வது தான் அறிவுடமை.

இந்தியாவில் மட்டும் அல்ல. உலகின் எல்லா நாடுகளிலும் விவாகரத்துச் சட்டங்கள் உள்ளன. விவாகரத்துச் சட்டம் இல்லாத ஒரு நாடு கூட உலகில் இல்லை.

தலாக் கூறுவதால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனும் காரணம் கூறி முஸ்லிம் கணவனைச் சிறையில் தள்ளும் சட்டம் இயற்றுவோர், அதை ஆதரிப்போர் தமது மதத்துப் பெண்கள் விவாகரத்தினால் பாதிக்கப்படுவது பற்றி கவலைப்படவில்லை. இந்துப் பெண்கள் இந்துக் கணவர்களால் விவாகரத்து செய்யப்பட்டும், விவாகரத்து செய்யாமல் கைவிடப்பட்டும் அல்லல் படுகின்றனர். அவர்களின் கணவன்மார்களைச் சிறையில் தள்ளும் சட்டம் ஏன் இல்லை?

இது நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டியதாகும்.

தலாக், விவாகரத்து வேறுபாடு

தலாக் எனும் விவாகரத்துச் சட்டத்துக்கும், முஸ்லிமல்லாத மக்களின் விவாகரத்துக்கும் சில முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.

முஸ்லிமல்லாதவர்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டும். நீதிமன்றங்கள் பல அமர்வுகள் விசாரணை செய்து விவாகரத்து வழங்கும்.

இப்படி விவாகரத்து நடந்து விட்டால் தம்பதியர் நிரந்தரமாக பிரிந்து விடுவார்கள்.

இஸ்லாம் மார்க்கத்தின் தலாக் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஜமாஅத்தார் முன்னிலையில் விசாரித்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

விவாகரத்து வழக்கை விசாரிக்கும் விசாரிக்கும் நீதிபதிகள் சட்ட வாசகங்களை மட்டும் தான் கவனிப்பார்கள். வழக்கு தொடுத்த தம்பதிகளின் குடும்பம் பற்றியோ இன்ன பிற சூழல் பற்றியோ அவர்கள் அறிய மாட்டார்கள். ஆனால் உள்ளூர் ஜமாஅத்தார்கள் அந்த தம்பதிகளுக்கு உறவினராக இருப்பார்கள். அவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் நீதிமன்றங்களை விட உள்ளூர் ஜமாஅத்தார்களுக்குத் தான் அதிக அக்கறையும், இந்த விஷயத்தில் அதிக ஞானமும் இருக்கும்.

இந்த வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தலாக்கின் விதிமுறைகள்

ஒரு கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தலாக் கூற முடியாது. பல கட்டங்களைக் கடந்து தான் தலாக் எனும் முடிவுக்கு வர வேண்டும்.

பிடிக்கவில்லை என்றவுடன் தலாக் கூறாமல் அறிவுரைகள் சொல்ல வேண்டும். விவாகரத்து முடிவை எடுத்தால் அதனால் ஏற்படும் பாதகங்களை மனைவிக்குப் புரியவைக்கும் வகையில் அறிவுரை கூற வேண்டும்.

இந்த அறிவுரைகள் பயனளிக்காத போது இருவரும் படுக்கையில் இருந்து விலகிப் பார்க்க வேண்டும்.

இப்படி சில நாட்கள் மனைவியுடன் சேராமல் இருக்கும் போது அவனுக்கு மனைவியின் குறைகள் மட்டுமின்றி அவளது அருமையும் தெரிய வரும். அதுபோல் கணவனைப் பிரிந்தால் அது எத்தகையதாக இருக்கும் என்பது மனைவிக்கும் தெரிய வரும்.

இதனால் தன்னிடம் தவறு இருந்தால் அவளும் திருத்திக் கொள்வாள். அவனிடம் தவறு இருந்தால் அவளும் திருத்திக் கொள்வாள்.

தலாக் கூறும் முடிவு இதனால் மாறக்கூடிய வாய்ப்பு உண்டு.

தலாக் என்ற நிலைக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக மனைவியிடம் பெரிய குறைகள் இருந்தால் அடித்து திருத்தியாவது தலாக் கூறும் முடிவுக்குச் செல்லாமல் இஸ்லாம் தடுக்கப் பார்க்கிறது.

இதன் பின்னரும் இணக்கம் ஏற்படாவிட்டால் உடனே தலாக் கூற முடியாது. ஜமாஅத்துக்கு அவன் பிரச்சனையைக் கொண்டு வந்தவுடன் அவனது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும், அவளது குடும்பத்தில் இருந்து பக்குவமாக அணுகும் ஒருவரையும் ஜமாஅத்தார் நியமித்து அவர்கள் வழியாக சமரசம் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இது முஸ்லிம்களின் வேதமான திருக்குர்ஆனில் தெளிவான வார்த்தைகளால் சொல்லப்பட்டுள்ளது. அந்த வசனங்களைப் பாருங்கள்!

சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 2:34

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 2:35

நடுவர்களை ஏற்படுத்துங்கள் என்று கூறப்படுவதால் ஆண்கள் சுயமாக தலாக் கூற முடியாது. மூன்றாம் தரப்பான ஜமாஅத் தலையீடு இதில் இருப்பது அவசியம் என்பதை இதிலிருந்து அறியலாம்.

இந்த நான்கு நடவடிக்கைகளாலும் இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை! இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.

மூன்று வாய்ப்புகள்:

தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இதுதான் தலாக் கூறுவதற்கு திருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டமாகும்.

ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண்ணுக்கு மூன்று மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையாவதற்குள் இருவரும் சேர்ந்து கொள்ளலாம். (ஏறத்தாழ இரண்டரை முதல் மூன்று மாதங்கள் இதற்கு ஆகலாம்)

ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறும் போது மனைவி மாதவிடாய் நின்று போன பருவத்தில் இருந்தால் மூன்று மாதங்களுக்குள் அவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.

இதற்கு எந்தச் சடங்கும் கிடையாது.

இது குறித்து திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கூறப்பட்டுள்ளது. அவ்வசனங்களைக் கீழே காண்க!

228. விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இதற்குள் (இந்தக் காலகட்டத்துக்குள்) அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 2:228

229. இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டுவிடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹரிலிருந்து) ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.

திருக்குர்ஆன் 2:229

230. (இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாகரத்துச் செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 2:230

231. பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக்கெடுவை நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! “அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்” என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:231

232. பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 2:232

233. பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும், உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:233

முதல் தடவை தலாக் கூறியவுடன் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இவ்வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மேற்கூறப்பட்ட காலக் கெடுவுக்குள் இருவரும் சேர்ந்து கொள்ளாவிட்டால் அதன் பிறகு சேரவே முடியாதா என்றால் அதுவும் இல்லை. பத்து வருடங்கள் கழித்து இருவரும் சேர்ந்து வாழ விரும்பினாலும் சேர வழியுண்டு. அதாவது இருவரும் மீண்டும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வது தான் அந்த வழி.

இவ்வாறு சேர்ந்து வாழும் போது மீண்டும் அவர்களிடையே பிணக்கு ஏற்பட்டு, வாழ்வைத் தொடர இயலாத நிலை ஏற்பட்டால் இரண்டாவது தலாக்கைக் கூறலாம்.

தலாக் கூறும் இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்தினால் அப்போதும் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது.

முதல் வாய்ப்பைப் பயன் படுத்திய பின் சேர்ந்து கொண்டது போன்று அந்தக் கெடுவுக்குள் திரும்ப அழைத்துக் கொள்ளலாம்; அல்லது கெடு முடிந்த பிறகு அவள் சம்மதித்தால் மீண்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; அல்லது அப்படியே விட்டு விடலாம். இதையும் மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களில் இருந்து அறியலாம்.

இப்படி தலாக் கூறிய பின் உடனே மனைவியை அவளது தாய் வீட்டுக்கு அனுப்பக் கூடாது. மாறாக மூன்று மாத காலம் கணவன் வீட்டில் தான் அவள் இருக்க வேண்டும். இருவரும் எப்படியாவது சேர்ந்து கொள்ளமாட்டார்களா என்று கருணை கொண்டு அல்லாஹ் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கிறான்

இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

1. நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கிழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.

திருக்குர்ஆன் 65:1

இருவரும் எப்படியாவது சேர்ந்து வாழ வேண்டும் என்ற அல்லாஹ்வின் கருணை இதில் வெளிப்படுகிறது.

முஸ்லிமல்லாத மக்கள் செய்து கொள்ளும் விவாகரத்தினால் அவர்கள் முழுமையாகப் பிரிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஆனால் திருக்குர் ஆன் கூறும் தலாக் சட்டம் தற்காலிக விவாகரத்தாக இரு வாய்ப்புகளை வழங்கி அவர்கள் எப்படியாவது சேர்ந்து கொள்ள வேண்டும் என்று அக்கறை செலுத்துகிறது.

உலகில் உள்ள எந்த நாட்டின் விவாகரத்து சட்டங்களையும் விட இஸ்லாத்தின் விவாக ரத்துச் சட்டம் பன்மடங்கு சிறந்து விளங்குகிறது.

எஸ் எம் எஸ் மூலம் தபால் மூலம், போன் மூலம் வாட்சப் மூலம் தலாக் சொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இது இஸ்லாத்தை அறியாத மூடர்களின் செயலாகும். ஏனெனில் விவாகரத்து செய்வதாக இருந்தாலும், பின்னர் சேர்ந்து கொள்வதாக இருந்தாலும் இரு சாட்சிகள் முன்னிலையில் தான் சொல்ல வேண்டும்.

இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

2. அவர்கள் தமக்குரிய தவணையை அடையும்போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலைநாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.

திருக்குர்ஆன் 65:2

சாட்சிகள் என்றால் தலாக் கூறுவதற்கும், சேர்வதற்கும் மட்டும் சாட்சிகள் என்று கருதக் கூடாது. மாறாக முன்னர் நாம் எடுத்துக் காட்டிய எல்லா வழிமுறைகளையும் அந்த ஆண் கடைபிடித்துள்ளானா என்பதையெல்லாம் அறிந்தவன் தான் சாட்சி சொல்ல வேண்டும். அநீதியாக சாட்சி கூற இஸ்லாத்தில் தடை உள்ளது.

எல்லா முயற்சிகளையும் கடைபிடித்து விட்டு இறுதியாகத் தான் இந்த முடிவுக்கு வந்துள்ளான் என்பதை அறியாத ஒருவன் தலாக்குக்கு சாட்சியாக இருக்கக் கூடாது.

இரண்டு முறை தலாக் கூறி சேர்ந்து வாழும்போது மீண்டும் தலாக் கூறும் முடிவுக்கு ஒருவன் வந்தால் அதுதான் கடைசி வாய்ப்பு என்பதால் அதைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, அவனது மனம் எளிதில் ஒப்பாத, அவனால் ஜீரணிக்க இயலாத, மிகக் கடுமையான நிபந்தனையை இஸ்லாம் விதித்துள்ளது. அந்த நிபந்தனையை அறிந்த எந்தக் கணவனும் இந்தக் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தத் தயங்குவான்.

அவளை அவன் விவாகரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 2:230

விவாகரத்து செய்த பின்னர் மீண்டும் சேர்வதற்கான வாசலை உலகில் எந்தச் சட்டமும் இந்த அளவுக்கு விசாலமாகத் திறந்து வைக்கவில்லை.

எல்லா நாடுகளிலும் எல்லா மதத்தினரும் விவாக ரத்து செய்கின்றனர். அந்த சட்டங்களை விட பெண்களுக்கு அதிக நன்மை இஸ்லாம் கூறும் தலாக் சட்டத்தில் தான் உள்ளது.

இந்த நேரத்தில் முத்தலாக் என்பதற்கும் மூன்று தலாக் என்பதற்கும் உள்ள வேறுபாட்டையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முத்தலாக் – ஒரு விளக்கம்:

தலாக் கூறுவதற்கு இஸ்லாம் மூன்று வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதை அறியாத சில முஸ்லிம்கள் ஒரே சமயத்தில் தலாக், தலாக், தலாக் என்று கூறுகின்றனர். அல்லது முத்தலாக் என்று கூறுகின்றனர். இப்படிக் கூறிவிட்டதால் மூன்று தலாக்கும் முடிந்து விட்டது என்றும், இனிமேல் மனைவியுடன் சேர வழியில்லை என்றும் கருதுகின்றனர். மார்க்க அறிவு குறைந்த மதகுருமார்கள் சிலரும் இப்படி மார்க்கத் தீர்ப்பு வழங்கி நிரந்தரமாகப் பிரித்து விடுகின்றனர்.

இது இஸ்லாம் அனுமதிக்காத வழக்கமாகும்.

தலாக் என்றால் விடுவித்தல் என்பது பொருள். மூன்று தடவை விடுவித்தல் என்றால் மூன்று தடவை அது நிகழ வேண்டும். மூன்று என்ற வார்த்தையால் மூன்று தடவை நிகழ்ந்ததாக ஆகாது.

ஒரு மனிதன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவனை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வேலையை விட்டு நீக்குகிறார். அப்படி நீக்கும் போது உன்னை நீக்கி விட்டேன்; உன்னை நீக்கி விட்டேன்;

உன்னை நீக்கி விட்டேன் என்று மூன்று தடவை கூறுகிறார். இப்படிக் கூறியதால் மூன்று தடவை நீக்கியதாக ஆகுமா? லட்சம் தடவை இச்சொல்லை அவன் சொன்னாலும் ஒரு தடவை நீக்கியதாகத் தான் அர்த்தம். அல்லது மூன்று தடவை உன்னை நீக்கி விட்டேன் என்று சொன்னாலும் ஒரு தடவை நீக்கியதாகத் தான் பொருள்.

நீக்கி விட்டு பின்னர் சேர்த்து பின்னர் நீக்கி பின்னர் சேர்த்து பின்னர் நீக்கினால் தான் மூன்று தடவை நீக்கியதாக ஆகும்.

ஒரு தலாக் சொன்னவுடன் அவள் மனைவியாக இருக்க மாட்டாள். அதன்பின் சொன்ன தலாக் மனைவியல்லாதவளுக்குச் சொன்னதாகத்தான் ஆகும். மீண்டும் சேர்த்துக் கொள்ளாமல் அடுத்த தலாக் கூறுதல் அறிவீனமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இப்படி சிலர் சொன்ன போது அது ஒரு தலாக் என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2689, 2690, 2691

மூன்று தலாக் என்று ஒருவன் கூறினால் அவன் ஒரு சந்தர்ப்பத்தைத் தான் பயன்படுத்தியுள்ளான்.

குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவன் அவளுடன் சேரலாம். காலம் கடந்து விட்டால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இதன் பிறகு மேலும் இரண்டு தடவை விவாகரத்துக் கூறும் உரிமை அவனுக்கு உள்ளது.

மூன்று தலாக் என்ற சொல்லைப் பயன்படுத்தி விட்டால் இனி மேல் மனைவியுடன் சேரவே முடியாது என்று சிலர் கருதுவது தான் மற்றவர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இல்லாத இந்த நம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும்.

மூன்று தலாக் இஸ்லாத்தில் உள்ளது. முத்தலாக் இஸ்லாத்தில் இல்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் விவாகரத்து உரிமை:-

ஆண்களுக்கு இருப்பது போல் விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிமல்லாதார் தவறாகக் கருதிக் கொண்டுள்ளனர். பெண்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் என்பாரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்’என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?’என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி ‘சரி’ என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் ‘தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு’ என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 5273, 5277

மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.

ஒரு பெண்ணுக்குக் கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும், அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.

ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

உலகில் உள்ள எந்த விவாகரத்து சட்டங்களையும் விட பெண்களுக்கு அதிக நன்மை பயக்கும் இஸ்லாமிய தலாக் சட்டத்தை உலக நாடுகள் தமது விவாகரத்து சட்டமாக ஆக்கலாம் என்ற அளவுக்கு சிறந்து விளங்குகிறது.

காழ்ப்புணர்வை ஒதுக்கி வைத்துவிட்டு, மற்ற விவாகரத்துச் சட்டங்களுடன் இஸ்லாத்தின் தலாக் சட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் யாராலும் தலாக் சட்டத்தைக் குறை கூற முடியாது.