குர்பானியின் சட்டங்கள்

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ள இரண்டு பெருநாட்களில் ஒன்று துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் கடைபிடிக்கப்படுகிற ஹஜ் பெருநாள் ஆகும். இஸ்லாத்தில் கடைபிடிக்கப்படுகிற இரண்டு பெருநாளுமே ஏழைகளின் துயர் துடைப்பதை ஒரு அங்கமாக கொண்டிருக்கிறது.

அந்த அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை முடித்ததது முதல் அடுத்த மூன்று நாட்கள் வரை இப்ராஹிம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக (அல்குர்ஆன் 37:100-111) குர்பானி என்ற வணக்கத்தை இஸ்லாம் அதிகம் வலியுறுத்தி சொல்கிறது.

யார்மீது கடமை?

ஜகாத்தை என்ற வணக்கத்தை இவ்வளவு செல்வம் இருந்தால் நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட வரையறை சொல்லப்பட்டதை போல குர்பானிக்கு சொல்லப்படவில்லை.

அதனால், பொதுவாக ஒரு கடமையை செய்ய வலியுறுத்தப்பட்டால் அதை செய்ய வசதியுள்ளவர்கள் நிறைவேற்றவேண்டும் என்று புரிந்து கொள்ளவேண்டும். எனவே குர்பானி கொடுப்பதற்கு அந்த நாட்களில் வசதியுள்ள அனைவரும் நிறைவேற்றவேண்டும்.

குர்பானியின் நோக்கம் இறையச்சமே

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!

அல்குர்ஆன் (22 : 37)

குர்பானி கொடுப்பவர் பேண வேண்டியவை

“நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி),

ஆதாரம்: முஸ்லிம் (3999), நஸயீ (4285)

பிராணிகளின் தன்மைகள்

குர்பானி பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: திர்மிதீ(1417), அபூதாவூத்(2420), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135),அஹ்மத் (17777)

நபி (ஸல்) அவர்கள் உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதை தடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி), ஆதாரம் : நஸயீ (4301)

பிராணியின் வயது

“இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்து விட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதி யில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : பரா(ரலி), ஆதாரம் : புகாரி(5560), முஸ்லிம்

பிராணியின் வயது தொடர்பாக வரக்கூடிய இந்தசெய்தியை வைத்துக் கொண்டு குர்பானி பிராணியின் வயதை முடிவு செய்யலாம்.

முஸின்னா வைத்தான் குர்பானி கொடுக்கவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முஸின்னா என்ற வார்த்தை ஆடு, மாடு , ஒட்டகத்தில் பல் விழுந்தவைக்கு சொல்லப்படும். ஒவ்வொரு நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப பிராணிகளின் இந்த நிலையின் வயதில் மாறுபாடு ஏற்படுகின்றது. எனவே பல் விழுந்துள்ளதா என்பதை கவனித்து வாங்கினால் சரியானதாக அமையும்.

கூட்டுக் குர்பானி

ஒட்டகம், மாடு இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு குடும்பங்கள் சார்பாக குர்பானி கொடுக்கலாம். ஆடு வாங்கி தனியாக குர்பானி கொடுக்க முடியாதவர்கள் இந்த வகையில் சேர்ந்து கூட்டுக் குர்பானி கொடுத்து குர்பானி கொடுத்த நன்மையை அடையலாம்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தபோது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் 10 பேர் வீதமும் நாங்கள் கூட்டுசேர்ந்தோம்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),ஆதாரம் : திர்மிதி (1421), நஸயீ (4316),இப்னு மாஜா (3122)

அறுக்கும் முன் கவனிக்க வேண்டியவை

பிராணியை அறுக்கும் முன் கத்தியைக் கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கூர்மையற்ற கத்தியினால் பிராணியை அறுத்து சித்திரவதை செய்யக் கூடாது.

“எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால் அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷிதாத் இப்னு அவ்ஸ்(ரலி)

ஆதாரம்: முஸ்லிம் (3955), திர்மிதி(1329) நஸயீ(4329), அபூதாவூத் (2432) இப்னுமாஜா (3161), அஹ்மது(16490)

குர்பானி கொடுக்கும் போது கூற வேண்டியவை

அறுக்கும் போது “பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்” (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன், அல்லாஹ் பெரியவன்) என்று கூற வேண்டும்.

“நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி), ஆதாரம்: புகாரி(5565), முஸ்லிம் (3976)

எத்தனை நாட்கள் கொடுக்கலாம்?

பெருநாள் தொழுகை முடித்ததிலிருந்து அதை தொடர்ந்துள்ள மூன்று நாட்களும் குர்பானி கொடுக்கலாம்.

துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் தொழுகைக்குப் பிறகிலிருந்து தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று குர்பானியின் ஆரம்ப நேரத்தை நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டி விட்டார்கள்.(புகாரி (955), புகாரி (951), புகாரி (5500))

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், அறியப்பட்ட நாட்களில் அவர்களுக்கு அவன் அளித்த கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

அல்குர்ஆன் 22:28

இந்த வசனத்தில் ஹஜ்ஜின் ஒரு அம்சமாக குர்பானி குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த வசனத்தில் ‘நாட்கள்’ என்று பன்மையாகச் சொல்வதால் குர்பானி கொடுப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் உள்ளன என்பது தெளிவாகிறது. பிறை 13 வரை ஹஜ்ஜின் கிரியைகள் உள்ளன.

எனவே இந்த வசனத்திலிருந்தும் மேற்படி ஹதீஸிலிருந்தும் குர்பானிக்குரிய நாட்கள் என்பது பெருநாள் தொழுகை முடிந்ததிலிருந்து பிறை 13 அன்று ஹஜ் கிரியைகள் முடியும் வரை உள்ள நாட்களாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
பங்கிடுதல்

“அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்.

(அல்குர்ஆன் 22 : 36)

குர்பானி மாமிசத்தை மாற்று மதத்தவர்களுக்கு கொடுக்க எந்தத் தடையுமில்லை. (22 : 36) வது வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும் யாசிப்பவர்கள் என்றும் தான் கூறுகிறான். ஆகையால் முஸ்லிமான ஏழைக்கும் மாற்று மதத்தைச் சார்ந்த ஏழைக்கும் வழங்குவதில் எந்த குற்றமும் இல்லை.

தோல்

குர்பானி பிராணியின் தோல் அல்லது இறைச்சியை உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. இதை தர்மமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

“ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி(ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம்.

ஆதாரம் : புகாரி (1716), முஸ்லிம் (2535)