ஸைபுத்தீன் ரஷாதி சரியான ராபிளியே!

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?             தொடர்: 19

ஸைபுத்தீன் ரஷாதி சரியான ராபிளியே!

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

ராபிளிய்யாக்கள் பற்றி ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிட்ட செய்தியைக் கடந்த இதழில் கண்டோம். அவர்கள் மேலும் கூறுவதாவது:

எங்களுடைய மார்க்கம் தகிய்யா ஆகும். அதாவது தங்களது கொள்கையின் பக்கம் மக்களை அழைக்கும் போது, உண்மைக் கொள்கையை மறைத்துவிடுவது. அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்ததும் அப்போது உண்மையை வெளியிடுவதற்குப் பெயர் தான் தகிய்யா. இவ்வாறு பொய் சொல்வதை ராபிளிய்யாக்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது நயவஞ்சகக் கொள்கை, நாசமான கொள்கையாகும். இந்த நயவஞ்சகத்தைக் கொள்கையாகக் கொண்ட இவர்கள் தங்களை முஃமின்கள், இறை நம்பிக்கையாளர்கள் என்று பிதற்றிக் கொள்கிறார்கள். முந்திச் சென்ற நல்லவர்களைத் தடம் மாறியவர்கள், நயவஞ்சகர்கள் என்று ராபிளிய்யாக்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இவ்வாறு இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்றார்கள்.

மதரஸாக்களில் ஷியாக்கள்

இன்று சுன்னத் வல்ஜமாஅத் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்பவர்கள் பக்கா ஷியாக்கள் என்பதை ஏகத்துவத்தின் பக்கங்களில் பக்காவாக, பல தடவை பதிய வைத்திருக்கின்றோம். இப்போது அதை இந்தத் தலைப்பின் கீழ் சற்று கண்டு வருவோம்.

தமிழகம் முழுக்க அரபிக் கல்லூரிகள் என்ற பெயரில் இயங்குகின்ற மதரஸாக்கள், நபி (ஸல்) அவர்கள் தொடர்பான ஹதீஸ்களை பலம், பலவீனம் என்று பார்க்காமல் போதிக்கின்றார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி அவர்கள் எழுதிய அற்புதமான, ஹதீஸ் கலையின் அறிவிப்பாளர்களையும் ஹதீஸ்களையும் தரம் பிரித்துப் பார்க்கின்ற நுக்பத்துல் ஃபிக்ர் என்ற அடிப்படை விதிகளை எடுத்துச் சொல்கின்ற நூலையும் ஒருசில மதரஸாக்களில் பாடமாக வைத்திருக்கின்றனர்.

பாடத்தில் வைத்துப் பயன் என்ன? இதில் பொதி சுமக்கும் கழுதையாகத் தான் இவர்கள் நடத்தை உள்ளது. தவ்ஹீத் ஜமாஅத்தினர், இந்த ஹதீஸ் பலவீனம் என்ற சொன்னால், “பலவீனமாக இருந்தால் என்ன? பூஸ்ட், போர்ன்விட்டா கொடுத்தால் சரியாகி விடுமா?’ என்று கிண்டல் அடிக்கின்றனர்.

அரபி மதரஸாக்களில் எப்படிக் கற்றுக் கொடுக்கின்றார்களோ அதை அப்படியே மக்களிடம் ஜும்ஆ மேடைகளிலும் பொதுக்கூட்டங்களிலும் கொஞ்சம் கூட ஆய்வுக்கண் கொண்டு பார்க்காமல் அள்ளிக் கொட்டுகிறார்கள்.

இவர்களின் இந்த அநியாயத்தை தவ்ஹீத் ஜமாஅத் பலமுறை சுட்டிக் காட்டிய போது திருத்திக் கொள்ள மறுக்கிறார்கள்.

இதற்கு ஷாஃபி மத்ஹபு நூற்களில் வெள்ளிக்கிழமை தோறும் மஃஷர் என்ற பெயரில் ஓதப்படும் செய்தியை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

ரவல் புகாரி வல் முஸ்லிம், அன் அபீஹுரைரத்த, அன்னஹு கால, கால ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அல்ஜும்அத்து ஹஜ்ஜுல் ஃபுகராஇ, வஈதுல் மஸாகீன்

ஜும்ஆ தொழுகையின் போது முஅத்தின் ஒரு மொட்டை வாளை எடுத்துப் பிடித்துக் கொண்டு இப்படியொரு ஹதீஸை வாசிப்பார்.

இதன் பொருள் என்ன?

ஜும்ஆ வறியவர்களின் ஹஜ்ஜாகும். ஏழைகளின் பெருநாளாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். இது புகாரி முஸ்லிம் ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது.

ஜும்ஆ தினத்தில் இப்படி ஒரு பகிரங்க, பச்சைப் பொய்யை நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டிக் கூறுகின்றார்கள். பல தடவை இதை நாம் சுட்டிக் காட்டிய பிறகும் கண்டு கொள்ளாமல் இன்றளவும் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள் என்றால் இவர்கள் யார்? இவர்கள் பகிரங்க ஷியாக்கள், ராஃபிளிய்யாக்கள்.

பயான்களின் பொய்கள் பத்திரிகைகளில் பொய்கள்

சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் பேசுகின்ற பயான்களில் நபி (ஸல்) அவர்கள் மீது பொய்களை அள்ளிவிடுகின்றார்கள். மாதப் பத்திரிகைகளிலும் பொய்களை அள்ளி விடுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று வாய்க்கு வந்ததை ஹதீஸ் என்று பயான் செய்வது போன்று, கைக்கு வந்ததை ஹதீஸ் என்று பத்திரிகைகளில் எழுதித் தள்ளுகின்றார்கள்.

நபி மீது இவர்கள் கூறுகின்ற பொய்களைத் தாங்க முடியாமல் ஏகத்துவம் இதழில், “நபி மீது பொய்! நரகமே பரிசு!’ என்ற தலைப்பில் அடையாளம் காட்டினோம். அப்படியிருந்தும் அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை.

கொஞ்சம் கூட இறையச்சம் இல்லாமல் நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்லத் துணிகின்றார்கள்.

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

அல்குர்ஆன் 35:28

அல்லாஹ்வின் இந்தக் கூற்றுக்கு இவர்கள் நேர்மாறாக நடக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்

அறிவிப்பவர்: முஃகீரா (ரலி)

நூல்: புகாரி 1291

தன் மீது சொல்கின்ற பொய்யானது மற்றவர்கள் மீது சொல்லும் பொய்யைப் போன்று அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போன்று சொல்கின்றார்கள். ஆனால் இதை சுன்னத் ஜமாஅத்தினர் பொருட்படுத்துவது இல்லை.

அவ்வாறு பொருட்படுத்தாமல் இருப்பதற்கு இவர்கள் ஆன்மீக ஆசான் கஸ்ஸாலி தான் காரணம். அதனால் எந்தவொரு உறுத்தலும் இல்லாமல் மாநபி மீது துணிந்து பொய் சொல்கின்றார்கள். எல்லாவற்றுக்கும் மூல காரணம் இவர்கள் ஷியா, ராஃபிளிய்யா கொள்கையைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான். ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் சொல்வது போன்று, ஷியாக்களுக்குத் தான் ஹதீஸ்களுக்கு அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடர் தேவையில்லை. கால ரசூலுல்லாஹ் – அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் என்ற பெயரில் எதையும் அடித்து விடலாம்.

ரஷாதி ஒரு ராஃபிளியே!

தமிழகத்தில் ஷியா, ராஃபிளிய்யா கொள்கையைத் தாங்கிப் பிடிப்பவர்கள் பரேலவிகள் தான். இவர்கள் ஷியாக்களின் மறு ஆக்கமும் மறுபதிப்பும் ஆவார்கள். இவர்களின் தலைமைப் பீடராக அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் வலம் வருகின்றார். இவரைப் பற்றி மத்ஹபு சிந்தனையில் உள்ள, அதே சமயம் தர்ஹா வழிபாட்டை எதிர்க்கின்ற தமிழக ஆலிம்கள் அடையாளம் கண்டுள்ளனர். அதனால் அவர் பேசுகின்ற மேடையில் இவர்கள் பேசுவதில்லை.

ஆனால் தமிழக ஆலிம்களை பசுத்தோல் போர்த்திய புலியாக ஏமாற்றி வருபவர் ஸைபுத்தீன் ரஷாதி! பெயரில் தான் ரஷாதி; ஆனால் கொள்கையில் இவர் ராஃபிளி ஆவார். இவர் ராஃபிளி, கப்ரு வணங்கி என்பதற்கு அதிகமான ஆதாரங்கள் தேவையில்லை. நபி (ஸல்) அவர்கள் மீது துணிந்து பொய் சொல்கின்ற பொய்யர் என்ற தகுதியே போதிய ஆதாரமாகும்.

சிலர் சாதாரணமாகப் பொய் பேசுவார்கள். ஆனால் தெரிந்து கொண்டே நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகப் பொய் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் ஸைபுத்தீன் ரஷாதியோ சர்வ சாதாரணமாகப் பொய் பேசுவார். அந்தப் பொய்யை மற்றவர்கள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் பேசினால் இவர் நடுவீதியில், ஊர் ஊராகச் சென்று பொய் பேசுவார். இதை ஒரு மனிதர் சக மனிதர் மீது சொல்கின்ற பொய், பாவம் என்ற அடிப்படையில் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் மீது பகிரங்கமாகப் பொய் சொல்கின்றார் என்றால் இவர் எவ்வளவு பெரிய பொய்யர், அயோக்கியர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் மீது இப்படித் துணிந்து பொய் சொல்கின்றார் என்றால் இவர் ராஃபிளிய்யாவைத் தவிர வேறில்லை என்பது எள்முனையளவு ஐயத்திற்கு இடமின்றி நிரூபணமாகின்றது.

ஸைபுத்தீன் ரஷாதி, நபி மீது கூறிய பொய்களுக்கு சில எடுத்துக்காட்டுக்களை இங்கு காண்போம்.

  1. “தகல்லகூ பி அக்லாகில்லாஹ் – அல்லாஹ்வின் பண்புகளை கடைப்பிடியுங்கள்”
  2. அத்தாஜிருஸ் ஸதூகு ஹபீபுல்லாஹ் – நேர்மையான வியாபாரி அல்லாஹ்வின் நேசன் ஆவான்.
  3. “மன் ஸகத அனில் ஹக் ஃபஹூவ ஷைத்தானுன் அக்ரஸ் – (தீமை நடைபெறும் போது) யார் சத்தியத்தை சொல்லாது மௌனம் காக்கிறானோ அவன் ஊமை ஷைத்தான் ஆவான்”
  4. “மூன்று முறைக்கு மேல் அன்பளிப்புகளை மறுக்கக் கூடாது” என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

இந்த ஹதீஸ்கள் (?) ஸைபுத்தீன் ரஷாதி பேசிய உரைகளிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.

ஸைபுத்தீன் வகையறாக்களுக்கு பெரிய அளவில் வீடியோ பதிவுகள் இல்லை. இவரது உரைகளில் நமக்குக் கிடைத்தவை ஐந்து சி.டி.க்கள் தான். இந்த ஐந்தில் கிடைத்தவை தான் மேற்கண்ட பொய்யான ஹதீஸ்கள்.

இவருடன் திருச்சியில் நடைபெற்ற விவாதத்தின்போது இந்த ஹதீஸ்களைப் போட்டுக் காட்டி இதற்கு ஆதாரம் எங்கே? என்று திரும்பத் திரும்ப நமது தரப்பில் கேட்கப்பட்டது.

விவாதம் முடியும் வரை இதுபற்றி அவர் வாய் திறக்கவே இல்லை. வசமாக மாட்டிய இவர் இறுதி வரை வாய் பூட்டியவராகவே இருந்தார்.

விவாதத்தின் போது இந்த ஹதீசுக்கு எந்த அறிவிப்பாளர் தொடரையும் காட்டாமல் நபி மீது அப்பட்டமாகப் பொய் சொன்ன ஒரு பொய்யர் என்பதை நிரூபித்தார்.

இதன் பின்னர் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பிரியாணி பொட்டலம் கொடுத்து ஒரு கூட்டம் போட்டார்கள். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸைபுத்தீன் ராஃபிளி, தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது சேற்றை வாரி இறைத்தார்.

இதற்குப் பதிலடியாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் இவரை விட வயதிலும் அனுபவத்திலும் மிக மிக இளையவரான மவ்லவி அப்துல் கரீம் அவர்கள், ஸைபுத்தீன் பேசிய வீடியோ கிளிப்பிங்குகளைப் போட்டுக் காட்டி, மேற்கண்ட ஹதீஸ்களுக்கு ஆதாரம் கேட்டார். இதற்கும் ஸைபுத்தீன் ரஷாதி தரப்பில் எந்தப் பதிலும் இல்லை.

பிறகு மூன்று மாதங்கள் கழித்து அதே போன்று ஒரு பிரியாணி மாநாட்டை ஸைபுத்தீன் வகையறாக்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் கலந்து கொண்டு பேசிய ஸைபுத்தீன், “உண்மையான, நம்பிக்கைக்குரிய வியாபாரி நபிமார்கள், சித்தீக்கீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்களுடன்  இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக திர்மிதியில் இடம்பெறும் ஹதீஸைச் சொல்லி, “இந்த ஹதீஸின் கருத்து அடிப்படையில் தான் அவ்வாறு பேசினேன்’ என்று மழுப்பலான பதிலைக் கூறினார்.

இதற்கு நமது ஜமாஅத் சார்பில் போடப்பட்ட மறுப்புக் கூட்டத்தில் பேசிய அப்துல் கரீம் அவர்கள், ஸைபுத்தீன் பேசிய பொய்யான ஹதீஸ் கிளிப்பிங்கைப் போட்டுக் காட்டி, இதில் ஹபீபுல்லாஹ் – அல்லாஹ்வின் நேசர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நீங்கள் குறிப்பிடுவது எந்த ஹதீஸின் கருத்து? இப்படி நபி (ஸல்) அவர்கள் எங்காவது கூறியிருக்கிறார்களா? என்று கேட்டார். இதே கேள்வியைத் தான் திருச்சி விவாதத்தின் போதே பதிலளிக்காத இந்தப் பொய்யர் இனிமேல் எப்படிப் பதிலளிப்பார்?

இதில் வேடிக்கை என்னவென்றால்,  குர்ஆன் வசனங்களை வாசிக்கும் போது தவறாக வாசித்திருக்கின்றார் என்று கூறி ஒரு வீடியோ கிளிப்பிங்கைப் போட்டுக் காட்டி, நீங்கள் சொன்ன செய்திக்கு ஆதாரம் இருக்கின்றதா? என்று ஸைபுத்தீன் ரஷாதி கேட்டிருக்கின்றார்.

மனிதன் என்ற அடிப்படையில், பேசும் போது சில தவறுகள் ஏற்படலாம். இதை யாரும் குறை சொல்ல முடியாது. தவறு என்றால் தவறு என்று ஒத்துக் கொண்டு போய்விடுவார்கள். இவரைப் போன்று வறட்டுப் பிடிவாதம் பிடிக்க மாட்டார்கள்.

ஆனால் இவரோ திட்டமிட்டு நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்லிவிட்டு, அதை ஒப்புக் கொள்ள மறுக்கின்றார். வாயில் வந்ததையெல்லாம் ஹதீஸ் என்று சொல்லி அடித்து விடுகின்றார். நபியின் பெயரால் பொய் மூட்டைகளைக் கொண்டிருக்கும் மவ்லிதுகளை ஆதரிக்கின்றார். இஹ்யாவுக்கு வக்காலத்து வாங்குகின்றார். பலவீனமான ஹதீஸ்களைச் சுட்டிக் காட்டினால், பூஸ்ட் கொடுத்து பலமாக்கி விடுவோம் என்று மார்க்கத்தைக் கேலிக்கூத்தாக ஆக்குகின்றார்.

இதற்கெல்லாம் காரணம் நரகத்தைப் பற்றி எள்ளளவும் பயம் இல்லாதது தான். இது உண்மையில் பக்கா ஷியாக்களின், ராஃபிளிய்யாக்களின் சிந்தனையைத் தவிர வேறில்லை. அதனால் தான் இவரை ராஃபிளிய்யா என்று குறிப்பிடுகின்றோம்.