வீரர் வீழ்த்திய வெள்ளை மாளிகை

அபூபக்ர் (ரலி) வரலாறு                          தொடர்: 33

வீரர் வீழ்த்திய வெள்ளை மாளிகை

எம். ஷம்சுல்லுஹா

உல்லைஸில் கிடைத்த இந்த உன்னத வெற்றிக்குப் பிறகு உம்கீஷியா என்ற இடத்திற்கு காலித் செல்கின்றார். இது ஹீராவைப் போன்ற ஒரு நகரம். பாதிக்லி என்ற சிற்றாறு பிரியும் இடத்தில் புராத் நதி முடிவடைகின்றது. அங்கு தான் இந்த ஊர் அமைந்துள்ளது.

இது உல்லைசுக்கு அருகில் உள்ளதென்பதால் இங்குள்ள மக்கள் உல்லைஸ் போரில் முஸ்லிம்களுக்கு எதிரான படையில் பங்கெடுத்தனர். இவ்வூருக்குள் படையெடுத்து வந்த காலித் படையினர் கொஞ்ச நேரத்திற்கு உள்ளாகவே அதைக் கைப்பற்றி முடித்து விட்டனர். இங்குள்ள மக்கள் சவாத் என்ற பகுதிக்குத் தப்பியோடி விட்டனர்.

கத்தியின்றி, இரத்தமின்றி கைவசமான இந்த ஊரின் பொருள் வளங்கள் முஸ்லிம்களுக்குப் புதையல் போன்று கிடைத்தன. இவை ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. ஜன்தல் என்பவர் இந்த சந்தோஷமான செய்தியை ஆட்சித் தலைவரிடம் பகிர்ந்த போது அவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். “மாவீரர் காலிதைப் பேன்று மகளிர் இனியொரு மகனைப் பெறப் போவதில்லை” என்று மகிழ்ச்சிப் பெருக்கில் தன் பாராட்டுக்களை மாலையாகச் சூடினார்கள்.

உம்கீஷியாவிற்குப் பிறகு காலித் ஹீராவை நோக்கிப் பயணமாகின்றார்.

(ஏற்கனவே ஹீராவைப் பற்றிய குறிப்புகள் ஏகத்துவத்தில் இதே வரலாற்றுத் தொடரில் பதிவாகியுள்ளன. ஆனால் அவை காலித், ஹீராவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பானவையாகும். ஹீரா எப்படி வெற்றி கொள்ளப் பட்டது? என்பது பற்றிய விளக்கம் அக்குறிப்புகளில் இடம்பெறவில்லை. எனவே இப்போது ஹீரா எப்படி வெற்றி கொள்ளப்பட்டது என்ற விளக்கத்தைப் பார்ப்போம்.)

ஹீராவின் வரலாற்றுப் பின்னணி

கி.பி. 2ம் நூற்றாண்டிலிருந்து பல நூற்றாண்டுகள் லக்மிய்யீன் என்ற கிளையினரே ஹீராவை ஆண்டு வந்தனர். இவர்கள் “தாயிய்யீன்’ என்பவர்களுடன் கொண்ட கருத்து வேறுபாடு போரில் போய் முடிந்தது. இரு குலத்தாரும் போரில் ஈடுபட்டனர். இதை ஒரு பொன்னான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு லக்மிய்யீன்களுக்கு எதிராக பாரசீகப் பேரரசு, தாயிய்யீன்களுக்கு உதவியது.

லக்மிய்யீன்களைச் சார்ந்த அரசர் நுஃமான் பின் முன்திர் தோல்வி அடைகின்றார். பாரசீக மன்னர் கிஸ்ரா அவரைக் கைது செய்து கொலை செய்து விடுகின்றார். தாயிய்யீன்களைச் சேர்ந்த இயாஸ் பின் கபீஸா என்பவரை ஹீராவின் ஆட்சியாளராக நியமிக்கின்றார். நபி (ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட வேளையில் இவர் தான் ஹீராவின் ஆட்சியாளராக இருந்தார்.

இவர் ஆட்சியில் இருக்கும் போது, பனூ பக்ர் கிளையினர் பாரசீகப் படையைத் தோற்கடித்தனர். பனூ பக்ரி கிளையினருக்கு இயாஸின் ஆட்கள் உதவி அளிக்கின்றனர். இது இயாஸின் பதவி பறி போவதற்குக் காரணமாக அமைந்தது. இயாஸைப் பதவி நீக்கம் செய்த பாரசீக மன்னர், தனது நேரடிக் கட்டுப்பாட்டில் பாரசீகத்தைச் சேர்ந்த ஒருவரை ஹீராவுக்கு ஆட்சியாளராக நியமிக்கின்றார்.

அவ்வாறு பாரசீகப் பிரதிநிதி ஹீராவை ஆண்டு கொண்டிருக்கும் போது தான் காலிதின் படை அதைச் சுற்றியுள்ள நாடுகளைத் தொடர்ந்து கைப்பற்றிக் கொண்டிருந்தது. உம்கீஷாவுக்கு அடுத்து காலித் உலா வரப் போவது நமது ஊர் தான் என்று அதன் ஆட்சியாளர் யூகிக்கவில்லை; உறுதி செய்து கொண்டார். அவரது பெயர் ஆஸாத்பா!

தனது நாட்டுக்குள் வரப் போகும் காலித், நில மார்க்கமாக அல்ல; நீர் மார்க்கமாக என்று எதிர்பார்த்த ஆஸாத்பா தனது மகன் தலைமையில் ஒரு படையை ஹீராவுக்கு வெளியே அனுப்பி, புராத் நதியை மறிக்கச் செய்கின்றார்.

கரை தாண்டிய நதியில்   தரை தட்டிய கப்பல்கள்

ஆஸாத்பா எதிர்பார்த்தது போல் காலித், தனது படையினருடன் கப்பல்களில் வந்து கொண்டிருந்தார். ஆஸாத்பாவின் மகன் புராத் நதியை மறித்துக் கொண்டிருந்ததால் ஆற்று நீர் தன் போக்குக்கு மாற்றமாக, கரைகளைத் தாண்டிச் செல்லத் துவங்கியது. இதனால் காலித் படையினர் வந்த கப்பல்கள் தரை தட்ட ஆரம்பித்தன! சாயத் தொடங்கின!

கோபத்தில் கொந்தளித்துப் போன காலிதிடம் மாலுமிகள் நிலைமையை எடுத்து விளக்கினர். நீரின் போக்கு திசை திருப்பப்பட்ட விபரத்தை நிதானமாக எடுத்துக் கூறினர். இந்தச் சதியைத் தெரிந்த மாத்திரத்தில் அவர் தன் குதிரைப் படையுடன் தரை மார்க்கமாக எதிரிகளை எதிர் கொள்ள மின்னல் வேகத்தில் பறந்தார்.

கரை தாண்டிப் பாயும் புராத் நதியில் தரை தட்டும் கப்பல் மூலம் காலித் எப்படி வந்து சேர்வார்? அதையும் பார்த்து விடுவோம் என்று இறுமாப்புடன் தன் படையுடன் புராத் நதியின் அதீக் கிளை துவங்கும் இடத்தில் நின்று கொண்டிருந்த ஆஸாத்பாவின் மகன், காலிதின் படை தரை மார்க்கமாக எதிரில் வருவதைக் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகிறான்.

அதிர்ச்சியில் உறைந்த அவனையும் அவனது படையையும், கரையைத் தாண்டிப் பாய்ந்த புராத் நதி போல் அவர்களது உடலிலிருந்து பாய்ந்த இரத்த நதியில் உறைய வைத்து விடுகின்றார்.

மறிக்கப்பட்ட புராத் நதியை அதன் போக்கில் பாய விடுகின்றார். வழி மறிப்பின் மூலம் பறிக்கப்பட்ட சுதந்திரம் தனக்கு மீண்டும் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சிப் பெருக்கில் தன் வழியை நோக்கிப் பாய்ந்த புராத் நதி, காலிதின் கப்பல் படையை நன்றியுடன் ஹீராவை நோக்கி வேகமாகச் சுமந்து வந்தது.

கப்பலிலிருந்து இறங்கிய படையினருடன் காலித் ஹீராவை நோக்கி வருகின்றார். அங்கு கவர்னக், நஜ்ஃப் கோட்டைகள் அமைந்த பகுதிகளில் அவரது படைகள் நிலை கொண்டன. இந்தக் கட்டத்தில் ஹீராவின் ஆட்சியாளர் ஆஸாத்பா தன் படையுடன் வெண் கோட்டைகள் பகுதியின் நிலை கொண்டிருந்தார்.

இதற்கிடையே காலித் கவர்னக், நஜ்ஃப் ஆகிய கோட்டைகளைக் கைப்பற்றினார். அதன் பின்னர் ஆஸாத்பாவின் படைகள் நிலை கொண்டிருந்த வெண் கோட்டையை நோக்கி காலித் வீர நடை போடுவதைப் பார்ப்பதற்கு முன்னால் கவர்னக் கோட்டை பற்றி ஒரு வரலாற்றுக் குறிப்பை இங்கு குறிப்பிடுவது அவசியம்.

கோட்டை கூறும் கோர நினைவு

கி.பி. 4 அல்லது 5ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த கவர்னக் கோட்டையை ஹீராவின் அரசர் பெரிய நுஃமான் பின் முன்திர் கட்டினார். இதைக் கட்டி முடிக்க 60 ஆண்டு காலமானது. இதை ரோமாபுரிப் பொறியாளர் சின்னிம்மார் என்பவர் கட்டினார்.

இந்தக் கோட்டை கட்டி முடிக்கப்பட்ட பின்னர், இதன் மேல் ஏறிப் பார்த்த மன்னர், தன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையுள்ள ஊர்களையும், பரவி விரிந்து கிடந்த பாலைவனத்தையும், ஆடுகின்ற அலை கடலையும் காண முடிந்தது.

கலங்கரை விளக்கம் போல் காட்சியளித்த இந்தக் கவின்மிகு கோட்டையைக் காண்பதற்காக மக்கள் அலை அலையாய் வந்து குவிந்தனர்.

“கட்டடக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த இந்தக் கற்கோட்டையை மிஞ்சும் வகையில் இன்னொரு கோட்டையை உன்னால் கட்ட இயலுமா?” என்று பொறியாளர் சின்னிம்மாரிடம் மன்னர் வினவினார். அதற்கு சின்னிம்மார், முடியும் என்று பதிலளித்தார்.

இந்தப் பதிலில் அதிர்ச்சியடைந்த மன்னர், இந்தக் கோட்டைக்கு இணையாக இன்னொரு கோட்டை உருவாவதை அஞ்சி அந்தப் பொறியாளரை கோட்டையின் உச்சிக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கிருந்து அவரை வீசியெறிந்து விடுமாறு தனது காவலர்களுக்குக் கட்டளையிடுகிறார்.

ஹீரா மட்டுமல்ல! அரபகமே அதிசயிக்கின்ற கோட்டையைக் கட்டிய பொறியாளர் சின்னிம்மார், தான் கட்டிய கோட்டையின் மீதிருந்தே கீழே விழுந்து தவிடு பொடியாகின்றார்.

இதனால் “சின்னிம்மாருக்குக் கிடைத்த சன்மானம்” என்ற உதாரணம் இவரது பெயரால் இன்றளவும் அரபகத்தில் வழங்கப் பட்டு வருகின்றது. உதவியருக்கு உபத்திரவம் செய்வதற்கும், கைமாறு செய்தவர்களைக் காலை வாரி விடுவதற்கும் சின்னிம்மார் உதாரண புருஷனாகத் திகழ்கின்றார்.

நாம் இங்கு காண விழைவது, இப்படியொரு வரலாற்றுப் பின்னணியை கொண்ட வானளாவிய கவர்னக் கோட்டையைத் தான் வீரர் காலித் கைப்பற்றி விடுகின்றார்.

கோட்டைகளைக் காக்கும் குடிமக்கள்

கவர்னக், நஜஃப் கோட்டைகளை கைப்பற்றிய பின் வெண் கோட்டையைத் தாக்க விழைகிறார் காலித்!

பாரசீக மன்னர் இறந்த செய்தியினாலும், தன் மகன் அடைந்த கதியினாலும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த ஹீராவின் ஆட்சியாளர் ஆஸாத்பா போர் புரிவதற்கு எந்த ஓர் ஆயத்தமும் செய்யாமல் புராத் நதியைக் கடந்து, தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடலானார்.

கோலோச்சிய கோமகன் ஓடினால் என்ன? கோட்டைகளை வீரமாய் காக்க குடிமக்கள் நாங்கள் இருக்கிறோம் என்று ஹீராவாசிகள் கோட்டைகளைக் காக்கத் துவங்கினார்.

காலித், அங்கிருந்த ஒவ்வொரு கோட்டையை நோக்கியும் ஒவ்வொரு துணைத் தளபதியை வரிசையாக அனுப்புகின்றார்.

லிரார் பின் அல்அவ்ஸர் என்பவரை வெள்ளை மாளிகை அல்லது வெண் கோட்டையைக் கைப்பற்றுவதற்காக நியமிக்கின்றார். இந்தக் கோட்டைக்குள் தாயிய்யீன்களைச் சார்ந்த இயாஸ் பின் கபீஸா இருந்தார். பாரசீகப் பிரதிநிதி ஆஸாத்பா ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால் இவர் தான் ஹீராவை ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

லிரார் பின் கத்தாபை, அத்ஸிய்யீன் என்ற கோட்டையைக் கைப்பற்றுவதற்கு நியமித்தார். அந்தக் கோட்டையில் அதீ பின் அதீ என்பார் இருந்தார். லிரார் பின் முக்ரினை, பனூஜமான் கோட்டையைக் கைப்பற்றுவதற்கு நியமித்தார். இங்கு இப்னு உகால் என்பவர் இருக்கின்றார். முஸன்னாவை, இப்னு பகீலா என்ற கோட்டையைக் கைப்பற்ற நியமித்தார். இதில் அம்ர் பின் அப்துல் மஸீஹ் என்பவர் இருந்தார்.

இந்தக் கோட்டைகளுக்குள் இருந்த தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரையும் சரணடைய வரும்படி காலித் அழைப்பு விடுத்தார். அவர்கள் சரணடைய மறுத்தனர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்