வந்த பின் சாகாதீர்

வந்த பின் சாகாதீர்

வருமுன் காப்போம் என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமல்ல, மனிதன் அல்லாத அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள எச்சரிக்கை உணர்வாகும்; இயற்கை உணர்வாகும். அந்த அடிப்படையில் பறவை இனம், தாங்கள் வாழுமிடத்தில் கோடை வரும் முன் அந்த இடத்தை விட்டு வெளியேறி, வளமான இடத்தைத் தேடி பல ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து செல்கின்றன. வளமும் வாய்ப்பும் உள்ள இடத்தைத் தேர்வு செய்து அங்கு போய் தங்குகின்றன.

பரந்து வரிந்து கிடக்கும் ஆகாயப் பெருவெளியில், வான்பாதையில் வரைபடமோ, திசை காட்டும் கருவியோ எதுவுமின்றி புலம் பெயர்கின்ற பறவையின் அந்தப் பயணம், விண்வெளிப் பயணத்தில் கொடிகட்டிப் பறக்கும் மனிதனை வியப்பில் ஆழத்துகின்றது.

சுண்டு கொண்டு, சுள்ளிகளைத் தேடியெடுத்து, குஞ்சுகளைப் பொறிப்பதற்காகக் கூடு கட்டும் சிட்டுக்குருவி, வீட்டின் பொந்துகளைத் தேர்வு செய்யும் போது பூனை வந்து பாய முடியாத இடத்தைத் தேர்வு செய்கின்றது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் வருமுன் காப்போம் என்ற இயற்கை உணர்வின் உந்துதல் தான்.

அந்த உந்துதல் மனித இனத்திற்கு இல்லையா? இருக்கின்றது. அதனால் தான் அணு ஆயுதம், கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகள், இன்னும் ரத்தம் சிந்தாமல் கொல்கின்ற யுத்தத் தளவாடங்களை சேமித்து, சேகரித்து வைத்திருக்கின்றான்.

உயிரைக் காக்கின்ற, காசு பணம் சேர்க்கின்ற விஷயத்தில் இந்த வருமுன் காப்போம் என்ற உணர்வு மனிதனுக்கு அளவுக்கு மிஞ்சி உண்டு. ஆனால் ஒழுக்க ரீதியிலான விஷயத்தில் தான் அந்த உணர்வு சூனியமாகி விடுகின்றது. அறிவு செயலிழந்து விடுகின்றது.

ஆணுறை அணிய அரசின் அறிவுரை

எய்ட்ஸ் என்பது ஓர் உயிர்க்கொல்லி நோய்! விபச்சாரம், ஓரினச் சேர்க்கை போன்ற தகாத உறவால் விளைந்த ஒரு பயங்கர நோய்! இந்த நோய் அண்டாமல் அணுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? விபச்சாரத்தின் வாசலை அடைக்க வேண்டும். ஓரினச் சேர்க்கை போன்ற தகாத உறவின் வழிகள் தாழிடப்பட வேண்டும்.

இதையெல்லாம் விட்டுவிட்டு அரசாங்கம் விபச்சார விடுதிக்கு அனுமதி வழங்கிவிட்டு எயிட்ஸைத் தடுக்க பாதுகாப்பான ஆணுறை அணியுங்கள் என்று மூடத்தனமான பாடம் நடத்துகின்றது என்றால் இதற்குக் காரணம் என்ன? வருமுன் காப்போம் என்ற உணர்வு மங்கி, மழுங்கி, வந்த பின் சாவோம் என்ற நிலை மிகைத்து நிற்கின்றது.

இந்தத் தீய செயல்களைத் தடுக்க இஸ்லாம் பலமுனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

  1. புர்கா அணிதல்

இந்த நடவடிக்கைகளில் முதன்மையானது பெண்கள் தங்கள் அங்க அவயங்கள், அந்தரங்க அழகு தெரியாôமல் புர்கா எனும் போர்க் கவச ஆடைகளை அணியச் சொல்கின்றது.

  1. பார்வைகளைத் தாழ்த்துதல்

பார்வைகளைத் தாழ்த்துமாறு ஆண்களுக்கும் பெண்களுக்கும் உத்தரவிடுகின்றது.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

அல்குர்ஆன் 24:30, 31

  1. அந்நிய ஆணுடன் தனித்திருத்தல்

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5232

இன்று கொலை அளவில் போய் முடிகின்ற பல விஷயங்களுக்குக் காரணமாக அமைவது அண்ணி, கொழுந்தியா போன்ற உறவுப் பெண்களிடமும், நட்பு என்ற பெயரில் பிற பெண்களிடமும் ஏற்படுகின்ற தடையில்லாத சகஜமான பழக்கவழக்கங்கள் தான்.

  1. அந்நியப் பெண்ணுடன் பயணம்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர்  எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப்  பதிவு  செய்து கொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். அதற்கு  நபி (ஸல்) அவர்கள், “நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3006

  1. பிறர் மனைவியை வர்ணித்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் – அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 5240

  1. கண்டவர்களையும் அண்ட விடுதல்

வீட்டில் கண்டவர்களையும் சர்வ சாதாரணமாக வந்து போக விட்டு விட்டு, பின்னர் நொந்து சாகின்றனர்.

(நபிகளாரின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) “அலிஒருவர் அமர்ந்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த “அலி‘, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், “அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்என்று சொல்வதை நான் செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாதுஎன்று சொன்னார்கள். இப்னு உயைனா (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த அலியின் பெயர் “ஹீத்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நூல்: புகாரி 4324

அண்மையில் ராஜேஷ் தல்வார், நுபூர் தல்வார் என்ற தம்பதிகளுக்கு, தங்கள் 14 வயது மகள் ஆரூஷியைக் கொன்றதற்காக சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கொலையைப் பார்த்ததற்கான சாட்சிகள் எதுவுமில்லை. இருப்பினும் குற்றச் சூழலை ஆதாரமாகக் கொண்டு நீதிபதி ஆயுள் தண்டனை அளித்திருக்கின்றார்.

இதற்கு அடிப்படைக் காரணம், வீட்டில் பணி புரிந்த ஊழியர் ஹேமராஜ் என்பவருடன் ஆரூஷிக்கு ஏற்பட்ட தவறான தொடர்பு தான்.

இரண்டு விதத்தில் இந்தத் தம்பதியர் வருமுன் காக்கத் தவறி விட்டனர்.

ஒன்று, வரம்பு வரையற்ற முறையில் ஊழியரை வீட்டில் உலவ விட்டது. மற்றொன்று, கட்டுப்பாடற்ற ஆடையுடன் கூடிய சந்திப்பு.

இந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கத் தவறியதால் தான் இன்று பெற்ற பிள்ளையைக் கொலை செய்த குற்றத்திற்காகப் பெற்றோரே சிறையில் வாடுகின்றனர்.

சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் கூட இஸ்லாம் கூறும் இந்த நெறியைப் பேணாததால் இழிவுக்குள்ளாவதைப் பார்க்கிறோம். தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் தருண் தேஜ்பால், உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலி போன்றவர்கள் இதற்கு சமீபத்திய உதாரணம். பெண் ஊழியர்களுடன் தனிமையில் இருக்க நேரிட்டதால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, அவமானப்படுவதை ஊடகங்களில் பார்க்க முடிகின்றது.

இங்கு தான் பெண்கள் விஷயத்தில் இஸ்லாம் காட்டுகின்ற வருமுன் காப்போம் நடவடிக்கையை ஒவ்வொருவரும் உணர வேண்டியுள்ளது. இது ஒழுக்க விஷயத்தில் மனிதன் வருமுன் காக்காமல் வந்த பின் சாவதற்கான எடுத்துக்காட்டு.

அடுத்து, பக்தி என்று வருகின்ற போதும் வருமுன் காப்போம் என்ற எச்சரிக்கை உணர்வு மனிதனுக்கு அறுந்து போகின்றது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் பட்டாசு கொளுத்துதலை எடுத்துக் கொள்வோம். இதற்கு அரசாங்கம் கொடுக்கின்ற அறிவிப்பைப் பாருங்கள்.

பட்டாசு வெடிக்க, நீண்ட குச்சிகளைக் கொண்ட ஊதுபத்தியைப் பயன்படுத்த வேண்டும்.

பட்டாசு வெடிக்கும் போது, பாலியஸ்டர் துணிக்குப் பதில் பருத்தி ஆடைகளை அணிவது நலம். வெடிக்காத பட்டாசுகளைக் கையில் எடுக்கக் கூடாது.

தண்ணீர் நிரம்பிய வாளியை அருகில் வைத்திருக்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்டால் அப்பகுதியை நீருக்குள் வைத்து பின்னர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, குடிசைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், குறுகலான வீதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது.

125 டெசிபல் ஒலி அளவைக்கு மேல் உள்ள பட்டாசுகள் வெடிக்கத் தடை. இரவு பத்து மணிக்குப் பிறகும், காலை 6 மணிக்கு முன்னரும் பட்டாசு வெடிக்கக் கூடாது.

இவை தான் பட்டாசு வெடிப்பதற்கு அரசு தரும் நெறிமுறைகளாகும்.

வெடிக்காதே என்று மிக எளிமையாய் வெடியைத் தடை செய்வதற்குப் பதிலாக, வருமுன் காப்பதற்குப் பதிலாக வந்த பின் சாவதற்குரிய வழிகளை அரசாங்கம் காட்டுகின்றது.

எத்தனை பட்டாசு ஆலைகள் வெடித்து, எத்தனை உயிர்கள் போனாலும் இந்த மக்கள் திருந்தப் போவதில்லை. இதற்குத் தீர்வு இஸ்லாம் ஒன்று மட்டுமே!