பணக்காரக் கடவுள்களின் பயன்படாத பொருளாதாரம்

பணக்காரக் கடவுள்களின் பயன்படாத பொருளாதாரம்

எம். ஷம்சுல்லுஹா

மும்பையில் 200 ஆண்டு காலப் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோயில் உள்ளது. யானைமுகக் கடவுளான கணேஷன் கோயில், வளைத்து வளைத்து மாட்டப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 65 காவல் அதிகாரிகள் 24 மணி நேரமும் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் இந்தக் கண்காணிப்புக் கேமராக்கள்? காவல் காக்கும் அதிகாரிகள்?

இந்தியாவில் உள்ள பணக்காரக் கோயில்களில் இதுவும் ஒன்று! 67 மில்லியன் டாலர் மதிப்பிலான 158 கிலோ தங்கக் காணிக்கைகள் இந்தக் கோயிலுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இவை பக்காவாகப் பாதுகாக்கப்பட்டுள்ள கருவூலங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் தான் இந்தத் தடபுடல் பாதுகாவல்!

உலகிலேயே இந்தியா தான் தங்க ஆபரணங்கள் அணிபவர்களை அதிகம் கொண்ட நாடாகும்.

இந்தியாவின் கோயில்களில் பழமை வாய்ந்த நகைகளாகவும், கட்டிகளாகவும், நாணயங்களாகவும் தங்கம் குவிந்து கிடக்கின்றது. அவற்றில் சிலவற்றை விற்று பில்லியன் கணக்கில் டாலர்களை அவை சம்பாதித்துள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவிலுள்ள பத்மநாபா கோயிலில் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கக் கருவூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இப்படி இந்தியாவின் கோயில்களில் குவிந்து கிடக்கும் தங்கம் மட்டும் 3000 டன்களாகும். இது, அமெரிக்காவின் போர்ட் நாக்ஸ் கெண்டக்கி தங்க சேமிப்பு வங்கிகளில் இருக்கும் தங்கத்தின் அளவில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் இருக்கும்.

அதனால் பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் தங்கத்தைப் பயன்படுத்துவதற்கு வழி என்ன? என்று யோசித்து இதன் மீது குறி வைத்திருக்கின்றார். இந்தப் பொன் மீது ஒரு கண் வைத்து விட்டார்.

கோயில் நிர்வாகங்களிடம் இந்தத் தங்கத்தை தேசிய வங்கியில் செலுத்தி சேமிக்கும்படியும், அதற்குப் பதிலாக வட்டித் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்க மோடி திட்டமிட்டுள்ளார்.

அரசாங்கம் இந்தத் தங்கத்தை உருக்கி, கடுமையான தேட்டத்திலும் தேவையிலும் உள்ள நகை வியாபாரிகளுக்குக் கடனாக வழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மே மாதம் மோடி அரசாங்கம் துவங்கவுள்ளது.

இதன் மூலம் நாட்டை பொருளாதார ரீதியாகப் பாதிக்கின்ற தங்க இறக்குமதியைக் குறைக்க அரசாங்கம் நினைக்கின்றது.

தங்க இறக்குமதியின் மூலம் 2013ஆம் ஆண்டு, மார்ச் முடிவில் ஏற்பட்ட வணிகப் பற்றாக்குறை 28 சதவிகிதமாகும்.

இந்தியாவின் தங்க இறக்குமதி ஆண்டுக்கு 800 முதல் 1000 டன்களாகும். கோயில்கள் அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தில் பங்கேற்றால் தங்க இறக்குமதியில் கால்வாசியைக் குறைத்து விடலாம்.

அரசாங்கத்தின் இந்த யோசனைக்கு பக்தர்கள் சிலர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் கொடுத்த தங்கக் காணிக்கைகள் உருக்கப்படக் கூடாது; கடவுளுக்குக் கொடுத்த தங்கம் தங்கமாகவே இருக்க வேண்டும்.

நானும் என் தந்தையும் சித்தி விநாயகர் கோயிலுக்கும் இதர கோயில்களுக்கும் 200 கிலோ தங்கத்தை இதுவரை காணிக்கையாகச் செலுத்தியிருக்கிறோம்.

கடவுளுக்குக் கொடுத்த அந்தத் தங்கத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிப்பது பாவமாகும். நான் கடவுளுக்குத் தான் அன்பளிப்புச் செய்துள்ளேன். கோயில் டிரஸ்டுக்கு அல்ல!

இவ்வாறு 52 வயது தங்க வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி ஙர்க்ண் ஞ்ர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ங்ஹ்ங்ள் ற்ங்ம்ல்ப்ங் ஞ்ர்ப்க் – கோயில் தங்கத்தைக் குறிவைக்கும் மோடி அரசு என்ற தலைப்பில் ஏப்ரல் 11 அன்று “இந்து’ நாளேட்டில் வெளியானது.

காக்கும் கடவுளுக்குக் கண்கள் இல்லை

சித்தி பெறுவதற்காகவே நாடிச் செல்வது மட்டுமல்ல, கோடிக்கணக்கான மதிப்புமிக்க நகைகள் மற்றும் கட்டிகள் வடிவில் காணிக்கையாகப் பெறுகின்ற சித்தி விநாயகர் தனக்குப் பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளைக் கண்காணிக்கச் சக்தி இல்லாமல் போய்விட்டார். சுற்றியும் கண்காணிப்புக் கேமராக்களின் துணையை நாடியதிலிருந்தும், காவல்துறையினரின் பாதுகாப்பைத் தேடியதிலிருந்தும் தனக்குப் பார்க்கின்ற கண்கள் இல்லை என்பதை சித்தி விநாயகர் உறுதிப்படுத்துகின்றார்.

தனக்கு காணிக்கையாகச் செலுத்தப்பட்ட அணிகலன்களை, ஆபரணங்களைக் காக்க முடியாத சித்தி விநாயகருக்கு, தன்னை விட்டே தூரத்தில் சென்று விடும் பக்த கோடிகளைக் காக்கும் ஆற்றல் அறவே இல்லை என்பது இங்கு அம்பலமாகின்றது.

இதைத் தான் திருக்குர்ஆன் வசனம் ஆணித்தரமாக, அறைகூவலாகக் கேட்கின்றது.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அல்குர்ஆன் 7:194

ஏர்க்-க்கு ஏர்ப்க் தேவையா?

இந்தியாவில் வட்டிக்கு வாங்கிய கடனைச் செலுத்த முடியாமல் மகாராஷ்டிராவில் மட்டும் 2014ஆம் ஆண்டில் 204 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று 26.11.2014 தேதியில் வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை தெரிவிக்கின்றது.

மகாராஷ்டிரா மாநிலம் அல்லாமல் இதே காலகட்டத்தில் தெலுங்கானாவில் 69, கர்நாடகாவில் 19, மோடியின் குஜராத்தில் 3, கேரளாவில் 3, ஆந்திராவில் 3 என மொத்தம் 97 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

அன்றாடம் வறுமையில் மட்டும் பல குடும்பங்கள் தற்கொலை செய்து சாகின்றன. அமெரிக்க வங்கியில் குவிந்து கிடக்கும் தங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு தங்கத்தைத் தங்களிடம் கொண்டிருக்கும் கோயில்கள் இந்தத் தங்கத்தை ஏழை குடும்பங்களுக்குக் கொடுத்தால் என்ன? அந்தச் சிந்தனை அவர்களுக்கு அறவே வராது.

இதற்குக் காரணம் இவர்கள் கொண்டிருக்கும் கோளாறும் குறையும் கொண்ட கடவுள் கொள்கை தான். அதனால் தான் பக்தர், தங்கத்தை உருக்கக்கூடாது; பத்திரமாக அவை தங்கப் பாளங்களாக, கட்டிகளாகவே இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

கடவுளுக்கு இந்தத் தங்கம் இருப்பதால் என்ன பயன் என்று புரியாமல் இருக்கின்றனர்.

தன்னிறைவான கடவுள்

இங்கு தான் இஸ்லாமிய கடவுள் கொள்கையை இவர்கள் சற்று உற்று நோக்க வேண்டும். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

அல்லாஹ் ஒருவன்என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன்.  (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (திருக்குர்ஆன்: 112வது அத்தியாயம்)

நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை. அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன்; உறுதியானவன்; ஆற்றல் உடையவன். (அல்குர்ஆன் 51:57, 58)

உலகத்தைப் படைத்த உண்மையான இறைவன், தான் தேவையற்றவன், தன்னிறைவானவன் தனது படைப்பினங்களுக்கு உணவை வழங்குபவன் என்று பிரகடனப்படுத்துகின்றான்.

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (அல்குர்ஆன் 2:195)

அப்படியானால் இந்த வசனத்தில் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள் என்று சொல்கின்றானே! இஸ்லாத்திலும் தர்மப் பொருட்கள் கோடிக்கணக்கில் வழங்கப்படுகின்றனவே என்று கேட்கலாம். உண்மை தான். ஆனால் அவை அனைத்தும் ஏழைகளுக்காகவே என்று இஸ்லாம் சொல்கின்றது.

பணக்காரனுக்குப் பரிகாரம்! ஏழைக்குப் பலன்!

இஸ்லாமிய மார்க்கம் ஜகாத் என்ற கடமையை பணக்காரர்கள் மீது விதித்திருக்கின்றது.

தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்! (அல்குர்ஆன் 2:43)

இது நேரடியாக ஏழைகளுக்காக வேண்டியே பெறப்படும் வரியாகும். இதனுடைய பலன் நேரடியாக ஏழைகளுக்குத் தான் செல்கின்றது.

மனிதன் தவறு செய்யக் கூடியவன்; பாவம் செய்யக்கூடியவன். அந்தப் பாவங்களுக்குப் பரிகாரமாக தர்மங்களை செய்யச் சொல்கின்றது.

ஒருவன் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதற்கு மாறு செய்து விடுகின்றான். இதற்குப் பரிகாரம் என்ன?

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (அல்குர்ஆன் 5:89)

ஒருவன் தனது மனைவியை நோக்கி கோபத்தில் தாய்க்குச் சமம் என்று சொல்லிவிடுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். இது அறியாமைக் காலத்தில் நடந்த ஒருவிதமான விவாகரத்தாகும். இதற்குத் திருக்குர்ஆன் அளிக்கும் தீர்வு இதோ:

தமது மனைவியரைக் கோபத்தில் தாய் எனக் கூறி விட்டு தாம் கூறியதைத் திரும்பப் பெறுகிறவர், ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதுவே உங்களுக்குக் கூறப்படும் அறிவுரை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அடிமை) கிடைக்காதவர் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். யாருக்குச் சக்தியில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். (அல்குர்ஆன் 58:3,4)

ஓர் இறைநம்பிக்கையாளன் தவறுதலாக ஒருவரைக் கொலை செய்து விடுகின்றான். இதற்குப் பரிகாரம் என்ன?

நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு இழப்பீடு ஒப்படைக்கப்பட வேண்டும். (அல்குர்ஆன் 4:92)

ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தியுள்ள முஸ்லிம்கள் மீது கடமையாகும். அந்த நோன்பை வேண்டுமென்றே முறித்து விட்டால் அதற்குப் பரிகாரம் என்ன?

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்துவிட்டேன்!என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நோன்பு நோற்றுக்கொண்டு என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்!என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை!என்றார். “தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “இல்லை!என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “இல்லை!என்றார். நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்.

நாங்கள் இவ்வாறு இருக்கும்போது, நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த “அரக்எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். “நான்தான்!என்று அவர் கூறினார். “இதைப் பெற்று தர்மம் செய்வீராக!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! என்னைவிட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (பாறைகள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தாரைவிடப் பரம ஏழைகள் யாருமில்லை!என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்; பிறகு “இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்துவிடுவீராக!என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா, (ரலி) நூல்: புகாரி 1936

ஒரு முஸ்லிம் ஹஜ் என்ற வணக்க முறைக்காகவும், அதில் குறைபாடு ஏற்பட்டால் அதற்காகவும் இஸ்லாம் பரிகாரம் செய்யச் சொல்கின்றது.

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. (அல்குர்ஆன் 2:196)

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரை தர்மம், அல்லாஹ்வுக்காக வழங்குதல் என்று வந்து விட்டாலே அது அனைத்தும் ஏழைகளுக்குத்தான்.

இரு பெருநாட்களில் ஏழைகளுக்குத் தர்மம்

முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்கள் உள்ளன. நோன்புப் பெருநாளில் அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். ஹஜ் பெருநாளில் மக்காவுக்குச் சென்றவர்கள் மற்றும் உள்ளூரில் உள்ள வசதி படைத்தவர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை அறுத்து ஏழைகளுக்கு வினியோகிக்க வேண்டும்.

இவ்வாறு இறைச்சியை அறுத்துப் பலியிடுகின்ற போது அது இறைவனுக்குச் செல்கின்றது என்று தவறாக யாரும் விளங்கி விடக்கூடாது என்பதற்காக திருக்குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம் அதையும் தெளிவுபடுத்துகின்றது.

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!

அல்குர்ஆன் 22:37

கடவளுக்குரிய தங்கம், தங்கமாகத் தான் இருக்க வேண்டும் என்று பக்தர்கள் குறிப்பிட்டதை மேலே பார்த்தோம். கடவுளுக்குக் கொடுத்தது அப்படியே கிடக்க வேண்டும் என்று நம்புகின்றனர். கடவுளுக்குக் கொடுத்தது ஏழைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற இஸ்லாமிய கடவுள் கொள்கை இவர்களுக்குத் தெரியவில்லை. பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட பணக்கார வர்க்கத்திடம் முடங்கிக் கிடக்கக் கூடாது என்ற இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை இவருக்குத் தெரியவில்லை.

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புங்கள்! எதன் மேல் உங்களைப் பொறுப்பாளர்களாக அவன் ஆக்கியுள்ளானோ அதிலிருந்து (நல்வழியில்) செலவு செய்யுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டு (நல்வழியில்) செலவிடுவோருக்கு பெரிய கூலி உண்டு. (அல்குர்ஆன் 59:7)

நரேந்திர மோடி இந்தப் பார்வையை, அவரையும் அறியாமல் பார்க்கின்றார். எனினும் கடவுளுக்கு அளிக்கப்பட்ட தங்கம், பொருள் கரையக் கூடாது என்று தான் அவரும் நினைக்கிறார். ஆனால் அதை நாட்டின் பொருளாதாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். என்ன தான் அவர் முயற்சித்தாலும் பக்தர்களின் மனோபாவத்தை அவரால் ஒருபோதும் மாற்ற முடியாது. அப்படி முயற்சி செய்தால் அவரை அந்த பக்தர்கள் அடுத்த தேர்தலில் மாற்றி விடுவார்கள்.

பொருளாதாரம் ஓரிடத்தில் ஒன்றுக்கும் உதவாக்கரையாக முடங்கி, உறங்கிக் கிடக்கக்கூடாது என்ற அற்புத சிந்தனையை மோடி போற்றுகின்ற, ஒபாமாவுக்குப் பரிசாக அவர் அளிக்கின்ற பகவத் கீதை சொல்லாது. இதைச் சொல்வது அனைத்துலக வழிகாட்டியான அல்குர்ஆன் தான்.

பக்தர்களின் பார்வை இஸ்லாம் கூறுகின்ற உண்மையான கடவுள் பக்கம் திரும்புமானால் பொருளாதாரம் இப்படி ஓரிடத்தில் குவிந்து கிடக்காது. இஸ்லாத்தில் பொருளாதாரம் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். அதனால் பட்டினிச் சாவுகள் தடுக்கப்படும். எனவே மோடி நிறுவ வேண்டியது இந்து ராஷ்டிரம் அல்ல! இஸ்லாமிய ராஷ்டிரம் தான்.

இறுதியாக இந்தச் செய்தியின் மூலம் தெரிகின்ற விஷயம்,

  1. கடவுள் கொள்கை பகுத்தறிவு ரீதியில் இருக்க வேண்டும்.
  2. அந்தக் கடவுள் கொள்கை மூலம் விளைகின்ற பலன், ஓரிடத்தில் முடங்கிக் கிடக்காத, ஏழைகளுக்குப் பலனளிக்கக் கூடிய பொருளாதாரம்.

இவ்விரண்டையும் அடைய வேண்டுமானால் அதற்குத் தேவை இஸ்லாம். அத்துடன் கோயில் பொருளாதாரத்தை வளர்ச்சி என்ற பெயரில் வட்டிக்கு விடுவதைப் பாவம் என்று பக்தர் கூறுகின்ற இந்த கருத்தை நாம் வரவேற்கலாம். காரணம், அதுவும் இஸ்லாமியப் பொருளாதாரம் தான். ஆனால் அதே சமயம் அந்தப் பொருளாதாரம் ஏழைகளுக்கு வினியோகிக்கப்பட வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு! இதைப் பின்பற்றினால் விவசாயிகளின் தற்கொலை, பட்டினிச் சாவு போன்ற கேடுகெட்ட நிலையிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியும்.