உலக அமைதிக்கு ஒரே வழி இஸ்லாம்

உலக அமைதிக்கு ஒரே வழி இஸ்லாம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தமது சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத் தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரது தலை மீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அது அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) “ஸன்ஆவிலிருந்து “ஹளர மவ்த்வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகிறீர்கள்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: கப்பாப் பின் அல்அரத்(ரலி)

நூல்: புகாரி 3612

மக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது தமது தூதுச் செய்தியின் துவக்க காலத்தில் முஹம்மத் (ஸல்) அவர்கள் தெரிவித்த இஸ்லாமிய இலட்சியப் பிரகடனமாகும்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ “ஹீராவைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறதுஎன்று பதிலளித்தேன். அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காக (வலம் வருவதற்காக)ப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்என்று சொன்னார்கள். -நான் என் மனத்திற்குள், “அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட “தய்யிகுலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?” என்று கேட்டுக் கொண்டேன்.- நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து), “நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ(பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய்என்று சொன்னார்கள். நான், “(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப் படுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான் என்று பதிலளித்தார்கள். (மேலும் சொன்னார்கள்:) உனக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் ஒருவர் தனது கை நிறைய தங்கத்தை, அல்லது வெள்ளியை எடுத்துக் கொண்டு அதைப் பெற்றுக் கொள்பவரைத் தேடியலைவார். ஆனால் அ(ந்தத் தர்மத்)தை ஏற்கும் எவரையும் அவர் காண மாட்டார். இதையும் நீ பார்ப்பாய். உங்களில் ஒருவர் அல்லாஹ்வைச் சந்திக்கும் (மறுமை) நாளில், அவருக்கும் அவனுக்குமிடையே மொழி பெயர்த்துச் சொல்லும் மொழி பெயர்ப்பாளர் எவரும் இல்லாத நிலையில் அவனைச் சந்திப்பார். அப்போது அல்லாஹ், “நான் உனக்கு ஒரு தூதரை அனுப்பினேனே, அவர் உனக்கு (என் செய்தியை) எடுத்துரைக்கவில்லையா?” என்று கேட்பான். அவர், “ஆம், (எடுத்துரைத்தார்)என்று பதிலளிப்பார். பிறகு அல்லாஹ், “உனக்கு நான் செல்வத்தைத் தந்து உன்னை நான் மேன்மைப்படுத்த வில்லையா?” என்று கேட்பான். அவர், “ஆம் (உண்மை தான்)என்பார். பிறகு அவர் தன் வலப்பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தைத் தவிர வேறெதையும் காண மாட்டார். தன் இடப் பக்கம் பார்ப்பார்; நரகத்தைத் தவிர வேறெதையும் காண மாட்டார். அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள், “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தாவது நரகத்திலிருந்து (உங்களைக்) காத்துக் கொள்ளுங்கள். எவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டு கூட இல்லையோ அவர் நல்ல சொல் ஒன்றைக் கொண்டாவது (நரகத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளட்டும்)என்று சொல்லக் கேட்டேன்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல்: புகாரி 3595

இது முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது மதீனா வாழ்க்கையின் போது தெரிவித்த மற்றோர் இலட்சிய முழக்கமாகும்.

வறுமை

வழிப்பறி

கற்பழிப்பு

இந்த மூன்றும் உலகிலிருந்து துரத்தியடிக்கப்படும் காலம் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதையே நபி (ஸல்) அவர்கள் இங்கு உணர்த்துகின்றார்கள்.

வறுமை துரத்தியடிக்கப்பட வேண்டுமானால் இன்றைய பொதுவுடைமைக்காரர்கள் கூறுவது போன்று பணக்காரர்கள், முதலாளிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதல்ல! பணக்காரர்களின் சுரண்டல்கள் ஒழிக்கப்பட்டு, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் ஓர் இணக்கமான உறவு உருவாக்கப்பட வேண்டும்.

பணக்காரர்கள் மட்டும் உலகத்தில் வாழ முடியாது. அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏழைகள் வேண்டும். பணக்காரர்கள், ஏழைகள் என்ற இரு சக்கரங்கள் இருந்தால் தான் சமுதாயம் சீராகச் சுழல முடியும்.

இவ்விரண்டிற்கும் இடையே ஒரு சமச்சீர் நிலை நிலவ வேண்டும். அப்படியொரு சூழ்நிலை உருவாகி விட்டால் போதும். வறுமையும், வழிப்பறியும் தானாக மறைந்து விடும்.

மூன்றாவதாக ஒழியவிருக்கும் தீமை கற்பழிப்பு!

இந்தத் தீமை ஒழிய வேண்டுமாயின் மனிதனை மிருகத் தன்மையிலிருந்து மீட்டு, மனிதத் தன்மைக்குக் கொண்டு வர வேண்டும். மனிதன் இந்த உன்னத நிலையை அடைந்து விட்டால் சமுதாயத்தில், நாட்டில் அமைதி நிலவ ஆரம்பித்து விடும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கோடிட்டுக் காட்டிய அப்படியொரு சமுதாயம் அமைந்ததா? அப்படிப்பட்ட ஒரு புதிய வார்ப்பு தோன்றியதா? என்றால் நிச்சயமாக அமைந்தது. நிஜமாகவே தோன்றியது.

அதை அதீ பின் ஹாதம் அவர்களே குறிப்பிடுகின்றார் பாருங்கள்.

ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன். (பாரசீக மன்னன்) கிஸ்ரா பின் ஹுர்முஸின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்தால் “ஒருவன் தங்கத்தையோ, வெள்ளியையோ கை நிறைய அள்ளிக் கொண்டு அதைத் தர்மமாக ஏற்றுக் கொள்பவரைத் தேடியலைவதை நீ பார்ப்பாய்என்று அபுல் காஸிம் நபி (ஸல்) அவர்கள் சொன்னதையும் நீங்கள் நிச்சயம் (நடை முறையில்) காண்பீர்கள்.

நூல்: புகாரி 3595

இது அறிவியல் உலகம்! எதையும் ஆய்வுக் கூடத்தில் வைத்துப் பரிசோதித்த பிறகே ஏற்றுக் கொள்ளும். அப்படிப்பட்ட அறிவியல் உலகத்திற்கு இந்த இஸ்லாம் தெளிவாக அறிவிக்கின்றது. இது ஏழாம் நூற்றாண்டில் இவ்வுலகில் நடந்தேறியது. அரபக ஆய்வுக் கூடத்தில் பரிசோதனைக்குள்ளாகி வெற்றி கண்டது. இன்னும் உலகின் ஒரு மூலையில், சவூதி அரேபியாவில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் வெற்றி கண்டு கொண்டு தான் இருக்கின்றது.

இந்த அமைதி எப்படி ஏற்பட்டது? அதன் பின்னணி என்ன?

ஓர் அழகிய இளம் பெண் இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ தன்னந்தனியாக ஒரு நாள் அல்லது இரு நாட்கள் வெளியூர் போய்விட்டு காசுடனும், கற்புடனும், உயிருடனும் திரும்பி வர முடியுமா? இப்படி பணத்திற்கும், கற்புக்கும் ஆபத்து ஏற்படாமல் திரும்ப வந்தால் அந்த நாடு அமைதியில் இருக்கின்றது; அங்கு சாந்தி நிலவுகின்றது என்று அர்த்தம். ஆனால் இன்று உலகெங்கிலும் இந்த நிலை இல்லை.

இஸ்லாம் இந்த வெற்றியை எப்படிக் கண்டது? அதன் ரகசியம் என்ன?

இஸ்லாம் இதை இரண்டு விதத்தில் கண்டது.

  1. கடுமையான குற்றவியல் சட்டம்
  2. மறு உலக நம்பிக்கை

அல்லாஹ் ஒருவனே என்ற நம்பிக்கை; மறுமை உண்டு என்ற நம்பிக்கை.

இவ்விரண்டில் முதலில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தைப் பார்ப்போம்.

உலகத்தில் இன்று இஸ்லாமியச் சட்டம் நடைமுறையில் இருப்பது சவூதியில் மட்டும் தான். அங்கும் கூட நூற்றுக்கு நூறு இஸ்லாமிய அடிப்படையில் செயல்படுமானால் மொத்த உலகமே அதன் கட்டுப்பாட்டில் வந்திருக்கும். உலகத்தின் தலைமை பீடமாகத் திகழ்ந்திருக்கும்.

ஆனால் அதனிடம் உள்ள ஒரு சில குறைபாடுகளின் காரணமாக அதன் தலைமை சவூதியுடன் மட்டும் நின்று விட்டது. இந்த விளக்கத்துடன் சவூதியில் செயல்படும் ஷரீஅத் சட்டத்தைப் பார்ப்போம்.

சவூதியில் 2007ம் ஆண்டு மட்டும் கொலை, கற்பழிப்பு, போதை மருந்து கடத்தல், ஓரினச் சேர்க்கை, ஆயுதம் தாங்கிய கொள்ளை போன்ற குற்றங்களுக்காக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை மொத்தம் 156 ஆகும். இதில் கொல்லப்பட்டவர்கள் 153 ஆண்கள்; 3 பெண்கள்.

2002ம் ஆண்டு 45 ஆண்கள்; 2 பெண்கள்

2003ம் ஆண்டு 52 ஆண்கள்; 1 பெண்

2004ம் ஆண்டு 35 ஆண்கள்; 1 பெண்

2005ம் ஆண்டு 88 ஆண்கள்; 2 பெண்கள்

2006ம் ஆண்டு 35 ஆண்கள்; 4 பெண்கள்

தண்டனைக்குள்ளாகும் ஆண், பெண் குற்றவாளிகள் மயக்க மருந்து கொடுக்கப்படுகின்றார்கள். பிறகு காவல் துறை வாகனத்தில் பொது மக்கள் கூடும் பொது இடத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். பொது இடத்தில் 16 அடி அகல நீல நிற பிளாஸ்டிக் விரிப்பு விரிக்கப் படுகின்றது. அங்கு போக்குவரத்து சரி செய்யப்படுகின்றது. குற்றவாளிகளின் கண்கள் கட்டப்படுகின்றன. கைகளில் விலங்குகள் பூட்டப்படுகின்றன. கால்களுக்கு சங்கிலி போடப்பட்டு, மதிய நேரத் தொழுகைக்குப் பிறகு பொதுவிடத்தில் கஅபா இருக்கும் திசையை நோக்கி நிறுத்தப்படுகின்றார்.

காவல்துறை அதிகாரியால் 1000-1100 மி.மீ அளவிலான பளபளக்கும் வளைவான ஒரு வாள் வெட்டுநரிடம் வழங்கப்படுகின்றது.

உள்துறை அமைச்சக அதிகாரி, குற்றவாளியின் பெயரையும், அவர் செய்த குற்றத்தையும் கூடி நிற்கும் மக்களிடம் வாசிக்கின்றார்.

வெட்டுநர் வாளை ஓரிரு முறை சுழற்றி தனது கையை பலப்படுத்திக் கொள்கிறார். பிறகு லாவகமாக மின்னல் போல் பளிச்சென்று பளபளக்கும் வாளை தலையை நோக்கி வீசுகின்றார். அவ்வளவு தான். கூர்முனை வாள் குறித்த வேகத்தில், பதித்த வெட்டில் தலை ஓரடி அல்லது ஈரடி தள்ளி விழுகின்றது.

நிறுத்தப்பட்ட மருத்துவர், தூர விழுந்த தலையை எடுத்து வந்து உடலில் வைத்துத் தைக்கின்றார். அதன் பின் அவரது உடல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகின்றது.

இரக்கம் இல்லாதவர்கள்?

குற்றவாளிக்கு வழங்கப்படும் இந்த மரண தண்டனை சவூதியில் நீண்ட காலமாகத் தொடர்கின்றது. இன்று ஊடகங்களின் ஆந்தைப் பார்வை இதை உலகத்தின் பல்வேறு பாகங்களுக்கு, பல்வேறு பரிமாணங்களில் அடுத்த நொடியில் கொண்டு சென்று விடுகின்றது.

இந்தத் தண்டனை நிறைவேற்றலைப் பார்ப்பவர்கள் வியக்கின்றனர். விழி இமைகளை மூடாமல் தொலைக்காட்சி வெண்திரைகளில் பதித்துக் கொண்டிருக்கிறார்கள். உடனே உள்ளத் திரையில் பொங்கி வழிகின்றது இரக்கம்! அதன் வெளிப்பாடாய் அவர்கள் எழுப்புகின்ற கேள்வி இது தான்!

இவர்களுக்கு இரக்கமே இல்லையா? இருபத்தோறாம் நூற்றாண்டில் இப்படியொரு அரக்க அரங்கமா? அநியாய வெறியாட்டமா?

மேற்கத்தியச் சிந்தனையாளர்கள், மேனாமிணுக்கர்கள் எழுப்பும் இந்தக் கேள்விக்குப் பதில் இது தான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

அல்குர்ஆன் 24:2

உலகத்திலேயே ஒரு வேதம் அதன் துவக்கத்திலேயே அன்பு மழை பொழிந்து, “அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்” என்று ஆரம்பிக்கின்றது என்றால் அது திருக்குர்ஆன் மட்டும் தான்.

இப்படி அன்பு மழையை, அருள் மழையை ஆரம்ப வசனமாக அருளிய அந்த அன்பாளன், அருளாளன் அல்லாஹ் தான் மேற்கண்டவாறு குறிப்பிடுகின்றான்.

தண்டனை நிறைவேற்றும் போது குற்றவாளிகள் மீது இரக்கம் கொள்ள வேண்டாம் என்று தனது திருமறையில் கட்டளையிடுகின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தனது நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். ஆகவே, அது பிழைத்துக் கொண்டது. அவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையின் காரணத்தால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3321

தாகத்தில் தரையை நக்குகின்ற நாயின் தாகம் தீர்த்த ஒரு விபச்சாரிப் பெண்ணுக்கு மன்னிப்பை வழங்கும் கருணை நாயன் தான் இந்தத் தண்டனையை நிறைவேற்றுவதில் இரக்கம் வேண்டாம் என்று கூறுகின்றான். அதனால் ஒரு போதும் முஸ்லிம்கள், குற்றவாளிக்குத் தண்டனை வழங்கும் இந்த விஷயத்தில் இரக்கம் காட்டக் கூடாது. ஷரீஅத்தை உயிர் மூச்சாகக் கொண்ட இஸ்லாமிய சமுதாயம் மரண தண்டனை நிறைவேற்றும் விஷயத்தில் இரக்கம் கொள்ள மாட்டார்கள்.

குற்ற எண்ணிக்கையில் குறைவான நாடு

மரணப் படுக்கையில் கிடக்கும் தனது தாயாருக்கு மருந்து வாங்குவதற்காக வருகின்றான் மகன்! அவனுடைய சட்டைப் பையிலிருந்து பணம் திருடப்படுகின்றது. பணத்தைப் பறி கொடுத்த மகன் பதறுகின்றான். பலரிடம் பணத்திற்காகக் கெஞ்சுகின்றான். பரிதாப நிலையில் தவிக்கும் அவனுக்கு அனுதாபம் காட்ட யாரும் முன்வரவில்லை. கடைசியில் அவனது தாயின் உயிர் போய்விடுகின்றது.

தாயைப் பறிகொடுத்த இந்த மகனுக்கு முன்னால், திருடியவனைக் கொண்டு வந்து நிறுத்தினால் அவன் என்ன செய்வான்? அடித்துக் கொலை செய்து விடுவான்.

பாதிக்கப்பட்டவனின் மனநிலையைத் தான் இஸ்லாம் பார்க்கின்றது. பாதிக்கப்பட்டவன் திருடியவனின் தலையை எடுக்க முன் வருகின்றான். ஆனால் இஸ்லாமிய சட்டம் கையைத் தான் எடுக்கச் சொல்கின்றது. இந்த வகையில் பாதிக்கப்பட்டவனின் மனநிலையிலிருந்து ஒருபடி கீழிறங்கித் தான் தண்டனை வழங்குகின்றது.

அதாவது பாதிக்கப்பட்டவனின் மனநிலை, தன் பணத்தைத் திருடி, தன் தாயின் உயிரைப் பறித்தவனது தலையை எடுக்க வேண்டும் என்பதே! ஆனால் இஸ்லாம், “தலையை எடுக்காதே! கையை எடு’ என்று ஒரு படி கீழே இறங்கித் தான் தண்டனை வழங்குகின்றது.

இதைத் தான் இந்த அறிவுஜீவிகள் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்கின்றனர்.

கிட்னி திருட்டு

பணமாகத் திருடியது போக, இப்போது மனிதனின் உறுப்புகளையே திருட ஆரம்பித்து விட்டார்கள். வயிற்றுவலி என்று மருத்துவமனைக்குச் செல்கின்றான். அறுவை சிகிச்சை நடைபெறுகின்றது. சிறிது காலம் கழித்த பின் சிறுநீர் வெளியேறுவதில் தகராறு! என்னவென்று சோதித்துப் பார்க்கும் போது தான் கிட்னி களவு போன விபரம் தெரிகின்றது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவன் என்ன செய்வான்? இப்படிப்பட்ட மருத்துவரைக் கொல்ல வேண்டும் என்று துடிப்பான். ஆனால் இஸ்லாமோ கிட்னி எடுத்தவனின் உடலிலிருந்து கிட்னியை எடு என்று சொல்கின்றது.

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 5:41

மூன்று முக்கிய அம்சங்கள்

இதை யாராவது காட்டுமிராண்டித் தனம் என்று சொல்ல முடியுமா?

குற்றவியல் தண்டனையைப் பொறுத்தவரை இஸ்லாம் மூன்று முக்கிய அடிப்படைகளைப் பார்க்கின்றது.

  1. குற்றவாளியின் குற்றத்துக்கு ஏற்ப தண்டனை.
  2. பாதிக்கப்பட்ட தனிநபர், குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைத் திருப்திப்படுத்துவதன் மூலம் பழிவாங்கல் என்ற பெயரில் குற்றங்கள் பெருகாமல் தடுப்பது.
  3. ஒரு குற்றத்துக்கு வழங்கப்படும் தண்டணையின் மூலம் மீண்டும் அதே குற்றம் நடப்பதைத் தடுப்பது.

இதை விட்டுவிட்டு, ஒரு பெண்ணின் கற்பைச் சூறையாடியவனுக்கு ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதித்தால் அது குற்றங்களைக் குறைக்காது. மற்றவர்களையும் கற்பழிப்பதற்குத் தூண்டி விடுவதற்கான அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அழைப்பாகும்.

இதை இன்னொரு கோணத்தில் பார்க்க வேண்டும்.

சிறைத் துறைக்கான செலவுகள் அனைத்தும் மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் செய்யப்படுகின்றன. அதாவது கற்பழிக்கப்பட்டவளின் வரிப் பணத்திலிருந்து குற்றவாளிக்கு உணவும், உறைவிடமும் வழங்கப்படுகின்றது. தனக்கு அநீதி இழைத்தவனுக்கு தானே விருந்து வழங்க யாரேனும் முன் வருவாரா? இந்த அக்கிரமத்தைத் தான் இஸ்லாத்தை விமர்சிக்கும் விவேகிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இரக்கத்தைப் பற்றிப் பேசுகின்ற இவர்கள் தான் இந்த அரக்கத்தனமான, காட்டுமிராண்டித்தனமான காரியத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் விமர்சிப்பதற்கு என்ன அருகதை இருக்கின்றது?

இஸ்லாம் தூர நோக்குப் பார்வையுடன் சொல்கின்ற விவரமான, விவேகமான செயல்பாட்டால் தான் அதன் சட்டம் ஆள்கின்ற சவூதியில் குற்றங்களின் சதவிகிதம் பெரிய அளவில் குறைவாக இருக்கின்றது.

புள்ளி விபரப் புலனாய்வு

குற்றம்                     சவூதி  ஜப்பான்   அமெரிக்கா

கொலை                    0.71        1.10                       5.51

கற்பழிப்பு                   0.14        1.78                       32.05

கொள்ளை                  0.14        4.08                       144.92

பலவந்தத் தாக்குதல்        0.12        23.78                     323.62

வீடுபுகுந்து கொள்ளை       0.05        233.6                     728.42

சொத்து அபகரிப்பு           79.71      1401.26                                2475.27

வாகனத் திருட்டு            76.25      44.28

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?

அல்குர்ஆன் 29:67

இந்த வசனத்தின் அடிப்படையில் சவூதியை சற்று உற்று நோக்குவோம். இன்டர்போலின் புள்ளி விபரப்படி சவூதி அரேபியா ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக!

எஇஒ என்ற அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையில் ஏழு குற்றங்களுக்கான அட்டவணை பெறப்பட்டது. அவை:

  1. கொலை. 2. கற்பழிப்பு. 3. வழிப்பறி. 4. வன்முறைத் தாக்குதல். 5. வீடு புகுந்து கொள்ளையடித்தல். 6. சொத்து அபகரிப்பு. 7. வாகனத் திருட்டு.

இந்த ஏழு குற்ற அட்டவணைகளில் சவூதி அரேபியா, ஜப்பானுடனும், அமெரிக்காவுடனும் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றது. ஜப்பான் குற்றங்களில் குறைந்தது. அமெரிக்கா குற்றங்களில் அதிகரித்தது என்ற அடிப்படையில் இவ்விரு நாடுகளுடன் இந்த ஒப்பீடு செய்யப்படுகின்றது. 2000ம் ஆண்டுக்கான கணக்கு இது!

இந்தக் குற்ற அட்டவணைப்படி, குற்றங்களின் ஒட்டுமொத்த விகிதாச்சாரம் என்று பார்க்கையில் சவூதி 157.12, ஜப்பான் 1709.88, அமெரிக்கா 4123.97 என்ற எண்ணிக்கையில் உள்ளது.

இந்தத் தகவல், “குற்றம் மற்றும் சமூகம் தொடர்பான உலகக் குற்றவியல் ஒப்பீட்டு உலா” என்ற தலைப்பில் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தயவு தாட்சண்யமின்றி, குற்றவாளிகளைத் தண்டித்து குற்றம் பெருகாமல் தடுப்பது தான் ஓர் ஆட்சியின் அடிப்படை இலக்கணம். அதைச் செய்வதன் காரணமாகத் தான் சவூதி இன்று குற்ற அட்டவணையில் குறைந்து காணப்படுகின்றது. இது தான் மனித சமுதாயத்திற்கு மாபெரும் அருட்கொடையாகும். இந்த அருட்கொடையைத் தான் மேற்கத்திய மேதாவிகள் அரக்கத்தனம் என்று விமர்சனம் செய்கின்றனர். இதையே அல்லாஹ் தன் திருமறையில் கேட்கிறான்.

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?

அல்குர்ஆன் 29:67

ஆகாயத்தில் சுனிதா ஆபத்தில் ஐரிஸ்

மூன்று வருடங்களுக்கு முன்னால் விழாக் கோல வெளிச்சத்தில் குளித்தது இந்தியத் தலைநகரம் டெல்லி! போதையின்றி ஒரு விழாவா? கிடையாது என்பதற்கு எடுத்துக்காட்டாக நான்கு நபர்கள் குடிபோதையில் 18 வயது ஐரிஸ் என்ற பெண்ணை மறிக்கிறார்கள். நால்வரில் ஒருவனது காமப் பசிக்கு இரையாகின்றாள். விடிய விடிய கற்பழிக்கப்படுகின்றாள். தண்டனை என்ன? கற்பழித்தவனே கணவனாக வாய்க்கின்றான்.  கற்பழிப்பின் போது உருவான குழந்தையுடன் மூன்றாண்டுகளுக்குப் பிறகு வீதிக்கு விரட்டியடிக்கப்படுகின்றாள்.

இந்தத் தகவலை சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சியில் 04.05.08 அன்று குறிப்பிட்டு விட்டு, கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 20,000 கற்பழிப்புகள் நடந்துள்ளன; கற்பழிப்புத் தலைநகரான டெல்லியில் கடந்த மாதம் மட்டும் 10 பேர் என்று குறிப்பிடுகின்றது.

சுனிதா வில்லியம்ஸ் ஆகாயத்தில் நடப்பதில் சமுதாயத்திற்குப் பெருமை கிடையாது. மண்ணில் நடக்கின்ற ஐரிஸ்களின் கற்புகள் காக்கப்படுவது தான் மனித குலத்திற்குப் பெருமையாகும்.

கற்பழிக்கப்படும் பெண் மருத்துவர்

ஐரிஸ் ஓர் அப்பாவிப் பெண் என்றால், ஒரு குழந்தை நல மருத்துவப் படிப்பு பயிலும் 24 வயதுப் பெண் டாக்டர் டெல்லியில் ஆர்.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் கற்பழிக்கப்படுகின்றாள்.

இந்தக் கற்பழிப்புகளின் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே இருக்கின்றது. அவை அனைத்தையும் வெளியிட்டால் இது கற்பழிப்பு சிறப்பிதழ் ஆகிவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம்.

இப்போது நாம் இங்கு கவனிக்க வேண்டியது, கற்பழிக்கும் காட்டுமிராண்டிகளைத் தான்! இந்த மிருகங்களைச் சிறைச் சாலைகளில் போட்டுப் பூட்டி, நமது வரிப் பணத்தைக் கொட்டி வளர்க்கலாமா?

இவர்களுக்குக் கருணை காட்டலாமா? அதனால் தான் அத்வானி போன்றோர்கள் கூட அரபு நாட்டுச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பகிரங்கமாகக் குறிப்பிடுகின்றனர்.

இஸ்லாமியச் சட்டம், குர்ஆனியச் சட்டம் என்று சொன்னால் அது இஸ்லாத்தின் மேலாண்மையை ஒத்துக் கொண்டதாக ஆகி விடும் என்பதால் அரபு நாட்டுச் சட்டம் வேண்டும் என்கிறார்.

ஆம்! இங்கு இருக்கும் சட்டங்களால் இந்த மனித மிருகங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்கின்றார். இந்தச் சட்டங்களினால் மனித சமுதாயத்திற்கு மத்தியில் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை என்று தெளிவான ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கின்றார்.

குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் தான் மனித சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்பது அல்குர்ஆனின் நிலைப்பாடு!

அதனால் தான் உலகில், சவூதியில் குற்றத்தின் விகிதாச்சாரம் உலகத்தின் ஏனைய பகுதிகளை விடக் குறைந்து காணப்படுகின்றது; அமைதி நிலவுகின்றது.

இந்த அமைதியை, இஸ்லாம் சட்டத்தின் மூலம் நிறைவேற்றுகின்றது.