யா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே!

ஷியாக்கள் ஓர் ஆய்வு     தொடர் – 15

யா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே!

அபூஉஸாமா

இரட்டை வேடம் போடும் உலமாக்கள்

அலீயிடம் அல்லாஹ் ரகசியமாக உரையாடினான் என்று பகிரங்கப் பொய்யைக் கூறி, இதன் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்ற கருத்தை ஷியாக்கள் நிலைநாட்டுகின்றனர். இதைக் கடந்த இதழில் பார்த்தோம்.

இந்த ஷியாக்களைக் காஃபிர்கள் என்று நாம் மட்டுமல்ல! தமிழகத்தைச் சேர்ந்த சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் உலமாக்களும் சொல்கின்றனர்.

ஆனால் அந்த சு.ஜ. உலமாக்களும் ஷியாக்கள் கொண்டுள்ள அதே கொள்கையைத் தான் கொண்டிருக்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

(அல்லாஹ்வுக்கும் உங்களுக்குமிடையே நடைபெற்ற உரையாடலை) நீங்கள் செவியுற்றுக் கொண்டிருக்கும் போதே, காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான ரட்சகரே! (என்னை நெருங்கி என்னுடன்) ஒன்றியவராகி விடுவீராக! இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீபாவாக இருக்கிறீர் என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது. முஹ்யித்தீனே! (இறைவனாலேயே) மகத்தான ரட்சகர் என்று அழைக்கப்பட்டதன் மூலம் நீங்கள் மகத்துவமிக்க திருநாமம் ஒன்றைத் தான் சூட்டப்பட்டு விட்டீர்!

இது, யாகுத்பா என்ற மவ்லிதில் இடம் பெறும் கவிதையின் பொருளாகும்.

இக்கவிதையில் இந்தக் கவிஞன் சொல்ல வரும் விஷயங்களைக் காண்போம்.

  1. அல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானியுடன் நேரடியாகப் பேசினான். அதுவும் அவர் காதால் கேட்கும் அளவுக்குப் பேசினான்.
  2. அப்துல் காதிர் ஜீலானி, கவ்துல் அஃலம் – மகத்தான ரட்சகராக இருக்கிறார்.
  3. மகத்தான ரட்சகர் என்ற பட்டத்தையும் மனிதர்களாக அவருக்குச் சூட்டவில்லை. அல்லாஹ்வே அவருக்கு இந்தப் பட்டத்தை வழங்கி விட்டான்.
  4. மனிதன் இறைவனுடன் ஒன்றி விட முடியும்.
  5. இவை அனைத்தையும் அல்லாஹ்வே அவரை நோக்கிக் கூறினான்.

இவ்வளவு கருத்துக்களும் இந்தக் கவிதை வரிகளில் மறைமுகமாக அல்லாமல் நேரடியாகவே சொல்லப்படுகின்றது.

இதில் சொல்லப்படும் எல்லாக் கருத்துக்களும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்து விடக் கூடியவையாக உள்ளன.

அல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானியுடன் நேருக்கு நேர் பேசினான் என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம். சராசரி முஸ்லிமும் இதை நம்பத் துணிய மாட்டான். நபிமார்களின் தொடரை, நபி (ஸல்) அவர்களுடன் நிறைவுபடுத்தி, கடைசி ஹஜ்ஜின் போது, இந்த மார்க்கத்தை நிறைவு படுத்தி விட்டதாக அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

அல்குர்ஆன் 5:3

நபி (ஸல்) அவர்களுடன் இந்த மார்க்கம் முழுமை பெற்ற பின் வேறு எவருடன், எதற்காக இறைவன் பேச வேண்டும்? நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு எவருடனாவது இறைவன் பேச வேண்டுமென்றால் இந்த உம்மத்திலேயே மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசியிருப்பானே!

உமரின் நாவில் அல்லாஹ் சத்தியத்தைப் போட்டிருக்கிறான்; அதைக் கொண்டு அவர் பேசுகிறார்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: அபூதாவூத் 2573, இப்னுமாஜா 105

இந்த உயர்ந்த அந்தஸ்து பெற்ற உமர் (ரலி) அவர்களுடன் இறைவன் பேசவில்லையே! எவ்வளவோ பிரச்சனைகள் ஏற்பட்ட நேரத்திலும் அல்லாஹ் அவர்களுடன் பேசவில்லையே!

நபிமார்கள், ரசூல்மார்கள் நீங்கலாக உள்ள முன்னோர், பின்னோர் அனைவரிலும் இளைய தலைமுறையினரின் தலைவர்கள் அபூபக்ரும், உமரும் ஆவர் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: திர்மிதீ 3597, இப்னுமாஜா 97

அபூபக்ரையும், உமரையும் சுட்டிக் காட்டி நான் உங்களுடன் வாழும் நாட்களை அறிய மாட்டேன். எனக்குப் பின் இவ்விருவரையும் பின்பற்றி நடங்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி)

நூற்கள்: திர்மிதீ 3596, இப்னுமாஜா 94

இப்படி நபி (ஸல்) அவர்களால் சிலாகித்துச் சொல்லப்பட்ட இந்த இரு நல்லடியார்களிடம் கூட அல்லாஹ் உரையாடவில்லை. ஆனால் இந்த இருவரின் தரத்திற்கு ஏணி வைத்தாலும் எட்டாத நிலையில் உள்ள ஒருவருடன் பேசினான் என்பதை ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்?

எப்படியாவது அவரை நபியவர்களுக்குச் சமமாக ஆக்கி, பிறகு அவர்களை விடவும் மேலான நிலையில் உயர்த்துவதே இக்கவிஞனின் நோக்கம். இவருடன் அல்லாஹ் நேரடியாக உரையாடியதாகக் கூறுவதன் மூலம் அவரை நபியுடன் சமப்படுத்துகின்றான்.

“மகத்தான ரட்சகரே” என்று அல்லாஹ் இவரை அழைத்ததாகக் கூறுவதன் மூலம் நபியை விடவும் இவரை உயர்த்துகின்றான். ஏனெனில் நபியவர்களைக் கூட அல்லாஹ், “மகத்தான ரட்சகரே’ என்று அழைக்கவில்லை.

இறைவன் அப்துல் காதிர் ஜீலானியுடன் பேசினான் என்று கதை கட்டியதன் மூலம் நபி (ஸல்) அவர்களுக்குப் பின், அப்துல் காதிர் ஜீலானி நபியாகத் திகழ்ந்தார்கள் என்று காட்டுவதற்காக யூதர்கள் இயற்றியதே இந்தப் பாடல் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

மிர்ஸா குலாம் என்பவன் தன்னை நபியென்று பிதற்றிய போது, தனக்கு வஹீ வருகின்றது என்று உளறிய போது, அதற்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு எதிர்த்த உலமாக்கள், அவனையும் அவனை நம்பியவர்களையும் காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுத்த உலமாப் பெருமக்கள் அதே நச்சுக் கருத்தை எப்படிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்?

அப்துல் காதிர் ஜீலானியை நபியாகச் சித்தரிக்கும் இந்த யாகுத்பா பாட்டை எழுதியவனும், இதை நம்பியவர்களும் காஃபிர்கள் என்று ஃபத்வா அளிக்காதது மட்டுமின்றி, தங்களுக்குக் கிடைக்கின்ற சில்லறைகளுக்காக வீடுகளில் போய் பாடி விட்டு வரவும் எப்படித் துணிகிறார்கள்?

யாகுத்பாவை ஆதரிப்பவர்களுக்கும் காதியானிகளுக்கும் கொள்கையில் என்ன வித்தியாசம் இருக்கின்றது? இந்த நச்சுக் கருத்து இவர்களின் கண்களுக்குத் தவறாகத் தெரியாமல் போனது ஏன்?

காதியானிகள் காஃபிர்கள் என்று இந்த உலமாக்கள் ஒட்டு மொத்தமாக மார்க்கத் தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால் யாகுத்பாவை எழுதிய கவிஞன், முஹ்யித்தீனுக்கு வஹீ வருகின்றது என்று சொல்கின்றான். இவனை சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்ளும் ஆலிம்கள் கண்டு கொள்வதில்லை. இந்தக் கவிதையை எதிர்த்து கடுகளவு கூட ஆட்சேபம் தெரிவிக்காமல் மவுன விரதம் பூண்டிருக்கிறார்கள். காரணம் என்ன?

இந்தப் பாடல்களை பலப் பல வீடுகளில் படியேறிப் பாடுவதால் இவர்களுக்குப் படியளக்கப்படுகின்றது. கைகளில் கைமடக்கு கொடுக்கப்பட்டு பைகள் நிரப்பப்படுகின்றன. இந்த அற்பக் காசுக்காக, சொற்ப ஆதாயத்திற்காக இவர்கள் மார்க்கத்தை விலை பேசி விற்கின்றார்கள்.

அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

அல்குர்ஆன் 2:174

இந்த ஆலிம்கள் தங்களுடைய வயிறுகளில் நெருப்பை நிரப்பிக் கொள்கிறார்கள். அதனால் தான் இந்தக் கவிஞனின் விஷ வரிகளை இவர்கள் கண்டு கொள்வதில்லை.

பொய்யன் மிர்ஸா குலாமுக்கு ஒரு நீதி, இந்தப் புறம்போக்குக் கவிஞனுக்கு ஒரு நீதி என அநீதி பாராட்டுகின்றார்கள். மிர்ஸா குலாமை காஃபிர் என்று ஃபத்வா கொடுத்தது போன்று இந்தக் கவிஞனையும் காஃபிர் என்று ஃபத்வா கொடுக்க மறுக்கின்றார்கள். இதிலிருந்து இவர்கள் பக்கா ஷியாக்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

முஹம்மது (ஸல்) அவர்களைத் தாக்கி முஹ்யித்தீனை உயர்த்துதல்

கவ்துல் அஃலம் அவர்கள் நிலைத்திருக்கும் காலமெல்லாம் நபியின் மீது அல்லாஹ் அருள் புரிவானாக!

இதுவும் யாகுத்பாவில் இடம்பெறும் கவிதை வரியாகும்.

நபியின் புகழ் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அல்லாஹ், அப்துல் காதிர் ஜீலானிக்கு அருள் புரியட்டும் என்று இவன் பாடியிருந்தால், நபியை உரிய விதத்தில் மதிக்கிறான் என்று கருதலாம். இந்தக் கவிஞன் விஷயத்தையே தலைகீழாக மாற்றுகின்றான்.

அப்துல்காதிர் ஜீலானியின் புகழ் நிலைத்திருப்பதால் தான் நபிக்கே அல்லாஹ் அருள் புரிய வேண்டுமாம்.

உண்மையான முஸ்லிமை விட்டு விடுவோம். அரைகுறை முஸ்லிமாவது இதை ஏற்க முடியுமா?

நபியவர்களின் மதிப்பைக் குறைப்பதே இக்கவிஞனின் உண்மையான நோக்கம். நச்சுக் கருத்தை, நாசகார விஷத்தைக் கொண்ட இவை கவிதை வரிகள் அல்ல! நரக நெருப்புப் பொறிகள்!

கண்மணி நாயகம், உயிரினும் மேலான உத்தம நபி என்று இவர்கள் சொல்வதெல்லாம் வெளி வேஷம்; வெற்றுக் கோஷம்!

நபி புகழ் பாடுகின்றோம் என்று இவர்கள் குறிப்பிடுவது நடிப்பும் நாடகமும் ஆகும். இவர்கள் நபி (ஸல்) அவர்களை மதிக்கிறோம் என்று சொல்வது பகிரங்க நயவஞ்சகமாகும். இதற்குச் சான்று தான் இந்தக் கவிதை வரிகள்.

இந்த ஆலிம்கள் ஷியாக்கள் என்பதால் தான் இப்படி நபி (ஸல்) அவர்களை மட்டம் தட்டுகிறார்கள். இவர்கள் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று குறிப்பிடுவது பொய்யும் போலியுமாகும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்