சத்திய விவாதம் சமாதியான அசத்தியம்
“அப்துல்லாஹ் சமாளியோடு எதற்காக நாம் விவாதம் செய்ய வேண்டும்? ஒரு விளக்கமும் இல்லை; ஒரு விஷயமும் இல்லை; சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்”
அப்துல்லாஹ் சமாளியுடன் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் விவாதத்தின் போது அரங்கில் இருந்தவர்கள், இணைய தளத்தில் விவாதத்தின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்தவர்கள் நொந்து போய் வெளியிடும் வேதனை வார்த்தைகள் தான் இவை.
இவர்களின் வேதனையையும், விசனங்களையும் தவ்ஹீத் ஜமாஅத் புரியாமல் இல்லை. “இறைவனுக்கு உருவம் உண்டா?’ என்ற தலைப்பில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளிலும், “யார் முஷ்ரிக், பித்அத்வாதி?’ என்ற தலைப்பில் ஜூலை 24, 25 ஆகிய தேதிகளிலும் நடந்த விவாதத்தின் போது நாமும் தலையைப் பிய்த்துக் கொள்ளத் தான் செய்கிறோம். இருப்பினும் இந்தக் களத்தை நாம் சந்தித்துத் தான் ஆக வேண்டிய நிலையிலும் நிர்ப்பந்தத்திலும் இருக்கின்றோம்.
அசத்தியம் ஆட்டம் போடும் போதெல்லாம் சத்தியம் மவுன விரதம் பூணக் கூடாது. சத்தியவாதிகள் பிணமாகக் கிடக்கக்கூடாது.
காயல்பட்டிணத்தில், “முஹ்யித்தீன் என்று அழைத்த்துப் பிரார்த்திக்கலாம்’ என ஓர் அசத்தியவாதி ஆட்டம் போட்டான். முஜாதலா என்ற விவாதத்தைத் தாண்டி முபாஹலாவுக்கு அழைத்து சவால் விட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு யாரும் பதில் சொல்ல முன்வராததால், கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருட்டுத் தான் என்ற குருட்டுச் சிந்தனை கொண்டிருக்கும் பூனையைப் போன்று ஜலீல் மைதீன் என்பவர், தான் மட்டுமே சத்தியத்தில் இருப்பதாக மிதப்பில் இருந்தார்.
அந்தச் சமயத்தில் சவாலை ஏற்றதன் மூலம் ஜலீல் மைதீனின் குருட்டுச் சிந்தனைக்குச் சமாதி கட்டப்பட்டது. அதன் பின்னர் சத்தியம் அமோக, அபார வளர்ச்சி கண்டது, அசத்தியம் சமாதியாகத் தொடங்கியது.
அதன் பின்னர் கோட்டாறு விவாதம், கடையநல்லூர் விவாதம், கிறித்தவ அறிஞர் ஜெபமணியுடன் விவாதம், இலங்கை விவாதம், கோவை காதியானி விவாதம், சென்னையில் அஹ்லெ குர்ஆன் கூட்டத்தினருடன் விவாதம், களியக்காவிளை விவாதம், ஏர்வாடி மற்றும் மதுரையில் பிறை விவாதம், தொண்டியில் தர்ஜுமா விவாதம், சென்னையில் நாத்திகர்களுடன் விவாதம் இன்னும் பல்வேறு விவாதக் களங்களைத் தவ்ஹீத் ஜமாஅத் கண்டது. அல்லாஹ்வின் அருளால் அதில் சத்தியம் வென்றது.
தற்போது சென்னையில் நடைபெற்றுள்ள இந்த விவாதத்தில், எதிர்த் தரப்பு விவாத அரங்கில் பங்கு கொண்ட ஆசிரியர்களிடம் பயின்ற ஒரு மாணவர், தற்போது தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பாளர் சகோதரர் அப்துல் காலிக் அவர்கள், “களியக்காவிளை விவாதத்தில் அப்துல்லாஹ் ஜமாலி சரியான ஆதாரங்களைக் காட்டி விவாதிக்காததால் அதற்குப் பின்னர் தான் நான் தவ்ஹீதுக்கு வந்தேன். இந்தச் சென்னை விவாதத்திலும் ஜமாலி சரியான ஆதாரத்தைக் காட்டவில்லை. எனவே இதற்குப் பின்னரும் இன்ஷா அல்லாஹ் ஏராளமானவர்கள் தவ்ஹீதுக்கு வருவார்கள்” என்று குறிப்பிட்டார். அல்ஹம்துலில்லாஹ்!
களியக்காவிளை விவாதத்தின் போதும், “இவருடன் ஏன் விவாதம் செய்ய வேண்டும்?’ என்று தற்போது வெளியிடுகின்ற வேதனையைத் தான் நமது சகோதரர்கள் வெளியிட்டார்கள்.
ஆனால் அந்த களியக்காவிளையில் கிடைத்த வெற்றி என்ன என்பதை இப்போது நாம் அறிகின்றோம். அப்போதைய ஏகத்துவத்தில், “களியக்காவிளையும் கனிகின்ற கிளைகளும்’ என்ற தலைப்பில் தலையங்கமும் வெளியிடப்பட்டது.
களியக்காவிளை விவாதத்தின் மூலம் வந்த வரவு இந்த ஒன்று மட்டுமல்ல! பல வரவுகள் உள்ளன. அவர்களில் சிலர் கிளைப் பொறுப்புகளைக் கூட அலங்கரித்துக் கொண்டுள்ளனர். இப்போது இந்த விவாதத்தின் பலனை நாம் புரிந்து கொள்ளலாம்.
“அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: புகாரி 2942
தவ்ஹீத் ஜமாஅத் தோற்றுவிக்கப்பட்டது மக்களை அசத்தியத்திலிருந்து சத்தியத்தின் பக்கம் மீட்பதற்காகத் தான். அந்தக் களப்பணியின் ஓர் ஆயுதம் தான் விவாதம். அழைப்புப் பணி எனும் வயல் களத்தில் கதிர் மணிகளை அறுத்து வருகின்ற கதிர் அரிவாள் தான் விவாதம்.
அறுவடை செய்யும் போது கால்கள் சேற்றில் மிதக்கும். கைகளில் காயங்கள் பதியும். ஆனால் தானிய மணிகளைக் கொண்டு வருகையில், சோற்றை உண்டு மகிழ்கையில் வேதனைகள் அத்தனையும் தீர்ந்து போய் விடுகின்றன. அது போல் தான் இந்த விவாதக் களத்தில் கிடைக்கப் போகும் கதிர் மணிகளைக் காணும் போது நமது கவலை தீரும். எத்தனை பேர்கள் வருவார்கள் என்பதை அல்லாஹ் தான் அறிவான். யாரும் வராவிட்டாலும் அழைப்புப் பணி என்ற கடமையைச் செய்ததற்கு நமக்குக் கூலி கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்!
அத்துடன், கண்டவனெல்லாம் “விவாதத்திற்கு வருகிறீர்களா?’ என்று கேட்பதற்கும் இது போன்ற விவாதங்களின் மூலம் முடிவு கட்டலாம்.
உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.
அல்குர்ஆன் 21:18
அல்லாஹ் சொல்வது போன்று இந்த விவாதம் அசத்தியக் கொள்கையை நொறுக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது.
ஜமாலி, சமாளி சமாளி என்று சமாளிக்கத் தான் செய்கிறாரே தவிர அவரால் சத்தியத்தைச் சமர்ப்பிக்க முடியவில்லை.
ஆம்! சத்தியம் உயிர்த் துடிப்புடன் ஜீவிதம் காண்கிறது, சரித்திரம் படைக்கின்றது. அசத்தியம் சமாதிக்குள் அதற்குரிய இடத்தில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கின்றது, அஸ்தமித்துக் கொண்டிருக்கின்றது.