சமுதாயப் பணியில் தவ்ஹீது ஜமாஅத் ஒரு வரலாற்றுப் பார்வை

சமுதாயப் பணியில் தவ்ஹீது ஜமாஅத்

ஒரு வரலாற்றுப் பார்வை

எண்பதுகளின் துவக்கத்தில் உதயமான இந்த ஏகத்துவப் பிரச்சாரம் 86க்குப் பின் உச்சக்கட்டத்தை அடைந்தது. தமிழகத்தில் உள்ள தவ்ஹீது சிந்தனையாளர்கள் ஒன்று சேர்ந்து களமிறங்கினர். ஆங்காங்கு பல்வேறு சங்கங்களின் பெயர்களில் இம்மக்கள் தவ்ஹீது பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அப்போது ஓர் ஒருங்கிணைப்பு தேவைப்பட்டது. அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் என்ற அமைப்பு உதயமானது.  அதற்குப் பிறகு ஜாக் (ஜம்யிய்யத்து அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்) என்று அந்த அமைப்பு மறு பெயர் பெற்றது.

ஜாக் தொடங்கப்பட்ட பிறகு தமிழகமெங்கும் எதிர்ப்பலைகள்! எரிமலைகள்! உலமாக்கள் தூண்டி விட்ட வெறுப்புணர்வுகள்! ஊர் விலக்கங்கள்! பள்ளிவாசல்களில் தொழுவதற்குத் தடைகள் என பன்முக, பல பரிமாணத் தாக்குதல்களுக்கிடையே அந்த இயக்கம் வளர்ந்தது.

மத்திய, மாநிலத் தேர்தல்கள் வந்தன. யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்று அப்போது நாம் வாய் திறக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் வாக்களிக்காமலேயே இருப்பது தான் சரி என்ற சிந்தனை ஓட்டம் அப்போது நம்மிடம் ஓடிக் கொண்டிருந்தது.

நம்முடைய ஒரே பணி ஏகத்துவப் பிரச்சாரம் மட்டும் தான். அந்தப் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் வரதட்சணை, வட்டி, லஞ்சம், லாட்டரி போன்ற சமூகத் தீமைகளை ஒழிக்கும் பிரச்சாரத்தையும் நம் கையில் எடுத்துக் கொண்டு அந்த இயக்கத்திலிருந்து செயல்பட்டோம்.

அரசியல் மற்றும் சமுதாயப் பிரச்சனைகளில் நாம் தலை காட்டவில்லை. அதற்குத் தேவையும் ஏற்படவில்லை. ஆனால் தேர்தல் மூலம் கிடைத்த மிக முக்கியமான பயனை அனுபவிக்கத் தவறவில்லை.

மேலப்பாளையம் போன்ற, முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஊர்களில் தவ்ஹீதுவாதிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்குக் காவல்துறை அனுமதிக்கவில்லை. இந்தத் தடையை உடைத்தெறிவதற்குத் தேர்தல் மிகப் பெரும் அளவில் துணை புரிந்தது.

பேச்சுரிமை என்பது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தனியுரிமையாகும். இதை யாரும் தட்டிப் பறிக்க முடியாது. எனவே பெயருக்கு ஒரு வேட்பாளரை நிறுத்தி, அவருக்கு வாக்கு சேகரிப்பு என்ற சாக்கில் தவ்ஹீது பிரச்சாரம் நடந்தது. தவ்ஹீது கூட்டத்திற்குப் போடப்பட்டிருந்த தடை அன்றிலிருந்து தகர்ந்து போனது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

பாபரி மஸ்ஜிதும் பயண மாற்றமும்

இப்படியே தவ்ஹீது ஜமாஅத்தின் பயணம் தொடர்ந்தது. காலம் எனும் சாலையில் 89, 90, 91 என்ற மைல் கற்களைத் தாண்டி 92ம் ஆண்டில் அந்த நிகழ்வு நிகழ்ந்தது. 1992, டிசம்பர் 6ஆம் தேதி அன்று பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டது தான் அந்த நிகழ்வு. பட்டப்பகலில் சங் பரிவார பயங்கர வாதிகளால் பள்ளிவாசல் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

உடைக்கப்பட்டது பள்ளிவாசல் மட்டுமல்ல! சமுதாயத்தின் முதுகெலும்பும் தான்.

“சமுதாயத்தைக் காப்பதற்கு நாங்கள் இருக்கிறோம்’ என்று சொல்லிக் கொண்டு, மக்களிடம் வாக்குகளை வாங்கிக் கொண்டிருந்த சமுதாய இயக்கங்கள் உடைக்கப்பட்டன.

சமுதாயம் நிராயுதபாணியாக மட்டுமல்ல, நிர்வாணமாகவும் இருந்தது என்ற உண்மை, இடிந்து கிடந்த பாபரி மஸ்ஜிதின் இடிபாடுகளுக்கிடையில் பளிச்சென்று தெரிந்தது.

சமுதாய இயக்கங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த லீக்குகள், சமுதாயத்தைக் காக்கின்ற ஆயுதங்களாகவும், சமுதாயத்தின் மானம் காக்கும் ஆடைகளாகவும் இருக்கத் தவறி விட்டனர் என்ற விபரம் தெளிவாகத் தெரிந்தது.

இது தான் தவ்ஹீது ஜமாஅத்தின் பயணத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன் விருப்பமின்றியே ஒரு திருப்பத்தைத் திணித்தது. சமுதாயப் பிரச்சனைகளில் தலையிட்டே ஆக வேண்டும் என்பது தலைவிதியானது.

அது வரைக்கும் தவ்ஹீது என்ற இலக்கை மட்டும் நோக்கிப் பயணம் செய்த தவ்ஹீது ஜமாஅத், அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் சமுதாயப் பிரச்சனைகளையும் கையில் எடுத்தாக வேண்டும் என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டது.

துரோகமிழைத்த அரசியல் கட்சிகள்

முஸ்லிம்கள் காலம் காலமாக காங்கிரஸ் கட்சியையே நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்தக் கட்சி, நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து முஸ்லிம்களுக்குத் துரோகம் இழைத்துக் கொண்டிருந்தது.

முதன் முதலில் சங் பரிவாரக் கும்பல் பாபரி மஸ்ஜிதுக்குள் சிலையைக் கொண்டு வைத்த மாத்திரத்தில் அதை எடுக்கத் தவறியது காங்கிரஸ் தான். உத்திரப் பிரதேசத்திலும், மத்தியிலும் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த அந்தக் கட்சி, முஸ்லிம்களுக்கு இழைத்த துரோகம் சாதாரண துரோகமல்ல! பாட்டன் நேருவிலிருந்து பேரன் ராஜீவ் வரை முஸ்லிம்களுக்கு, காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் இஸ்லாமிய சமுதாயத்திற்குக் காங்கிரஸ் மீதிருந்த காதலினால் இந்தத் துரோகங்கள் தெரியாமல் ஆனது.

நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸின் ஒட்டு மொத்த துரோகமும் முஸ்லிம்களுக்குத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது.

பாரபி மஸ்ஜித் உடைப்புக்கு அஸ்திவாரம் போடப்பட்டது நேரு காலத்தில்! அந்த அஸ்திவாரம் தான் வளர்ந்து இன்று பாபரி மஸ்ஜிதின் அஸ்திவாரத்தைத் தகர்த்துக் கொண்டிருக்கின்றது என்பதை 92, டிசம்பர் 6ல் தான் சமுதாயம் புரிந்து கொண்டது.

அன்றிலிருந்து உ.பி.யில் ஆட்சியை இழந்தது. மத்தியிலும் கூட்டணியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது.

இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயம், தான் ஒரு அனாதை என்பதை உணர்ந்து கொண்டது.

செல்லாக் காசான சமுதாயக் கட்சிகள்

காங்கிரஸ் கட்சி காலை வாரி விட்டதும், கைப்பிடிக்க சமுதாயக் கட்சிகள் இருக்கின்றனவே! அவற்றை நாடிச் செல்லலாம் என்றால் அதற்கும் வழியில்லாத ஒரு கையறு நிலை!

ஆளுங்கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பதவிகளை வாங்கிய உடன் அவர்களின் சமுதாயப் பணி முடிந்து விடும். அடுத்த தேர்தலில் தான் அவர்களுக்கு சமுதாயமே நினைவுக்கு வரும். இதனால் அவர்கள் சமுதாயத்தை விட்டு தூரப் போனார்கள். சமுதாயமும் அவர்களை விட்டு தூரப் போனது. பதவி தான் அவர்களுக்குக் குறிக்கோள் என்றானது.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகும் கேரளாவில் முஸ்லிம் லீக், காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து அமைச்சர் பதவியை அனுபவித்துக் கொண்டிருந்ததை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். இத்தகைய காரணங்களால் இவர்கள் சமுதாயத்தில் செல்லாக் காசானார்கள். செல்லரித்துப் போனார்கள்.

தமிழகத்தில் தலைகாட்டிய பி.டி.பி.

சமுதாய இயக்கங்கள் அவரச சிசிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருந்ததால் கேரளாவில் நாஸர் மஃதானி போன்றோர் சமுதாயப் பணி செய்யக் களமிறங்கினார்கள்.

உயிரோட்டமான பேச்சு! உணர்வுப்பூர்வமான உரை! மக்கள் இதில் கவரப்பட்டனர். மக்களிடம் அப்படியொரு தேட்டமும், தணியாத தாகமும் இருந்தது. அதனால் அவரது கட்சிக் கொடி கேரள எல்லையைத் தாண்டி தமிழகக் கம்பங்களிலும் பறக்க ஆரம்பித்தது. அந்த அளவுக்குத் தமிழக முஸ்லிம் சமுதாயத்திலும் ஒரு தேட்டம் இருந்தது. பி.டி.பி. (மக்கள் ஜனநாயகக் கட்சி) என்ற அவரது கட்சிக்கு தமிழகத்திலும் செல்வாக்கு ஏற்பட ஆரம்பித்தது. ஆனால் நாஸர் மஃதனி அப்போது பக்கா ஷிர்க்கான கொள்கையில் இருந்தார். அவரது உரை, யாஸய்யிதீ யாரசூலுல்லாஹி என்ற இணை வைப்புக் கவிதைகளுடனே துவங்கும்.

சமுதாயப் போர்க்களத்தில் ஒரு காலை இழந்தும் சிங்கமாய் கர்ஜித்துக் கொண்டிருந்த அவர் சிகரத்தைத் தொடவிருந்தார். ஆனால் அரசியல் கட்சிகளுடனான அவரது கூட்டணி அவரை ஏறிய அதே வேகத்தில் குப்புறத் தள்ளியது. முஸ்லிம் லீக் செய்த அதே பிழையை இவரும் செய்தார். அதனால் அதன் விளைவை அவர் சந்திக்க நேரிட்டது. அவர் சந்தித்த சிறைவாசத் தியாகம் சமுதாயத்தால் மறக்க முடியாத ஒன்றாகும்.

ஜிஹாத் கமிட்டி

கேரளத்தில் நிலவிய வெற்றிடத்தை நிரப்புவதற்கு நாஸர் மஃதனி தேவைப்பட்டது போலவே தமிழகத்தில் ஒரு பழனிபாபா தேவைப்பட்டார். பழனிபாபாவும் இந்த வெற்றிடச் சூழலை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார்.

இவரிடம் பேச்சுத் திறமை இருந்தது. ஆனால் ஏகத்துவம் இல்லை. தெளிவான இஸ்லாமியக் கொள்கையும் இல்லை. பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் ஒருவரை எழுப்பி, “உனக்கு ஐந்து கலிமா தெரியுமா?” என்று கேட்பார். கலிமா தெரிந்திருந்தால் கூட கூட்டத்தில், பதற்றத்தில் யார் தான் பதில் சொல்ல முன்வருவார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த ஐந்து கலிமாக்கள் என்பதெல்லாம் மார்க்கத்தில் இல்லை; இதைத் தெரிந்திருந்தால் தான் ஒருவர் முஸ்லிம் என்பதும் இல்லை என்ற மார்க்க ஞானம் கூட அவருக்கு அப்போது இருக்கவில்லை.

எனினும் மக்களுக்கு இருந்த தேட்டத்தையும் தேவையையும் பழனிபாபா நிறைவேற்றினார்.

அவரது பேச்சில் அனல் பறக்கும். ஆங்கிலம் ஆட்டம் போடும். பிசிறடிக்காத அந்தப் பேச்சு இளைஞர்களை தன் வசப்படுத்தியது. அதன் விளைவு அவர் சென்று வரும் ஊர்களில் கலவரத் தீ பற்றிக் கொள்ளும் என்றானது.

அந்தக் கலவரத் தீயால் உயிர்களும், உடைமைகளும் சேதமாகும். எனவே அவருக்கும் அவரது ஆதரவாளர் களுக்கும் அடிக்கடி சிறைவாசம்!

இத்தனை சோதனைகள் அவரைத் துரத்தியும் அவர் அவற்றைக் கண்டு ஓடி ஒளியாமல் கடைசி வரை சமுதாயத்தில் நின்று, அதற்காக உயிரையும் துறந்ததை சமுதாயம் ஒருபோதும் மறந்து விட முடியாது.

இங்கே நாம் இதைக் குறிப்பிடக் காரணம், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு ஒரு வெற்றிடம் நிலவியது. அதை நிரப்புவதற்கு அப்போது யாருமில்லை. சமுதாயத்திலிருந்து யார் அந்த வெற்றிடத்தை நிரப்ப முன்வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள சமுதாயம் காத்திருந்தது. அவரிடம் மார்க்கம் இருக்கின்றதா? என்ற தரத்தையெல்லாம் யாரும் பார்க்கத் தயாரில்லை.

சமுதாய உணர்வு, வீரம் உள்ள எவர் வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள சமுதாயம் தயாராக இருந்தது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

சத்தியத்திற்கு ஜாக் சமுதாயத்திற்கு பி.டி.பி.

இந்த வெற்றிடம் தான் தவ்ஹீது ஜமாஅத்தினரிடம் ஒரு கேள்விப் புயலை மீண்டும் மீண்டும் கிளப்பியது. அதிலும் குறிப்பாக ஜாக்கின் மேல்மட்ட நிர்வாகக்குழு உறுப்பினருக்குக் கூட பி.டி.பி. மீது பகிரங்கக் காதல்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் பாணியில், அவரது பாதையில், தங்கள் பெற்றோர், உற்றாரைப் பகைத்துக் கொண்டு ஒன்று கூடியிருக்கும் ஓர் இயக்கத்தில், அதிலும் குறிப்பாக அதை வழிநடத்தும் உயர் பொறுப்பிலிருந்து கொண்டு, பக்கா ஷிர்க்கைக் கொள்கையாகக் கொண்ட பி.டி.பி. தலைமை மீது காதல் கொள்கிறார்; புகழ்கிறார்; போற்றுகிறார் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் நம்மிடத்தில் உள்ள வெற்றிடம் என்ற கோளாறு தான்.

தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடமே இந்த நிலை என்றால் தவ்ஹீது இயக்கத்தில் உள்ள சாதாரண உறுப்பினர்களின் நிலை என்ன? உண்மையில் அவர்களிடமும் பி.டி.பி.யில் ஈடுபாடு இருந்தது. இன்னும் சிலருக்கு ஜிஹாத் கமிட்டியின் மீது நாட்டம் இருந்தது.

இதற்கெல்லாம் காரணம், நம்மிடத்தில் இருந்த வெற்றிடம் தான். இது தான் நம்மை சமுதாயப் பிரச்சனையை நோக்கிக் கொண்டு சென்றது.

அப்போதிருந்து அவரது மேடைப் பேச்சுக்கள் சமுதாயப் பிரச்சனையை மையமாகக் கொண்டு சுழன்றது. மத்திய, மாநில அரசுகள், அரசியல்வாதிகள், கட்சிகள் முஸ்லிம்களுக்குச் செய்த துரோகங்களைத் தோலுரித்துக் காட்டியது.

பழனிபாபா, நாஸர் மஃதனி போன்று மக்களின் உணர்ச்சிகளை மட்டும் தூண்டி விடாமல், அவர்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைத்தது. விடிவு காலம் இல்லை என்று விரக்தியில் வீழ்ந்திருந்த அவர்களை வீறு கொண்டு எழ வைத்தது.

அத்துடன், சமுதாய வெற்றி என்பது சத்தியக் கொள்கை ஒன்றின் மூலமே சாத்தியம் என்பதை உணர்த்தி, மக்களை அசத்தியத்திலிருந்து சத்தியப் பாதைக்குக் கொண்டு வந்தது.

சத்தியப் பேச்சுடன் சமுதாயப் பேச்சையும் கலந்து கொடுக்க ஆரம்பித்த மாத்திரத்தில் ஜாக் இயக்கம் பல பரிமாணங்களில் வளர்ச்சி கண்டது. இந்த யுக்தியால் சமுதாய மக்கள் நம்மீது கொண்டிருந்த வெறுப்பின் அளவு மிகப் பெரிய சதவிகித அளவில் சரிந்தது.

ஆடியோ, வீடியோ அணிவகுப்பு

அந்தக் கட்டத்தில் வெளிநாடுகளில் இளைஞர் வட்டாரங்களில் மிக வேகமாக வலம் வந்தவை பழனிபாபா அவர்களின் ஒலிநாடாக்கள் தான். அந்த இடத்தை நமது ஒலி நாடாக்கள் பிடித்தன. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! ஆடியோ, வீடியோ கேஸட்டுகள் வளைகுடா நாடுகளில் சமுதாய உணர்வுள்ள மக்களிடம் அணிவகுத்தன.

தவ்ஹீது ஜமாஅத்தின் வளர்ச்சிக்கு அல்லாஹ் இரண்டு ஆயுதங்களை வழங்கியிருக்கிறான். ஒன்று சத்தியப் பேச்சு!

அன்று ஓர் வெற்றிடம் நிலவிய அந்தக் காலகட்டத்தில் சத்தியப் பேச்சு அரசியல்வாதிகளையும், அதிகார வர்க்கத்தினரையும் ஓர் உலுக்கு உலுக்கியது. தமிழகத்தையே குலுக்கியது.

யாரையும் தடாவில் கைது செய்யலாம் என்ற ஒரு குட்டி அவசர நிலைப் பிரகடன நிலை, மத்தியிலும் மாநிலத்திலும் இருந்த காலகட்டத்தில் பேசிய பேச்சுக்கள் ஓர் அக்னிப் பிரவேசமாகும்.

சமுதாய மக்களை உசுப்பியும், உயிர்ப்பித்தும் விட்ட அந்த உரைகளில், “இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய சதி” என்ற தலைப்பில் பேசிய பேச்சும் ஒன்று. மேலப்பாளையம் பஜார் திடலில், 94 அல்லது 95ல் ஆற்றிய இந்த உரை, உலகளாவிய வரவேற்பைப் பெற்றது.

ஒரு மத சார்புடைய கொள்கையைக் கொண்ட இலங்கையில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் பிரதிநிதித்துவம், மதச் சார்பற்ற கொள்கையுடைய இந்தியாவில் வழங்கப்படவில்லை என்பதை மையப்படுத்தி இந்தப் பேச்சு அமைந்து இருந்தது. நாடாளுமன்றத்திலிருந்து, வானொலி, தொலைக்காட்சி வரை முஸ்லிம்களுக்கு இலங்கையில் வழங்கப்பட்டிருந்த பிரதிநிதித்துவத் தையும், இந்தியாவில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதையும் ஒப்பு நோக்கி அவ்வுரையில் பேசிய பேச்சு, பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது. அவர்களைச் சிந்திக்க வைத்தது.

“இதைத் தான் யார் பேசுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது இவர் தான் பேசியிருக்கிறார்” என்று கலெக்டர் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்த முஸ்லிம் சகோதரர் ஒருவர் மனநிறைவுடன் குறிப்பிட்டது இன்னும் காதில் ரீங்காரமிடுகின்றது.

இப்படி ஒரு பாராட்டைத் தெரிவித்த அவர் ஆரம்பத்தில் தவ்ஹீதை முழு மூச்சாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி மக்களின் உள்ளங்களைச் சுண்டியிழுத்த இந்தப் பேச்சு மத்திய, மாநில உளவுத் துறையினரின் அகலாத ஆந்தைப் பார்வைக்கும் உள்ளானது.

சத்தியப் பிரச்சாரத்துடன் சமுதாயப் பிரச்சனையையும் கையில் எடுத்ததால் மத்திய, மாநில அரசுகளின் கழுகுப் பார்வைக்கும் ஆளானோம்.. அதனால் தான் இதை ஓர் அக்னிப் பிரவேசம் என்று குறிப்பிட வேண்டியுள்ளது.

ஆனால் அதுவும் அழைப்புப் பணிக்கு அடுக்கடுக்கான பலன்களைத் தந்தது. அதிகமான ஆட்களை சத்தியத்தில் கொண்டு வந்து சேர்த்தது.

இது, சத்தியப் பேச்சு என்ற ஆயுதத்தால் கிடைத்த வெற்றியாகும். அடுத்த ஆயுதம் எழுத்துப் பணி!

மாத இதழ் அல்ல! மந்திர இதழ்!

அன்று தவ்ஹீது ஜமாஅத்தினரின் கையில் இருந்த ஒரே ஒரு மாத இதழ் அல்ஜன்னத் தான். ஆனால் அன்று அது ஒரு மந்திர இதழாக இருந்தது. அரசியல், சமுதாயப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு, அதில் தீட்டிய நுழைவுவாயில் (தலையங்கம்) பகுதி, வாசகர்களின் உள்ளங்களை சத்தியத்தின் பக்கம் வளைத்துப் போட்டது.

சமுதாய மாற்றத்திற்கு தவ்ஹீது கொள்கை தான் அவசியம் தேவை என்ற சிந்தனையை அவர்களின் உள்ளங்களில் பதிவு செய்தது. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அவ்விதழ், அவர்களை சத்தியத்தின் பக்கம் வரவழைத்தது.

(இன்று இவ்விதழ் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு அடிப்படைகளை விட்டு விட்டு, அதற்கு எதிரான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பது வேறு விஷயம்.)

இவ்வாறு பேச்சு, எழுத்து என்ற இரண்டு ஆயுதங்களும் மக்களை சத்தியத்தின் பக்கம் கவர்ந்தன.

தவ்ஹீதுவாதிகளின் தடா எதிர்ப்புப் பேரணி

பேச்சு, எழுத்து என்ற இவ்விரு ஆயுதங்களைக் கொண்டு அல்லாஹ்வின் அருளால் நடத்திய அக்னிப் பிரவேசத்தின் உச்சக்கட்டம் தான், தடா எதிர்ப்புப் பேரணி!

“இம்’ என்றால் சிறைவாசம்! ஏன் என்றால் வனவாசம் என்ற அடிப்படையில் இந்தியாவில் பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சில சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்கள் சரமாரியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

தமிழகத்தில் ஒரு குட்டி அவசர நிலைப் பிரகடனம் தான் அப்போதைய ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்றது என்று உறுதியாகக் குறிப்பிடலாம்.

கோயில் முன்னால் காறித் துப்பினார் என்ற சாக்கில் காயல் மஹபூப் பாளை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் யார்?

காலா காலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு அரும்பாடு பட்ட ஒருவர். அவ்வியக்கத்தின் ஆற்றல் மிகு பேச்சாளர். இவரைச் சிறையிலிருந்து மீட்கவும், அவருக்காகக் குரல் கொடுக்கவும் சமுதாயக் கட்சியான முஸ்லிம் லீக் முன்வரவில்லை. முனைப்பான முயற்சி எடுக்கவில்லை.

இது போல் அல்உம்மா அமைப்பைச் சார்ந்தவர்கள், சாராதவர்கள் என பலர் சிறையில்!

ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து சமுதாயமே குரல் கொடுப்பதற்கு அஞ்சிய காலம்! அடங்கிப் போன காலம்! காவல் துறையின் கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த காட்டுத் தர்பார் அது!

குரல் கொடுப்பவரின் குரல் வளை நெறிக்கப்படும். கூட்டம் சேர்ப்பவரின் குறுக்கு உடைக்கப்படும். இக்கால கட்டத்தில் தான் மேலப்பாளையத்தில் திருக்குர்ஆன் மாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற தடா எதிர்ப்புப் பேரணி!

பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற கலவரத்தில் காவல் துறையின் கைத்துப்பாக்கிக்கு ஒரு சிறுவனைப் பலி கொடுத்த ஊர் தான் மேலப்பாளையம். இன்றைய ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு அவர்கள் நெல்லை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருந்த போது தான் இந்த அக்கிரம் நடந்தேறியது. அத்தகைய மேலப்பாளையத்தில் தான் இந்தப் பேரணி!

அனுமதி மறுத்த அன்றைய தலைமை

இந்தப் பேரணி நடத்துவதற்கு அன்றைய தலைமையிடம் அனுமதி கோரிய போது கமாலுத்தீன் மதனி அனுமதி தர மறுத்தார். நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு அனுமதி கிடைத்தது.

முதல் நாள் திருக்குர்ஆன் மாநாடு!

இரண்டாம் நாள் பேரணி! அதன் முடிவில் ஒரு பொதுக்கூட்டம்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம் இந்தப் பேரணி தான்.

சமுதாய இயக்கங்கள் சமாதி ஆன பின், சத்திய இயக்கமான தவ்ஹீது ஜமாஅத் (ஜாக்) நடத்திய இந்தப் பேரணியில் இளைஞர் பட்டாளம் குவிந்தது.

நஜாத்காரன், நஜாத்காரன் என்று நம்மைத் தூர வைத்த, தூக்கி எறிந்த, தூற்றி எறிந்த சுன்னல் வல் ஜமாஅத்தினர் சாரை சாரையாக அணி வகுத்தனர். சிறைக் கைதிகளை விடுவிக்கச் சொல்லி சிங்கங்களாய் கர்ஜித்தனர்.

வீதிக்கு வந்த வீராங்கனைகள்

தமிழகத்தின் பல பாகங்களில் இருந்தும் தவ்ஹீது சகோதரர்கள் பங்கெடுத்த இந்தப் பேரணி தான் தமிழக வரலாற்றில் புது அத்தியாயத்தைத் துவக்கியது. ஒரு முதல் அதிசயம் நிகழ்ந்தது.

பெண்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டது தான் அந்தப் புது அத்தியாயமாகும். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பும், விடுதலை அடைந்த பின்னரும் பெண்கள் போராட்டத்தில் குதித்தது இல்லை. பெண்களை முதன் முதலில் போராட்டத்திற்குக் களமிறக்கியது தவ்ஹீதுவாதிகள் தான்.

தமிழகத்தில் தடாவை எதிர்த்து யாரும் குரல் உயர்த்தாத கால கட்டத்தில், “மனித நேயப் பேரணி’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தடா எதிர்ப்புப் பேரணியில் தங்கள் குழந்தை குட்டிகளுடன் தாய்மார்கள் கலந்து கொண்டது அதிகார வர்க்கத்திற்கு ஓர் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் அமைந்தது.

தமிழகம் எங்கும் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், போராட்டங்களில் பெருமளவு பெண்கள் பங்கேற்பதற்கு அடிப்படையாகவும், அஸ்திவாரமாகவும் அமைந்தது இந்தத் தடா எதிர்ப்புப் பேரணி தான்.

அடுக்கலைப் பெண்களை ஆர்ப்பாட்டக் களத்திற்குக் கொண்டு வந்தது நமது இந்தப் ஆரம்பப் பேரணி தான்.

அல்லாஹ்வின் அருளால் அன்று தடா எதிர்ப்புப் பேரணியில் அடியெடுத்து வைத்த தாய்மார்கள் குடந்தை இட ஒதுக்கீட்டுப் பேரணி, சிறை நிரப்பும் போராட்டம் வரை பங்கெடுத்து, தமிழகத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முஸ்லிம் இயக்கங்களில் தாய்மார்களை அதிகமாகக் கொண்டிருக்கும் அமைப்பு தவ்ஹீது ஜமாஅத் தான் என்ற தனிப் பெயரைப் பதிவு செய்வதற்கு அவர்கள் காரணமாக அமைந்திருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!

இப்படித் தாய்மார்களையும் தரையில் இறங்க வைத்து அன்று தடாவை வலுவாக எதிர்த்தோம். இப்படித் தான் இந்த இயக்கம் சமுதாயப் பிரச்சனைகளின் பக்கம் அடியடியாக, படிப்படியாகத் தள்ளப்பட்டது.

இன்னும் மிகத் தெளிவான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், அல்லாஹ் இந்த ஜமாஅத்தை அப்படியே அள்ளிக் கொண்டு தள்ளினான். அதனால் தான் இந்த இயக்கம் வளர்ச்சியின் உச்சக்கட்டத்தை அடைகின்ற வரை அதை நோக்கிக் காட்டாற்று வெள்ளமாய் வரும் ஆபத்துக்களை விட்டும், அபாயங்களை விட்டும் அணை போட்டுக் காத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கே புகழனைத்தும்!

சமுதாயப் பணியைக் கையில் எடுத்திருப்பதன் மூலம் புகழின் உச்சிக்குப் போகலாம்; பத்திரிகையில் படத்துடன் செய்தியில் வரலாம்; தொலைக்காட்சியில் தோன்றலாம் என்ற குறுகிய, கருகிய நோக்கத்துடன்    இதில் களமிறங்கவில்லை; கால் வைக்கவில்லை. வல்ல ரஹ்மான் தான் இந்தப் பணியை நோக்கி தவ்ஹீது ஜமாஅத்தைத் தள்ளினான் என்பதற்காகவே இந்த விபரத்தை இங்கு பதிவு செய்கிறோம்.

அடுத்தக்கட்ட அரசியல் போர்

அமைதியான குளத்தில் ஒரு கல்லைத் தூக்கிப் போட ஆரம்பித்ததும் அது பல அலைகளை எழுப்பி விடும். அணிவகுக்கும் இந்த அதிர்வலைகள் அடுக்கடுக்காகக் கிளம்பி கரையில் வந்து உடைந்து சிதறும். அது போலவே தடாவை எதிர்த்து தவ்ஹீது ஜமாஅத் கிளப்பிய இந்த அதிர்வலையைத் தொடர்ந்து, ஆங்காங்கே எதிர்ப்பலைகள் பிரதிபலிக்க ஆரம்பித்தன. அது வரை அடங்கிக் கிடந்த இயக்கங்கள், ஏற்கனவே தடாவை எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த இயக்கங்களுக்கு தவ்ஹீது ஜமாஅத்தின் இந்த எதிர்ப்பு வலு சேர்த்தது. கடைசியில் “தடா’ தனது சாவை வெகு விரைவில் சந்தித்தது. அல்ஹம்துலில்லாஹ்!

இப்படி தடாவை எதிர்த்து ஒரு போர் நடந்து கொண்டிருக்கும் போதே மீண்டும் ஒரு போர் முழக்கம் செய்ய வேண்டிய புது சோதனை உருவெடுத்தது.

பொது சிவில் சட்டம் என்ற புது சதித் திட்டம்

பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்ட பின், உடைந்து கிடந்த சமுதாயத்தை மேலும் உடைப்பதற்கு ஒரு புதுப் பிரச்சனை பூதாகரமாகக் கிளம்பியது; புயலாகப் புறப்பட்டது. அது தான் பொது சிவில் சட்டம்.

சமுதாயம் மரண மவுனத்தில் கிடந்த சந்தர்ப்பத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும்படி சுப்ரீம் கோர்ட், மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.

இப்படி ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் வெளியிட்ட மாத்திரத்திலேயே அதைச் சமுதாயம் மிருக பலம் கொண்டு எதிர்த்தாக வேண்டும். அவ்வாறு எதிர்க்க வேண்டுமென்றால் சமுதாயம் அதன் தீமையை நன்றாக விளங்கியிருக்க வேண்டும்.

பொது சிவில் சட்டத்தின் பூதாகரமான பாதகங்களை சமுதாயத்திற்குப் புரிய வைக்கும் பணியை யாரும் செய்யவில்லை. இந்த சமயத்தில் தமிழகத்தில் இந்தப் பணியை தவ்ஹீது ஜமாஅத் தான் செய்தாக வேண்டிய நிலை.

அரசியல் பண்டிதர்கள், அரசியல் ஞானம் பெற்றவர்கள், அரசியல் சட்ட மேதைகள் என்று யாரும் அன்று தவ்ஹீது ஜமாஅத்தில் இல்லை. அதிலும் களமிறங்கினோம்.. அதன் ஆக்கம் தான் பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு என்ற கட்டுரை! அல்ஜன்னத்தில் அன்று வெளியான இந்த ஆக்கத்தை, ஏகத்துவத்தில் உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

ஏகத்துவ அழைப்பாளர்கள், பொது சிவில் சட்டத்தின் பாதகங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும், சமுதாயப் பிரச்சனையில் நமது பங்களிப்பு எத்தகையது என்பதை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டும் வகையிலும் அந்தக் கட்டுரை இந்த இதழிலேயே தனிக் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

சட்டம் படித்த வழக்கறிஞர்களும் விளக்குவதற்குத் தாளம் போடும் இந்தப் பொது சிவில் சட்டத்தை, பாமரனுக்கும் விளங்கும் வகையில் மிக எளிய பரிமாணத்தில் அளித்திருந்தோம்.

இது எழுத்தளவில், ஏட்டளவில் நின்று விடாமல் பொதுக் கூட்டங்களிலும் உரை நிகழ்த்தப்பட்டது. பொது சிவில் சட்டத்தைப் பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் வியக்கின்ற அளவில் அவரது உரை அமைந்திருந்தது. இந்த உரை ஒளி, ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்பட்டு உலகெங்கும் வாழும் தமிழ் முஸ்லிம்களைச் சென்றடைந்தது.

இந்தப் பணியை அன்று எந்த இயக்கமும் செய்யவில்லை. தமிழக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. தவ்ஹீது ஜமாஅத் தான் இதை மக்களிடம் கொண்டு சேர்த்தது.

விழிப்புணர்வை ஊட்டிய தவ்ஹீது ஜமாஅத்

மத்திய, மாநில புலனாய்வுத் துறையினருக்கு முஸ்லிம்களின் கொந்தளிப்பும் கொதிப்பும் புரிந்தது.

பொது சிவில் சட்டம் என்பது முஸ்லிம்களின் பிணத்தின் மீது தான் அமலாகும் என்ற பேச்சு மத்திய அரசில் காதில் விழுந்தது. அதனால் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுக்கு அது செவிசாய்க்கவில்லை.

இப்படிப் பொது சிவில் சட்டத்தைப் பற்றிய ஒரு பொது விழிப்புணர்வை அன்று மக்களிடம் ஊட்டியதும் உணர்த்தியதும் தவ்ஹீது ஜமாஅத் தான். பொது சிவில் சட்டத்திற்கு எதிரான இந்தப் போர் முழக்கம், முஸ்லிம்களை தவ்ஹீதின் பக்கம் ஈர்த்தது. தவ்ஹீது ஜமாஅத்தின், அதாவது அன்றைய ஜாக்கின் வளர்ச்சிக்கு மற்றொரு படிக்கல்லாக அமைந்தது.

இது போன்ற சூழல்கள் தான் நம்மை சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுப்பதற்குத் தள்ளியது என்பதற்கு இது மற்றோர் எடுத்துக்காட்டு!

ஜெயலலிதா ஆட்சியின் போது, ஒரு கால கட்டத்தில் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகளின் இஸ்லாமிய விரோதப் போக்கு ஓர் எல்லையைக் கடந்து சென்றது.

காமத்தில் மிஞ்சியது கன்னி மேரியா? கதீஜாவா? மணியம்மையா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு அந்தத் தீய சக்திகள் விஷம் கக்க ஆரம்பித்தன. அப்போதும் சமுதாயம் மயான அமைதியில் தான் இருந்தது. அதற்கும் ஆக்கப்பூர்வமான எதிர்ப்புகளைத் தெரிவிக்க வேண்டியவர்கள் தவ்ஹீதுவாதிகள் தான் என்ற நிலை ஏற்பட்டது.

திரையிலிடாதே! தீயிலிடு!

இக்கட்டத்தில் தான் பம்பாய் திரைப்படம் முஸ்லிம்களை பயங்கர வாதிகளாகச் சித்தரித்து வெளியானது. இதற்கு எதிராகவும் தவ்ஹீது ஜமாஅத் தான் களத்தில் குதித்தது. அந்தப் படத்தில் தெரிவிக்கப்பட்ட விஷக் கருத்துக்களுக்கு வரிக்கு வரி பதிலளித்து அல்ஜன்னத்தில் தலையங்கம் தீட்டினோம். இந்த விமர்சனத்தைத் தாங்கிய அந்த இதழ் சமுதாய மக்களிடம் ஒரு கலக்கு கலக்கியது. மாதப் பத்திரிகைகளின் தர வரிசையில் ஒரு தூக்கு தூக்கியது.

படம் வெளியான மாத்திரத்திலேயே மேலப்பாளையத்தில், “திரையிலிடாதே! தீயிலிடு!” என்ற தலைப்பில் சுவரொட்டிகளை ஒட்டினோம்.

மேடைப் பேச்சுக்களில், பம்பாய் திரைப்படம் தாங்கியிருக்கும் விஷக் கருத்துக்களை அப்பட்டமாக எடுத்துக் கூறி, அதன் இயக்குனர் மணிரத்னம் என்ற பார்ப்பனர் ஒரு முஸ்லிம் விரோதி என்பதை அம்பலப்படுத்திய.  பேச்சும் சமுதாய நலனில் ஆர்வம் கொண்ட மக்களைக் கவர்ந்தது. அவர்களை சத்தியத்தின் பால் ஈர்த்தது.

இப்படிப்பட்ட அக்னிப் பிரவேசத்தின் போது, மதுரையில் இந்து முன்னணித் தலைவராக இருந்த ராஜகோபாலன் என்பவர் கொலை செய்யப்படுகின்றார். அதில் ஜாக் இயக்கத்தைத் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியானது. அதற்கு மறுப்பும் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாகத் தான் எஸ்.எம். பாக்கர் அவர்கள் தடாவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் அமைப்பு ரீதியாக ஜாக்கில் இல்லாவிட்டாலும் சமுதாயப் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுத்து வந்ததால் சேர்ந்து சமுதாயக் களப்பணியாற்றினார்.

அவர் தடாவில் கைது செய்யப்பட்டது தவ்ஹீதுவாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியானது. அப்போது தான் ஓர் ஆழமான சிந்தனை தோன்றுகிறது.  இந்தக் கைதுப் படலம் தொடரும். எனவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை முளையிலேயே கிள்ளி விட வேண்டும். அதற்கு வழி என்ன?

அப்போது வலிமையாக இருந்த ஜமாஅத் அமைப்பு ஜாக் தான். ஆனால் ஜாக்கின் தலைவர் கமாலுத்தீன் மதனி, இன்னும் சில செல்வந்தர்கள் இது போன்ற விஷப் பரீட்சைக்கு வர மாட்டார்கள்.

உளவுத் துறையின் ஆந்தைப் பார்வைக்கு அல்ஜன்னத் ஆளாகி இருக்கின்றது என்று தெரிந்த மாத்திரத்திலேயே பேர்ணாம்பட்டைச் சார்ந்த ஒரு செல்வந்தர் தலைதெறிக்க ஓட்டமெடுத்தார். அதில் ஒரு போதும் ஓட்டமெடுக்காத, ஆட்டம் காணாத செல்வந்தர் அன்வர் பாய் மட்டுமே!

இவரைத் தவிர்த்து கமாலுத்தீன் மதனி உட்பட செல்வந்தர்கள் யாரும் இதற்கு இசைய மாட்டார்கள். இதற்கு என்ன செய்வது?

இதற்கான ஆலோசனை அல்ஜன்னத் அலுவலகத்தில் தான் நடைபெற்றது. விடை கிடைத்தது. விடிய விடியப் பேசி ஒரு விடை கிடைத்தது. கூட இருந்தவர் குணங்குடி ஹனீபா அவர்கள். அவர் தான் நமக்கு அரசியல் குரு என்ற உண்மையை இங்கு ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அவர் ஆலோசனை மட்டும் தரவில்லை. ஒரு அமைப்பையும் சேர்த்தே தந்தார். அது தான் தமுமுக.

இப்போது தமுமுகவின் தலைவர்களாக வலம் வரக் கூடியவர்களுக்கு இந்த அமைப்பை உருவாக்குவதில் பெரிய பங்களிப்பு ஏதும் இல்லை. தமுமுக முதலில் வெளியிட்ட பைலாவின் முதல் பக்கத்தைக் கீழே தந்துள்ளோம்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

அமைப்பு நிர்ணயச் சட்டம்

விதி 1 – தோற்றம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 1995ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி கீழ்க்கண்ட முஸ்லிம்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. இனி வரும் இடங்களிலெல்லாம் கழகம் எனும் சொல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தையே குறிக்கும்.

இந்த பைலாவைப் படிப்பவர்களுக்கு இப்பேதைய தமுமுக தலைவர், பொதுச் செயலாளரின் அன்றைய நிலை தெரியும். இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், இவர்கள் தாங்கள் தான் தமுமுகவை உருவாக்கியதாகவும், மற்றவர்களுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என்றும் பொய்யைப் பரப்பி வருகின்றனர்.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.

பாக்கரைக் கைது செய்த காவல்துறை, மற்றவர்களையும் வேறு ஏதேனும் வழக்கில் தூக்கிப் போட்டு விடக் கூடாது. அதற்கு உடனே ஒரு தற்காப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாக்கரின் கைதைக் கண்டித்தாக வேண்டும். அதற்கு மக்கள் கூட்டம் திரள வேண்டும். 50 பேர் திரண்டால் காவல்துறையிடம் அதற்கு ஒரு பார்வை! 100 பேர் திரண்டால் அதற்கு ஒரு பார்வை! 200 பேர் என்றால் காவல்துறையின் பார்வையில் ஒரு மாற்றமிருக்கும். 500 பேர் என்றால் அதற்கு ஒரு மரியாதை! மக்கள் நினைத்ததைச் சாதிக்கலாம். நாம் நான்கு பேர் கூடிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் என்ன பேசினாலும் அது காவல்துறையிடம் எடுபடாது. நமது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை தான் பேசும். அந்தப் பேச்சு தான் எடுபடும் என்ற அரசியல் அடிச்சுவட்டைப் போதித்தவர் குணங்குடி ஹனீபா அவர்கள்.

அவரது ஆலோசனைப்படி அந்தப் பேரணி சென்னை பர்மா பஜார் அருகே திரண்டது. அங்கிருந்து கிளம்பி தலைமைச் செயலகம் நோக்கிப் புறப்பட்டது. இடையில் பாரிமுனை சிக்னலில் நிறுத்தப்பட்டது. தமுமுகவின் முதல் பொதுச் செயலாளர் பொறியாளர் அப்துஸ்ஸமது, தலைவர் குணங்குடி ஹனீபா மற்றும் சிலர் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்து விட்டு வந்தனர்.

இது தான் தமுமுகவின் முதல் பேரணி! இப்பேரணியில் மக்கள், வெள்ளம் போல் குவிந்தனர். தவ்ஹீது மக்கள் தான் இதில் வந்து குவிந்தனர். அவர்களைப் பார்த்து மற்ற பொதுமக்களும் வந்து கலந்து கொண்டனர்.

குணங்குடி ஹனீபா அவர்கள் கூறியது போன்று இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை, காவல்துறையின் பார்வையில் கண்ணியத்தை மட்டுமல்ல! ஒரு கலக்கத்தையும் ஏற்படுத்தியது.

இங்கு உறுதியாக ஒரு கருத்தைப் பதிவு செய்து கொள்கிறோம். அன்று தமிழகத்தில் வலிமை பெற்ற அமைப்பு, இன்னும் சொல்லப்போனால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகின்ற மக்கள் சக்தி கொண்ட அமைப்பாக ஜாக் என்ற தவ்ஹீது அமைப்பு தான் இருந்தது. அந்தத் தவ்ஹீது மக்களை முதலீடாக, மூலதனமாகக் கொண்டு தான் தமுமுக என்ற அமைப்பு துவங்கியது என்பதை அழுத்தமாக மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறோம்.

காவல்துறையின் அடுத்தக்கட்ட சுழி, அக்னிப் பிரவேசம் மேற்கொண்டிருக்கும் நம்மை நோக்கித் தானே என்ற கவலை தான் அந்தத் தவ்ஹீது மக்களை இயக்கியது. அது தான் அவர்களை அங்கு வந்து குவித்தது.

பாக்கருக்காக இப்படியொரு ஆர்ப்பாட்டத்தைச் செய்து விட்டு அமர்ந்திருப்போம். அதற்குள்ளாக ஒரு சில மாத இடைவெளியில் அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆரம்பித்தது. காரைக்காலில் ஜாக்கின் கட்டுப்பாட்டில் இருந்த ஜாமிஆ புஷ்ரா பெண்கள் மதரஸாவில் பணியாற்றிக் கொண்டிருந்த ஜே.எஸ். ரிபாயி கைது செய்யப்பட்டார்.

முதல் மற்றும் கடைசி உண்ணாவிரதப் போர்

மீண்டும் மக்கள் சக்தியைத் திரட்டி ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜாக் தலைமையிடம் இது தொடர்பாக  கலந்து பேசினோம்.

ரிபாயீயைக் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும், காவல்துறை அதிகாரி இந்திரஜித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உண்ணாவிரதம் நடத்துவதற்கு கமாலுத்தீன் மதனியிடம் அனுமதி   பலத்த யோசனை, தயக்கம், தடுமாற்றத்திற்குப் பின் அனுமதி கிடைக்கின்றது.

உண்ணாவிரதம் சென்னை குறளகத்திற்கு எதிரில் நடைபெறுகிறது. மக்கள் அந்தப் போராட்டத்திற்கும் வந்து கலந்து கொண்டனர். காவல்துறையின் கண்களை மிரளச் செய்யும் அளவுக்கு மக்கள் கூட்டம். ஆம்! தவ்ஹீதுவாதிகளின் கூட்டம் வந்து குவிந்தது.

இந்தப் போராட்டத்திற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை புதுப்பேட்டை தவ்ஹீது சகோதரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

குறளகத்திற்கு எதிரில் குரல் கொடுத்தோம்; கைதுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இவர்களில் யார் மீது கை வைத்தாலும் மக்கள் சக்தி திர ளும் என்பதை ஒரு முறை அல்ல! இரண்டாவது முறையாக, வலிமையாக எடுத்துக் காட்டினோம்.

(உண்ணாவிரதம் நடத்துவது மார்க்க அடிப்படையில் கூடுமா? என்பது விவாதப் பொருளாகி, இறுதியில் கூடாது என்று முடிவானது. இதனால் அன்றிலிருந்து உண்ணாவிரதத்தைக் கை கழுவி விட்டோம்.)

ஜாக் – தமுமுக உரசலும் விரிசலும்

ஜாக் அமைப்பு தடை செய்யப்படலாம் என்ற கவலை அதன் தலைமைக்கு இருந்தது. இந்தத் தயக்கத்தை நாம் நன்கு புரிந்து வைத்திருந்தோம் அதனால் தான், நம்மால்  ஜாக்கிற்கு எந்தவொரு ஆபத்தும் வந்து விடக் கூடாது என்பதற்காக ஜாக்கின் தலைமை நிர்வாகக் குழு பொறுப்பிலிருந்து விலகினோம்.. (இதுவே நமக்கு  பின்னர் பாதகமானது. நாம் வளர்த்த அந்த ஜாக் இயக்கத்தில் உறுப்பினர் உரிமை கூட இல்லாமல் பறிக்கப்பட்டது.)

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜாக்கின் அரசியல், சமுதாயப் பிரிவாக தமுமுகவை செயல்படுத்திக் கொள்ளலாம்; இதை வெளிப்படையாகக் கூட கமாலுத்தீன் மதனி செய்ய வேண்டியதில்லை. மறைமுகமாக அனுமதி தந்தால் போதும். அதற்காக பொறியாளர் அப்துஸ்ஸமது, குணங்குடி ஹனீபா ஆகியோர் கமாலுத்தீன் மதனியிடம் பைஅத் செய்வதற்குக் கூடத் தயாராக இருந்தார்கள். (அப்போது நாம் “அமீர்’ சித்தாந்தத்தை ஆதரித்த காலம் அது!)

பலர் மாநில அமீரிடம் ஒரு மன்றாட்டத்தையே நடத்தினார்கள். பலப்பல அமர்வுகள்! பலப்பல கலந்தாலோசனைகள்! பல்வேறு கட்ட முயற்சிகள்! இத்தனையும் எதற்கு? இவ்வளவு நாள் வியர்வை அல்ல! இரத்தத் துளிகளால் வளர்ந்த ஓர் இயக்கத்தை விட்டுப் பிரிந்து விடக் கூடாது என்பதற்காகவே!

ஜாக் என்ற கட்டமைப்பு வருவதற்கு முன்பே தவ்ஹீது வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்த சகோதரர் கலீல் ரசூல் அவர்களும், நானும் தனிப்பட்ட முறையில் கமாலுத்தீன் மதனியை நாகர்கோவிலில் போய் சந்தித்தோம். நீண்ட நேரம் உரையாடினோம்; கெஞ்சினோம். கல்லும் கரையும் என்பார்கள். ஆனால் கல்மனம் கொண்ட கமாலுத்தீன் மதனி கரையவில்லை.

திருச்சியில் ஒரு சந்திப்பு

அதன் பின்னர் திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழகம் முழுவதிலும் உள்ள தாயீக்கள் கலந்து கொண்டனர். அதில் தமுமுகவின் அப்போதைய செயல்பாடுகள் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டவை தான் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகளை குர்ஆன், ஹதீஸ் ஒளியிலிருந்து எடுத்து வைத்தோம். நீண்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு கமாலுத்தீன் மதனி, நான் பரிசீலித்து விட்டுச் சொல்கிறேன் என்று இறுதியில் சொல்லி விட்டுப் போனார். பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் பேசுகின்ற மேடை தோறும் தமுமுவை விமர்சிக்கலானார்.

திருச்சியில் மீண்டும் ஒரு சந்திப்பு

கமாலுத்தீன் மதனி, தமுமுகவை அடாது விமர்சித்தாலும், விடாது நமது தரப்பில் சமரச முயற்சிகளை மேற்கொண்டோம். ஜாக் உருவாக்கத்தில் ஆரம்ப காலகட்டத்தில் பங்கெடுத்து, உழைப்பு தியாகங்கள் செய்த சகோதரர்களைத் திரட்டி மீண்டும் அதே அரிஸ்டோ ஹோட்டலில் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மக்களைத் திரட்டும் பணியில் நானும், ஸைபுல்லாஹ் ஹாஜா, அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி ஆகியோரும் ஈடுபட்டிருந்தோம். ஊர் ஊராகச் சென்று ஆட்களை அழைத்தோம். அதன் பின்னர் 31.08.1997 அன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள இயலாமல் போனது. காரணம், அப்போது மேலப்பாளையத்தில் நடைபெற்ற சில அசம்பாவித சம்பவங்களில், சம்பந்தமில்லாமல் நானும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தேன்.

இந்தக் கூட்டத்திற்குப் பின் ஓர் இணக்கம் ஏற்பட்டது. ஜாக்கின் வேனை எடுத்துக் கொண்டு திருச்சியில் நடைபெற்ற தமுமுக கூட்டத்தில் கலந்து கொண்டோம். அப்போது ஏற்பட்ட அந்த இணக்கம் அற்ப ஆயுளிலேயே முடிந்து விட்டது. அந்த வருடம் ரமளான் பிறை விஷயத்தில் எஸ்.கே. தான்தோன்றித்தனமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் ஜாக் – தமுமுக உறவில் உரசல் அல்ல! விரிசல் ஏற்பட்டது.

தவ்ஹீது பிரச்சாரக் குழு உதயம்

துளைத்தெடுத்த துரோகங்கள், வரம்பு மீறிய வாக்குமீறல்கள், அடுக்கடுக்கான அவமானங்கள் இவ்வளவுக்குப் பிறகும் இவருடன் இருக்க இயலாது என்பதை விட இவர் நம்முடன் இருக்க விரும்பவில்லை, நம்மை வெளியேற்ற விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்டோம்.

வெளிநாட்டுத் தொடர்புகள், தொடர் வரவுகள் இவையெல்லாம் அவருக்குத் தன்னிறைவையும், தலைக்கனத்தையும் ஏற்படுத்தியிருந்தன. அதனால் ஜாக்கிலிருந்து வெளியேறி தவ்ஹீது பிரச்சாரக் குழு என்ற இயக்கத்தைக் கண்டோம். தமுமுக என்ற அமைப்பு நம்மிடம் இருந்தாலும் தவ்ஹீதுக்கு என்று தனி அமைப்பு இருக்கட்டும் என்றெண்ணி இந்த அமைப்பைத் துவக்கினோம். அதற்கு ஹாமித் பக்ரி தலைவராக இருந்தார். அதன் பிறகு நான் தலைவராக நியமிக்கப்பட்டேன்.

இந்த அமைப்பின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, செய்யது முஹம்மது மதனீ மற்றும் ஆர்.டி.ஓ.வில் பணி புரிந்த பஷீர் ஆகியோரின் முயற்சியில், நாகர்கோவில் ஹனீபா நகர் பள்ளிவாசலில் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை சகோதரர் எம்.எஸ். சுலைமான் முன்னின்று ஏற்பாடு செய்தார்.

இந்த சமரசக் கூட்டத்திற்கு வர மாட்டேன் என்று எஸ்.கே. முரண்டு பிடித்தார். கடைசியில் ஒருவாறாக அவரைப் பள்ளியில் கொண்டு வந்து சேர்த்தனர்.

அதே வாதப் பிரதிவாதங்கள்! இறுதியில் ஒரு சில கோரிக்கைகளை அல்லது நிபந்தனைகளை முன் வைத்தோம்.

  1. ஜாக்கில் உள்ள கொள்கை வாதிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும்.

(நாங்கள் ஜாக் என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை என்ற நிலை இருந்தது. அனைவருக்கும் இந்தக் கதி! எனவே தான் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.)

  1. நிர்வாகச் சீரமைப்பு.

இன்னும் இது போன்ற சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.

இதற்குப் பதிலளித்த எஸ்.கே., “நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்; ஆனால் அவர்கள் தவ்ஹீது பிரச்சாரக் குழுவை உடனே கலைக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார். அதற்கு  “நாங்கள் தவ்ஹீது பிரச்சாரக் குழுவைக் கலைக்க மாட்டோம். ஆனால் மூன்று மாதங்களுக்கு இந்தப் பெயரில் செயல்பட மாட்டோம். அதற்குள் எங்கள் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். காரணம், அடிக்கடி எஸ்.கே. இப்படி வாக்குறுதி கொடுத்து விட்டு மாறு செய்வார். வாக்குறுதியை மீறுவார். எனவே தவ்ஹீது பிரச்சாரக் குழுவைக் கலைக்க மாட்டோம். இந்த மூன்று மாதங்களுக்குள் நாங்கள் வைத்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று  கேட்டுக் கொண்டோம் அதற்கு நாங்கள் பொறுப்பு என்று சமரசக் குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஆறப்போட்டு நாறடித்தல்

ஆறப்போட்டு நாறடிக்கும் கலையில் வல்லவர் நரசிம்மராவ்! ஆனால் அவரை மிஞ்சிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது எஸ்.கே. தான். காலை வாருவதில் கை தேர்ந்த கமாலுத்தீன் மதனி வழக்கம் போல் இந்த சமரச முயற்சியிலும் காலை வாரினார். இம்முயற்சியில் இறங்கியவர்களின் முகத்தில் கரியைப் பூசினார்.

இனிமேல் நாம் நமது வழியில் தவ்ஹீதைச் சொல்வோம் என்று முடிவு செய்து, பிரச்சாரக் குழு என்ற பெயரிலேயே தவ்ஹீதுப் பணி தொடர்ந்தது. தவ்ஹீது இயக்கத்தில் இருந்து கொண்டே சத்தியப் பணியையும் சமுதாயப் பணியையும் சேர்த்துச் செய்ய வேண்டும் என்ற எங்கள் முயற்சி, கமாலுத்தீனின் வறட்டுப் பிடிவாதத்தாலும், வாக்குமீறல்களாலும் தோற்றுப் போயிற்று! நாங்கள் வளர்த்த ஜாக்கை விட்டு விட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதை எடுத்துக் காட்டவே இந்தச் சுருக்க வரலாறு.

இப்போது சமுதாயப் பணிக்காகத் தொடங்கிய தமுமுகவின் வரலாறைப் பார்ப்போம்.

அவசரப் பிரசவம்

தமுமுக ஓர் அவரசப் பிரசவம் எனினும் அது அரைகுறைப் பிரசவமல்ல! முழுமையாகப் பிறந்த குழந்தை! ஏற்கனவே இருந்த சமுதாய இயக்கங்கள் அழிந்ததற்கான காரணங்களைக் கண்டறிந்து, அது போன்ற காரணங்கள், கரையான்கள் இதை அண்டக் கூடாது, அணுகக் கூடாது என்பதில் முழுக் கவனம் செலுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கொள்கையாகக் கொள்ளப்பட்டது.

இதனால் தமுமுகவின் ஒவ்வொரு அறிமுக மற்றும் அடுத்தக்கட்டக் கூட்டங்களிலும், “நாங்கள் உங்களிடம் ஒரு போதும் எங்களுக்காக ஓட்டுக் கேட்டு வர மாட்டோம்” என்று வாக்குறுதி அளித்தார். “எங்களுக்கு வாக்குக் கேட்டால் எங்களை செருப்பால் அடியுங்கள்” என்று கூடப் பேசியதுண்டு. இப்படி ஓர் உறுதியான குரலில், உச்சஸ்தாயில் பேசியது மக்களுடைய உள்ளங்களில் ஊடுறுவியது.

தவ்ஹீது ஒரு தடைக்கல்லா?

வெகு வேகமாக இந்த இயக்கம் மக்களிடம் வளர்ச்சி கண்டது. இத்தனைக்கும் நாம் ஒரு பக்கா தவ்ஹீதுவாதியாக இருந்தும், வளர்ச்சிக்கு அது ஒரு போதும் தடைக்கல்லாக இருக்கவில்லை. தமுமுக மேடையில் சமுதாயப் பிரச்சனைகளை மட்டும் பேசுவோம்; அங்கு தவ்ஹீதைப் பேச மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கினோம். அதன்படி அந்த இயக்கம் பெருவளர்ச்சி கண்டது.

தனி இட ஒதுக்கீடும்தவ்ஹீது ஜமாஅத்தும்

தமுமுக என்ற இந்த சமுதாய இயக்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், ஆணி வேராகவும் அமைந்தது இட ஒதுக்கீடு கொள்கை தான்.

பாபரி மஸ்ஜித் முதல் அனைத்துப் பிரச்சனைகளுக்கும், முஸ்லிம்கள் கிள்ளுக்கீரைகளாக நடத்தப் படுவதற்கும் காரணம் சுதந்திரத்திற்குப் பிறகு, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டது தான் என்பதைக் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு கோரிக்கையைக் கையில் எடுத்தது. இட ஒதுக்கீடு கிடைத்து விட்டால் தமுமுகவைக் கலைத்து விடுவோம் என்று கூட மக்களிடம் அறிவிக்கப்பட்டது.

இந்த இட ஒதுக்கீட்டைக் கையில் எடுத்ததும், ஏற்கனவே சரிந்து விழுந்த சமுதாயம், “இது சாத்தியமா?” என்ற கேள்வியை எழுப்பினார்கள். சாத்தியமே என்று கூறி அதை மூலை முடுக்குகளுக்கு அதன் பேச்சாளர்கள் எடுத்துச் சென்றார்கள்.

பேச்சாளர்கள் என்றால் யார்? தவ்ஹீது தாயீக்கள் தான் தமுமுக பேச்சாளர்கள்!

இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மக்களிடம் எடுத்துச் சென்றவர்கள் யார்? அவ்வியக்கத்திற்கென்று பேச்சாளர்கள் கிடையாது. நாவலர், பாவலர் கிடையாது. வாணியம்பாடி வாத்தியார் மட்டும் பாடம் நடத்துவார். அதுவும் இந்தியாவைத் தாண்டி, செசன்யா, கஜகஸ்தான் என்று தான்.

இந்த இயக்கம் மக்களிடம் போய்ச் சேருவதற்கு தவ்ஹீது தாயீக்கள் தான் முதலீடானார்கள். அவர்கள் தான் இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையை எட்டுத் திக்குகளுக்கும் எடுத்துச் சென்றார்கள்.

விழிப்புணர்வு ஏற்படுத்திய விஜய் டிவி பேட்டி

இட ஒதுக்கீடு என்றால் என்ன? அதன் பயன் என்ன? என்ற விளக்கங்கள் கூட சமுதாயத்திற்குத் தெரியாமல் இருந்தது. காயிதே மில்லத்திற்கு மணிமண்டபம் கட்டுவதையும், மீலாது நபிக்கு விடுமுறை அறிவிப்பதையும் முஸ்லிம் சமுதாயத்திற்குச் செய்த மிகப் பெரிய சாதனைகளாகக் கருதிய காலம் அது!

அப்படிப்பட்ட காலத்தில் தான் விஜய் டி.வி.யில்  பேட்டி ஒளிபரப்பானது.

“மணி மண்டபங்கள் கட்டுவதால், காயிதே மில்லத் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைப்பதால் முஸ்லிம்களுக்கு என்ன பயன்? முஸ்லிம்கள் வாழ்வுரிமை இழந்து நிற்கிறார்கள். வயிற்றுக்கு உணவில்லாமல் நிற்கிறார்கள். மணிமண்டபம் கட்டினால் முஸ்லிம்களின் பசி போய் விடுமா? எங்களுக்குத் தேவை இட ஒதுக்கீடு தான்” என்று ஆணியடித்தாற்போல் கூறிய போது, அவரைப் பேட்டி கண்ட ரபி பெர்ணாட் ஒரு கணம் அதிர்ந்து போனார்.

முஸ்லிம்களிடம் இப்படி ஒரு கோரிக்கை இருப்பதே அப்போது தான் உலகுக்குத் தெரிய வந்தது. அந்தப் பேட்டி ஒளிபரப்பானவுடன் சட்டசபையில் கருணாநிதி அதற்குப் பதிலளித்துப் பேசினார். நாங்கள் தான் முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்று வழக்கம் போல் பல்லவி பாடினார். அதன் பிறகு இந்தத் தீ தமிழகமெங்கும் பற்றிக் கொண்டது.

தவ்ஹீது பள்ளிவாசல்களின் ஜும்ஆ மேடைகளில் இட ஒதுக்கீடு பற்றிப் பேசப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இதற்குப் பிறகு எல்லா அரசியல் கட்சிகளும் இந்தக் கருத்தை எதிரொலிக்க ஆரம்பித்தன.

பாபரி மஸ்ஜித் மீட்புக் கோரிக்கை

இட ஒதுக்கீட்டிற்கான குரல் ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டிருந்த போது, இன்னொரு பக்கத்தில் பாபரி மஸ்ஜித் மீட்புக்கான போராட்டங்களை தமுமுக தொடர்ந்து நடத்தியது.

பாபரி மஸ்ஜித் இடிந்து விழுந்தது போலவே, அதை மீண்டும் எழுப்ப வேண்டும் என்ற எண்ணமும் இடிந்து விழுந்திருந்தது. அதை மறக்க முற்பட்டனர்.

அப்போது தான் தவ்ஹீது பேச்சாளர்கள் வெள்ளி மேடைகளிலும், இதர சொற்பொழிவு மேடைகளிலும், “யார் தனது பொருளைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுக் கொல்லப்படுகிறானோ அவன் ஷஹீத் ஆவான்’ என்ற ஹதீஸையெல்லாம் ஆதாரமாகக் காட்டி, பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காகப் போராட வேண்டும்; அதற்காகப் போர்க்குரல் கொடுக்க வேண்டும் என்று தூண்டினர். மஸ்ஜிதை மீட்பதற்கு முன்பாக மக்களை மறதியிலிருந்து மீட்டனர்.

அதன் விளைவாய் மக்கள் கடல் அலை போல் டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் போராட்டங்களில் திரண்டனர். இந்தப் போராட்டங்கள் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

முதல்வர் வீட்டு முற்றுகை

ஒரு டிசம்பர் 6 அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி வீட்டை முற்றுகையிட வேண்டும் என்று தமுமுக அறிவித்தது. அதற்கும் தவ்ஹீதுவாதிகள் தயாரானார்கள். அந்த அளவுக்கு தர்பியாக்கள் நடத்தப்பட்டன.

அந்தத் தர்பியாக்களில், மரணத்திற்கு அஞ்சாத தியாகிகள் பற்றிப் போதிக்கப்பட்டன. குறிப்பாக மூஸா நபியவர்களிடத்தில் போட்டிக்கு வந்த மந்திரவாதிகள் ஈமான் கொண்டு, ஃபிர்அவ்னால் தண்டிக்கப்பட்ட வரலாறு பற்றிப் போதிக்கப்பட்டது.

அதனால் தான் முறுக்கேறிய நரம்புகளுடன் முதல்வர் வீட்டு முற்றுகைக்கு தவ்ஹீதுவாதிகள் தயாராயினர். காக்கிச் சட்டை பயம் கழற்றி எறியப்பட்டது. இதற்கான அடிப்படையே தவ்ஹீது தான். தவ்ஹீது இல்லையேல் இந்தத் தெம்பு, திராணி, துணிச்சல் அவர்களுக்கு ஒரு போதும் ஏற்பட்டிருக்காது.

முதல்வராயிருந்தும் தன் வீட்டை முற்றுகையிடுவதை விட்டும் கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. கடுமையான கைது நடவடிக்கைகள், தடுப்புச் சுவர்கள், துப்பாக்கிச் சூடு நடக்கும் என்ற மிரட்டல்கள் இவையனைத்தையும் மிஞ்சி குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கொள்கைவாதிகள் குவிந்தனர்; கைது செய்யப்பட்டனர்; விடுவிக்கப்பட்டனர். இப்படி பாபரி மஸ்ஜித் மீட்புப் போர் மக்களிடம் துவக்கி வைக்கப்பட்டது.

இதன் மாபெரும் பயன், பாபரி மஸ்ஜித் மீட்கப்பட்டதோ இல்லையோ ஆனால் சங் பரிவாரங்களின் பட்டியலில் இருந்த காசி, மதுரா போன்ற பள்ளிவாசல்கள் மீது அவர்கள் கை வைக்க அஞ்சினர்.

பாதிக்கப்படுவோருக்காக எழுச்சிப் போராட்டங்கள்

கடந்த காலத்தைப் போன்றல்லாமல் சமுதாயத்தில் யார் அநியாயமாகக் கைது செய்யப்பட்டாலும் வீதியில் இறங்கும் வீரத்தைத் தந்தது தவ்ஹீது கொள்கை! வீறு கொண்டு எழ வைத்தது.

முஸ்லிம்களின் சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளில் அநீதி, அக்கிரமம் இழைக்கப்பட்ட போது ஆர்த்தெழும் போர்க்குணத்தை ஊட்டியது தவ்ஹீதுக் கொள்கை தான். இந்தக் கொள்கை வாதிகளைக் கொண்ட தமுமுக என்ற இயக்கம் உருவெடுப்பதை கருணாநிதி விரும்புவரா? ஒரு போதும் விரும்ப மாட்டார். அதனால் அதைத் தடை செய்ய சதித் திட்டம் தீட்டினார்.

தடையைத் தாண்டிய தமுமுக

இக்கட்டத்தில் தான் வாழ்வுரிமை மாநாடு! இதன் பயனாய் தடையிலிருந்து தப்பியது. தமிழக வட்டத்தில் மட்டுமின்றி டெல்லியிலும் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை எதிரொலிக்கச் செய்தது.

இதன் பின்பு அவ்வப்போது தவ்ஹீது ஜமாஅத்திற்கும் தமுமுக நிர்வாகிகளுக்கும் அவ்வப்போது உரசல் ஏற்பட்டது. இந்தக் கட்டத்தில் தான் மதுரை தமுக்கம் மைதானத்தில் தவ்ஹீதுக்கான ஒரு மாநாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு உதயமாகின்றது.

நஞ்சைக் கலக்கிய தஞ்சை பேரணி

இதன் பின்பு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சையில் தமுமுக ஒரு பேரணியை நடத்தியது. இந்தத் தஞ்சை பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் அந்த இயக்கத்தின் நிர்வாகிகளின் உள்ளத்தில் நஞ்சைக் கலக்கியது. இந்தக் கூட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தவ்ஹீது வாதிகளை வெளியேற்ற வேண்டும் என்று தப்புக் கணக்குப் போட ஆரம்பித்தனர்.

அரசியல் கட்சிகளின் சகவாசங்கள் அவர்களின் உள்ளங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்தன. அரசியல் கட்சியினர் காணும் கனவுகளை இவர்களும் காணத் துவங்கினர்.

இதற்கு முந்தைய சமுதாய இயக்கங்கள் நீர்த்துப் போவதற்கும் நிர்மூலமானதற்கும் அடிப்படைக் காரணம் தேர்தலில் போட்டி என்ற நிலைபாடு தான். அதனால் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற நிலைபாட்டை தமுமுக அடிப்படைக் கொள்கையாகக் கொண்டது. அந்த நிலைபாட்டைக் கடைப்பிடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தோம்.

  1. தேர்தலில் பங்கெடுப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகள்.
  2. தமுமுகவின் தனித்தன்மையைத் தக்க வைப்பதிலும், பிற இயக்கங்களுடன் கலந்து விடாமல் அதைக் காக்க கொண்டிருந்த கரிசனம், காட்டிய கண்டிப்பு.
  3. தமுமுக தலைவர்களிடம் நாள்பட நாள்பட தலைதூக்கிய தவ்ஹீதுக் கொள்கையிலேயே சமரசம் செய்யும் உணர்வு, இன்னும் சொல்லப் போனால் தவ்ஹீது எதிர்ப்புணர்வு

ஆகியவை ஏற்கனவே உரசலில் இருந்ததை விரிசலாக்கியது. விளைவு! தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் உதயமானது.

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! தவ்ஹீதுவாதிகளுக்கு, குறிப்பாக தவ்ஹீது தாயீக்களுக்கு இது உண்மையில் ஒரு விடுதலை உணர்வை அளித்தது.

தவ்ஹீதுவாதிகளை மூலதனமாகக் கொண்டு வளர்க்கப்பட்ட ஒரு இயக்கத்தில் சமுதாய நலனுக்காக தவ்ஹீதை இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் அநியாயத்திலிருந்து விடுதலை! அதாவது கண்ணை விற்று ஓவியம் வாங்கும் அக்கிரமத்திலிருந்து ஒரு விடுதலை! இந்த அநியாயங்களுக்கு விடுதலை இயக்கமாக தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் உதயமானது. அனைத்து தவ்ஹீது ஜமாஅத் என்பது பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தாக உருவெடுத்தது.

இந்த இயக்கத்தில் கண் தான் பிரதானமானது. சித்திரம் இரண்டாவது என்றானது. தவ்ஹீது என்ற கண்ணுக்குத் தான் இங்கு முன்னுரிமை! முதலுரிமை! மற்றவை பின்னுக்கு!

எந்தச் சமுதாய நலனுக்கு தவ்ஹீதுக் கொள்கை பாதகமாக உள்ளது என்று நம்மை வெளியே தள்ளினார்களோ அந்தச் சமுதாயப் பணிகளுக்குத் தவ்ஹீது ஒரு தடைக்கல் அல்ல என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துவங்கிய இரண்டாண்டு காலத்தில் கும்பகோணத்தில் நிரூபித்தோம்.

குலுங்கியது கும்பகோணம்

“குடந்தை குலுங்கட்டும்” என்று சொன்னோம். தவ்ஹீதை இந்த இயக்கம் முன்வைத்த காரணத்தால், நாம் இரண்டாவதாகக் கொண்ட இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டான். குடந்தை குலுங்கட்டும் என்ற வார்த்தையை அவன் ஒப்புக் கொண்டான். இல்லையெனில் இவ்வளவு கூட்டத்தைக் கொண்டு வந்து குவித்திருப்பானா?

தவ்ஹீது என்ற பெயரை நமது இயக்கத்தின் பெயரிலேயே தாங்கிக் கொண்டு, சமுதாயப் பிரச்சனைகளுக்காக அழைத்தால் மக்கள் வருவார்களா? என்ற ஐயம் தவ்ஹீதுவாதிகளிடம் இருந்தது. ஆனால் அந்த ஐயத்தை உடைக்கும் விதமாக, மக்களைக் கொண்டு வந்து கொட்டுகிறேன் பாருங்கள் என்று அல்லாஹ், குடந்தையைக் குலுங்க வைத்தான்.

தேர்தல் நேரத்தில் எங்களுக்காக வாக்குக் கேட்டு உங்களிடம் வர மாட்டோம் என்று சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுபவர்கள் இவர்கள் தான் என்று நம்மை நம்பி மக்கள் பெருக்கெடுத்தார்கள். காவிரியைத் தாங்க முடியாத குடந்தை இந்த மக்கள் கடலைத் தாங்குமா? என்ற கேள்வி எழுமளவுக்கு கும்பகோணத்தில் மக்கள் குழுமினார்கள்.

எதற்கு? வாரியம் வாங்குவதற்கா? கோடிக்கணக்கில் பணத்தை வாரிச் சுருட்டவா? இல்லை. தமுமுக மறந்து விட்ட இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடந்த இந்தப் பேரணியில் கடலாய் பெருக்கெடுத்தனர்.

முதலில் ஒரு கட்சியில் கள்ளக் காதல் வைத்துக் கொண்டு குடந்தை பேரணியைக் கூட்டவில்லை.

கையிலே காசு! வாயிலே தோசை!

இன்றைய ஆளும் திமுக, அன்றைய ஆளும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளில் யார் இடஒதுக்கீட்டை அறிவிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் எங்கள் ஆதரவு என்று இரு கட்சிகளையும் சம தூரத்தில் வைத்திருந்தோம்.

அதிமுக முதலில் பதிலளித்தது. ஆந்திர மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீதிமன்றம் நிறுத்தி வைத்த கசப்பான அனுபவத்தை எல்லாம் கருத்தில் கொண்டு, இடஒதுக்கீடு கோரிக்கையைப் பரிசீலிப்பதற்கான ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் நீதிமன்றம் தலையிடாது. மேலும் இந்த ஆணையம் பரிந்துரைத்தால் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இட ஒதுக்கீடு அளித்தே தீர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். எனவே இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். கும்பகோணம் பேரணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக இது அமைந்தது.

அதன் அடிப்படையில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்காக உழைத்தோம். தேர்தலில் அதிமுக தோற்றாலும், திமுகவுக்குப் பெரும்பான்மை பலமில்லாத வெற்றி கிடைத்தது.

திமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட சென்னையை, தனது பிரச்சாரத்தின் மூலம் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தகர்த்தெறிந்தது. முஸ்லிம்களின் வாக்கு அதிகம் உள்ள பகுதிகளில் போட்டியிட்ட கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் கூட இழுபறி வெற்றியைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இப்படி ஒரு தொங்கல் வெற்றி கிடைப்பதற்கு தவ்ஹீது ஜமாஅத்தின் வலிமையான பிரச்சாரம் தான் காரணம் என்பதை திமுகவே உணர்ந்தது.

திமுக ஆட்சியும் இட ஒதுக்கீடும்

ஆட்சிக்கு வந்ததும் இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தோம். தானைத் தலைவர் கருணாநிதியும் ஆணையத்தைத் தான் அறிவித்தார். அன்றைய முதல்வர் ஜெயலலிதா இந்தப் பணியைச் செய்த போது, வெற்றுப் பேப்பர் என்று கேலியும் கிண்டலும் செய்த திமுகவின் சிறுபான்மைப் பிரிவு தமுமுக, இப்போது அதை வரவேற்றது.

மேற்படி ஆணையத்தில் ஜெயலலிதா ஒரு முஸ்லிம் நீதிபதியை நியமித்திருந்தார். மேலும் இந்த ஆணையம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை ஓராண்டு என்று நிர்ணயித்திருந்தார்.

ஆனால் கருணாநிதி அறிவித்த ஆணையத்தில் முஸ்லிம்கள் யாரும் இடம்பெறவில்லை. மேலும் ஆணையத்தின் காலக்கெடுவையும் இரண்டு ஆண்டுகளாக மாற்றினார். இதை எதிர்த்துக் களத்தில் குதித்தது தவ்ஹீது ஜமாஅத் தான்.

கருணாநிதியின் இந்தக் காலம் தாழ்த்தும் முயற்சியைக் கண்டித்து தமிழகமெங்கும் தவ்ஹீது ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெரும் மக்கள் கூட்டம் திரண்டது.

இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக ஆணையத்தின் அறிக்கை தாக்கல் பணி நடைபெற்றது. அதில் கூறப்பட்ட பரிந்துரையின் படி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று காத்திருந்தோம். கண்கள் பூத்துப் போகும் வரை காத்திருந்தோம்.

காக்க வைத்து கழுத்தறுப்பதில் கருணாநிதி வல்லவர். அதனால் இவரிடம் அமைதி காத்தால், இஸ்லாமியர்களுக்கு இதயத்தில் இட ஒதுக்கீடு எப்போதும் உண்டு என்று வசனம் பேசியே ஆட்சிக் காலத்தைக் கடத்தி விடுவார். அதனால் இவரிடம் போராடித் தான் பெற வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதன்படி 2007 ஜனவரி 29 அன்று, குடந்தைப் பேரணியை நினைவூட்டும் விதமாக, தமிழகமெங்கும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினோம்.

அந்தப் போராட்டத்திலேயே அடுத்தக் கட்டமாக சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவித்தோம். அதன் பிறகும் இட ஒதுக்கீடு என்பது கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

சிறை நிரப்பும் போராட்டம்

மூச்சும் இல்லாமல், பேச்சும் இல்லாமல் கிடந்த இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு உயிர் கொடுக்கும் விதமாக வாழ்வுரிமை மாநாடு நடைபெற்ற தினமான ஜூலை 4ம் தேதியைத் தேர்ந்தெடுத்து அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினோம். ஆண்களும் பெண்களும் வந்து குவிந்தனர். தாங்கள் பெற்ற பச்சிளம் குழந்தைகளுடன் வந்து குவிந்தனர்.

காவல்துறை வேனில் தொட்டில் கட்டித் தங்கள் குழந்தைகளைத் தூங்க வைத்த வரலாறு தமிழகத்தில் இதுவரை எந்தவொரு இயக்கமோ கழகமோ கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை. சுதந்திர இந்தியாவில் இப்படியொரு சிறை நிரப்பும் போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும் நடத்தியதில்லை என்று உளவுத்துறையினர் வியக்கும் அளவுக்கு மக்கள் சிறை செல்லத் துணிந்தனர்.

டெல்லி சுற்றுலா

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் அதே வீரியத்துடன் போராடிக் கொண்டு இருக்கும் வேளையில், திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக மாறி விட்ட தமுமுக, திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழித்துக் கொண்டிருந்தது.

திமுக ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால் வாரியப் பதவிகள் வாய்க்காமல் போய் விடும். ஆளுங்கட்சியின் கூட்டணி என்ற பெயரில் நடத்தும் அடாவடிகளுக்கு ஆப்பு வந்து விடும் என்று பயந்த தமுமுக, தனது சுயலாபங்களுக்காக சமுதாயத்திற்குக் குழி பறிக்கும் காரியங்களில் இறங்கியது.

இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத் தான் உண்டு, மாநில அரசுகளுக்கு அதிகாரமே இல்லை என்று மனசாட்சியை விற்று மடமை வாதம் பேசியது. “இவர்கள் படிப்பறிவில்லாமல் மாநில அரசிடம் போய் இட ஒதுக்கீடு கேட்கிறார்கள்’ என்று நம்மைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தது. கருணாநிதி அரசைக் காப்பாற்றுவதற்காக, நாங்கள் டெல்லியில் போய் இட ஒதுக்கீடு கேட்கப் போகிறோம் என்று மாய்மாலம் செய்தது.

ஊரான் வீட்டுப் பணத்தில் டெல்லிக்கு உல்லாசப் பயணம் சென்றது. டெல்லி சுற்றுலா சென்று மத்திய அரசை ஏதாவது அறிவிக்கச் செய்ததா? என்றால் ஒன்றுமில்லை. அழைக்கப்பட்ட பிரமுகர்கள் கூட கல்தா கொடுத்தார்கள். ஒரு சிலர் கூடிக் கலைந்து விட்டு, டெல்லியில் பேரணி நடத்தியதாக பீற்றிக் கொண்டது.

ஏற்கனவே உள்ள சமுதாய இயக்கங்கள் ஆளுங்கட்சியிடம் ஒரு சில சீட்டுக்களை வாங்கி விட்டு, தன்மானத்தை இழந்து பிணமானார்கள் அல்லவா? அது போன்று இவர்களும் வாரியத்தை வாங்கி விட்டு வாய் பொத்திக் கிடக்கின்றார்கள். இவர்கள் வாய் பொத்திக் கிடந்தால் கூடப் பரவாயில்லை. வாரியப் பதவியைப் பெறுவதற்காக சமுதாயத்தின் வாழ்வாதாரக் கோரிக்கையான இட ஒதுக்கீட்டையே பலி கொடுக்கத் துணிந்து விட்டார்கள்.

இறுதி யுத்தம் – சட்டமன்ற முற்றுகை

பதவிக்காக யாரிடமும் கையேந்துவதில்லை என்ற கொள்கையில் அன்றிலிருந்து இன்று வரை உறுதியாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத், இட ஒதுக்கீட்டிற்காக இறுதி வரை போராட முன்வந்தது. அதன் உச்சக்கட்டமாகத் தான் சட்டமன்ற முற்றுகையை அறிவித்தது.

சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்படாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் சமயத்தில் சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் அறிவித்தது.

இனியும் தாமதிக்க முடியாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி உணர்ந்து இட ஒதுக்கீட்டை அறிவிக்க முன்வந்தார். கனிமொழி மூலமாக இட ஒதுக்கீட்டிற்கான சாத்தியக் கூறுகளை, தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெரிவித்தது. அதன்படி மூன்றரை சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க முன்வந்தார். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

நன்றி அறிவிப்புக் கூட்டம்

இதனிடையே, தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் வீரியமிக்க போராட்டங்களால் இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகி விடும் என்ற செய்தி கசிய ஆரம்பித்தவுடன், “டிசம்பருக்குள் இட ஒதுக்கீட்டை அறிவிக்கவில்லையென்றால் போராட்டம்’ என்ற கேலிக்கூத்தான அறிவிப்பை தமுமுக வெளியிட்டது.

அது வரை மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறிக் கொண்டிருந்த சிறுபான்மைப் பிரிவினர், இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டால் அதன் கிரடிட் தவ்ஹீது ஜமாஅத்திற்குச் சென்று விடும் என்று பயந்து இப்படியொரு அறிவிப்பைச் செய்துள்ளனர் என்று மக்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர்.

இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியானவுடன், தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது ஆதரவை திமுகவுக்கு அளிப்பதாக வாக்குறுதியும் கொடுத்து விட்டு வந்தனர்.

இதிலும் தங்களின் கேடுகெட்ட அரசியலை நடத்த சிறுபான்மைப் பிரிவினர் முன்வந்தனர்.

தவ்ஹீதுவாதிகள் தமுமுகவில் இருந்த வரை தான் தமுமுக சார்பில் இட ஒதுக்கீட்டுப் போராட்டங்கள் நடைபெற்றன. தவ்ஹீதுவாதிகளைக் கழற்றி விட்ட பின் இட ஒதுக்கீட்டிற்காக உருப்படியான எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை என்பதை மக்கள் அறிவார்கள். அத்துடன் திமுக ஆட்சிக்கு வந்த பின் வாரியப் பதவி பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததால், சிறுபான்மைப் பிரிவின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை சுத்தமாக வீரியமிழந்தது. இதையெல்லாம் மக்களுக்கு மறக்கடிக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதிக்கு நன்றி அறிவிப்புக் கூட்டத்தை மானங்கெட்டுப் போய் நடத்தினார்கள்.

மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்றார்கள். ஜெயலலிதா ஒரு ஆணையத்தை அமைத்த போது வெற்றுப் பேப்பர் என்றார்கள். கருணாநிதி அந்த ஆணையத்தை மாற்றியமைத்த போது கூட, “இதற்கும் இட ஒதுக்கீட்டிற்கும் சம்பந்தமில்லை’ என்றார்கள். அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசு இட ஒதுக்கீட்டை வழங்கிய போது, கருணாநிதியின் அறிவிப்பு செல்லாது என்று அறிக்கை விட்டு விட்டு ஒதுங்க வேண்டியது தானே? அவ்வாறு செய்யாமல் கோடிக்கணக்கில் செலவு செய்து நன்றி அறிவிப்புக் கூட்டம் எதற்காக நடத்த வேண்டும்?

அப்போது அதிகாரமில்லை என்று சொன்னது, வாரியம் தந்த வள்ளலைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக!

இப்போது நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்துவது, நாங்கள் தான் வாங்கித் தந்தோம் என்று கூறி மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்காக!

ஏமாற்றமளித்த இட ஒதுக்கீடு

இப்படிப்பட்ட துரோகங்களை எல்லாம் தாண்டி தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது. அத்துடன் காரியம் முடிந்து விடவில்லை.

கருணாநிதி அறிவித்த இட ஒதுக்கீட்டில் குளறுபடிகள் இருப்பதை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. தமிழக அரசுத் தேர்வாணையம் வெளியிட்ட விளம்பரத்தில் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவிகித இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப் படவில்லை என்பதைக் கண்டு தவ்ஹீது ஜமாஅத் கொதித்தெழுந்தது.

அறிவிக்கப்பட்டபடி மூன்றரை சதவிகிதம் வழங்கப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று அறிவித்து, சென்னையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. கண்டனப் பொதுக் கூட்டங்களை நடத்தி சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

ஆனால் ஏற்கனவே இட ஒதுக்கீடு விஷயத்தில் துரோகமிழைத்த சிறுபான்மைப் பிரிவு, இந்த விஷயத்திலும் தனது சமுதாய விரோதப் போக்கைத் தொடர்ந்தது. பதவியையும், பதவி தந்தவர்களையும் காப்பாற்றுவதற்காக வாரியடித்துக் கொண்டு, வரிந்து கட்டிக் கொண்டு, இந்தக் குளறுபடிகளை நியாயப்படுத்தினார்கள். ரோஸ்டர் முறை, புரோட்டா மாஸ்டர் முறை என்று வியாக்கியானம் கொடுத்தார்கள். படிப்பறிவில்லாததால் இதுவெல்லாம் தவ்ஹீது ஜமாஅத்தினருக்குத் தெரியவில்லை என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நையாண்டி பேசினார்கள். ஆனால் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இட ஒதுக்கீட்டில் குளறுபடிகள் நடந்திருப்பது உண்மை தான் என்று கருணாநிதியே முரசொலியில் எழுதி, இவர்களின் முகத்தில் கரியைப் பூசினார். இவர்களது சமுதாய துரோகத்தைத் தோலுரித்துக் காட்டினார்.

ஆள்பவரே சொல்லி விட்ட பிறகு இந்த அடிமைகள் என்ன செய்ய முடியும்? படிப்பறிவில்லாதவர்கள் சொன்ன அதே குற்றச்சாட்டை, முதல்வரிடம் சென்று கோரிக்கையாக வைத்து விட்டு, மானங்கெட்டுப் போய் அதைப் பத்திரிகைச் செய்தியாகவும் அளித்தார்கள். “இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டும்’ என்று இந்தப் படித்த (?) அறிவாளிகள் கருணாநிதியிடம் சொல்லி விட்டு வந்தார்கள். இவர்களது அடிமைத்தனத்தையும், பதவிக்காக சமுதாயத்தை அடகு வைக்கும் போங்கையும் பார்த்து, “நாங்க எவ்வளவோ பரவாயில்லைப்பா!” என்று ஒரு லீக் பிரமுகர் சொன்னது தான் இதில் வேடிக்கை!

உண்மையில் ஏனைய அரசியல் வாதிகள் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். அந்த அரசியல்வாதிகள் இவர்களிடம் தோற்றுப் போய் விட்டார்கள் என்றே கூற வேண்டும்.

ஆனால் மக்கள் உண்மை நிலையைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டில் தவ்ஹீது ஜமாஅத்தைத் தவிர்த்து வேறு யாரும் உரிய முறையில் குரல் கொடுக்கவில்லை என்பதை நன்றாக விளங்கி வைத்திருக்கிறார்கள்.

இட ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இந்தக் குளறுபடிகள் களையப் படுவதற்காக தவ்ஹீது ஜமாஅத் காத்திருக்கின்றது. தவ்ஹீது எழுச்சி மாநாட்டிற்குள் அவ்வாறு களையப் படவில்லை எனில், சட்டமன்ற முற்றுகைக்கான தேதி மாநாட்டில் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு, வல்ல ரஹ்மான் ஏற்படுத்திய நிர்ப்பந்தத்தால் சமுதாயப் பணிக்காகக் களமிறங்கிய தவ்ஹீது ஜமாஅத் பல்வேறு துரோகங்களை, குழி பறிப்புகளைத் தாண்டி இன்று வரை களத்தில் நிற்கின்றது. இவ்வாறு நிற்பதற்குக் காரணம், நீர்த்துப் போகாத அதன் நிலைபாடு! நிறம் மாறாத நெருப்புக் கொள்கை!

இத்தனையும் எதற்கு? நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தேர்தலில் சீட் வாங்கவா? இல்லை! இந்த சமுதாயப் பணிகளைக் கண்டு யாராவது தவ்ஹீதுக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பில் தான்.

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது (அரபுகüன் மிக உயர்ந்த சொத்தான) சிகப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச்  சிறந்ததாகும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

நூல்: புகாரி 3009