மாமியார் மருமகள் பிரச்சனை

கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்

மாமியார் மருமகள் பிரச்சனை

பின்த் ஜமீலா, மேலப்பாளையம்

கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் மிக முக்கிய பிரச்சனையான மாமியார், மருமகள் பிரச்சனையைப் பார்த்து வருகிறோம்.

சில மாமியார்கள், வீட்டில் மகன் இருக்கும் போது மருமகளை  நல்ல விதமாக நடத்துவார்கள். ஆனால் மகன் வீட்டில் இல்லாத போது அவளைக் கொடுமைப்படுத்துவதைப் பார்க்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மனிதர்களில் மிகவும் தீயவன், இரட்டை முகம் கொண்டவன் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5077

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை மற்றும் தீமை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்து கொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் சம்ஆன் அல்அன்சாரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 4992

மருமகள் எப்போது சறுக்குவாள்? நாம் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்ற பழிவாங்கும் உணர்வுடன் சிலர் நடந்துகொள்கிறார்கள். மருமகளுக்கு ஒரு மனவேதனை என்றால் அதன் மூலம் இவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். தவறே செய்திருந்தாலும் மன்னிப்பதையே மார்க்கம் வலியுறுத்துகின்றது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை.

நூல்: முஸ்லிம் 5447

யாராவது மருமகளைக் குறை சொன்னால் அவர்களுடன் சேர்ந்து கொண்டு இவர்களும் புறம், அவதூறு போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்என்று பதிலளித்தார்கள். அப்போது, “நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5048

அந்தரங்கத்தில் தலையிடுதல்

சில வீடுகளில் கணவன், மனைவி ஆகிய இருவரும் அருகருகே அமரக்கூடாது; ஒருவரையொருவர் பார்க்கக்கூடாது; உணவு உண்ணக்கூடாது; ஊட்டிவிடக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. சொந்த மனைவியையே திருட்டுத்தனமாகப் பார்க்குமளவிற்கு மாமியாரின் குத்தலான பார்வைகளும் பேச்சுகளும் அமைந்துள்ளன.

பகல் நேரங்களில் தங்களுடைய அறைகளில் மகனும் மருமகளும் ஒன்றாக உறங்குவதற்கும் அனுமதியில்லை. அப்படித் உறங்கினால் அதையும் அநாகரீகமாக விமர்சிக்கின்றனர்.

நாங்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தோம். அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு (“கமூஸ்என்னும்) கோட்டையின் வெற்றியைத் தந்த போது, (போர்க் கைதியான) ஸஃபிய்யா பின்த் ஹுயை பின் அக்தப் அவர்களின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புது மணப்பெண்ணாக இருந்த  ஸஃபிய்யாவின் கணவர் (போரில்) கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் பெற்று (மணந்து) அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.  (கைபருக்கு அருகிலுள்ள) “சத்துஸ் ஸஹ்பாஎன்னுமிடத்தை நாங்கள் அடைந்த போது மாதவிடாயி-ருந்து அவர் தூய்மையடைந்தார். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருடன் வீடு கூடினார்கள். அதன் பிறகு (பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றைக் கலந்து) “ஹைஸ்எனப்படும் ஓர் உணவைத் தயாரித்துச் சிறிய தோல் விரிப்பில் வைத்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “உன் அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கு அறிவிப்புக் கொடுஎன்று கூறினார்கள்.

ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக நபி (ஸல்) அவர்கள் வழங்கிய வலீமா – மண(மகன்) விருந்தாய் அது அமைந்தது. பிறகு நாங்கள் மதீனா நோக்கிப் புறப்பட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மேல் ஒரு போர்வையால் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காகத் திரையமைத்தார்கள். பிறகு,தமது ஒட்டகத்தின் அருகில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து, தமது முழங்காலை வைக்க, அவர்களது முழங்கால் மீது தமது காலை வைத்து ஸஃபிய்யா (ரலி) அவர்கள் ஒட்டகத்தில் ஏறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மா-க் (ரலி)

நூல்: புகாரி 4211

கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் கணவன் மனைவிக்கு மத்தியில் நடக்கும் அந்தரங்கமான விஷயத்தில் தேவையின்றி தலையிடுகின்றனர். சில நேரங்களில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் இறைக்கட்டளைக்கு மாறு செய்ய வேண்டிய நிலைக்கு தம்பதியினர் தள்ளப்படுகின்றனர்.

பகல் நேரமாக இருந்தாலும் கணவன், தன் மனைவியை தேவைக்காக அழைக்கும் போது மறுக்கக்கூடாது என்பது நபியவர்களின் கட்டளையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கணவர் உள்ளூரில் இருக்கும் நிலையில் ஒரு பெண் அவரது அனுமதி இல்லாமல் (உபரி) நோன்பு நோற்கக் கூடாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5192

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம்முடைய மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக்கொண்டேயிருக்கின்றனர்.

நூல்: புகாரி 5193

தன் தேவைக்காக கணவன் மனைவியை அழைத்தால் அவள் அடுப்பில் (வேலை பார்த்துக் கொண்டு) இருந்தாலும் அவனிடத்தில் செல்லட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தல்க் பின் அலீ (ரலி), நூல்: திர்மிதி 1080

உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்! (அல்குர்ஆன் 2:223)

மார்க்கக் கடமைகளுக்கு இடையூறு

குளிப்பு கடமையான நிலையில் குளிக்காத வரை தொழக்கூடாது என்பது இறைக்கட்டளை! ஆனால் கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்குக் குளிப்பு கடமையாகி விட்டால் அவள் அதை நிறைவேற்றுவதற்குப் படுகின்ற பாடு இருக்கின்றதே! சொல்லி மாளாது.

குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்!         (அல்குர்ஆன் 4:43)

இல்லறத்தில் ஈடுபட்ட பின் ஒரு பெண் குளித்தால், “எதற்காக இந்த நேரத்தில் குளிக்கின்றாய்?” என்பது போன்ற அநாகரீகக் கேள்விகளைக் கேட்கின்றனர். இதுபோன்ற அசௌகரியமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் இறைக்கட்டளையை மறுத்து, மற்றவர்களுக்காகத் தொழுகையை விடுகின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அவர்களில் ஒரு சாரார் அல்லாஹ்வுக்கு அஞ்சுவது போல் அல்லது அதைவிடக் கடுமையாக மனிதர்களுக்கு அஞ்சுகின்றனர்.

(அல்குர்ஆன் 4:77)

மார்க்கக் கட்டளைகளை அறிந்துகொள்வதற்கு, செயல்படுத்துவதற்கு வெட்கம் ஒரு தடையாக இருக்கக்கூடாது. மார்க்கக் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதில் மற்றவர்கள் நம்மைக் கேவலமாகப் பார்ப்பார்கள் என்ற அச்சம் ஒருபோதும் இருக்கக்கூடாது.

ஒழுக்க வாழ்வுக்கு முன்மாதிரியாகத் திகழக்கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை விட அதிக வெட்கப்படக்கூடியவர்களாக இருந்தும் பல பேருக்கு மத்தியில் தமது கடமையான குளிப்பை நிறைவேற்றி விட்டு வந்து தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள்.

(ஒரு தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டுதொழுகை அணிகள் சரி செய்யப்பட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். தாம் தொழும் தளத்தில் அவர்கள் போய் நின்றபோது  தாம் பெருந்துடக்குடனிருப்பது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே எங்களிடம், “உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்என்று கூறிவிட்டு (தமது வீட்டிற்குத்) திரும்பிச் சென்று குளித்தார்கள். பிறகு தலையி-ருந்து தண்ணீர் சொட்ட சொட்ட எங்களிடம் வந்தார்கள். தக்பீர் சொல்- தொழுகை நடத்தினார்கள்; அவர்களுடன் நாங்களும் தொழுதோம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 275

சில வீடுகளில் மருமகள் தன் பெற்றோரிடம் செல்போனில் பேசினாலும் சந்தேகப்பட்டு அதைப் பெரிய பிரச்சனையாக்குகின்றனர். அவள் என்ன பேசுகிறாள் என்பதை மறைந்திருந்து ஒட்டுக் கேட்கின்றனர். இதுவும் மிக மோசமான செயலாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங்குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர்களாய் இருங்கள்.

நூல்: புகாரி 5143

விருந்தினரை அவமதித்தல்

மருமகளுடைய குடும்பத்தார் அவளைப் பார்ப்பதற்கு வரும் போது மகள் வீடு தானே என்று ஓரிரு நாட்கள் அங்கு தங்கிவிட்டால் அவர்களைச் சோற்றுக்கு வழியில்லாதவர்களைப் போன்று கேவலமாகப் பேசுகின்றனர். விருந்தினர்களை உபசரிப்பது மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்ட செயலாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் அண்டை வீட்டாருக்கு உதவி செய்யட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஷுரைஹ் அல்குஸாஈ (ரலி), நூல்: முஸ்லிம் 77

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தமது கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்என்று கூறினார்கள். மக்கள், “அவருடைய கொடை என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பு) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அவற்றுக்குப் பின்னால் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி), நூல்: முஸ்லிம் 3558

என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்.  என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?” என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி), நூல்: புகாரி 2620

வளரும் இன்ஷா அல்லாஹ்