போர் நெறியைப் போதித்த புனித இஸ்லாம்

போர் நெறியைப் போதித்த புனித இஸ்லாம்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

ஒரு மனிதன் எல்லா நேரத்திலும் எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவான சட்டதிட்டங்களைச் சொல்லும் மார்க்கம் இஸ்லாம். இந்த மார்க்கம், மனித சமுதாயத்திற்கு நல்லதை ஆதரிக்கும்; தீமையை எதிர்க்கும். நியாயமான செயல்களை அனுமதிக்கும்; அநியாயமான, அராஜகமான செயல்களைத் தடுக்கும்.

இத்தகைய இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், சரியாகப் புரிந்து கொள்ளாமல் சிலர் இதன் மீது தவறான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார்கள். இஸ்லாம் தீவிரவாத்தைப் போதிக்கிறது; அதை ஆதரிக்கிறது; அதைப் பரப்புகிறது என்று நினைக்கிறார்கள். இதற்கு ஆதாரமாகக் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இருக்கும் போர் சம்பந்தமான செய்திகளை எடுத்துக் காட்டுகிறார்கள்.

இத்தகைய மக்கள், போர் சம்பந்தமாக இஸ்லாம் கூறும் அனைத்து செய்திகளையும் ஒன்று சேர்த்து பார்த்தார்கள் எனில், தங்களது கருத்து தவறு என்பதை அவர்களாகவே உணர்ந்து கொள்வார்கள்.

காரணம், போர் செய்வது, அதற்குரிய தயாரிப்புகளைச் செய்வது, போரில் புறமுதுகு காட்டாமல் இருப்பது, போரில் வீர மரணம் அடைவது போன்ற போர் சம்பந்தமான பல்வேறு விஷயங்களைப் பற்றி இஸ்லாம் பேசுகிறது. இதை நாம் மறுக்கவில்லை. அதேசமயம், போர் ஏன்? எதற்கு? எப்படி? என்ற தெளிவான சட்டங்களையும் இஸ்லாம் வகுத்துள்ளது. எனவே, போர் குறித்து மார்க்கம் வரையறுத்து இருக்கும் சட்டங்களைப் பார்ப்போம்.

போர் செய்ய அரசாங்கம் அவசியம்

போர் தொடர்பான சட்டங்களுள் ஒன்றாக, எப்போது போர் செய்ய வேண்டும்? என்பது குறித்தும் இஸ்லாம் தெளிவுபடுத்தி இருக்கிறது. முஸ்லிம்கள் போர் செய்ய வேண்டும் எனில் முதலில் அவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு இஸ்லாமிய அரசு, அரசாங்கம் இருக்க வேண்டும். அந்த அரசு நியமித்த படைத் தலைவரின் தலைமையில் முஸ்லிம்கள் அணிதிரண்டு ஒரு படையாக இருந்து போர் செய்ய வேண்டும். இவ்வாறு இல்லாமல், முஸ்லிம்கள் தங்களது சுய முடிவின் அடிப்படையில் தனியாகவோ, குழுக்களாகவோ, கூட்டங்களாகவோ, இயக்கங்களாகவோ இருந்து முடிவெடுத்து கொண்டு போர் செய்யப் புறப்பட்டுச் செல்வதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? “எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்” என்று தமது நபியிடம் கூறினர். “உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா?” என்று அவர் கேட்டார். “எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது?” என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.

தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். “எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லைஎன்று அவர்கள் கூறினர். “உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்என்று அவர் கூறினார்.

(திருக்குர்ஆன் 2:246, 247)

இவ்வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற ஒரு நபியின் வரலாற்றுச் செய்தியைக் கூறுகின்றன.

அந்த நபியின் சமுதாயத்தவர் எதிரிகளின் சொல்லொணாத் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஊரை விட்டும் விரட்டப்பட்டிருந்தனர். ஊரை விட்டு விரட்டப்பட்டிருந்தாலும் அந்த நபியின் தலைமையில் அவர்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடவில்லை.

இந்த நேரத்தில் எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்காகத் தங்களுக்கு ஒரு மன்னரை நியமிக்குமாறு அந்த நபியிடம் அவரது சமுதாயத்தவர் வேண்டினார்கள். இந்த வேண்டுகோளுக்குப் பிறகு இறைவன் தாலூத் என்பவரை மன்னராக நியமித்து அவர்கள் மீது போர் செய்வதைக் கடமையாக்கினான் என்பது இவ்வசனங்கள் கூறும் வரலாறு.

படை திரட்டி யுத்தம் செய்வதென்றால் அதற்கு ஒரு ஆட்சியும், ஆட்சியாளரும் இருப்பது அவசியம் என்பது இதில் பெறப்படும் முதலாவது சட்டம். ஏனெனில் அந்தச் சமுதாயம் மிகப் பெரும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், போர் செய்வதற்கான எல்லா நியாயங்களும் இருந்தும் அவர்கள் போர் செய்யவில்லை.

அவர்களுக்குத் தலைமை தாங்கிய நபியும் போர் செய்யவில்லை. மாறாக ஒரு மன்னரை நியமிக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்த பிறகு இறைவன் மன்னரை நியமித்தான். அதன் பிறகுதான் அவர்கள் போரிட்டுள்ளார்கள்.

போர் செய்வதற்கு ஆட்சியோ, மன்னரோ அவசியம் இல்லை என்றால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மன்னராக ஒருவரை இறைவன் நியமித்திருக்க மாட்டான்.

ஆரம்ப காலத்தில் இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளமான துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்ட போது, உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை ஏற்றுக் கொண்டவர்களை வைத்து போர்ப் பிரகடனத்தை அறிவிக்கவில்லை. மக்காவிலிருந்து மதீனாவிற்கு வந்து தமது தலைமயிலான இஸ்லாமிய ஆட்சி அமைந்த பிறகே போர்  நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இதைச் சரியாக விளங்காமல் செயல்படும் ஒரு சில முஸ்லிம்களின் செயல்களால், இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமையும் போர் செய்யத் தூண்டுகிறது என்று பிறமத மக்கள் தவறாகக் கருதி விடுகிறார்கள்.

போருக்கான படைபலம்

முஸ்லிம்களை வழிநடத்தும் அராசங்கம் இருந்தாலும், போர் செய்வதற்கான முழு அனுமதி இருப்பதாக நினைத்துவிடக் கூடாது. எதிரிகள் எத்தனை பேர் இருக்கிறார்களோ அந்தத் தொகையில் பாதியளவில் முஸ்லிம்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில், போர் செய்யப் புறப்படக்கூடாது.

நபியே! நம்பிக்கை கொண்டோருக்கு போர் செய்ய ஆர்வமூட்டுவீராக! உங்களில் சகித்துக் கொள்கின்ற இருபது பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் நூறு பேர் இருந்தால் (ஏக இறைவனை) மறுப்போரில் ஆயிரம் பேரை வெல்வார்கள். அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான். உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே உங்களில் சகிப்புத் தன்மையுடைய நூறு பேர் இருந்தால் இரு நூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் விருப்பப்படி இரண்டாயிரம் பேரை வெல்வார்கள். அல்லாஹ் சகிப்புத் தன்மையுடையோருடன் இருக்கிறான்.

(திருக்குர்ஆன் 8:65, 66)

ஆரம்பத்தில் எதிரிகளுடைய எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு இருந்தால் போர் செய்யலாம் என்று அனுமதி இருந்தது. பிறகு மனிதர்களுக்கு இருக்கும் பலவீனமான நிலைகளைக் கருத்தில் கொண்டு, எதிரிகளின் எண்ணிக்கையில் பாதியளவிற்கு இருக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையைப் பிறப்பித்து விட்டான். இதற்கு முஸ்லிம்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

இதை விளங்கிக் கொண்டால், சிறுபான்மையாக இருக்கும் முஸ்லிம்களில் ஒரு சிலர், பெரும் தொகையில் இருக்கும் எதிரிகளுக்கு எதிராக ஆவேசப்பட்டு அவசரப்பட்டு செயல்படுவது இறைக் கட்டளைக்கு எதிரானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

போருக்கு வருவோருடன் மட்டுமே போர்

ஒரு ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். எதிரியாக இருக்கும் நாட்டில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையில் பாதியை விட அதிகமாக இருக்கிறார்கள். உடனே போர் செய்ய அனுமதி இருக்கிறது என்று நினைத்துவிடக் கூடாது. காரணம், எதிரிகள் நம்முடன் போர் செய்வதற்காகப் படை திரண்டு வரும்போது மட்டுமே எதிர்த்துத் தாக்கி, போர் செய்ய மார்க்கம் அனுமதி அளிக்கிறது. இதற்கு மாற்றமாக, நாமாக தேடிச் சென்று போரைத் துவங்கக்கூடாது.

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(திருக்குர்ஆன் 2:190)

தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.

(திருக்குர்ஆன் 9:13)

போர் செய்யுங்கள், கொல்லுங்கள், வெட்டுங்கள், போர்க் கருவிகளை திரட்டிக் கொள்ளுங்கள் என்று குர்ஆனில் சொல்வதெல்லாம், போர் செய்வதற்கு வலிந்து வருபவர்களை எதிர்த்துப் போரிடும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான கட்டளைகள். சத்தியத்திற்கு எதிராகப் படை திரண்டு வருபவர்களை எதிர்கொள்வதற்கான ஆணைகள், ஆலோசனைகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

“இஸ்லாமிய ஆட்சி அமைப்பது நமது கடமை; அதற்காக ஜிஹாத் செய்ய வேண்டும்’ என்று கூறிக் கொண்டு ஒரு சில முஸ்லிம்கள், எந்த விதத்திலும் நமக்குத் தொல்லை தராமல் அமைதியாக இருக்கும் மக்களுக்கு எதிராகச் செயல்படுவது, அவர்களைத் தேடிச் சென்று தாக்குவது முற்றிலும் குற்றம். இது மார்க்கத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாததன் அடையாளம் என்பதே உண்மை.

பிற நாடுகளின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைத்து, தலையிட்டு, பிறகு அதற்குள் அத்துமீறி நுழைந்து போர் செய்யும் நாடுகளை இன்றைய காலகட்டத்தில் நாம் பார்த்து வருகிறோம். இவ்வாறின்றி, வலிந்து போருக்கு வருவோருடன் மட்டுமே போர் என்ற இஸ்லாத்தின் கோட்பாடு பாராட்டுதலுக்கும் போற்றதலுக்கும் உரியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பாதிக்கப்படும் போது போர்

ஒருவர் நம்மைத் தாக்குகிறார், அவரிடம் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு அவரை எதிர்த்துத் தாக்குவதற்கு அனுமதி இருக்கிறது. இது உலகத்தில் இருக்கும் எந்த நாட்டின் சட்டங்களின் அடிப்படையிலும் தவறாகாது.

இதுபோன்று அநியாயமான முறையில் ஒருவர் மற்றொருவரைத் தாக்குகிறார்; அவரை அடிக்கிறார்; உதைக்கிறார். இப்போது பாதிக்கப்படும் மனிதருக்கு உதவி செய்வதை, வரம்பு மீறும் நபரைத் தடுப்பதை யாரும் குற்றம் என்று சொல்ல மாட்டார்கள். இந்த வகையில் தான் இஸ்லாமும் போருக்கு அனுமதியைக் கொடுக்கிறது.

எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

(திருக்குர்ஆன் 4:75)

போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன். “எங்கள் இறைவன் அல்லாஹ்வேஎன்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்;

(திருக்குர்ஆன் 22:39, 40)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில், தங்களை உயந்த குலம் என்று கருதும் மக்கள், பிற குலத்தைச் சேர்ந்த மக்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள்; அவர்களின் உரிமைகளைப் பறித்தார்கள். அடுத்தவர்கள் தங்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இந்த இழிநிலையில் இருந்து மீட்பதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக, அட்டூழியம் செய்பவர்களுக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் இறங்கினார்கள். உண்மைக்கும் உரிமைக்கும் உழைத்தார்கள்.

இவ்வாறு வரம்பு மீறும் ஒரு பெரும் கூட்டத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி, களத்தில் இறங்கிப் போர் செய்வதற்கும் இஸ்லாமிய அரசும், எதிரிகளின் எண்ணிக்கையில் பாதியளவு ஆட்பலமும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.

சமாதானத்தை ஏற்க வேண்டும்

சத்திய மார்க்கமான இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும்; சத்தியவாதிகளான முஸ்லிம்களை வேரறுக்க வேண்டும் என்று படை திரண்டு வருகிறார்கள். இஸ்லாம் அனுமதி அளித்தபடி அவர்களை எதிர்த்து போர் நடைபெறுகிறது.

இந்நிலையில் எதிரிகள் போரிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்தால், சமாதானத்தை விரும்புவதாகக் குறிப்பிட்டால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகும் அவர்களை எதிர்த்துப் போர் செய்யக் கூடாது. போரிடுவதை நிறுத்த மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாது.

(போரிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாக ஆகும் வரை அவர்களுடன் போர் செய்யுங்கள்! அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அநீதி இழைத்தோர் மீதே தவிர (மற்றவர்கள் மீது) எந்த வரம்பு மீறலும் கூடாது.

(திருக்குர்ஆன் 2:192, 193)

அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்.

(திருக்குர்ஆன் 8:61)

உயிர் இழப்புகளும் பொருளாதார சேதமும் இல்லாமல் சமுதாயத்தில் சுமூகமான சூழ்நிலை தோன்றுவதையே முஸ்லிம்கள் விரும்ப வேண்டும். மக்களுக்கு அமைதியான, நிம்மதியான வாழ்க்கை அமைய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காரணம், இஸ்லாம் என்பது அனைத்து மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பொதுநலம் நாடும் மார்க்கம்.

கொள்கையைப் பரப்புவதற்காகப் போர் இல்லை

இஸ்லாம் என்பது ஏக இறைவன் கொடுத்த வாழ்க்கை வழிமுறை. இந்த மார்க்கத்தை முழுமையாக ஏற்று, முறையாக வாழ்பவர்களுக்கு மட்டுமே மறுமையில் வெற்றி இருக்கிறது. இத்தகைய மார்க்கத்தில் இருப்பவர்கள், அதன் பக்கம் மற்ற மக்களையும் அழைக்க வேண்டும்.

இஸ்லாத்தைப் பற்றித் தெளிவாக எடுத்துரைத்து, பிறமத மக்களை அழைப்பது மட்டுமே முஸ்லிம்கள் மீது கடமையே தவிர, அவர்களைக் கட்டாயம் செய்வதற்கு, நிர்ப்பந்தப்படுத்தி இஸ்லாத்தைத் திணிப்பதற்கு மார்க்கத்தில் கடுகளவும் அனுமதி இல்லை.

இப்படி இருக்கும்போது, இஸ்லாத்தைப் பரப்புவதற்காக, அதன் கொள்கையை, கருத்துக்களைப் பிற மக்கள் மீது திணிப்பதற்காகப் போர் செய்ய இஸ்லாம் தூண்டுமா? இதை ஆதரிக்குமா? என்று யோசித்துப் பாருங்கள். அடுத்த நொடியே இதை இஸ்லாம் அறவே அனுமதிக்காது என்று நமது மனதும் நாவும் சொல்லும். இதுவே நிதர்சனம்.

இந்த மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

(திருக்குர்ஆன் 2:256)

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?

(திருக்குர்ஆன் 10:99)

ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்குஎனக் கூறுவீராக!

(திருக்குர்ஆன் 109; 1-6)

முன்சென்ற இறை வசனங்களை மெய்ப்படுத்தும் வகையில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆட்சி செய்தார்கள். அதனால்தான் யூதர்கள், கிறித்தவர்கள் என்று ஏராளமான பிறமத மக்களும் நபிகளாரின் ஆட்சிக்கு உடன்பட்டு இஸ்லாமிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.

போரில் வரம்பு மீறக் கூடாது

போரின் போது எதிரிகளை, எதிரிகளைச் சார்ந்தவர்களை, எதிரிகள் இருக்கும் இடங்களை கண்மூடித்தனமாகத் தாக்கும் செயல்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. போர்க்களத்தில் இப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாத அளவிற்கு எவரையும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ரீதியில் எதிரிகளிடம் நடந்து கொள்கிறார்கள். காட்டு மிராண்டித்தனமான செயல்களைச் செய்கிறார்கள்.

ஆனால், இஸ்லாமிய மார்க்கம் போர்க்களத்திலும் வரம்பு மீறக் கூடாது என்று சொல்கிறது. போர் செய்வதற்கு வந்த எதிரிகளைத் தவிர்த்து பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் போன்ற போரில் பங்கெடுக்காமல் இருப்பவர்களைக் கொல்லக் கூடாது என்று சொல்கிறது. இன்னும் ஏன்? எதிரிகள் நாட்டில் இருக்கும் மத குருமார்களைக் கொல்லக்  கூடாது என்றும் சொல்கிறது. எதிரிகளைச் சந்திக்கும் போர்க்களங்களின் போதுகூட வரம்பு மீறிவிடக்கூடாது என்று போதிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்கள் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.

(நூல்கள்: புகாரி, 3014. முஸ்லிம், 3587)

“பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்”

(புகாரி, 3015. முஸ்லிம், 3588. திர்மிதீ, அபுதாவூத், அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன)

போர்க்களத்தில் போரிடுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! சிறுவர்களையும் மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: புரைதா (ரலி),

நூல்: முஸ்லிம்.

அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கொள்ளையடிப்பதை (பிறர் பொருளை அவரது அனுமதியின்றி பலவந்தமாக, பகிரங்கமாக அபகரித்துக் கொள்வதை)யும் (போரின் போது அல்லது பகைமையின் காரணத்தால்) ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள்  தடை செய்தார்கள்.

(நூல்: புஹாரி 2474)

புரைதா பின் அல்ஹசீப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக்கோ, அல்லது படைப் பிரிவுக்கோ தளபதி ஒருவரை நியமித்தால், தனியாக அவரை அழைத்து இறைவனை அஞ்சுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களின் நலனைப் பேணுமாறும் அறிவுறுத்துவார்கள். பிறகு, பின்வருமாறு அறிவுரை கூறுவார்கள்: இறைவனின் பெயரால், இறைவனின் பாதையில் போரிடுங்கள். இறைவனை மறு(த்து உண்மைக்கு எதிராக நட)ப்பவர்களுடன் போராடுங்கள்; அறப்போர் புரியுங்கள்; போர்ச் செல்வங்களில் கையாடல் செய்யாதீர்கள்; ஒப்பந்தங்களை முறிக்காதீர்கள்; அங்ககீனம் செய்யாதீர்கள்; குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.

நூல்: முஸ்லிம் 3566

யஸீத் பின் ஹுர்முஸ் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(காரிஜிய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த) நஜ்தா பின் ஆமிர் என்பவர் ஐந்து விஷயங்களைப் பற்றிக் கேட்டு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “நான் ஒரு கல்வியை மறைத்த குற்றத்திற்கு ஆளாகிவிடுவேன் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுத மாட்டேன்என்று கூறி பின்வருமாறு அவருக்குப் பதில் எழுதினார்கள்): நீர் என்னிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெண்களும் அறப்போர்களில் கலந்து கொண்டார்களா?” எனக் கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறப்போர்களில் பெண்களும் கலந்து கொண்டார்கள். போரில் காயமடைந்தவர்களுக்கு மருந்திட்டு சிகிச்சை அளித்தார்கள். போர்ச் செல்வத்திலிருந்து சிறிதளவு அவர்களுக்கு (ஊக்கத் தொகையாக) வழங்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்ச் செல்வத்தில் பெண்களுக்கு (குறிப்பிட்ட) பங்கு எதையும் நிர்ணயிக்கவில்லை. போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர்.

நூல்: முஸ்லிம் 3700

பொதுவாக இஸ்லாம், எந்த இக்கட்டான நேரத்திலும் எடுத்த எடுப்பிலேயே போரைத் தீர்வாக முன்வைக்கவில்லை. இறுதி முடிவாகத்தான் அனுமதி கொடுக்கிறது.

இஸ்லாம் கூறும் போர் நெறிமுறைகளுக்கும், இன்று நடக்கும் போர் நடைமுறைகளுக்கும் இடையே, மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது. இன்று நடக்கும் போர்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள், சிறுவர்கள், முதியவர்கள் என்று பலரும் கொத்து கொத்தாகக் கொல்லப்படுகிறார்கள். பொருளாதாரம் சுருட்டப்படுகின்றன; வளங்கள் சூறையாடப்படுகின்றன. நாடும் சமுதாயமும் ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கப்படுகிறது. இதன் மோசமான, கோரமான விளைவுகள் பாதிப்புகள் பல தலைமுறைகளுக்கும் தொடர்கின்றன.

இன்று நடக்கும் போர் முறைகளையும் நோக்கங்களையும் இஸ்லாம் அறவே ஆதரிக்கவில்லை. இத்தகைய காரியங்களை முஸ்லிம் சமுதாயத்தில் இருப்பவர்கள் செய்தாலும் சரியே. இதற்குக் காரணம், இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை, மாறாக அதை எப்போதும் எதிர்க்கிறது என்பதே! இதை முஸ்லிம்களும் பிற மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.