பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

போலி சுன்னத் ஜமாஅத்துக்கு மறுப்பு

சமீபத்தில் கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை என்ற பெயரில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது. அந்தப் பிரசுரத்தில்  பெண்கள் பள்ளிக்குச் சென்று ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வது ஹராமான செயல் என்றும், பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக்கூடாது என்றும் அந்தப் போலி சுன்னத் வல்ஜமாத்தினர் கூறியிருந்தனர்.

தங்கள் நிலைபாட்டை நிரூபிப்பதற்காக மார்க்க ஆதாரங்களை மறைத்து, திரித்துக் கூறுவதில் இவர்கள் யூத நஸாராக்களை மிஞ்சிவிட்டனர். தன்னுடைய சொந்த சரக்கை அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுவதும் அல்லாஹ் கூறிய சட்டத்தை மக்களிடத்தில் கூறாமல் மறைப்பதும் யூத நஸாராக்களின் கேடுகேட்ட செயலாகும்.

போலி சுன்னத் ஜமாஅத்தினர் அந்தப் பிரசுரத்தில் இந்த இழிசெயலைச் செய்து தாங்கள் சுன்னத் ஜமாத்தினர் இல்லை; சுன்னத்துக்கு (நபிவழிக்கு) எதிரானவர்கள் என்பதைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். எனவே இவர்களை சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று சொல்லாமல் பித்அத் ஜமாஅத்தினர் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது.

பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுகையில் கலந்து கொள்வது நபிவழி என்பதையும் இதற்கு எதிராக பித்அத் ஜமாஅத்தினர் வைக்கும் வாதங்களுக்குச் சரியான விளக்கத்தையும் இந்தக் கட்டுரை வாயிலாக நாம் மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.

பெண்கள் பள்ளிக்குச் செல்வது நபிவழி

பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று கடமையான தொழுகைகளில் கலந்து கொள்வதற்கு நபிவழியில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் பித்அத் ஜமாஅத்தினர் இந்த ஆதாரங்களில் எந்த ஒன்றுக்கும் பதில் தரவில்லை. ஏன் பதில் என்ற பெயரில் உளறுவதற்குக் கூட இவர்களால் முடியாத அளவிற்கு ஆதாரங்கள் நபிமொழி நூற்களில் தெளிவாக இடம்பெற்றுள்ளன.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் தாராளமாகப் பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள். அதை நபி (ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். இதை ஏராளமான நபிமொழிகளில் நம்மால் காணமுடியும்.

ஆதாரம் 1

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்கள் துணைவியர் பள்ளிவாசல்களுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி அளியுங்கள்என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

நூல்: முஸ்லிம் (754)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரிடம் அவருடைய மனைவி பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவளை அவர் தடுக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (751)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்காக உங்களிடம் அனுமதி கேட்டால் பள்ளிவாசலில் அவர்களுக்குரிய உரிமையைத் தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (757)

ஆதாரம் 2

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பெண்களே!) நீங்கள் இஷா தொழுகையில் கலந்து கொள்ள (பள்ளிவாசலுக்கு)ச் செல்லும்போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள்.

இதை ஸைனப் பின்த் முஆவியா அஸ் ஸகஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் (758)

ஆதாரம் 3

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் (தொழுத இடத்திலேயே) வீற்றிருப்பார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகையில், “அல்லாஹ் நன்கறிந்தவன்! தொழுகை முடித்து திரும்பும் ஆண்கள் பெண்களிடம் வருவதற்கு முன் பெண்கள் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்றுவிடவேண்டும் என்பதற்காகவே நபி (ஸல்) அவ்வாறு வீற்றிருந்தார்கள் என்றே நான் கருதுகிறேன்என்றார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: புகாரி (837)

ஆதாரம் 4

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுதுகொண்டிருக்கும் பெண்களின்) குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமாக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுவேன்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: புகாரி (707)

ஆதாரம் 5

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (749)

ஆதாரம் 6

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில் இமாம் தவறு செய்தால்) தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1203)

ஆதாரம் 7

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

சில ஆண்கள்  சிறுவர்களைப் போன்று தங்களது சிறிய வேஷ்டியை தங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். (இதைக் கண்ட நபியவர்கள்) பெண்களிடம், “ஆண்கள் (சஜ்தாவிலிருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தாதீர்கள்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (362)

ஆதாரம் 8

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவு வரை) இஷா தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள், “(தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்என்று கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து, “பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லைஎன்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (862)

ஆதாரம் 9

காஃப் வல்குர்ஆன் மஜீத் என்று தொடங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து (மனனமாக) நான் எடுத்துக் கொண்டேன். அதை அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிம்பரில் ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: அம்ரா (ரலி) அவர்களின் சகோதரி

நூல்: முஸ்லிம் (1442)

ஆதாரம் 10

நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்கு திரும்பிச் செல்வார்கள். இருட்டின் காரணமாக அவர்களை யாரும் அறிந்துகொள்ள முடியாது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (578)