பருவ வயதை அடைந்தவருக்கு பால் புகட்டுதல்

ஹதீஸ் கலை ஆய்வு              தொடர்: 6

பருவ வயதை அடைந்தவருக்கு பால் புகட்டுதல்

பருவ வயதை அடைந்த ஒரு ஆணுக்கு, ஒரு பெண் பாலூட்டி விட்டால் அவ்விருவருக்கும் தாய், மகன் என்ற உறவு ஏற்பட்டு விடும் என்ற கருத்தில் அமைந்த ஸாலிம் (ரலி) தொடர்பான ஹதீஸ் பல்வேறு குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரண்படுவதைக் கடந்த இதழில் விரிவாகப் பார்த்தோம்.

குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் சாலிமுடைய சம்பவம் முரண்படுவதால் இந்தச் சம்பவம் உண்மை என்று ஒரு முஸ்லிம் நம்பக் கூடாது என்று நாம் கூறி வருகிறோம்.

இந்த ஹதீஸைச் சரி காண்பவர்களின் விளக்கம்

“பருவ வயதை அடைந்தவருக்குப் பால் புகட்டுதல் என்ற சட்டம் ஸாலிமுக்கு மட்டும் உரியது. இரண்டு வருடத்திற்குள் தான் பால்குடிச் சட்டம் ஏற்படும் என்று கூறும் குர்ஆனுடைய சட்டத்திலிருந்து இது விதி விலக்கானது. எனவே குர்ஆன் வசனத்திற்கும், விதிவிலக்கான இந்த ஹதீஸிற்கும் மத்தியில் எந்த முரண்பாடும் இல்லை” என்று வாதிடுகின்றனர்.

நமது விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் நமக்கு முன்மாதிரி என்பதால் அவர்கள் செய்த அனைத்துக் காரியங்களையும் பாகுபாடு இல்லாமல் அனைவரும் எடுத்துச் செயல்பட வேண்டும். இந்த அடிப்படையில் தான் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். பின்வரும் வசனம் இதையே உணர்த்துகிறது.

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 59:7

பொதுவான சட்டத்திலிருந்து சில நேரங்களில் சிலருக்கு விதிவிலக்கைத் தரும் அதிகாரம் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உண்டு. யாருக்கு எது விதிவிலக்கு என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாக உணர்த்தினால் அதை விதிவிலக்கு என்று எடுத்துக் கொள்ளலாம். இதற்குப் பின்வரும் ஹதீஸ் உதாரணமாக உள்ளது.

இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்குக் குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூபுர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்து விட்டார்கள். அவர் (நபியவர்களிடம்) “என்னிடத்தில் முஸின்னாவை விடச் சிறந்த ஆறு மாதக் குட்டி உள்ளது. (அதைக் குர்பானி கொடுக்கலாமா?)” என்றார். “முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: பரா (ரலி)

நூற்கள்: புகாரி 5560, முஸ்லிம் 3965

ஆறு மாதக் குட்டியைக் குர்பானி கொடுப்பது யாருக்கும் அனுமதியில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் அபூபுர்தா (ரலி) அவர்களுக்கு மட்டும் இவ்விஷயத்தில் அனுமதி வழங்கியுள்ளார்கள். இச்சலுகை அபூபுர்தா (ரலி) அவர்களுக்கு மட்டும் உரியது என்பதை நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தி உள்ளார்கள்.

தனிப்பட்ட சலுகை என்றோ, விதிவிலக்கென்றோ சொல்வதாக இருந்தால் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாக உணர்த்த வேண்டும். அவ்வாறு தெளிவாக உணர்த்தா விட்டாலும் விதிவிலக்கு என்பதைச் சுட்டிக் காட்டும் வாசகம் ஹதீஸில் இடம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு உதாரணமாகப் பின் வரும் ஹதீஸ்களை எடுத்துக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் பத்ரு கிணற்றுக்கருகில் நின்று கொண்டு (கிணற்றில் வீசப்பட்ட இறந்து விட்ட எதிரிகளைப் பார்த்து) “உங்களது இறைவன் உங்களுக்கு வாக்களித்ததைப் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கூறினார்கள். பின்பு, “நான் கூறுவதை இவர்கள் இப்போது செவியுறுகிறார்கள்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 3981

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பது பொதுவான விதி. ஆனால் இந்தப் பொதுவான விதிக்கு இந்த ஹதீஸ் விலக்காக அமைந்துள்ளது. ஆனால் இந்த ஹதீஸில், பத்ருப் போரில் இறந்துவிட்ட எதிரிகள் இந்த இடத்தில் மட்டும் கேட்கிறார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறவில்லை. மாறாக “இப்போது கேட்கிறார்கள்’ என்று கூறுவதன் மூலம் எப்போதும் கேட்க மாட்டார்கள்; விதிவிலக்காக இப்போது மட்டும் தான் கேட்பார்கள் என்று நபியவர்கள் உணர்த்துகிறார்கள்.

இது போன்று பால்குடிச் சட்டம் தொடர்பாக ஸாலிமுக்குச் சொன்ன சட்டம், ஸாலிமுக்கு மட்டும் உரியது என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாகவோ, மறைமுகமாகவோ கூறினார்களா? என்பதே நமது கேள்வி. அவ்வாறு கூறாத போது எல்லோருக்கும் பொருந்துமாறு அமைந்த ஹதீஸை ஸாலிமுக்கு மட்டும் குறிப்பானது என்று கூறி இதை ஓரங்கட்டுவது ஏன்?

இந்தச் செய்தி விகாரமான முடிவைத் தருவதால் இதைச் செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்த இவர்கள் ஸாலிமுக்கு மட்டும் உரியது என்று கூறி அந்தக் காலத்துடன் இந்த அசிங்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட எண்ணுவது தான் ஹதீஸைப் பாதுகாக்கும் முறையா?

ஸாலிமுக்கு மட்டும் இச்சட்டம் உரியது என்று கூறுவதால் இவர்களும் ஒரு விதத்தில் நம்மைப் போன்று இந்த ஹதீஸை மறுக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் இதை நபி (ஸல்) அவர்கள் இந்தச் செயலைச் செய்யச் சொன்னார்கள் என்பதை மட்டும் ஒத்துக் கொண்டு இவர்கள் செயல்படுத்த மறுக்கிறார்கள்.

இந்தச் செய்தி விகாரமான பொருளைத் தருவதால் இதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல், “இச்சட்டம் மாற்றப்பட்டு விட்டது’ என்று எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் சிலர் கூறியுள்ளார்கள். நாம் கூறியதைப் போன்று தெளிவாக யாரும் மறுக்கவில்லை என்றாலும் இந்த ஹதீஸை ஓரங்கட்டுவதற்குரிய முயற்சிகளை நமக்கு முன்பே செய்துள்ளார்கள்.

இவர்கள் கையில் எடுத்துள்ள “பிரத்யேகமான சலுகை’ என்ற இந்த அளவுகோலை நாம் கையில் எடுத்து பல ஹதீஸ்களுக்கு தீர்ப்புச் சொன்னால் இவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நெஞ்சில் கையை கட்டினார்கள் என்று வரும் செய்தி அவர்களுக்கு மட்டும் உரியது என்று வாதிட்டால் அந்த வாதம் சரியா? இப்படியே பல ஹதீஸ்களுக்கு நம் மனம் போன போக்கில் பிரத்யேகமானது என்று கூறினால் மார்க்கத்தை இழக்க நேரிடும். எனவே பிரத்யேகமான சட்டம் என்று கூறுவதானால் மேல் சொன்ன அளவுகோலைப் பயன்படுத்தியே சொல்ல வேண்டும்.

யூகம் வேண்டுமா? உறுதி வேண்டுமா?

இது போன்ற விளக்கத்தை இந்த அறிஞர்கள் கூறுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் உள்ளது. ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர்த்து, நபி (ஸல்) அவர்களின் அனைத்து மனைவிமார்களும் “இச்சட்டம் ஸாலிமுக்கு மட்டும் உரியது’ என்று கூறியுள்ளதால் இந்த விளக்கம் தான் சரி என்று நினைக்கிறார்கள்.

ஆனால் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் கூறியதாக வரும் வாசகங்களை முறையாகக் கவனித்தால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய விளக்கத்தையே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்படுவார்கள்.

(ஸாலிமுக்குப் பால் புகட்டும் படி நபி (ஸல்) அவர்கள் கூறியதால்) இதை வைத்துக் கொண்டு ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னை யார் பார்க்க வேண்டும் என்றும் தன்னிடத்தில் யார் வர வேண்டும் என்று விரும்பினார்களோ அவர்களுக்குப் பால் புகட்டும் படி தனது சகோதர, சகோதரிகளின் மகள்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவர் பெரியவராக இருந்தால் ஐந்து முறை (பால் குடித்துவிட்டு) தன்னிடத்தில் வரும் படி (கூறினார்கள்). மக்களில் யாருக்கும் தொட்டிலில் பால் புகட்டாமல் இவ்வாறு பால் புகட்டி தங்களிடத்தில் வர வைப்பதை உம்மு சலமாவும் நபி (ஸல்) அவர்களின் ஏனைய மனைவிமார்களும் நாடவில்லை. அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக (இதன் விளக்கம்) எங்களுக்குத் தெரியாது. மக்களுக்கன்றி ஸாலிமுக்கு (மட்டும்) நபி (ஸல்) அவர்கள் அளித்த சலுகையாக இச்சட்டம் இருக்கக் கூடும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் சுபைர்

நூல்: அபூதாவூத் 1764

நபி (ஸல்) அவர்கள் ஸாலிமுக்கு மட்டும் இச்சலுகையை வழங்கினார்கள் என நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் உறுதிப்படக் கூறியதாக எந்த வாசகமும் மேலுள்ள ஹதீஸில் இடம் பெறவில்லை. மாறாக, “எங்களுக்குத் தெரியவில்லை; இது ஸாலிமுக்கு மட்டும் உரிய சட்டமாக இருக்கக் கூடும்’ என்று யூகமாகக் கூறியதாகத் தான் வந்துள்ளது.

ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களோ, இச்சட்டம் பொதுவானது என்பதை யூகமாகக் கூறாமல் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுத்தியும் காட்டியுள்ளதாக இச்செய்தி கூறுகிறது. இந்தச் செய்திகளையெல்லாம் சரி காணும் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் நபியவர்களின் ஏனைய மனைவிமார்கள் கூறியுள்ள யூகத்தை விட்டு விட்டு, பொதுவான சட்டம் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி செயல்படுத்திக் காட்டிய ஆயிஷா (ரலி) அவர்களின் வழிமுறையை ஏற்பதே சரியானதாகும்.

ஏனென்றால் உறுதியான கூற்றை ஏற்க வேண்டுமா? அல்லது யூகத்தை ஏற்க வேண்டுமா? என்று வரும் போது உறுதியாகக் கூறும் நபரின் தகவலை ஏற்பது தான் அறிவுடமை.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை இங்கு குறிப்பிட்டிருப்பதால் இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இந்தச் சட்டம் ஸாலிமுக்கு மட்டும் உரியது என்ற வாதிப்பவர்கள், இதைச் சான்றாகக் காட்டுவதால் இந்த ஹதீஸில் அவர்களது வாதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை, மாறாக அவர்களுக்கு எதிரான கருத்தே உள்ளது என்று சுட்டிக் காட்டுவதற்காக இந்த ஹதீஸைக் கூறியுள்ளோம்.

இதுவும் இட்டுக்கட்டப்பட்டது என்பதே நமது கருத்து.

இச்சட்டம் சம்பந்தமாக உம்மு ஸலமா மற்றும் ஆயிஷா (ரலி) ஆகிய இருவருக்கிடையில் விவாதம் நடந்ததாக ஒரு ஹதீஸ் கூறுகிறது. அதைக் கவனித்தால் பருவ வயதை அடைந்தவருக்குப் பால் புகட்டி பால்குடி உறவை ஏற்படுத்தலாம் என்ற சட்டம் அனைவருக்கும் உரியது என்ற முடிவையே இவர்கள் ஏற்க வேண்டிய நிலை ஏற்படும்.

உம்மு ஸலமா (ரலி) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களிடம், “விரைவில் பருவ வயதை அடையவிருக்கும் அந்தச் சிறுவன் உங்கள் வீட்டிற்குள் வருகிறானே! ஆனால் அவன் என் வீட்டிற்குள் வருவதை நான் விரும்ப மாட்டேன்” என்று கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்கான) முன்மாதிரி உங்களுக்குக் கிடைக்கவில்லையா?” என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

அபூ ஹுதைஃபாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! ஸாலிம் என் வீட்டிற்குள் வருகிறார். அவர் பருவ வயதையடைந்த மனிதர். இதனால் அபூ ஹுதைஃபாவின் மனதில் அதிருப்தி நிலவுகிறதுஎன்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ ஸாலிமுக்குப் பால் கொடுத்து விடு. (இதனால் பால்குடி உறவு ஏற்பட்டு) அவர் உன் வீட்டிற்கு வரலாம்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைனப் பின்த் உம்மி ஸலமா (ரலி)

நூல்: முஸ்லிம் 2881

பெரியவருக்குப் பால் புகட்டுவதை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் மறுக்கிறார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸைக் காட்டி, “அல்லாஹ்வின் தூதரிடத்தில் முன்மாதிரி இல்லையா?’ என்று கேட்டு இச்சட்டத்தை எல்லோரும் கடைப்பிடிக்கலாம் என்று உறுதிப்படுத்துகிறார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் தொடுத்த கேள்விக்கு உம்மு ஸலமா (ரலி) அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இவ்வாறு இந்தச் செய்தி கூறுகிறது.

ஸாலிமுக்கு மட்டும் உரியது என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறுவது தான் நபிவழி என்றால் உம்மு ஸலமா அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் வாதத்திற்கு எந்தவிதமான மறுப்பும் தராமல் ஏன் அமைதியாக இருந்தார்கள்?

ஆயிஷா (ரலி) அவர்கள் உம்மு ஸலமாவை நோக்கி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்களுக்கு முன்மாதிரி இல்லையா?” என்று கேட்ட கேள்விக்கு, ஸாலிமுக்கு மட்டும் உரியது என இன்றைக்கு வாதிக்கும் இவர்களும் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளார்கள்.

இமாம் அல்பானீ அவர்களும், இப்னு ஹஸ்ம் அவர்களும் ஸாலிமுடைய இந்த ஹதீஸை மையமாக வைத்து, பெரியவருக்குப் பால் புகட்டும் இச்சட்டத்தைப் பொதுவானது என்றும் நேரடியாக ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பால் குடித்து பால்குடி உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்கள்.

அதிக எண்ணிக்கை ஆதாரமாகாது

ஆயிஷாவைத் தவிர்த்து நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் ஸாலிமுக்கு மட்டும் உரியது என்று கூறுவதால் அதிகமானவர்கள் சொல்கின்ற கருத்தையே ஏற்க வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.

ஒரு சம்பவத்தை, ஒரு செயலைப் பார்த்த அல்லது ஒரு தகவலைக் கேட்ட நான்கு பேர் ஒரு விதமாக அறிவிக்கும் போது, ஒருவர் மட்டும் அதற்கு முரணாக அறிவித்தால் பெரும்பான்மை, சிறுபான்மை என்று பார்த்து, பெரும்பான்மையினர் அறிவிப்பது தான் சரியானது என்று முடிவு செய்யலாம்.

உதாரணமாக, நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் கைகளை உயர்த்த மாட்டார்கள் என்று பலர் அறிவிக்கிறார்கள். ஒருவர் மட்டும் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் கைகளை உயர்த்தினார்கள் என்று அறிவிக்கிறார். இதில் பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டு, ஒருவர் மட்டும் தனித்து அறிவிப்பதை விட்டு விடலாம். ஏனென்றால் அதிகமானவர்கள் பார்த்ததில் தவறு ஏற்படுவதை விட, ஒருவர் மட்டும் மாற்றமாக அறிவிப்பதால் அவர் பார்த்ததில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் இவ்வாறு முடிவெடுக்கலாம்.

ஆனால் ஒரு ஹதீஸைச் சிந்தித்து அதிலிருந்து ஒரு சட்டத்தைப் பெறும் விஷயத்தில் பெரும்பான்மை, சிறுபான்மை என்று பார்க்க முடியாது. ஒரு ஹதீஸிலிருந்து பத்து பேர் ஒரு சட்டம் எடுக்கிறார்கள். ஒருவர் மட்டும் அதற்கு மாற்றமாக வேறொரு சட்டத்தை எடுக்கிறார் என்றால் இதில் பெரும்பான்மை, சிறுபான்மை என்று பார்க்க முடியாது. ஏனென்றால் சிந்தித்து விளங்கும் விஷயத்தில் அந்தப் பத்து பேரின் விளக்கத்தை விட, இந்த ஒருவரின் விளக்கம் சரியானதாக இருக்க வாய்ப்புள்ளது.

எனவே பெரும்பான்மையினர் கூறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தகவலுக்கு உரிய விதி. சிந்தித்து விளங்கும் விஷயங்களுக்கானது அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் இச்சட்டத்தைத் தமது யூகமாகச் சொல்லாமல் இது தான் நபிவழி என்று உறுதி செய்கிறார்கள். எனவே இங்கு அதிகமானவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆயிஷா (ரலி) அவர்களும் மற்ற மனைவிமார்கள் அனைவரும் ஹதீஸைப் பற்றிய ஞானத்தில் சமமான அந்தஸ்து உடையவர்கள் என்றால் இந்த வாதத்தை முன் வைக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்களின் ஏனைய மனைவிமார் களை விட ஆயிஷா (ரலி) அவர்கள் மார்க்க விஷயத்தில் மிகச் சிறந்த தனித்துவத்தைப் பெற்றிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் அதிக ஹதீஸை அறிவித்தவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் தான். ஸஹாபாக்கள் யாருக்கும் தெரியாத சட்டங்களைக் கூட ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸைக் கூறி விளக்கியுள்ளார்கள். அபூஹுரைரா, உமர், இப்னு உமர் போன்ற பெரும் நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஸ்களில் குறையைக் கண்டு பிடித்து சரி செய்தவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஹதீஸைச் சொல்லும் போது அதில் குறுக்கு விசாரணை செய்து துல்லியமாக விளங்கிக் கொண்டவர்கள். இவ்வளவு பெரிய மேதையாகத் திகழ்ந்த ஆயிஷா (ரலி) அவர்கள், ஸாலிமுடைய சம்பவம் பொதுவானது என்று கூறியதாக வரும் போது அதைப் புறக்கணித்து விட்டு அதிகமான ஆட்கள் சொல்கிறார்கள் என்ற வாதத்தை எழுப்புவது எவ்வளவு பெரிய அறிவீனம்!

வளரும் இன்ஷா அல்லாஹ்