பரவுகின்ற ஏய்ட்ஸுக்கு பலியாகும் குழந்தைகள்
அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்!
அல்குர்ஆன் 93:9
அனாதைகளை அடக்குமுறை செய்யாமல் அரவணைக்கச் சொல்லும் அல்லாஹ்வின் வசனம் இது!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் அனாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்” என்று கூறியபடி தம் சுட்டு விரலையும், நடு விரலையும் அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி)
நூல்: புகாரி 5304
அனாதைகளை ஆதரிப்பதால், அரவணைப்பதால் அடையப் போகும் பலனை அறிவிக்கின்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ் இது! இத்தனையும் எதற்கு?
ஒரு குழந்தையின் உலகமே தாய் தான். தாய்க்கு முன்னால் மற்ற உறவுகள் எல்லாமே எள்ளளவும் மதிப்பைப் பெறுவதில்லை. ஒரு தந்தை கூட அந்த இடத்தை அடைய முடிவதில்லை. முதல் மூன்று இடங்களைத் தாய்க்கு அளித்து விட்டு, நான்காவது இடத்தைத் தான் நபி (ஸல்) அவர்கள் தந்தைக்கு வழங்குகின்றார்கள். தந்தைக்கே நான்காவது இடம் என்றால் மற்றவர்களுக்கு என்ன ஸ்தானம்? என்பதை யூகித்துக் கொள்ளலாம்.
தாயன்புக்கு நிகர் இவ்வுலகில் இல்லை என்று நாம் தெளிவாக அடித்துக் கூறலாம். அந்தத் தாயை ஒரு குழந்தை இழந்து விடுகின்ற போது அது தந்தையின் அரவணைப்புக்குள் வருகின்றது. தந்தையை இழந்து விடும் போது அது அடுத்தகட்ட உறவினர் அல்லது அயலார் அரவணைப்புக்கு வருகின்றது.
இந்த அடுத்தகட்ட உறவினர் அல்லது அயலாரால் பெற்றோர் செலுத்திய பாசத்தை, அன்பைச் செலுத்த முடியாது. அதனால் அந்தக் குழந்தைகளை அடிக்கவும், அடக்கவும் தலைப்படுவர். அத்தகையவர்களை நோக்கித் தான் மேற்கண்டவாறு அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறு அடிக்காமல் பொறுமையுடன் அந்தக் குழந்தைகளைப் பராமரிக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அண்மை எனும் பாக்கியம் சுவனத்தில் சன்மானமாகக் கிடைக்கின்றது.
பெற்றோர் இறந்து விடுவதால் ஏற்படும் அனாதை நிலையைத் தான் நாம் இங்கு குறிப்பிடுகிறோம். ஆனால் இன்று பெற்றோர் இருந்தும் பிள்ளைகள் அனாதைகளாகின்றனர்.
“பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு” என்று சொல்வார்கள். இந்தப் பழமொழிக்கு எடுத்துக் காட்டாகத் திகழ வேண்டிய தாய்மார்களே தங்கள் பிஞ்சு மனம் கொண்ட பிள்ளைகளை, பால் மணம் மாறாத பசுந்தளிர்களை, பெற்றவுடன் மருத்துவமனையில் விட்டு விட்டுப் போய் விடுகின்றனர்.
நமது நாட்டிலும் இது நடக்கின்றது என்றாலும் ரஷ்யாவில் தற்போது இது அதிகரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைகளில் குழந்தைகளை அப்படியே போட்டு விட்டுத் தாய்மார்கள் சென்று விடுகின்றனர். ஏன்? பால் சுரக்கவில்லையா? அல்லது அழுது ஏங்கும் அந்தச் சிசுவைத் தன் மேனியின் வெப்பக் கதகதப்பில் வைத்து வளர்ப்பதற்குப் பணமில்லையா? இதுவெல்லாம் காரணமல்ல!
1982ல் உலகுக்கு அறிமுகமான எய்ட்ஸ் என்ற கொடிய நோய் தான் இதற்குக் காரணம்!
தங்களைத் தொற்றிக் கொண்ட இந்த நோய் தங்கள் குழந்தை களையும் பாதித்து விடுவதால் அந்தக் குழந்தைகளை அரசு மருத்துவமனைகளில் அனாதைகளாக விட்டு விடுகின்றனர்.
உலகில் அதிக வேகமாகப் பரவி வரும் எய்ட்ஸ் நோயின் தாயாக ரஷ்யா திகழ்கின்றது. நாளொன்றுக்கு நூறு பேர்களை இந்த எய்ட்ஸ் தீ பற்றிக் கொள்கின்றது. இதற்குத் தாயும், சேயும் விதிவிலக்கல்ல! இது தான் தாயையும், சேயையும் பிரிக்கும் தீயாகப் பற்றி எரிகின்றது.
ரஷ்யாவின் டிவர் நகர மருத்துவமனையில் நான்கு குழந்தைகள் பிரசவமாகின்றன. அதில் இரண்டு குழந்தைகளின் தாய்களைக் காணவில்லை. காரணம் அவ்விரு தாய்களுக்கும் எய்ட்ஸ் உள்ளது தான்.
எய்ட்ஸ் எனப்படும் ஹெச்.ஐ.வி. கிருமியினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் ஹெச்.ஐ.வி. தாக்குவதில்லை. அப்படித் தாக்கினால் அதைக் கண்டுபிடிப்பதற்கு ஆகும் காலம் பதினெட்டு மாதங்கள். அதன் பின்னர் அந்தக் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. இருப்பது உறுதி செய்யப் பட்டால் அதன் தலைவிதி அனாதை நிலையம் கூடக் கிடையாது. குழந்தைகளுக்கான தொற்று நோய் மருத்துவமனை தான். இந்தக் குழந்தைகளுக்கு வேறு புகலிடம் இல்லை; போக்கிடமும் இல்லை.
இவ்வாறு ஒரு நாளைக்கு ஹெச்.ஐ.வி.யின் பிடியில் பிறக்கும் குழந்தைகள் 20 ஆகும். அண்மை புள்ளி விபரப்படி இவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ரஷ்யாவில் மட்டும் 22,000 ஆகும்.
பரவுகின்ற எய்ட்ஸுக்கு, எந்தப் பாவமும் அறியாத இந்தப் பச்சிளம் குழந்தைகள் பலியாவதைக் கண்டு நமது இதயம் வெடித்து விடும் போல் இருக்கிறது. இன்று உலகம் இதற்கு ஒரு தீர்வை, நிரந்தரத் தீர்வைத் தேடிக் கொண்டிருக்கிறது.
எய்ட்ஸ் எனும் கண்டத்தை விட்டுத் தப்பிப்பதற்கான அந்தத் தீர்வு காண்டத்தை உபயோகிப்பதல்ல! அதற்குத் தேவை உறை மாற்றம் அல்ல! உள மாற்றமாகும். இஸ்லாம் எனும் இறை மார்க்கத்தை ஏற்பதாகும்.
மனிதர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக அவர்கள் செய்தவற்றில் சிலவற்றை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற் காகவும், அவர்கள் திருந்துவதற் காகவும் கடலிலும், தரையிலும் சீரழிவு மேலோங்கி விட்டது.
அல்குர்ஆன் 30:41
இந்த வசனத்தின் படி எய்ட்ஸ் என்பது மக்கள் தங்களுக்குத் தாங்களே தேடிக் கொண்ட தீ வினையாகும். இதற்குத் தீர்வு மனிதன் தன் தவறிலிருந்து திருந்தி, படைத்தவன் பக்கம் திரும்புவதாகும்.
அப்படித் திருந்தினால் இந்நோய்க்கு அல்லாஹ்வினால் நிவாரணம் வழங்கப்படும். இதற்குக் கீழ்க்கண்ட வசனம் சான்றாக அமைந்துள்ளது.
அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிலிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.
அல்குர்ஆன் 7:96
அந்த மக்கள் நம்பிக்கை கொண்டு, இறைவனை அஞ்சினால் பாக்கியங்களை வழங்கியிருப்போம் என்று இறைவன் உறுதியளிக்கிறான். பாக்கியங்களில் சிறந்தது ஆரோக்கியமான வாழ்வு எனும் பாக்கியமாகும். அந்தப் பாக்கியத்தை இறைவன் நிச்சயம் வழங்குவான்.
எனவே இறைவனை நம்பி, தவறிலிருந்து திருந்தினால் எய்ட்ஸ் எனும் இந்தச் சோதனையிலிருந்தும் அல்லாஹ் பாதுகாப்பான். இதைத் தவிர இதற்கு வேறு தீர்வு இல்லை.