பந்திக்கு முந்திய பாரசீகப் படையினர்

அபூபக்ர் (ரலி) வரலாறு                     தொடர் – 33

பந்திக்கு முந்திய பாரசீகப் படையினர்

எம். ஷம்சுல்லுஹா

காலிதின் கர்ஜனைக்குப் பெரும் புள்ளிகள் யாரும் பதிலளிக்கவில்லை. அவர்கள் காலிதின் குரலுக்குச் செவிமடுக்கவில்லை. ஆனால் மாலிக் பின் கைஸ் என்பவன் மட்டும் காலிதுக்கு நேராக வந்து நின்றான். தனக்கு நிகரில்லாத ஒருவன் தன்னை எதிர்க்க வந்ததைக் காலிதால் சகித்துக் கொள்ள முடியவில்லை. “இழிவான ஈனப் பிறவியே! உனக்கு என்ன இத்தனை துணிச்சல் வேண்டிக் கிடக்கிறது? நீ என்ன எனக்கு நிகரா?” என்று கூறி வாளில் ஒரே உரசல் தான். அவனது தலை கீழே விழுகின்றது. பந்தியில் இருந்தவர்களுக்குக் காலிதின் இந்தப் பந்தாட்டம் பயத்தைக் கொடுத்தது.

“உங்களை நான் எச்சரிக்க வில்லையா? இப்படியொரு தலையாய வன விலங்கு என் முன் களம் புகுந்த இந்நாளைப் போல் என் வாழ்நாளில் ஒரு நாளையும் நான் கண்டதில்லை” என்று தளபதி ஜாபான் கூறினான்.

 “காலித் படையை ஒரு கை பார்த்து விட்டு சாப்பாட்டில் வந்து கை வைக்கலாமா?” என்று பந்திக்கு முந்திய படை வீரர்கள் ஜாபானிடம் கேட்டனர். அதற்கு ஜாபான், “ஏதோ நீங்கள் தெரியாமல் பந்தியை விரித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய் விடவில்லை. இப்போதாவது எனக்குக் கட்டுப்படுங்கள். நீங்கள் விரித்து வைத்திருக்கும் உணவில் விஷத்தைக் கலந்து வையுங்கள். ஒருக்கால் போர்க்களம் அவர்களுக்குச் சாதகமானால் வெற்றி பெற்ற பின்னர் நிச்சயமாக இந்த உணவில் கை வைப்பார்கள். அவ்வாறு கை வைத்தால் காலியாக வேண்டியவர்கள் வெகு சீக்கிரம் காலியாகி விடுவார்கள். ஒருக்கால் போர்க்களம் நமக்குத் தான் என்றாகி விட்டால் எதிரிக்காக இப்படி ஒரு சதி செய்தோம் என்று நாம் சமாதானப்பட்டுக் கொள்ளலாம்” என்று ஜாபான் அவர்களிடம் கூறினான்.

“அது தேவையில்லை! எதிரிகளை வீழ்த்துவோம்; வைத்திருக்கும் உணவையும் சாப்பிடுவோம்” என்று படை வீரர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இதில் ஒரு தெம்பையும் தெளிவையும் பெற்ற ஜாபான் தனது வலது, இடது பக்கங்களின் படைகளுக்கு அப்துல் அஸ்வதையும், புஜைரையும் தளபதிகளாக நியமித்துப் போரில் குதித்தான்.

முன்னரே தயார் நிலையில் காலிதும், அவரது படையினரும் போரில் குதித்தனர். இரு படைகளும் மிக உக்கிரமாக மோதின. “யா அல்லாஹ்! இந்த எதிரிகளின் படைகளைப் பிடிப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பளித்தால் அவர்களில் எவரையும் விட்டு வைக்க மாட்டேன்” என்று அல்லாஹ்விடம் காலித் உருக்கமாகப் பிரார்த்தித்தார். அல்லாஹ் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்தான்.

பஹ்மான் ஜாதவைஹ் இந்தப் போருக்காக ஜாபானை அனுப்பி வைக்கும் போது, “அவசியம் ஏற்பட்டாலே தவிர நான் வருவதற்குள்ளாக போரில் குதிக்க வேண்டாம்” என்று கூறியிருந்தார். ஆனால் பஹ்மான் ஜாதவைஹ் குறிப்பிட்டது போல் போர் முனையின் சூழல் ஜாபானை விட்டு வைக்கவில்லை. அதனால் அவன் காலிதைக் களத்தில் எதிர் கொள்ளும் கட்டாயத்திற்கு உள்ளானான்.

போர்க்களத்தில் முஸ்லிம்களும், எதிரணியினரும் மிகக் கடுமையாகப் போரிட்டனர். முஸ்லிம்கள் எதிரணியிடமிருந்து பலத்த தாக்குதலை எதிர் கொண்டனர். போர்க்களத்தில் மிகப் பெரும் வலிமை வாய்ந்த பேராயுதம் பொறுமை தான். அந்தப் பொறுமையை இழந்து, புறமுதுகு காட்டி ஓடி விடுவார்களோ எனுமளவுக்கு எதிரிகள் முஸ்லிம்களை அடர்ந்தேறினர். ஆனால் முஸ்லிம்கள் பொறுமை காத்தனர். பொறுமையில் எதிரிப் படையினரை மிகைத்தும் விட்டார்கள்.

வாக்களித்த பஹ்மான் வரவில்லை

கிறித்தவ, இணை வைப்பு, பாரசீகப் படையினர் பேராவலோடும், பெரும் நம்பிக்கையோடும் எதிர்பார்த்த பஹ்மான் ஜாதவைஹ் வாக்களித்தபடி வரவில்லை. இது எதிரிகளுக்குப் பெரும் பின்னடைவானது. எதிரணிக்குள் பிசுபிசுப்பு ஏற்பட்டது. அதனால் அவர்கள் பின்வாங்கி ஓடத் துவங்கினர்.

“கைது செய்யுங்கள்! கைது செய்யுங்கள்! கைதாவதற்கு மறுப்பவர்களை மட்டும் கொல்லுங்கள்” என்று வீரத் தளபதி காலித் பின் வலீத் வீர முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்.

இஸ்லாமியப் படையினரின் வாள் வீச்சில் எதிரிகள் சரமாரியாகத் தங்கள் தலைகளை இழந்து கொண்டிருந்தனர். அதனால் அருகில் ஓடும் ஆறு இரத்தச் சிவப்பானது. இந்த வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு அதற்கு இன்றும் “இரத்த ஆறு’ என்று அழைக்கப்படுகின்றது.

பாரசீகப் பந்தியில் முஸ்லிம்கள்

அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மகத்தான ஒரு வெற்றியை அளித்தான். படைக்கு முன்னால் பந்தியில் சாப்பிடுவதற்கு அமர்ந்த பாரசீகப் படையினர் போரில் பலியாயினர். அந்தப் பந்தியில் விரிக்கப்பட்ட பகட்டான விரிப்பில் உணவுப் பண்டங்கள் பரிமாறுவதற்கு ஏதுவாக வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. உண்ணுவது தான் பாக்கி என்றிருக்கும் போது அவர்கள் போர்க்களத்தில் மாண்டனர்.

பந்திக்கு வந்த காலித் முஸ்லிம்களை நோக்கி, “சாப்பிடுங்கள்! இந்த உணவு வகையும் போரில் கிடைக்கும் வெற்றிப் பொருட்கள் தான்! உண்ணுங்கள்! உண்ணுங்கள்” என்று தமது படையினரை பந்தியில் உட்கார்ந்து சாப்பிடச் சொன்னார்.

அல்லாஹ் போரில் மட்டும் முஸ்லிம்களுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. இந்த உணவுக் களத்திலும் வெற்றியை அளித்தான். ஜாபானின் யோசனைப்படி இந்த உணவில் விஷத்தைக் கலந்திருக்க வேண்டும். ஆனால் பாரசீக, கிறித்தவப் படையினர் தாங்களே அந்த உணவை வந்து சாப்பிடுவோம் என்ற நம்பிக்கையில் அவற்றில் விஷம் கலக்க மறுத்தனர். அல்லாஹ்வின் அற்புத ஏற்பாடு! விஷமாக வேண்டிய விருந்து, முஸ்லிம்களின் வசமாக வேண்டும் என்பதற்காக அதைக் காத்து, போரின் வெற்றிப் பொருளாக முஸ்லிம்களுக்கு அளித்தான்.

பாரசீகத்தின் பகட்டான பந்தி

பொதுவாக முஸ்லிம்களைத் தவிர்த்து மற்றவர்கள் போருக்குப் புறப்பட்டு வரும் போது ஆடம்பரம், பெருமை மற்றும் ஆணவத்தோடு அணி வகுத்து வருவர். இதை அல்லாஹ் தனது திருமறையில் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.

தமது இல்லங்களிலிருந்து பெருமைக்காகவும், மக்களுக்குக் காட்டவும் புறப்பட்டோரைப் போன்றும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்தவர்களைப் போன்றும் ஆகி விடாதீர்கள்! அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகானதாகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! “இன்று மனிதர்களில் உங்களை வெல்ல யாருமில்லை; நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன்எனவும் கூறினான். இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த போது பின் வாங்கினான். “உங்களை விட்டும் நான் விலகிக் கொண்டவன். நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்என்று கூறினான்.

அல்குர்ஆன் 8:47, 48

பத்ருப் போரில் புறப்பட்டு வந்த அபூஜஹ்லைப் போன்று தான் இவர்களும் ஆடம்பரத்துடனும், பெருமையுடனும் புறப்பட்டு வந்தனர். “நீங்கள் வெல்வீர்கள்; கொல்லப்பட மாட்டீர்கள்” என்று ஷைத்தான், அபூஜஹ்லின் படைக்கு ஊட்டிய அதே தைரியத்தை இந்தப் பாரசீகப் படையினருக்கும் ஊட்டியிருந்தான். அவர்களைப் போன்றே இவர்களும் கொல்லப்பட்டு விட்டனர்.

அந்த மக்கள் இவ்வுலக வாழ்க்கையின் மீது கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடு தான் உயர் தரமான இந்த உணவுப் பந்தி!

இப்பந்தியில் கிராமப் புறத்து அரபிகள் அமர்ந்தனர். அவர்கள் இதுவரை இது போன்ற உணவு வகைகளைப் பார்த்ததில்லை. நாகரீகத்தின் உச்சியில் இருந்த பாரசீகத்தின் உணவு வகைகளை அவர்கள் இதுவரை கண்டதில்லை.

அதனால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த, அளவான வட்டத்தில் சமைக்கப்பட்ட ருகாக் எனும் மெல்லிய ரொட்டித் துண்டுகளைப் பார்த்து, “இதென்ன? ஆடை கிழிந்தால் ஒட்டித் தைப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட (ருகாஃ எனும்) அளவுத் துண்டுகளா?” என்று கேட்கின்றனர்.

அதற்கு, பாரசீகத்தின் நாகரீக வாழ்க்கையைப் பற்றி அறிந்த மக்கள், “ரகீகுல் ஈஷ் (சுகபோக வாழ்க்கை) தெரியுமா? அது தான் இது” என்று நகைச்சுவையாகக் கூறினர். இது தொடர்பான வார்த்தைகளில் உள்ள ஒற்றுமை இவ்வாறு நகைச்சுவையாகப் பேசுவதற்குக் காரணமாக அமைந்தது.

வளரும் இன்ஷா அல்லாஹ்