படத்தை வணங்கும் பரேலவிகள்

படத்தை வணங்கும் பரேலவிகள்

நபி (ஸல்) அவர்களின் கப்ரு என்ற பெயரில் ஒரு புகைப்படத்தை பரேலவிகள் புனிதமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்.

இது குறித்து லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் அளித்த ஃபத்வா இதோ:

பெறுதல்:

                முதல்வர் முஃப்தி ஹள்ரத் அவர்கள்

                ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி, லால்பேட்டை

கேள்வி:

கண்ணியமிகு முஃப்தி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்களூரில் சமீப காலமாக பொது இடங்களிலும் வீடுகளிலும் நமது பெருமானார் (ஸல்) அவர்களின் முபாரக்கான கப்ருடைய புகைப்படம் என்று ஒரு புகைப்படம் வைக்கப்படுகின்றது. புனிதமிகு புகாரி ஷரீப் மஜ்லிஸிலும் இப்படம் மாட்டப்பட்டு பச்சைக் குழல் விளக்கு பொருத்தப்படுகின்றது. இது உண்மையிலேயே நம் பெருமானாரின் கப்ருடைய படம் தானா? என்பதை ஆய்வு செய்வதற்காக எங்கள் முஹல்லாவைச் சேர்ந்த உலமாக்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் மேற்படி புகைப்படம் அருமைப் பெருமானாரின் கப்ருடைய புகைப்படம் என்பது தான் என்பதற்கு ஆதாரம் எதுவும் உள்ளதா? என நாங்கள் கேட்ட கேள்விக்கு புகைப்பட ஆதரவாளர்கள் சரியான பதிலும் சொல்லவில்லை. ஆதாரமும் காட்டவில்லை. உண்மையில் அது பெருமானாரின் கப்ருடைய படமாக இருந்தாலும் அதற்கு ஒளிவிளக்கு பொருத்தி வைப்பது ஆகுமா? மேலே குறிப்பிட்ட புகைப்படம் பெருமானாரின் முபாரக்கான கப்ருடைய படம் தானே? மேலே கண்ட கேள்விக்கு மார்க்க ரீதியாக ஃபத்வா வழங்கும்படியாக அன்புடன் வேண்டுகிறோம். வல்ல ரஹ்மான் என்றும் தூய்மையான நேர்மையான வழியில் செல்வதற்கு அருள்புரிவானாக!

இங்ஙனம்: மௌலவி அல்ஹாஜ் முஹம்மது பாரூக் ஆலிம், அல்ஹாஜ் ஷெய்கு முஹம்மது ஸாலிஹ் ஆலிம், மௌலவி அல்ஹாஜ் பாஸில் அஷ்ரப் ஆலிம், பேராசிரியர்கள் மற்றும் இமாம்கள், காயல்பட்டிணம்

பதில்:

நபியுடைய கப்ரு எப்படி இருந்தது என்பதற்கு அபூதாவூதுடைய ஹதீஸ் ஆதாரமாகும். புகைப்படத்தில் உள்ள கப்ரின் தோற்றம் நபியுடைய கப்ராக இருப்பதற்கு சாத்தியக்கூறு அறவே இல்லை. மௌலானா ஜலாலுத்தீன் ரூமியின் கப்ரை புகைப்படம் எடுத்து நபியின் கப்ராக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் வலைத்தளங்களில் காணக் கிடைக்கின்றன.

இப்போதும் கூட நபியின் கப்ரும், இரு தோழர்களின் கப்ருகளும் பூமி மட்டத்திலிருந்து சில அங்குலங்கள் மட்டுமே உயரமாக மேல்புறத்தில் சிகப்பு நிற மண்ணுடன் இருப்பதாக வரலாற்று கிதாபுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

சில முஸ்தஹப்பாக்களையும், ஆகுமான விஷயங்களையும் கூட பித்அத் பட்டியலில் ஆக்கி, அறவே இடம் தராத சவூதி அரசு, ஹதீசுக்கு மாற்றமாக நபியின் கப்ரு இருப்பதற்கு அறவே இடம் தராது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவைகளுக்கும் அப்பால் ஒருக்கால் அது கப்ரின் தோற்றமாக இருந்தாலும் அந்தப் புகைப்படத்திற்கு விஷேச விளக்குகள் பொருத்துவதும் மற்றுமுள்ள சடங்குகள் செய்வதும் முற்றிலும் ஹராமாகும். இதுவே பின்பு சிலை வணக்கமாக ஆக அல்லது பூஜிக்கும் பொருளாக ஆகிவிட சாத்தியம் உண்டு. எனவே அதை அகற்றுவது அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்கள் மேனியில் இருந்த பொருட்கள் ஆதாரப்பூர்வமாகக் கிடைத்தால் மட்டும் வரம்பு மீறாமல் அதிலிருந்து பரகத் பெறுவது ஆகுமானதாகும்.

இது லால்பேட்டை மதரஸா கொடுத்த மார்க்கத் தீர்ப்பாகும். இந்த மார்க்கத் தீர்ப்பைப் பொறுத்த வரையில், அது அசத்தியத்தின் மண்டைக் கபாலத்தை உடைத்துக் கலக்கும் அளவுக்கு சம்மட்டி அடியாக விழவில்லை. மாறாக, அசத்தியத்தை மயிலிறகால் வருடிக் கொடுக்கின்றது. எனினும் இந்த அளவுக்கு லால்பேட்டை மதரஸா வந்ததைப் பாராட்டியே ஆக வேண்டும்.

ஆனால் பரேலவிகளால் இதைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த ஃபத்வாவுக்கு எதிராக பரேலவிகள் பாய்கின்ற பாய்ச்சலைப் பாருங்கள்.

மேலுள்ள கேள்வியைக் கேட்டிருப்பவர்கள் வஹ்ஹாபிசத்தை ஆதரிப்பவர்கள் என்று மிகத் தெளிவாக உணர முடிகின்றது. அதனால் தான் இந்தக் கேள்வியை வஹ்ஹாபிசத்தை ஆதரிக்கும் லால்பேட்டை மதரஸாவில் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் உண்மையை விளங்க வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் ஃபத்வா பெறுவதற்கு மிக உயர்ந்த இடமான அவர்கள் வசிக்கும் காயல்பட்டணத்திலுள்ள சுன்னத் வல் ஜமாஅத்தின் கோட்டை, தமிழகத்தின் மிகப் பழமையான அரபுக் கல்லூரிகளில் ஒன்றான மஹ்லரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியில் இக்கேள்வியைக் கேட்டுத் தெளிவுபெற்றிருக்கலாம்.

எந்தக் கப்ரைப் பற்றி வினா எழுப்பப்பட்டுள்ளதோ அந்தக் கப்ரு அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் கப்ரு என்று கூறுவதற்கு தக்க ஆதாரம் எதுவும் எடுத்து வைக்கப்படவில்லை. நபி (ஸல்) அவர்களின் கப்ரை யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக கப்ரைச் சுற்றிலும் மறைப்பு ஏற்படுத்தியுள்ளது இன்றைய வஹ்ஹாபிய அரசு. சவூது குடும்பம் ஹிஜாஸ் மாகாணத்தை ஆக்கிரமித்து ஒரு நூற்றாண்டு கூட முடிவடையவில்லை. அப்படியெனில் அவர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பு நபி (ஸல்) அவர்களின் கப்ரு எல்லோரும் பார்க்கும்படியாகத் தான் இருந்தது.

இக்காலத்தில் பல இடங்களிலும் படமாகக் காட்சிப்படும் அந்தக் கப்ரு நிழற்படம் கருவியின் மூலம் படம் பிடிக்கப்பட்டதன்று. மாறாக, அது வரையப்பட்டதாகும். பிற்காலத்தில் தொழில் நுட்பத்தால் நிழற்படம் எடுக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது என்பது உலகம் அறிந்த உண்மை. பொதுவாக மிகச் சிறந்த ஓவியர்கள் ஒரே ஒரு தடவை மட்டும் பார்த்தால் அவர்கள் தங்களின் மூளையில் பதிவேற்றம் செய்து கொண்டு அதை அப்படியே வரைந்து விடுவார்கள் என்பதை நாம் அறிவோம். அப்படித் தான் இப்படமும் நபி (ஸல்) அவர்களின் கப்ரை நேரில் பார்த்த ஒரு ஓவியர் வரைந்துள்ளார். பின்பு உலகெங்கும் அப்படம் பரவியுள்ளது. அப்படம் நபி (ஸல்) அவர்களின் கப்ருடைய படம் கிடையாது என்று உறுதியுடன் கூற ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைப்படி இறைத்தூதர்களின் கப்ரு படங்களையும் இறைநேசர்களின் கப்ரு படங்கûயும் மாட்டி வைப்பதில் தவறேதும் இல்லை. அந்தக் கப்ருக்கு மாலையிடுவதும், அல்லது ஊதுபத்தி கொளுத்தி வைப்பதும் அதை பூஜிப்பதும் முற்றிலும் ஹராமாகும் என்று தீர்ப்பு கொடுப்பதை கைவிடுத்து சவூதியை மேற்கோள் காட்டித் தங்களின் உண்மை நிலைபாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள் மதரஸா மன்பவுல் அன்வார் ஆசிரியர்கள்.

லால்பேட்டை மதரஸாவின் ஃபத்வாவை விமர்சித்து பரேலவிகள் தங்கள் பத்திரிகையில் எழுதியிருப்பது இது தான்.

பொதுவாக பரேலவிகள் சமாதிகளை வணங்குபவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் சமாதிகளின் புகைப்படத்தையும் வணங்கச் சொல்லும் பைத்தியங்கள் என்பதை இவர்களின் இந்த விமர்சனம் நமக்கு உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய கப்ரு உட்பட அனைத்தையும் தகர்க்கச் சொல்கின்றார்கள். ஆனால் இந்தப் பரேலவிகள் கப்ருகளின் புகைப்படத்திற்காகக் கச்சை கட்டிக் கொண்டு கத்த ஆரம்பித்து விட்டார்கள்.

நல்ல வேளை! சவூதி அரசு நபி (ஸல்) அவர்களின் கப்ரைச் சுற்றி சுவர் கட்டி வைத்துள்ளது. இல்லையெனில் இவர்கள் அதிலிருந்து கல், மண்ணை எடுத்து வந்து இங்கொரு சிலையை எழுப்பி விடுவார்கள். பரேலவிகளின் இலட்சணம் எப்படியிருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ள அவர்களது இந்த விமர்சனம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.