கட்டளையிடும் திறன்

நிர்வாகவியல்                  தொடர்: 7

கட்டளையிடும் திறன்

ஒரு நிர்வாகத்தில் ஒரு தலைவரை விட அல்லது வேறொரு முன்னிலை நிர்வாகியை விட செல்வத்தில், பலத்தில், அறிவில், அனுபவத்தில் சிறந்தவர்கள் இருப்பார்கள். இவர்களது சிந்தனை ஓட்டமும் நடவடிக்கைகளும் அவர்களது சிறப்புத் தகுதிகளை, சிறப்பு அம்சங்களைப் பிரதிபலிக்கும்.

இது நிர்வாகத்தில் ஒரு சாராரை உயர்வு மனப்பான்மையுடனும் இத்தகுதிகள் இல்லாதவர்களை தாழ்வு மனப்பான்மையுடனும் செயல்பட வைக்கும். இது நிர்வாகத்தின் அங்கத்தினர்களிடமும் மற்ற உறுப்பினர்களிடமும் ஒரு பிளவை ஏற்படுத்தி, நாளடைவில் பிரிவினை எற்படவும் வழிவகுக்கும்.

ஆகையால் ஒரு தலைவர், தான் தலைமை வகிக்கும் நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் தனது அதிகார வட்டத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அதே வேளை அது சர்வாதிகாரமாகவும் இருந்து விடக் கூடாது. கட்டுப்பாடாகவும் வைத்திருக்க வேண்டும். மேலும் அதட்டுவது, நிர்ப்பந்தம் செய்வது போன்றவைகளைச் செய்யவும் கூடாது அப்படியென்றால் என்ன தான் செய்வது? என்ற கேள்வி எழும்.

இதோ, அல்லாஹ் கூறுகின்றான்:

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

அல்குர்ஆன் 3:159

அகில மாந்தர்களுக்கெல்லாம் அருட்கொடையாக வந்து மனித வாழ்வுக்கும் மறுமை வாழ்வுக்கும் தேவையான எல்லா வழிமுறைகளையும் விளக்கிய அவனது தூதர் கடுகடுப்பாக நடந்தாலும் அனைவரும் அவர்களை விட்டு ஓடிப் போவார்கள் என அல்லாஹ் குறிப்பிடுகின்றான். கடுஞ்சொல், கடுமையான குணம் ஆகியவற்றால் மக்களைக் கட்டுப்படுத்தி வைப்பது எதிர்மறையான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்.

மாறாக, கனிவான சொற்களால் வேலைகளை ஏவுவதன் மூலம் சிறப்பாக வேலை செய்பவர்களைப் பாராட்டுவது, அதற்காக அவர் கேட்கும்படி அவருக்காகப் பிரார்த்தனை செய்வது, எந்த ஒரு வேலையையும் சொன்னபடி செய்யவில்லை என்றால் பிறர் முன்னிலையில் கண்டிப்பதைத் தவிர்த்து தனியாக அழைத்துப் பேசுவது போன்ற அணுகுமுறை பொதுவாகக் கடைபிடிக்கப்பட்டால், சரியான கட்டுப்பாட்டுடன் பணிகள் நடைபெறும்.

ஆனால் சில நேரங்களில் மென்மையான அணுகுமுறை கை கொடுக்கவில்லை என்றால் கண்டிப்புடன் நடந்து தான் ஆக வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை ஜகாத் நிதிகளை வசூலிக்க ஒரு தோழரை அனுப்பினார்கள். வசூலித்துக் கொண்டு வந்த அந்தத் தோழர் ஒரு சிறு தெகையைத் தமக்கு என்றும், இன்னொன்றை ஜகாத் என்றும் கொண்டு வந்தார்.

இதைப் பாரதூரமான காரியமாக எடுத்துக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் மக்களையெல்லாம் திரட்டி மிம்பரில் ஏறி நின்று கோபத்துடன் உயர்ந்த தொனியில் ஓர் உரையை நிகழ்த்தினார்கள். ஏனெனில் லஞ்சத்தின் வாசல் திறந்து விடுவதற்கு இது ஒரு வழியாக அமைந்து விடக்கூடாது என்ற தொலை நோக்குப் பார்வையே காரணம்.

ஒரு தலைவர், நிர்வாகியின் தோற்றம், நடைமுறை, பேச்சு முறை போன்றவையும் அவர் பிறப்பிக்கும் கட்டளைகளை ஏற்கவோ, நிராகரிக்கவோ தூண்டும் அம்சங்களில் உள்ளவை. ஆக ஒரு நிர்வாகி அல்லது தலைவரின் கட்டளையிடும் திறனை சரியாகப் பயன்படுத்தினால் சூழ்நிலைகளுக்குத் தகுந்த அணுகுமுறைகளை கையாண்டால் நிர்வாகம் செவ்வனே நடைபெறும்.

பணிகளைப் பகிர்ந்தளிப்பது

சில தலைவர்களைப் பார்த்தால் எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள், எதற்கும் நேரமில்லை என்று கூறுவார்கள். ஏன் என்று விசாரித்தால் “நான் ஒருவனாக எதை எதைத் தான் செய்வது?” என்று வேலைகள் எல்லாம் தன் வசம் குவிந்து கிடப்பதை பெரிய களைப்பு, சிறிய அலுப்பு, கொஞ்சம் பொறுமை தோய்ந்த குரலில் கூறுவார்கள். இவருக்குப் பணிகளைப் பகிர்வது பற்றித் தெரியவில்லை!

மேலும் சில தலைவர்கள் இருக்கிறார்கள். தன்னிடம் உள்ள எல்லாப் பணிகளையும் பட்டியலிட்டுத் தனக்கு கீழ் உள்ளவர்களிடம் சாமர்த்தியமாக இறக்கி வைத்து விட்டு, தலைவர், செயலாளர், சேர்மன் என்ற பட்டத்தை மட்டும் தம் வசம் வைத்துக் கொள்வார்கள். இவர்கள் தம் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கின்றார்கள்.

மனிதர்களில் ஒரு பணிக்கு ஒருவரைத் தேர்வு செய்வது என்பது நூறு ஒட்டகங்கள் நிறைந்த ஒரு கூட்டத்திலிருந்து சவாரிக்காக ஒரு ஒட்டகத்தைத் தேர்வு செய்வது போன்றதாகும். நீங்கள் மிகச் சரியானதை தேர்வு செய்து கொள்ள மாட்டீர்கள். (நூற்கள்: புகாரி 6498, முஸ்லிம்)

நிர்வாக அங்கத்தினரின் திறமைகளைச் சரியாக மதிப்பிட்டு, தகுந்தவர்களிடம் உரிய பொறுப்பைக் கொடுப்பதோடு அவர்களின் பொறுப்புகள் சம்பந்தப்பட்ட காரியங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் அவாகளிடமே வழங்கி விட வேண்டும். அவர்களது பொறுப்புகளின் முடிவு பற்றிப் பதில் கூறும் பொறுப்பும் அவர்களுக்கே!

இப்போது நிர்வாகி என்ன செய்வார்? இப்படிப் பலருக்கும் வழங்கப்பட்ட பொறுப்புகளை எந்த அளவுக்குத் திறம்படச் செய்திருக்கின்றார் எனக் கவனிப்பார். அப்பணிகளைச் செயல்படுத்தும் போது ஏதாவது தடைகள், இடைஞ்சல்கள், பிரச்சனைகள் இருந்தால் அவற்றைத் தீர்த்து வைக்க முயற்சி செய்வார்.

ஒரு பொறுப்புக்கு ஒருவரை நியமிக்கும் போது எந்த அடிப்படையில் தேர்வு செய்வது என்பதைத் திருக்குர்ஆன் நமக்குக் கற்றுத் தருகின்றது.

நபி மூஸா (அலை) அவர்கள் மதியன் நகருக்கு வந்த போது அங்கிருந்த ஒரு நீர் நிலைக்கு அருகில் இரு பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். மற்றவர்களெல்லாம் தங்கள் கால்நடைகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருந்தார்கள். நபி மூஸா (அலை) அவர்கள் அந்தப் பெண்களுக்கு உதவிய போது, அவரை வேலைக்கு வைத்துக் கொள்ளுமாறு இரு பெண்களில் ஒருவர் தமது தந்தையிடம் கூறினார். அதற்கு அப்பெண்மணி கூறிய காரணம்…

என் தந்தையே! இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் வலிமையான நம்பகமானவரே நீங்கள் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவர்என்று அவர்களில் ஒருத்தி கூறினாள்.

அல் குர்அன் 28:26

ஆக ஒருவருடைய பலம், திறமைகள் மதிப்பிடப்பட வேண்டும். அதை வெளிப்படையான நடவடிக்கைகளில் கவனிக்கலாம். ஆனால் மேலை நாட்டு நிர்வாகவியல் பாடங்களில் யாரையும் நம்பக் கூடாது என்று தான் கற்றுத் தருகின்றார்கள். அதனால் ஒரு முறையை (ல்ர்ப்ண்ஸ்ரீஹ்) அனைவரும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பார்கள். ஆனால் இஸ்லாம் மறுமை நம்பிக்கையின் பயனால் ஒருவர் மற்றொருவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாய் நடக்க வேண்டும் என்று கூறுகின்றது,

அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள். உங்கள் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படும்.” (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

தொழில் நிறுவனங்களில் ஒவ்வொருவருடைய பொறுப்பும் சரிவர நிறைவேற்றப்படுகின்றதா என்பது கண்காணிக்கப்படும். அதே வேளை சிறந்த பணியாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பரிசுகள், சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை வழங்கி அவர்களை ஊக்குவித்து மேலும் மேலும் சிறப்பாகப் பணியாற்றத் தூண்டுகின்றது.

ஆனால் சமுதாய இயக்கப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு மேற்கண்ட ஊக்குவிப்பு முறை பொருந்தாது என்பதையும் தாண்டி அது ஆபத்தானதும் கூட. ஆனாலும் சில இஸ்லாமிய இயக்கத்தினர் இதைச் செய்து வருகின்றனர். இது பணியாளர்களை உண்மையான நோக்கத்திலிருந்து மாற்றி அற்ப உலக ஆதாயவாதிகளாக மாற்றி விடுகின்றது.

ஆகையால் மார்க்கப் பணியாற்றுபவர்களுக்கும் அவர்களுக்கென்று சோர்வு ஏற்படும் நேரம் உண்டு. இந்நேரத்திலெல்லாம் நபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயங் கூறுவார்கள். நரகத்தின் வேதனைகளைக் கூறுவார்கள்.

இந்தக் கொள்கைகளைக் கற்றுக் கொண்ட காரணத்தினால் முன் சென்றோர் அனுபவித்த துன்பங்களுக்கு முன்னால் நம் துன்பங்கள் ஒன்றும் இல்லை என அல்லாஹ்வும் கூறுகின்றான். குகை வாசிகள், பிர்அவ்னின் மனைவி, பெரும்பாலான நபிமார்கள், அவர்களுடன் நம்பிக்கை கொண்டவர்கள் இவர்களெல்லாம் நமக்கு முன்மாதிரிகள்.

ஒரு நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் போது பணிகளெல்லாம் பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டதால் அவரவர் பணிகளைப் பார்ப்பவர்கள் போய் விடுவார்கள். அடுத்தவன் என்ன செய்கின்றான் என்பதைப் பார்க்கவே மாட்டார்கள் என்ற உணர்ச்சியற்ற நிலை உருவாகாமல் ஒருவர் தம் பணிகளை முடித்துவிட்டால் மற்ற பொறுப்பாளர்களுக்கு அவர்களுடைய பணியில் உதவ வேண்டும். இந்த மனோநிலை உருவானால் தான் குழு உணர்வு மேம்படும். எல்லா இடங்களிலும் சில வேலைகளை கடினமானது என அனைவரும் கருதுவார்கள், அதைச் செய்வதற்கென்றே தனியாக ஒருவரும் இருப்பார். அனைவரும் சேர்ந்து அவரை வாட்டி வதைப்பார்கள். இது நாளடைவில் ஓர் அலுப்பை ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட நபரை அந்தப் பணியில் விரக்தியடையச் செய்யும்.

கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும் பறவைகளிடம் நமக்கு முன்மாதிரி உள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து ஐரோப்பாவுக்கும், ஐரோப்பாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கும் பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்ப மாறி மாறி வாழும் பறவைகள் ஏறத்தாழ பத்தாயிரம் கிலா மீட்டர் தூரத்தைப் பறந்து கடக்கின்றன.

அப்படிப் பறக்கும் போது ஒரு ஒழுங்கு முறையுடன் பறக்கும். அதாவது முதலில் ஒரு பறவை, அதைத் தெடர்ந்து இரண்டு, அதைத் தெடர்ந்து மூன்று, நான்கு, ஐந்து என பெருங்கூட்டமாகப் பறக்கும்.

முதலில் பறக்கும் ஒரு பறவைக்குத் தான் கடின வேலை. அது காற்றைக் கிழித்துக் கொண்டு எதிர்த்துச் செல்ல வேண்டும். அதனால் ஏற்படும் வெற்றிடத்தில் மற்ற பறவைகள் இலகுவாகச் பறக்கும். முதல் பறவை ஒரே பறவை அல்ல! வரிசையில் உள்ள அடுத்த பறவை, முதல் பறவை களைத்ததும் அந்த இடத்திற்கு வந்துவிடும். முதல் பறவை கடைசிக்குப் போய்விடும்.

இப்படி ஒரு ஒழுங்கு முறையுடன் பணிகளை மாற்றி மாற்றிச் செய்தால் களைப்பு, மனஸ்தாபங்கள், பொறாமை போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.

அல்லாஹ் தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: புகாரி 30, முஸ்லிம்

தகவல் சேகரித்தல்

ஒரு நிர்வாகம் திறம்படச் செயல்பட அதன் நிர்வாகிகளுக்குத் தெரிந்திருக்கும் தவகல்கள், விபரங்களில், அவர்களது துறை சார்ந்த அல்லது இயக்கம் சார்ந்த செய்திகள், வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சமகாலச் செய்திகள், அதில் தமது துறையுடன் தொடர்புடையது எனப் பிரித்து அறிந்து கொள்ள வேண்டும், இவற்றில் பொதுவானவைகளை மேலோட்டமாகத் தெரிந்து கொள்ளலாம். தனது துறை சார்ந்தவைகளை ஆழமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒரு முறை, ஒரு ராணுவ வீரரிடம் சமீபத்திய ரக விமானம் ஒன்றைப் பற்றி கேட்கப்பட்டது. அவர் அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

அதுபோல் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் மேலாளரிடம் சமீபத்தில் ஒரு மென்பொருளில் செய்யப்பட்டுள்ள மாறுதல் பற்றிக் கேட்கப்பட்டது. அவர் மூன்று மாறுதல்களுக்கு முன்புள்ள மென்பொருளைப் பற்றிப் பேசினார்.

மேற்கண்ட இருவரில் ஒருவருக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை; மற்றவருக்கு அவர் துறை சார்ந்த தகவல்களையே அவர் புதுப்பித்துக் கொள்ளவில்லை. இது தகவல் சேகரிப்பில் அவர்கள் எந்தக் கவனமும் செலுத்தவில்லை என்பதையும், இருக்கும் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளவில்லை என்பதையும் காட்டுகிறது.

இது தகவல் தொழில்நுட்ப காலம். நாம் நினைத்த நேரத்தில் உலகின் கடை கோடிக்கும் தொடர்பு கொள்ளலாம், கைபேசி வழியாக தொலைகாட்சி பார்க்கலாம்; மின்னஞ்சல் பார்க்கலாம்; குறுஞ்செய்தி அனுப்பலாம். ஆனால் இத்தனை வசதிகள் இருந்தாலும் பல நிர்வாகங்களிலும் ஒருவரையொருவர் குறை கூறிக் கொள்வதைப் பார்க்கலாம்.

காரணம், தலைவர் எனக்குத் தகவல் தரவில்லை; பொருளாளர்  என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை என பல நிர்வாகங்களிலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறிக் கொள்வார்கள். ஏன் நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடாது? நமக்குத் தான் தகவல் வேண்டும். அதற்காக நாம் செய்த முயற்சிகள் என்ன?

எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாத அந்தக் காலத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் பல வல்லரசுகளின் நிலையை அறிந்து வைத்திருந்தார்கள். அவர்களின் உள் விவகாரங்களையும் தெரிந்து கொண்டார்கள். பக்கத்து நாடான மக்காவில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக விஷேசக் கவனம் செலுத்தினார்கள். இப்படி இன்று நிர்வாகிகளில் பலர் உலக விஷயங்களைத் தெரிந்து வைப்பதில்லை.

பெருமானார் (ஸல்) அவர்கள் தம் ஊரில் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் குருவி செத்து விட்டதைக் கூட கேட்டறிந்து கொள்ளத் தவறியதில்லை. அல்லாஹ் பல விஷயங்களை அவர்களுக்கு அறிவித்துத் தந்த போதிலும் அவர்களாகக் கடும் முயற்சி செய்து அறிந்து கொண்டவைகளும் ஏராளம். அவை தான் நமக்கு முன்மாதிரி!

கண்காணித்தல்

நிர்வாகத்தில் நமக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடம் ஏதாவதொரு பணியை ஒப்படைத்து விட்டால் அதோடு தனது வேலை முடிந்து விட்டது என்று பெரும்பாலான நிர்வாகிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் அதற்குப் பின்பும் வேலை இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் அதற்குப் பின்பு தான் வேலையே இருக்கின்றது.

  1. ஒப்படைக்கும் போது குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துத் தருவது.
  2. ஒப்படைக்கப்பட்ட பணியில் எந்த அளவு நிறைவேறியுள்ளது என்பதை அவ்வப்போது தெரிந்து கொள்வது.
  3. குறித்த நேரத்தில் பணிகள் முடியவில்லை எனில் அதற்கான காரணத்தைக் கண்டறிவது.
  4. தடைகள் ஏதேனும் இருந்தால் தலைவர் அல்லது முக்கிய பொறுப்பாளர்கள் நேரடியாகக் களமிறங்கி தடைகளை அகற்றுவது.
  5. வசதிகள் குறைவாக உள்ளது எனில் அவற்றைச் சரி செய்து கொடுப்பது.
  6. குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பவர்களை அழைத்துப் பாராட்டுதல், அவர்களுக்காக மனமாரப் பிரார்த்தனை செய்வது, தொழில் நிறுவனங்கள் எனில் அவர்களுக்கு சன்மானம் வழங்கிப் பாராட்டுதல்.

பொறுப்புகளைப் பிரித்துக் கொடுத்த பிறகு மேற்கண்ட பணிகளை ஒரு நிர்வாகி மேற்கொள்ள வேண்டும்.