முதஷாபிஹாத் ஓர் ஆய்வு

முதஷாபிஹாத் ஓர் ஆய்வு

அவன் தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம் என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.

அல்குர்ஆன் 3:7

(ஜான் டிரஸ்ட் மொழி பெயர்ப்பு)

(முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்று கின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் “இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையேஎனக் கூறுவார்கள். அறிவுடை யோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.

அல்குர்ஆன் 3:7

(நமது மொழி பெயர்ப்பு)

மேற்கண்ட வசனத்தில், “இரு கருத்தைத் தருகின்ற வசனங்கள்” என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில், “முதஷாபிஹாத்” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள “முதஷாபிஹாத்” என்றால் எவை என வரையறுப்பதிலும், “முதஷாபிஹாத்” வசனங்களை விளங்க முடியுமா? முடியாதா? என்பதிலும் அறிஞர்களிடம் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன.

இந்தக் கருத்து வேறுபாடு இன்றோ, நேற்றோ தோன்றியதல்ல! தப்ஸீர் என்ற பெயரில் பலரும் பலவிதமாக எழுதி வைத்த பின்னர் தான் இந்தக் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா? என்றால் அதுவும் இல்லை. மாறாக நபித்தோழர்கள் காலத்திலேயே இது பற்றி அபிப்ராய பேதங்கள் இருந்து வந்துள்ளன.

ஒரு வசனத்திற்குப் பொருள் செய்வதில் ஏன் இரண்டு விதமான கருத்துக்கள் தோன்ற வேண்டும்? அதுவும் நேர் முரணான இரு கருத்துக்கள் எவ்வாறு தோன்றின? ஒரு சாரார் “முடியும்” என்று கூறுவதற்கும், மற்றொரு சாரார் “முடியாது” என்று கூறுவதற்கும் அந்த வசனத்தையே ஆதாரமாகக் கொள்ளக் காரணம் என்ன? என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இரண்டு சாராரும் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும், அவற்றில் உள்ள நிறை, குறைகளையும் அலசுவோம். இறுதியாக “முதஷாபிஹ்” என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்வோம்.

காரணம் என்ன?

அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட (முஹ்கம்) வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில (முதஷாபிஹ்) வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில்    இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர்.

இது திருக்குர்ஆனின் 3:7 வசனத்தின் ஒரு பகுதியாகும். இந்தப் பகுதியைப் புரிந்து கொள்வதில், விளங்குவதில் மார்க்க அறிஞர்கள் எவரும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. ஆனால் இவ்வசனத்தில் அடுத்த பகுதியை விளங்குவதில் மொழி பெயர்ப்பதில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களைக் கொள்கிறார்கள்.

“லாயஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு வர்ராஸிகூன பில் இல்மி யகூலூன ஆமன்னா பிஹி குல்லுன் மின்இன்தி ரப்பினா”

இந்தப் பகுதியில் தான் அறிஞர்கள் இரு வேறு கருத்துகளைக் கூறுகின்றனர். இந்த சொற்றொடரைக் கீழ்க்கண்ட வகையில் இரு பாகங்களாகப் பிரிக்கலாம்.

  1. லாயஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு
  2. வர்ராஸிகூன பில் இல்மி யகூலூன ஆமன்னா பிஹி குல்லுன் மின்இன்தி ரப்பி7னா

அதே தொடரை வேறு விதமாகவும் பிரிக்க இயலும்.

  1. லாயஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு வர்ராஸிகூன பில் இல்மி
  2. யகூலூன ஆமன்னா பிஹி குல்லுன் மின்இன்தி ரப்பினா

இந்த இரண்டு விதமான பிரிவினைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனமாகக் கொண்டு, இதனால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.

முதல் சாரார், லாயஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு என்பதை ஒரு பிரிவாகக் கொள்கிறார்கள். இதன் பொருள்: “முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது.

“வர்ராஸிகூன பில் இல்மி யகூலூன ஆமன்னா பிஹி குல்லுன் மின்இன்தி ரப்பினா” என்பதை இரண்டாவது பிரிவாகக் கொள்கிறார்கள். இதன் பொருள்: கல்வியில் உறுதியுடையோர், “இதை நாங்கள் நம்பினோம்; அனைத்துமே எங்கள் இறைவனிடமிருந்து (வந்தவை) தான்” என்று கூறுவார்கள்.

அதாவது, முதஷாபிஹ் என்ற வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான். மற்றவர்கள் யாரும் விளங்க முடியாது என்பது முதல் சாராரின் கருத்து.

இரண்டாவது சாரார், “லாயஃலமு தஃவீலஹு இல்லல்லாஹு வர்ராஸிகூன பில் இல்மி” என்பதை ஒரு பிரிவாகக் கொள்கிறார்கள். இதன் பொருள்: முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வையும் கல்வியில் உறுதியுடையவர்களையும் தவிர வேறு யாரும் அறிய முடியாது.

“யகூலூன ஆமன்னா பிஹி குல்லுன் மின்இன்தி ரப்பினா” என்பதை இரண்டாவது பிரிவாகக் கொள்கிறார்கள். இதன் பொருள்: “இதை நாங்கள் நம்பினோம்; அனைத்துமே எங்கள் இறைவனிடமிருந்து (வந்தவை) தான்” என்று கூறுவார்கள்.

அதாவது முதஷாபிஹ் என்ற வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வும் அறிவான்; கல்வியில் உறுதி மிக்கவர்களும் அறிவார்கள்.  அறிவு குறைந்தவர்களால் இதை விளங்க முடியாது என்று இந்த சாராரின் பார்வை செல்கின்றது.

இரண்டுக்கும் இடையே மிகப் பெரிய முரண்பாட்டை நாம் காண்கிறோம். இப்படி எதிரும் புதிருமான இரண்டு மொழி பெயர்ப்புகள் ஏற்படும் போது, இரண்டையுமே சரி என்று கூற முடியாது. இரண்டையும் தவறு என்றும் கூற முடியாது. இரண்டில் ஏதோ ஒன்று சரியாக இருக்க வேண்டும். மற்றொன்று தவறாக இருக்க வேண்டும். இதை எவ்வாறு முடிவு செய்வது?

தெளிவான அரபு மொழியில் அருளப்பட்ட திருக்குர்ஆனின் இந்த வசனத்திற்கு யார் செய்த பொருள் சரி? என்று முடிவு செய்திட அரபு மொழி இலக்கணத்தை நாம் ஆராய்ந்தால், இந்த இரண்டு அர்த்தங்களும் இலக்கணத்தை ஒட்டியே அமைந்துள்ளன. இலக்கணத்தில் எந்த விதியையும் இந்த இரண்டு மொழி பெயர்ப்புகளுமே மீறி விடவில்லை.

இன்னும் சொல்வதானால் அரபு இலக்கணம் இந்த இரண்டு அர்த்தங்களுக்கும் இடம் தருவதால் தான் இந்த சர்ச்சையே தோன்றியது. சரியான பொருளைப் புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இலக்கண விதிகள் சில சமயங்களில் இப்படிக் காலை வாரி விடுவதுண்டு. அரபு மொழி உட்பட எந்த மொழியும் இதிலிருந்து விதிவிலக்குப் பெறவில்லை.

அரபியர்கள் பேசிக் கொண்ட மொழி வழக்குப்படி, இலக்கண விதிகளின் படி இரண்டு அர்த்தங்களில் எதையும் தவறெனத் தள்ளி விட முடியாது. அதே நேரத்தில் முரண்பட்ட இரண்டு கருத்துக்களுமே சரி என்றும் கூற முடியாது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் திருக்குர்ஆனின் மற்ற வசனங்கள் இது பற்றி என்ன கூறுகின்றன? நபி (ஸல்) அவர்கள் இது பற்றி ஏதேனும் சொல்லியிருக்கிறார்களா? நபி (ஸல்) அவர்களிடம் பாடம் பயின்ற நபித்தோழர்கள் இதை எவ்வாறு புரிந்து வைத்திருந்தார்கள்? என்பதை ஆராய்ந்தால் 3:7 வசனத்திற்கு எவ்வாறு மொழி பெயர்ப்பது சரியானது என அறிய முடியும்.

முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று கூறக் கூடியவர்கள் தங்கள் கருத்தை நியாயப்படுத்திட பல ஆதாரங்களை எடுத்து வைக்கிறார்கள். (ஆனால் முதஷாபிஹ் என்றால் என்ன? என்பதில் அவர்களுக்குள்ளேயே ஆயிரம் விளக்கங்கள்; ஒரு ஆதாரமும் இல்லாமல் அவரவர் விருப்பத்திற்கேற்ப “முதஷாபிஹ்” வசனங்கள் எவை என்பதை வரையறுத்துக் கொண்டிருக்கின்றனர்.)

“முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வும் அறிவான்; கல்வியறிவுடையோரும் அறிவர்” என்ற கருத்துடையோர் முதல் சாராரின் அத்தனை வாதங்களுக்கும் முறையாகப் பதில் தருவதுடன், முதஷாபிஹ் வசனங்கள் விளங்கக் கூடியவை தான் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களையும் எடுத்து வைக்கின்றனர். இரண்டு தரப்பினரின் ஆதாரங்களையும் முதலில் பட்டியலிட்டுத் தருகிறோம். அவற்றைக் கவனமாகப் பரிசீலனை செய்யும் எவருமே நமது மொழிபெயர்ப்பு தான் சரி என்பதை விளங்க முடியும்.

முதஷாபிஹ் வசனங்களை விளங்க முடியும் என்று கூறுவோரும் “முதஷாபிஹ் எவை?” என நிர்ணயிப்பதில் ஆளுக்கொரு கருத்தைக் கூறுகிறார்கள். சூபிஸக் கொள்கையுடையோர் முதஷாபிஹ் என்பதற்கு, தங்களுக்குச் சாதகமாக இலக்கணம் வகுத்துக் கொள்கிறார்கள். தக்லீத்வாதிகளும், அவர்களுக்குத் துணை போகக் கூடியவர்களும் அதற்கு இன்னொரு இலக்கணம் வகுக்கிறார்கள். எனவே முதஷாபிஹ் எவை என்பதை இறுதியில் நாம் தக்க சான்றுகளுடன் விளக்கும் போது இதைப் புரிந்து கொள்ளலாம்.

முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான்; மற்ற எவருமே அறிய முடியாது என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களை முதலில் காண்போம். இவர்களை “முதல் சாரார்” என்றும், எதிர்க் கருத்து கொண்டவர்களை “இரண்டாவது சாரார்” என்றும் குறிப்பிடுவோம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்