முதஷாபிஹாத் – 8

தொடர்: 8

முதஷாபிஹாத்

பத்தாவது ஆதாரம்

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் திருக்குர்ஆனில் நபித்தோழர்களுக்கு ஏதேனும் விளக்கம் தேவைப்படுமானால் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டுத் தெளிவு பெறுவது வழக்கம்.

உதாரணமாக,

நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.

அல்குர்ஆன் 4:101

இந்த வசனத்தில் எதிரிகளின் அச்சம் இருக்கும் போது தான் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாகக் குறைத்துத் தொழுவதற்கு இறைவன் அனுமதிக்கின்றான். அச்சமற்று வாழக்கூடிய காலத்திலும் கஸர் செய்யலாமா? என்று உமர் (ரலி) அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி விளக்கம் கேட்டார்கள். இது குறித்து முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ்:

நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் “நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது” (4:101) என்று தானே அல்லாஹ் கூறுகின்றான்! தற்போது மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பட்டு விட்டதே?” என்று கேட்டேன்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்கு ஏற்பட்ட வியப்பு எனக்கும் ஏற்பட்டது. எனவே, இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது “(இது) அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடை (சலுகை) ஆகும். அவனது கொடையை ஏற்றுக் கொள்ளுங்கள்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஅலா பின் உமய்யா (ரலி), நூல்: முஸ்லிம் 1108

நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளதுஎன்ற (6:82) வசனம் இறங்கியவுடன், “எங்களில் எவர் தான் அநீதி இழைக்காதிருக்க முடியும்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அநீதி என்று இறைவன் இங்கே குறிப்பிடுவது இணை வைத்தல் எனும் மாபெரும் அநீதியைத் தான்என்று விளக்கம் அளித்தார்கள். (நூற்கள்: புகாரி, அஹ்மத்)

உங்களுக்குள் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் அது பற்றி உங்களை விசாரிப்பான்என்ற (2:284) வசனம் இறங்கியவுடன், “மனதில் நினைப்பதைப் பற்றியெல்லாம் இறைவன் விசாரிக்க ஆரம்பித்தால் எவருமே தப்ப முடியாதே?” என்று நபித்தோழர்கள் அச்சத்துடன் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு முன்னர் வேதக்காரர்கள் கூறியதையே நீங்களும் கூறுகிறீர்களா? நாங்கள் செவியுற்றோம்; கட்டுப்பட்டோம் என்று கூறுங்கள்என்று சொன்னார்கள். உடனே “எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்என்ற (2:286) வசனம் இறங்கியது.

(நூற்கள்: முஸ்லிம், அஹ்மத்)

இது போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளை ஹதீஸ் நூற்களில் நாம் காணலாம். நபித்தோழர்களுக்குத் திருமறையின் எந்த வசனத்திற்கேனும் விளக்கம் தேவைப்பட்டால் உடனே அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்கத் தவறியதே இல்லை என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.

இப்படியெல்லாம் பல்வேறு வசனங்கள் பற்றி நபித்தோழர்கள் விளக்கம் கேட்டுள்ளனர். இவ்வாறு கேட்ட போது ஒரு சந்தர்ப்பத்தில், ஒரேயொரு சந்தர்ப்பத்தில், ஒரேயொரு வசனம் பற்றிக் கூட, “இது எனக்கோ, உங்களுக்கோ விளங்காது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதே இல்லை. கேட்கப்படும் போதெல்லாம் விளக்கம் அளிக்கத் தவறியதில்லை.

நபித்தோழர்கள் விளக்கம் கேட்ட பல்வேறு வசனங்களில் ஒரே ஒரு முதஷாபிஹ் வசனம் கூட இருந்திருக்காது என்பதும் பொருத்தமாகப் படவில்லை.

அப்படி முதஷாபிஹ் வசனம் பற்றி நபித்தோழர்கள் கேட்டிருந்தால், (முதஷாபிஹ் யாருக்கும் விளங்காது என்ற கருத்துடையவர்களின் வாதப்படி), “இது முதஷாபிஹ்; எனக்கு விளங்காது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்வில் தமக்கு அருளப்பட்ட எந்த ஒரு வசனத்தைப் பற்றியும், தமக்கு விளங்காது என்று கூறவே இல்லை. முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் விளங்க முடியாது என்பது உண்மையானால் ஒரே ஒரு வசனம் பற்றியாவது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க வேண்டுமல்லவா? அவ்வாறு கூறியதாக எந்தச் சான்றும் கிடையாது.

நபி (ஸல்) அவர்கள் எந்த வசனம் பற்றிக் கேட்கப்பட்ட போதும் விளக்கமளித்தார்களே தவிர, விளக்கம் அளிப்பதில் முஹ்கம், முதஷாபிஹ் என்றெல்லாம் பேதப்படுத்திக் கொண்டிருக்கவில்லை.

இங்கே இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல வசனங்கள் விளக்கம் கூறாமலேயே எளிதில் அனைவருக்கும் புரிந்து விடும். வேறு சில வசனங்களை நபி (ஸல்) அவர்கள் விளக்கத்தின் துணையுடனேயே புரிந்து கொள்ள இயலும். நபித்தோழர்கள் விளக்கம் கேட்காத – எளிதில் விளங்குகின்ற – வசனங்களை விட, விளக்கம் தேவைப்பட்ட வசனங்களிலேயே முதஷாபிஹ் வசனங்கள் இருக்க அதிக சாத்தியமுள்ளது.

நபித்தோழர்களுக்கே விளங்கச் சிரமமான வசனங்களில் ஒன்றிரண்டு முதஷாபிஹ் வசனங்கள் கூட இல்லாமல் இருக்குமா? அவ்வாறு இருந்திருந்தால் இவர்களின் வாதப்படி நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் கூறியிருப்பார்கள்? “இது முதஷாபிஹ் வசனம்; இது எனக்கும் விளங்காது; உங்களில் எவருக்கும் விளங்காது; அல்லாஹ்வுக்கு மட்டுமே விளங்கும்” என்று தானே கூறியிருக்க வேண்டும். அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறாததே, “குர்ஆனில் விளங்காதது எதுவுமே இல்லை’ என்பதற்குத் தெளிவான சான்றாக உள்ளது.

பதினொன்றாவது ஆதாரம்

முதஷாபிஹ் வசனங்கள் மனிதர்களில் எவருக்கும் விளங்காது என்ற கருத்துடையவர்கள், “முதஷாபிஹ் வசனங்கள் என்றால் யாவை?’ என்பதை நிர்ணயிப்பதில் பல அளவுகோல்கள் உள்ளன. ஆளுக்கு ஒரு விளக்கம் தந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் கருத்துப்படியும் பார்த்தால் முழுக் குர்ஆனும் முதஷாபிஹ் என்ற வகையில் சேர்ந்து, முழுக்குர்ஆனும் அனைவருக்கும் விளங்காது என்று கூற வேண்டிய நிலை ஏற்படும்.

முதஷாபிஹ் வசனங்கள் யாவை? என்பதைச் சரியான சான்றுகளுடன் அறியும் போது, முதஷாபிஹ் வசனங்களை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கல்வியில் சிறந்தவர்கள் விளங்க முடியும் என்பதை உணரலாம். முதஷாபிஹ் வசனங்கள் எவை? என்பது பற்றிய விளக்கமே அவை விளங்கக்கூடியவை என்பதற்கு மறுக்க முடியாத சான்றாக உள்ளது.

முதஷாபிஹ் எவை என்பது பற்றிய விளக்கம் இன்ஷா அல்லாஹ் இறுதியில் கூறப்படும் போது இதை அனைவரும் அறியலாம்.