மணக்கும் குர்ஆனை மனனம் செய்வோம்

மணக்கும் குர்ஆனை மனனம் செய்வோம்

அருள்மிகு ரமளான் வந்து விட்டது. ரமளான் என்றாலே குர்ஆன் தான். ஆம்! ரமளான் மாதத்தை ஆக்கிரமிப்பதும், அலங்கரிப்பதும் அருள்மிகு குர்ஆன் தான். அல்குர்ஆனை நபி (ஸல்) அவர்களின் இதய ஆவணத்தில் பதிய வைக்கும் அரும்பணியில் ஈடுபட்ட ஜிப்ரயீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தில் தான் அதுவரை அருளப்பட்ட குர்ஆனை மறுபதிவு செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் மரணமான ஆண்டில் இருமுறை மறுபதிவு செய்திருக்கிறார்கள்.

எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன்என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 6285

இந்த மறுபதிவு ரமளான் மாதத்தில் ஒவ்வொரு இரவிலும் நடைபெறும் என்பதை புகாரி 3554 ஹதீஸில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஏனிந்த மறுபதிவு? எதற்காக மறுபார்வை? அல்லாஹ்வின் இந்த அருள்மிகு குர்ஆன் எழுத்தளவில், ஏட்டளவில் இல்லாமல் உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. (அல்குர்ஆன் 29:49)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இதைப் பாதுகாத்தது போன்று நபித்தோழர்களின் உள்ளங்களில் வைத்தும் அல்லாஹ் பாதுகாக்கின்றான்.

இந்த வசனத்தில் “சுதூர்’ – உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இது “சத்ர்’ என்ற வார்த்தையின் பன்மையாகும். இதன்படி நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் மட்டுமல்லாமல் அந்த நபித்தோழர்களின் உள்ளங்களிலும் பாதுகாக்கப்பட்டது. அதன் பிறகு அது அடுத்த தலைமுறையினரின் உள்ளங்களில் பதியப்படுகின்றது; பாதுகாக்கப்படுகின்றது.

அன்றிலிருந்து இன்று வரை இந்தப் புனிதக் குர்ஆன் இவ்வாறே பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

நபி (ஸல்) அவர்களால் அன்று ஓதப்பட்ட அதே ஒலி வடிவத்தில் ஓசை நயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எழுத்து வடிவிலான ஏடுகள், உள்ளங்களில் உள்ள குர்ஆனின் பிரதிபலிப்பாக அமைந்திருக்கின்றன.

முழுமையான, முதன்மையான பாதுகாப்பு, ஓசை வடிவக் குர்ஆனுக்குத் தான். தலைமுறை, தலைமுறையாக பதினான்கு நூற்றாண்டுகளைத் தாண்டி, கால வெள்ளத்தைக் கடந்து கலப்படம் இல்லாமல், கைச்சரக்கு கலக்காமல் மனித உள்ளங்களில் பயணித்து வருகின்ற தன்னிகரற்ற வேதம் இந்தக் குர்ஆன் மட்டும் தான்.

இப்படிக் குர்ஆனை தங்கள் மனப் பேழைகளில் மனனம் செய்வதன் மூலம் பாதுகாத்த மனிதர்கள் மகத்தானவர்கள் ஆவர். மாண்புறு குர்ஆனை சங்கிலித் தொடரில் பாதுகாப்பதற்காக மனனம் செய்து வரும் கன்னித் தலைமுறையினர் கண்ணியத்திற்குரியவர்கள் ஆவர். நபி (ஸல்) அவர்களும் இவ்வாறு மகிமை சூட்டுகின்றார்கள்; மதிப்பு கூட்டுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 4937

அல்குர்ஆனை மனனம் செய்த மக்கள் மலக்குகளைப் போன்றவர்கள் என்றால் அதன் மகிமையையும் மாண்பையும் சொல்ல வேண்டியதில்லை.

தொழுவிப்பதில் குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் முதல் மரியாதை அளிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்என்று சொன்னார்கள்

அறிவிப்பவர்: அம்ரு பின் ஸலமா (ரலி),  நூல்: புகாரி 4302

மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தொழுவிக்கட்டும். அவர்களில் தொழுவிப்பதற்கு மிகவும் தகுதியானவர் குர்ஆனை அதிகம் ஓதத் தெரிந்தவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),  நூல்: முஸ்லிம் 1077

இருக்கும் போது இந்த மரியாதை என்றால் இறந்த பின்னும் மரியாதை தொடர்கின்றது.

நபி (ஸல்) அவர்கள், உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரது உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, “இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு பணித்தார்கள். இவர்கள் நீராட்டப்படவோ இவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிக்கப்படவோ இல்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),  நூல்: புகாரி 1343

இம்மாபெரிய சிறப்புக்களைக் கொண்ட இந்தக் குர்ஆனை மனனம் செய்வோர் பொதுவாக தமிழகத்தில் அருகி விட்டனர். இன்றைக்குத் தமிழகத்தில் சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்வோரின் மதரஸாக்களில் மாணவர்கள் வெகுவாகக் குறைந்து விட்டனர். இதற்குக் காரணம் இதை ஒரு வருவாய்க்குரிய வழியாக மட்டும் ஆலிம்கள் பார்த்தது தான்.

அதனால் மார்க்கக் கல்வி அதனுடைய மதிப்பை இழந்து விட்டது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஒரேயடியாக உலகக் கல்வியில் கொண்டு போய் தள்ளுவதற்கு இதுவே அடிப்படைக் காரணமாக அமைந்தது.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்த வரை இந்தத் துறையில் உள்ளவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் நிலவுகின்றது. ஆனால் நம்மிடம் குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் மைக்ரோ அளவில் தான் உள்ளனர். அதிலும் குறிப்பாக அந்த ஹாபிழ்கள் சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்வோரிலிருந்து வந்ததால் தான்.

ரமளான் வந்து விட்டது. இம்மாதத்தின் இரவு வேளைகளில் இலட்சக்கணக்கில் உலகெங்குமிருந்து மக்கா, மதீனாவில் மக்கள் குவிகின்றனர். அங்கு ஆட்டம், பாட்டம், இசைக் கச்சேரிகள், ஆபாச நடனங்கள் எதுவுமின்றி எப்படி இத்தனை பேர் குழுமுகின்றனர்? இதுபோன்றே நமது ஊர்களிலும் பள்ளிகளில் எப்படி மக்கள் குவிகின்றனர்? அனைத்து விதமான கேளிக்கைகளையும் இஸ்லாம் தடை செய்த நிலையிலும் இது எப்படி சாத்தியமானது?

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன்னதத் திருக்குர்ஆன் உலக மக்களைத் தன்வயப்படுத்தி இதை சாத்தியமாக்குகின்றது. சத்தியம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.

தேனடையை மொய்க்கும் வண்டுகள் போன்று மக்கள் திருக்குர்ஆனை மொய்த்துக் கொண்டிருக்கின்றனர். அழகிய குரலில் குர்ஆன் ஒலி அலையாய் மாறும் போது, உருகாத உள்ளங்கள் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) ஆகியோர் ஓதும் போது ஆண்களும், பெண்களும் தங்கள் உள்ளங்களைப் பறி கொடுத்த அற்புத நிகழ்வை ஹதீஸ்களில் பார்க்க முடிகின்றது.

நபி (ஸல்) அவர்களும் குர்ஆனைக் கேட்கும் போது இவ்வாறு தங்கள் உள்ளத்தைப் பறி கொடுத்திருக்கின்றார்கள். ரீங்காரமிட்டு ஓதிய அபூமூஸா (ரலி) அவர்களை நபியவர்கள் பாராட்டுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) “அபூ மூசா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுஎன என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி),  நூல்: புகாரி 5048

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தராவீஹ் என்ற பெயரில் நடத்தப்படுகின்ற தொழுகைகளில் ஓதப்படும் குர்ஆன் வசனங்கள் படுவேகமானவை. ஒலிக்கின்ற வார்த்தை ஒன்று கூட விளங்காது. அத்துடன் அவர்களது தொழுகையும் அதி அவசரமானவை. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் தொழுகைகள் நிதானமானவை. இங்கு தொழுவிக்கும் ஹாபிழ்கள் நின்று நிதானமாகத் தொழுவிக்கின்றனர். ஆனால் இவ்வாறு நடப்பது ஒருசில இடங்களில் தான். தவ்ஹீத் ஜமாஅத்தில் ஒரு கூட்டம் நின்று, நீட்டித் தொழவும் நிதானமான நீண்ட கிராஅத்தைக் கேட்கவும், குர்ஆனைக் கேட்டு அழுவதற்கும் காத்திருக்கின்றனர். ஆனால் பரிதாப நிலை, இந்த மக்களுக்குத் தொழுவிக்க ஹாபிழ்கள் இல்லை.

இதைத் தீர்ப்பதற்கு ஒரே வழி தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஹாபிழ்களாகவும், ஆலிம்களாகவும் ஆக்குவது தான். இருபது ரக்அத்களை எட்டு ரக்அத்களாகக் குறைத்து விட்டார்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினர் நம்மை நோக்கிக் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இந்த எட்டு ரக்அத்களில் நிலை, ருகூவு, சுஜூது போன்றவற்றை நீட்டி நின்று தொழுது, இருபதைக் காட்டிலும் அதிக நேரம் எட்டு ரக்அத்தைத் தொழுவதைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர். தொழுகையில் காட்டப்படும் இந்த நிதானத்திற்காக ஒரு கூட்டம் தவ்ஹீதை நோக்கிப் படையெடுத்து வந்தது.

இப்படி அமல் செய்வதற்காகவே ஒரு கூட்டம் தாகத்துடன் காத்து நிற்கின்றது. இதன் வாயிலாகவும் ஒரு கூட்டம் தவ்ஹீதுக்கு வந்து கொண்டிருக்கின்றது. வரவும் தயாராக இருக்கின்றது. எனவே இந்த அரும்பணியை ஆற்றுவதற்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.