மழைத் தொழுகை ஓர் ஆய்வு
விண்ணிலிருந்து மழை பொழிந்தலே மண்ணில் உயிர்கள் வாழ முடியும். உயிரினங்களுக்கு ஜீவாதாரமாக அமைந்துள்ள இந்த மழை பெய்யாவிட்டால், பருவ மழைகள் பொய்த்து விட்டால், மழை பெய்ய வேண்டும் என்பதற்காக மக்கள் பலவகையான மூடநம்பிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இணைவைப்புக் காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள்.
ஆனால் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டித் தொழுகை என்ற அழகான வழிமுறையை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டியெடுக்கும் நிலையில் போதிய மழை நீர் இல்லாமல் கடுமையான வறட்சி நிலவுகின்றது. எனவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் நமது ஜமாஅத் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழைத் தொழுகையை நடத்தி வருகிறது.
நபி (ஸல்) அவர்கள் நடத்திய மழைத்தொழுகையைப் பற்றி விவரிக்கும் ஹதீஸ்கள் இரண்டு விதமாக அமைந்துள்ளன. நபி (ஸல்) அவர்கள் முதலில் பிரார்த்தனை செய்துவிட்டு இறுதியாகத் தொழுகை நடத்தினார்கள் என்று பல ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. சில ஹதீஸ்களில் இதற்கு மாற்றமாக முதலில் தொழுகை நடத்திவிட்டு இறுதியாகப் பிரார்த்தனை செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மழைத் தொழுகை தொடர்பான இந்த ஹதீஸ்களில் உள்ள வேறுபாட்டால் மக்களிடையே சமீபத்தில் இவ்விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
எனவே நபி (ஸல்) அவர்கள் முதலில் தொழுகை நடத்திவிட்டுப் பிறகு பிரார்த்தனை செய்தார்களா? அல்லது பிரர்த்தனை செய்து விட்டுப் பிறகு தொழுதார்களா? இவ்விஷயத்தில் சரியான கருத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் விதமாக இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் பல முறை மழைத்தொழுகை நடத்தியிருப்பார்கள். ஒரு நேரத்தில் முதலில் தொழுதிருப்பார்கள். வேறொரு நேரத்தில் பிரார்த்தனைக்குப் பிறகு தொழுதிருப்பார்கள் என்று புரிந்துகொண்டால் இரண்டு விதமாக வரும் செய்திகளுக்கு மத்தியில் முரண்பாடில்லாமல் அனைத்தையும் ஏற்றுக்கொண்டதாக அமையுமே என்று சிலருக்குத் தோன்றலாம்.
நபியவர்களின் மழைத் தொழுகையைப் பற்றி இரண்டு விதங்களில் வரும் ஹதீஸ்கள் வெவ்வேறு அறிவிப்பாளர் தொடர் வழியாக வருமேயானால் இவ்வாறு யூகிக்கலாம். மேற்கண்ட அடிப்படையில் இரண்டு விதங்களிலும் நபியவர்கள் தொழுது காட்டியுள்ளார்கள் என்று முடிவெடுக்கலாம்.
ஆனால் இரண்டு விதமாக வரும் இந்த ஹதீஸ்கள் வெவ்வேறு அறிவிப்பாளர் தொடர் வழியாக வரவில்லை. ஒரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவே இரண்டு விதங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன் பிரார்த்தனை செய்தார்கள் என்ற செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் வரும் நபித்தோழர் மற்றும் தாபிஃ ஆகிய இருவரும் இதற்கு மாற்றமாக வரும் ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரிலும் இடம்பெற்றுள்ளனர். எனவே இந்தச் செய்திகள் வெவ்வேறு நிகழ்வைப் பற்றிப் பேசவில்லை. ஒரு சம்பவம் குறித்தே முரண்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒரு சம்பவம் குறித்து முரண்பட்ட தகவல்கள் வந்தால் சரியான தகவல் எது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ஹதீஸ் கலையில் விதி கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஆராய்ந்தால் சரியான தகவல் எது? தவறான தகவல் எது? என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.
இது தொடர்பாக வரும் அனைத்து செய்திகளையும் ஒன்று திரட்டி அவற்றின் அறிவிப்பாளர் தொடரையும் தகவலையும் ஆராய்ந்தால் சரியான செய்தியைக் கண்டுபிடித்துவிட முடியும்.
ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் ஒரு விதமாக அறிவிக்கையில் ஒருவர் மட்டும் அதற்கு மாற்றமாக வேறு விதமாக அறிவித்தால் அந்த ஒருவர் நம்பகமானவராக இருந்தாலும் அவரின் அறிவிப்பு “ஷாத்’ என்ற பலவீனமான அறிவிப்பைச் சார்ந்ததாகும். இந்நிலையில் இவருடைய அறிவிப்பை ஏற்கக்கூடாது. பலர் ஒன்றுபட்டு அறிவிக்கும் அறிவிப்பே சரியானது.
இதே போன்று ஒரு நம்பகமானவர் தன்னை விட அதிக நினைவாற்றல் உள்ள ஒருவருக்கு மாற்றமாக அறிவித்தாலும் அந்த நம்பகமானவரின் அறிவிப்பு “ஷாத்’ என்ற பலவீனமான செய்தியாகும்.
அதே நேரத்தில் ஒரு பலவீனமானவர் நம்பகமானவருக்கு மாற்றமாக அறிவித்தால் இது ஹதீஸ் கலையில் முன்கர் என்ற வகையைச் சார்ந்த பலவீனமான செய்தியாகும். இது ஷாத் வகையை விட பலவீனமானது. ஏனென்றால் பலருக்கு மாற்றமாக ஒரு நம்பகமானவர் அறிவித்தாலே அதை ஏற்ககக்கூடாது எனும்போது நம்பகமானவருக்கு மாற்றமாக பலவீனமானவர் அறிவித்தால் அது மேலும் பலவீனமானதாகும்.
நபி (ஸல்) அவர்கள் மழைத் தொழுகை நடத்தியதை விவரிக்கும் ஹதீஸ்களை இந்த விதியின் அடிப்படையில் ஆராய்ந்தால் நபி (ஸல்) அவர்கள் முதலில் பிரார்த்தனை செய்துவிட்டு இறுதியாகத் தொழுகை நடத்தினார்கள் என்ற அறிவிப்பே சரியானது. இதற்கு மாற்றமாக முதலில் தொழுதுவிட்டுப் பிறகு பிரார்த்தனை செய்தார்கள் என்று வரும் அறிவிப்பு பலவீனமானது என்பதை அறியலாம்.
- இஸ்ஹாக்கின் அறிவிப்பு
அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மழை வேண்டித் தொழும் திடலுக்குச் சென்றார்கள். உரையாற்றுவதற்கு (பிரார்த்தனை செய்வதற்கு) முன்பு தொழுகையைத் துவங்கினார்கள். பிறகு கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்தனை செய்தார்கள்.
நூல்: அஹ்மது (15871)
நபி (ஸல்) அவர்கள் மழைத் தொழுகையில் நீண்ட உரையாற்றியதில்லை. அல்லாஹ்வைப் புகழ்ந்து சில வார்த்தைகளை கூறிவிட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். ஹதீஸ்களில் இதை குத்பா (உரை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள் என்பது இதன் பொருளாகும்.
மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடர் பின்வறுமாறு அமைந்துள்ளது.
- நபி (ஸல்) அவர்கள்
- நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸைத்
- அப்பாத் பின் தமீம்
- அப்துல்லாஹ் பின் அபீ பக்ர்
- இமாம் மாலிக்
- இஸ்ஹாக்
- இமாம் அஹ்மது
இந்தச் செய்தியில் இமாம் மாலிக் அவர்களின் மாணவரான இஸ்ஹாக் என்பவரே பிரார்த்தனைக்கு முன்பாக தொழுகையைத் துவக்கினார்கள் என்ற தவறான தகவலைக் கூறியுள்ளார்.
இந்த செய்தியை இமாம் மாலிக் அவர்களிடமிந்து…
- இஸ்ஹாக்
- அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ
- யஹ்யா பின் யஹ்யா
- குதைபா பின் சயீத்
- அப்துல்லாஹ் பின் மஸ்லமா
- இமாம் ஷாபி
- இப்னு வஹப்
ஆக மொத்தம் 7 நபர்கள் அறிவிக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் இஸ்ஹாக்கை விட மிக வலுவானவர்கள். இவர்களில் இஸ்ஹாக் என்பவர் மட்டுமே பிரார்த்தனைக்கு முன்பாக தொழுகையைத் துவக்கினார்கள் என்ற தகவலைக் கூறியுள்ளார். இவரல்லாத மீதமுள்ள ஆறு நபர்களும் இந்தத் தகவலைக் கூறவில்லை.
அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீயின் அறிவிப்பு
அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். கிப்லாவை முன்னோக்கி தன் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.
நூல்: அஹ்மது (15840)
யஹ்யா பின் யஹ்யாவின் அறிவிப்பு
அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். கிப்லாவை முன்னோக்கி தன் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.
நூல்: முஸ்லிம் (1486)
குதைபா பின் சயீதின் அறிவிப்பு
அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். கிப்லாவை முன்னோக்கி தன் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.
நூல்: நஸாயி (1494)
அப்துல்லாஹ் பின் மஸ்லமா மற்றும் இமாம் ஷாபியின் அறிவிப்பு
அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். கிப்லாவை முன்னோக்கி தன் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.
நூல்: பைஹகீ (பாகம்: 3, பக்கம்: 488)
இப்னு வஹபின் அறிவிப்பு
அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். கிப்லாவை முன்னோக்கி தன் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.
நூல்: முஸ்னது அபீ அவானா (1993)
மேலும் இந்த ஹதீஸ் இப்னு இஸ்ஹாக், அம்ர் பின் யஹ்யா ஆகியோர் வழியாகவும் வந்துள்ளது. இஸ்ஹாக் கூறிய வாசகத்தை இவ்விருவரும் தங்களுடைய அறிவிப்புகளில் கூறவில்லை. இமாம் மாலிக் அவர்களின் 6 மாணவர்கள் அறிவிப்பதைப் போன்றே இவர்களும் அறிவித்துள்ளனர்.
இப்னு இஸ்ஹாக்கின் அறிவிப்பு
அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்காக மழை வேண்டிய போது அவர்கள் நீண்ட பிரார்த்தனை செய்து வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருந்ததை பார்த்தேன். பிறகு கிப்லாவின் பக்கம் திரும்பி தனது மேலாடையை மாற்றிப் போட்டார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து மாற்றினார்கள்.
நூல்: அஹ்மது (15870)
அம்ர் பின் யஹ்யாவின் அறிவிப்பு
அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்க தொழுகைத் திடலுக்குப் புறப்பட்டார்கள். (இங்கு வந்து) மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு கிப்லாவை முன்னோக்கி, தமது மேல்துண்டை (இடம் வலமாக) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள்.
நூல்: புகாரி (6343)
எனவே எட்டு நம்பகமான அறிவிப்பாளர் கூறாத தகவலை இஸ்ஹாக் இங்கே கூறியுள்ளார். மற்றவர்கள் அறிவிக்காத தகவலை இஸ்ஹாக் கூடுதலாக அறிவித்திருப்பார் என்ற அடிப்படையில் இதை முரண்பாடில்லாமல் புரிந்துகொள்ளலாம் என நமக்குத் தோன்றலாம்.
ஆனால் குறிப்பிட்ட இந்தச் செய்தியில் இஸ்ஹாக் விஷயத்தில் இவ்வாறு கருத முடியாது. ஏனென்றால் அப்பாத் பின் தமீம் வழியாக அறிவிக்கப்படும் அறிவிப்புகளில் பல நம்பகமானவர்கள் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனைக்குப் பிறகே தொழுதார்கள் என்று இஸ்ஹாக்கிற்கு மாற்றமாக அறிவித்துள்ளனர். பின்வரும் அறிவிப்புகளில் இதை அறியலாம்.
பிரார்த்தனைக்குப் பிறகே தொழுகை
ஸுஹ்ரியின் அறிவிப்பு
அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க (தொழும் திடல் நோக்கிப்) புறப்பட்டுச் சென்றார்கள். (திட-ல்) கிப்லாவை நோக்கித் திரும்பி நின்று பிரார்த்திக்கலானார்கள். தமது மேல் துண்டை (வலது தோளில் கிடந்த பகுதியை இடது தோளுக்கு) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவற்றில் சப்தமாக (குர்ஆன்) ஓதினார்கள்.
நூல்: புகாரி (1024)
சுப்யானின் அறிவிப்பு
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று மழைவேண்டிப் பிரார்த்திக்கலானார்கள். கிப்லாத் திசையில் திரும்பி, தமது தோள் துண்டை மாற்றிப் போட்டுக்கொண்டு (மக்களுடன்) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
நூல்: புகாரி (1012)
அபூபக்ர் பின் முஹம்மதின் அறிவிப்பு
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டோம். அவர்கள் உரையாற்றினார்கள். கிப்லாவை முன்னோக்கி மழை வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். தனது மேலாடையை மாற்றிப்போட்டு மக்களுக்கு தொழ வைத்தார்கள்.
நூல்: சஹீஹ் இப்னி குஸைமா (1321)
மொத்தத்தில் இஸ்ஹாக்கிற்கு மாற்றமாக 11 அறிவிப்புகள் வந்துள்ளது. எனவே நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனைக்கு முன்பாகத் தொழுகையைத் துவக்குவார்கள் என்று இஸ்ஹாக் கூறியது கூடுதல் தகவல் இல்லை. இவர் தவறுதலாக கூறிய வார்த்தை தான் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.
- நுஃமான் பின் ராஷிதின் அறிவிப்பு
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டார்கள். பாங்கும் இகாமத்தும் இன்றி இரண்டு ரக்அத் தொழவைத்தார்கள். பிறகு எங்களிடம் உரையாற்றிவிட்டு கிப்லாவை முன்னோக்கி தன் கைகளை உயர்த்தி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு தம் மேலாடையின் வலப்புறத்தை இடப்புறமாகவும் இடப்புறத்தை வலப்புறமாகவும் மாற்றிப் போட்டார்கள்.
நூல்: பைஹகீ
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முதலில் தொழுகை நடத்தினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தியில் நுஃமான் பின் ராஷித் என்பவர் இடம்பெற்றுள்ளார்.
இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று ஏராளமான இமாம்கள் கூறியுள்ளனர். யஹ்யா பின் சயீத், அஹ்மது பின் ஹம்பள், இமாம் புகாரி, அபூதாவுத், நஸாயி, இப்னு ஹஜர், இமாம் தஹபீ ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
நூல்: தஹ்தீபுல் கமால்
இமாம் பைஹகீ அவர்கள் இவருடைய இந்த அறிவிப்பைப் பதிவு செய்து விட்டு இமாம் ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து பல மாணவர்கள் ஒரு விதமாக அறிவித்திருக்கையில் இவர் மட்டும் வேறு விதமாக தனித்து அறிவித்துள்ளார் என்று குறிப்பிடுகிறார்கள்.
இமாம் ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து…
- ஷுஐப்
- இப்னு அபீ திஃப்
- யூனுஸ்
- ஸாலிஹ்
- நுஃமான் பின் ராஷித்
ஆகியோர் அறிவிக்கின்றனர். இவர்களில் பலவீனமானவரான நுஃமான் பின் ராஷித் மட்டும் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனைக்கு முன்பு தொழுதார்கள் என்று அறிவிக்கின்றார்.
மற்றவர்கள் இதற்கு மாற்றமாக, முதலில் பிரார்த்தனை செய்து விட்டுப் பிறகு தொழுதார்கள் என்று அறிவிக்கின்றனர். இவர்கள் அனைவரும் மிக நம்பகமானவர்கள்.
நுஃமான் பின் ராஷித் பலவீனமானவர் என்பதாலும் மற்ற நம்பகமானவர்களுக்கு முரணாக அறிவிப்பதாலும் இவருடைய செய்தி முன்கர் என்ற மிக பலவீனமான செய்தியாகும். இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
ஆய்வின் சுருக்கம்
நபி (ஸல்) அவர்கள் மழைத் தொழுகையில் முதலில் பிரார்த்தனை ஈடுபட்டார்கள். பிறகு தொழுகை நடத்தினார்கள் என்று பல பலமான அறிவிப்பாளர்கள் அறிவிப்பதால் இதுவே சரியான தகவலாகும். இதனடிப்படையில் செயல்பட வேண்டும்.
இதற்கு மாற்றமாக நபியவர்கள் முதலில் தொழுதார்கள். பிறகு பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள் என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவையாகும். இதனடிப்படையில் செயல்படக்கூடாது.