குடியைக் கெடுக்கும் குடியரசுகள்

குடியைக் கெடுக்கும் குடியரசுகள்

இஸ்லாம் மதுவை மட்டுமல்ல! மதுவிலிருந்து வரும் வருவாயையும் தடை செய்கின்றது.

அல்பகரா அத்தியாத்தின் (வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து) இறுதி வசனம் வரை இறங்கிய போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) வந்து, “மதுபான வியாபாரம் தடை செய்யப்பட்டு விட்டது!என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2226

ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி. கிருஷ்ணய்யர் அவர்கள், ஹிந்து நாளேட்டில் பட்ங் நற்ஹற்ங் ஹய்க் ங்ஸ்ண்ப் ர்ச் க்ழ்ண்ய்ந் என்ற தலைப்பில் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் மது குறித்து இஸ்லாம் கொண்டிருக்கின்ற பார்வையைப் பார்க்கின்றார். அந்தக் கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கே தருகின்றோம்.

கேரளா தான் இந்தியாவின் மகாக் குடிகார மாநிலம் என்று அடித்துச் சொல்லி விடலாம். காரணம், அந்த மாநிலத்தில் தான் தனி மனித மது நுகர்வு ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருகின்றது. தன்னுடைய தனி வணிக சாம்ராஜ்யமான மதுபானக் கழகத்தின் மூலம் கேரள அரசு கொள்ளை லாபம் அடைந்து வருகின்றது.

அரசாங்கத்தின் அணுகுமுறையைப் பார்த்தால் மதுபானத்திற்கு ஒரு போற்றுதலுக்குரிய மரியாதையை வழங்கி விடும் போல் தெரிகின்றது. பொதுத்துறையில் இது மக்களுக்குக் கணிசமான வேலை வாய்ப்பைக் கொடுத்தாலும் இளைய தலைமுறையினரை குடிப் பழக்கத்திற்கு அடிமையாக்கி ஒரு குடிகாரத் தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. வேலையில்லாத் திண்டாட்டத்தை விட இது மிகக் கொடியதாகும்.

தனக்கு நியாயம், சரி என்று படுகின்ற விதத்தில் எந்த ஒரு வியாபாரத்தையும் ஒழுங்குபடுத்துவதற்குரிய அதிகாரமும் உரிமையும் மாநில அரசுக்கு உண்டு. அந்த அதிகாரத்தின் மீது வினா தொடுப்பதோ அந்த அதிகாரத்தின் மீது தாக்குதல் தொடுப்பதோ நம்முடைய நோக்கமல்ல! ஆனால் இந்த வியாபாரமே ஒரு விபரீத விளைவைத் தரும் வியாபாரமாகும்.

இந்த வியாபாரத்தின் வாடிக்கையாளர் தனது வாயில் ஒரு சில சொட்டுக்கள் தொண்டைக்குழியில் விழத் துவங்கிய மாத்திரத்தில் அவருக்குத் தோன்றுவது ஒரு வேடிக்கை உணர்வு! ஒரு விளையாட்டு உணர்வு!

அடுத்து வாய்க்கு வந்தபடி உளறல், பித்துக்குளித்தனமான பிதற்றல்! அதற்குப் பிறகு உச்சக்கட்டமாக உள்ளுணர்வு மங்கி, மழுங்கி ஒரு உதறல்! தரையில் உடையின்றி, உணர்வின்றி உருளுதல் என்ற உறை நிலைக்கு அவரை இது கொண்டு போய் விடுகின்றது.

நிறைய வாய்த் தகராறுகள், கடுங்காவல் தண்டனை வரவழைக்கும் குற்றச் செயல்கள், கோரமான சாலை விபத்துக்கள், பெரும் தெருச் சண்டைகள், கலவரங்கள் அனைத்திற்கும் காரணமாக அமைவது மதியை மயக்கும் இந்த மது தான்.

கற்பழிப்புக்கள், பலாத்கார பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்குக் காரணம் மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக, கொஞ்சிக் கொஞ்சி உறிஞ்சுகின்ற, திராவகத்தை மிஞ்சிய, நஞ்சை விடக் கொடிய இந்தப் போதைமிகு திரவம் தான்.

முதல் உறிஞ்சலில் ஒரு வினோதம், வேடிக்கை! அடுத்த உறிஞ்சலில் வம்புக்கு இழுக்கின்ற சண்டை சச்சரவு உணர்வு! மூன்றாவது உறிஞ்சலில் முடங்கிப் போகும் மூளை செயலிழப்பு! இத்தனையும் சாலையில் நடந்தால் தான்.

வீட்டில் நடந்தாலோ, மனைவி ஆட்சேபணை செய்யவில்லை என்றால் பிழைத்தாள். இல்லையேல் அன்றாடம் அவள் செத்து, செத்துத் தான் பிழைக்க வேண்டும். அவளது வாழ்நாள் முழுவதும் சாக்காடும் சாபக் கேடும் தான்.

மதுவுக்காக ஒரு தொகையை தொடர்ந்து தொலைப்பதால் அந்தக் குடும்பம் திவாலாகி விடுகின்றது.

குடியினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

மாநில அரசு தான் விற்பனை மற்றும் பார்களுக்குரிய உரிமங்களை வழங்குகின்றது. ஆனால் அது இந்தக் கேடுகளைப் பற்றி விசாரிப்பது கிடையாது.

அமைதியாகப் பயணம் செய்வது, மற்றவர்களுடன் நட்புரிமையுடன் பழகுதல், சகோதர வாஞ்சையுடன் ஒன்றிணைந்து வாழ்தல் ஆகியவை ஒரு குடிமகனுக்குரிய அடிப்படை உரிமைகளாகும். இந்த அடிப்படை உரிமைகளைப் பறித்து விடுகின்றது தாராள மது வினியோகம்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சி செய்யும் அரசுகள் கூட பார் அட்டாச்சுடன் கூடிய கிளப்புகளுக்கு உரிமங்களை அள்ளி வழங்கி மக்களை ஓட்டாண்டிகளாக்கிக் கொண்டிருக்கின்றன.

மதுவெனும் இந்த சாபக்கேட்டை விட்டுத் தொலையுங்கள் என்று அரசு நிர்வாகத்தைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் செயல்படுத்த விரும்பியது போன்று, “மது அருந்த மாட்டோம்’ என்று முதலில் நீதிபதிகள் உறுதிமொழி எடுக்க வேண்டும். அவ்வாறு உறுதிமொழி கொடுத்து விட்டு, அவர் குடிகாரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நீதிபதியை நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும்.

தனியார் சாராய விற்பனைக்குத் தடை விதித்து விட்டு, தான் மட்டும் சாராய விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்ற கேரள அரசுக்கு அண்டை மாநிலமான தமிழ்நாடு அரசு சரியான கூட்டாளியாக அமைந்து விட்டது. சாராயத்தைத் தானே தயாரித்து, விற்பனை செய்வதில் தமிழ்நாடு அரசு தனி சாம்ராஜ்யமாகத் திகழ்கின்றது. அதற்கு இணையாகத் தனியார் போட்டி போடுவதை விட்டும் அது தடை செய்து விட்டது.

இந்த நாசகார சாராயத்தின் இலாபம் மாநில அரசாங்கத்தின் கருவூலங்களுக்குத் தான் வலு சேர்க்கின்றது. அரசியல் சட்டத்தின் 47வது பிரிவுக்கு எதிராகச் செயல்படும் இந்த மாநில அரசுகளைக் கலைப்பதற்கு யார் துணிவார்? பல்வேறு அரசியல் பின்னணிகள், பிரச்சனைகள் இருப்பதால் மத்திய அரசு இதை ஒருபோதும் செய்யத் துணியாது.

தமிழக அரசு சில அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் சீராகவும் சிறப்பாகவும் வினியோகிப்பது பாராட்டத்தக்கதாகும். இந்த அத்தியாவசியப் பொருட்களில் காலம் கழிக்கின்ற மக்கள் இதை வெகுவாகப் பாராட்டுகின்றனர். ஆனால் கேரளாவிலோ பொருட்களின் விலையும் மதுவும் எந்தக் கட்டுப்பாடுமின்றி ஏறிக் கொண்டே இருக்கின்றது.

ஒரு பொதுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பேசும் போது, குடிப் பழக்கம் என்ற தொற்று நோய் கேரளாவைத் தொற்றிக் கொண்டு இருக்கின்றது என்று குறிப்பிட்டார். நிச்சயமாக மதுவினால் அந்த மாநிலம் அழிந்து போகும் என்பதை நானும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

மது அருந்துதல் படு மோசமான ஒரு தீமை! குடிப் பழக்கம் தொடருமானால் அது கட்டுக்குள் அடங்காத, பன்மடங்கு பரிமாணம் கொண்ட பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

குற்றவாளிகளும், வன்முறைச் சிந்தனை கொண்ட குண்டர்களும் தான் மதுவில் மட்டற்ற ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி ஒரு கேடு கெட்ட தொழிலைத் தான் மாநில அரசுகள் முன்னின்று நடத்திக் கொண்டிருக்கின்றன.

முக்கியமான மத விழாக்களுக்கு விடுமுறை நாட்களையொட்டி மதுக்கடைகளில் மது விற்பதை நிறுத்தி வைக்க கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் பெரும் முயற்சி மேற்கொண்டார். அது வெற்றிகரமாகவும் அமைந்து மக்களுக்கு ஓர் அமைதியையும் ஆறுதலையும் அளித்தது. செல்வாக்கு படைத்த அரசியல் சக்தி, ஒருவாறாக அவரை இட மாற்றம் செய்து மகிழ்ச்சியடைந்தது.

நேரு ஆட்சியில் இருந்த போது சுதந்திர தினத்திலும், குடியரசு தினத்திலும் வெளிநாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்களில் மது வினியோகிக்கக் கூடாது என்று தடை விதித்தார்.

மது வினியோகம் இல்லையென்றால் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு விருந்தினர்கள் இந்தியத் தூதரகத்துக்கு வர மாட்டார்கள் என்று தூதரக அதிகாரிகள் டெல்லிக்குக் கடிதம் எழுதினர். தேசிய தினங்கள் மதுவுடன் கொண்டாடப்படும் என்றால், தேசிய தினங்களில் மது வினியோகம் தான் மகிழ்ச்சியளிக்கும் என்றால் அத்தகைய தேசிய தினக் கொண்டாட்டம் தேவையில்லை என்று நேரு அதற்குப் பதில் அனுப்பினார்.

இந்தத் தீமைக்கு அப்பாற்பட்ட அரசியல்வாதி மொரார்ஜி தேசாய் மட்டும் தான். சம்பளம் கொடுக்கப்படும் நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் மது வினியோகம் இல்லாத நாட்களாக அறிவித்தார்.

மத்திய அரசு நினைத்தால் அரசியல் சட்டம் பிரிவு 47ஐப் பயன்படுத்தி மாநில அரசுகளை மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தலாம்.

பெர்னாட்ஷா முதல் காந்தி வரையிலான பேரறிஞர்கள், பெரியோர்கள் மதுவெனும் தீமைக்கு ஆட்படாதவர்களாக, அடிமைப்படாதவர்களாகத் திகழ்ந்தனர். வேத காலம் முதல் இஸ்லாமிய மார்க்கம் வரை கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரிய நெறிகள் அனைத்தும் மது அரக்கனிடமிருந்து பெறுகின்ற விடுதலையை வலியுறுத்தியிருக்கின்றன.

கலைஞர்கள், கவிஞர்கள் தான் மதுவை ஆதரித்து, மதுவின் பாதிப்பினாலேயே மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள்.

மதியுள்ள மனிதர் அவசியம் மது அருந்த வேண்டும்; வாழ்க்கையின் வெற்றி, போதையில் தான் புதைந்து கிடக்கின்றது என்று பைரோன் என்ற கவிஞன் புலம்புகின்றான்.

வறுமை மற்றும் இல்லாமையை நீக்குவது தேச பக்தி என்றால், மது விலக்கை அமல்படுத்துவதற்கு நாட்டில் முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுத்தாக வேண்டும்.

1998ல் மதுவில்லா நாட்கள் பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தது. உச்ச நீதிமன்றம் மதுப்பழக்கத்தை ஒழிக்கும் திட்டத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.

திருட்டு, கொள்ளை, விபச்சாரத்தின் மூலம் ஈட்டப்படும் வருவாயை விட மதுவின் மூலம் வரும் வருவாய் பழிப்புக்கும் இழிவிற்கும் உரிய வருவாயாகும்.

மதுவினால் வரும் அரசு வருமானம் முற்றிலும் துடைத்தெறியப்பட்டு, மதுக்கடைகள் அழிக்கப்பட வேண்டும்.

எனக்கு மட்டும் ஒரேயொரு மணி நேரம் சர்வாதிகார ஆட்சியாளராக ஆள்வதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டால் நான் செய்யப் போகின்ற முதல் காரியம் எவ்வித நஷ்ட ஈடுமின்றி சாராயப் பண்ணைகளை மூடி அவற்றைத் தகர்த்தெறிந்து விடுவேன்.

பண்டிகை நாட்களில் மது விற்பனையைத் தடை செய்யக் கூடாது என்பதற்காக, சாராய சாம்ராஜ்யம் என்ன விலை கொடுத்தாவது அரசியல்வாதிகளை வாங்கி விடும். இதனால் குடிப்பழக்கம் இளைஞர்களிடம் குடிகொண்டு வீதிகளிலும் வீடுகளிலும் இரத்த ஆறு பீறிட்டு ஓடும். இந்த நாடு அழிந்து நாசமாகி விடும்.