கூட்டுக் குர்பானியைக் குழப்பும் குறை மதியினர்

கூட்டுக் குர்பானியைக் குழப்பும் குறை மதியினர்

அப்துந் நாசிர், கடையநல்லூர்

ஹஜ்ஜுப் பெருநாளில் நிறைவேற்றப்படும் முக்கியமான வணக்கம் குர்பானி கொடுப்பதாகும். இதற்கு அரபி மொழியில் உழ்ஹிய்யா என்றும் கூறப்படும். உழ்ஹிய்யா கொடுப்பதற்குத் தகுதியான பிராணிகள் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவையாகும்.

ஒட்டகம், மாடு ஆகியவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்தும் குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி அவர்கள் அனைவரின் சார்பாகக் குர்பானி கொடுக்கலாம்.

ஒரு ஒட்டகத்தில் அதிகப்பட்சம் பத்துக் குடும்பங்கள் வரை கூட்டாகச் சேர்ந்து கொள்ளலாம். இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்.

ஆனால் இலங்கையைச் சேர்ந்த யஹ்யா சில்மி என்பவர் கூட்டு முறையில் குர்பானி கொடுப்பது கூடாது என்று ஒரு பிரசுரம் வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இவருடைய வாதங்களை அலசுவதற்கு முன்பாக ஆணவம் தலைக்கேறி தன்னுடைய அகந்தையினால் பிற அறிஞர்களையும் அவர்களுடைய ஆய்வுகளையும் மிகவும் மட்டமாக நினைக்கும் இவருடைய தற்பெருமையை மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

கூட்டு முறையில் குர்பானியை நிறைவேற்றலாம் எனக் கூ,றும் அறிஞர்களைப் பற்றி பின்வருமாறு தன்னுடைய பிரசுரத்தில் குறிப்பிடுகிறார்.

இஸ்லாமிய மார்க்கம் அல்குர்ஆன் அஸ்ஸுன்னா என்று இரண்டு அடிப்படைகளில் அமைந்துள்ள ஒரு கண்ணியமான மார்க்கமாகும். அந்த அல்குர்ஆணையும் அல்ஹதீஸையும் சரிவரப் புரிந்துக் கொள்ள அதற்கென சில அடிப்படைகள் இருக்கின்றன. ஏனெனில் அரபி மொழி தெரிந்தவர்கள் எல்லாம் இன்று ஆலிம்களாகி, ஹதீஸ்களை விளங்குவதெற்கென கணக்கிட முடியாத பல நூல்கள் காணப்படும். அவைகளை ஆழமாக அறிந்த கொள்ளும் முன்னர் தப்ஸீர் என்றும் சாரா என்றும் எல்லா விஷயத்திலும் தத்தமது கெட்டித்தனங்களைக் காட்டிட இன்று பலர் முனைந்திருப்பதனாலேயே இப்படியான பிரச்சினைகள் காலத்திற்குக் காலம் தோற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஹதீஸ்களை விளக்கவும் அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அம்சங்களையும் அணு அணுவாக அலசிடவும் உலமாக்கள் பல அடிப்படைகளைக் கற்றுத் தந்துள்ளார்கள். அவைகளை நாம் சரிவரப் புரிந்து கொண்டதன் பின்னர் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன, அது தரும் போதனைகள் என்ன என்பன போன்ற பல விஷயங்களைச் சரியாகவும் நேராகவும் புரிந்து கொள்ள முடியும். இல்லையெனில் வழிகேட்டை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளும் கதைதான் நமது கதையாகிவடும்.

மேற்கண்ட அனைத்து விமர்சனங்களுக்கும் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்பவர் யஹ்யா சில்மி தான் என்பதை அவருடைய ஆய்வைக் காண்பவர்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

இவர் ஹதீஸ்களை முழுமையாக ஆய்வு செய்யாமல் தன்னுடைய அரைகுறைத்தனத்தை எப்படியெல்லாம் வெளிக்காட்டியுள்ளார் என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்.

யஹ்யா சில்மி பின்வருமாறு தனது மறுப்பைத் தொடங்குகிறார்.

சில்மியின் ஆய்வு 1 (?)

நாம் ஆராய வேண்டிய அம்சத்திற்கு வருவோம். சில எழுத்தாளர்கள் உழ்ஹிய்யாவை கூட்டுச் சேர்ந்து கொடுக்க முடியும் என்ற தமது கருத்துக்கு முன்வைத்துள்ள ஹதீஸை இப்போது நோக்குவோம்.

ஹுதைபிய்யா என்ற இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தையும் ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்.

(முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

ஹுதைபிய்யா என்ற இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் ஹஜ் செய்ய தடுக்கப்பட்ட போது நடந்த நிகழ்வினை எடுத்துக் கூறும் இந்த ஹதீஸ் உழ்ஹிய்யாவைப் பற்றி எந்த ஒரு செய்தியையும் குறிப்பிடவில்லை. எனினும் இந்த ஹதீஸ் தெளிவாகவே ஹத்யுல் முஹ்ஷர் (தடுக்கப்பட்டதற்கான குர்பானி) பற்றியே கூறுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி ஹுதைபிய்யா என்ற இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஹஜ் பயணம் தடைப்பட்டபோதே ஹத்யுல் முஹ்ஷர் நடைபெற்றது. எனவே எந்த வகையில் உழ்ஹிய்யாவை கூட்டாகச் சேர்ந்து நிறைவேற்றுதல் என்பதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸை முன்வைக்க முடியாது

நமது விளக்கம்

யஹ்யா சில்மி என்பவருக்கு ஹதீஸ்கள் பற்றிய அறிவு இல்லை என்பதற்கு இந்த வாதம் ஆதாரமாகும்.

ஹுதைபியாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கப்பட்டது உண்மை. ஆனால் அவர்கள் ஹஜ் செய்யச் சென்ற போது தடுக்கப்படவில்லை. மாறாக உம்ராச் செய்யச் சென்ற போது தான் தடுக்கப்பட்டனர். ஆனால் இவர் ஹஜ் செய்யப் போன போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியவர்களாக (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள். குறைஷிக் காஃபிர்கள் அவர்களை இறையில்லம் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுத்து விட்டனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் தமது தியாகப் பிராணியை அறுத்து (பலியிட்டு) விட்டுத் தமது தலையை மழித்துக் கொண்டார்கள். மேலும், அவர்களுடன், “வரும் ஆண்டில், நான் (என் தோழர்களுடன்) உம்ரா செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வர மாட்டோம்; குறைஷிகள் விரும்புகின்ற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப்போம்என்னும் நிபந்தனையின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர்களிடம் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தின்படியே (அடுத்த ஆண்டு மக்கா நகரினுள்) நுழைந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்கி (முடித்து) விட்ட போது, குறைஷிகள் நபி (ஸல்) அவர்களை (மக்காவை விட்டு) வெளியேறும்படி உத்தரவிட, நபி (ஸல்) அவர்களும் வெளியேறி விட்டார்கள்.

நூல்: புகாரி 2701, 4252

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலும் உம்ராச் செய்ய புறப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

நபியவர்கள் ஹுதைபியாவில் உம்ராவை நிறைவேற்றுவதை விட்டும் தான் தடுக்கப்பட்டார்கள். நபியவர்கள் உம்ராவிற்காகத் தான் சென்றார்கள். ஆனால் இந்த ஆய்வாளரோ (?) ஹஜ்ஜை நிறைவேற்றுவதை விட்டும் தடுக்கப்பட்டதாகக் கூறுகிறார். இது தான் இவர் ஹதீஸை அணு அணுவாக ஆய்வு செய்கின்ற லட்சணம்.

உழ்ஹிய்யாவை கூட்டு முறையில் நிறைவேற்றலாம் என்பதற்கு மேற்கண்ட ஹதீசும் ஆதாரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதனைப் பின்னால் நாம் விரிவாக விளக்க இருக்கின்றோம். ஆனால் மேற்கண்ட ஹதீஸை மட்டும் தான் நாம் கூட்டுக் குர்பானிக்கு ஆதாரமாகக் காட்டுகிறோம் என்பது தவறானதாகும்.

ஹஜ்ஜுப் பெருநாளில் நிறைவேற்றும் உழ்ஹிய்யாவையும் கூட்டு முறையில் நிறைவேற்றலாம் என்று தெளிவாகவே வேறு ஹதீஸ்களில் வந்துள்ளது.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் வீதமும் நாங்கள் கூட்டுச் சேர்ந்தோம்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதி (829)

மேலும் இதே ஹதீஸ் திர்மிதி (1421), இப்னு மாஜா (3122), நஸாயீ (4316), அஹ்மத் (2354) இன்னும் பல நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகும். மேற்கண்ட ஹதீஸில்  “ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது”  என்ற வாசகம் கவனிக்கத் தக்கதாகும். இதிலிருந்து நபியவர்கள் காலத்தில் நபியவர்கள் முன்னிலையில் ஸஹாபாக்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நிறைவேற்றப்படும் உழ்ஹிய்யாவிலும் கூட்டுச் சேர்ந்து நிறைவேற்றியுள்ளார்கள் என்பது மிகத் தெளிவாகி விட்டது.

அனைத்து ஹதீஸ்களையும் முறையாக ஆய்வு செய்யாமல், அவை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அம்சங்களையும் சரியாக விளங்காமல் சட்டம் கூறுவதினால் தான் பல வழிகெட்ட கருத்துகள் உருவாகி விட்டன என்பதை இந்த ஆய்வாளரின் மூலம் நாம் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

சில்மியின் ஆய்வு 2 (?)

ஆம், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களோ அல்லது அவர்களது தோழர்களான உத்தம சஹாபாக்களோ தமது வாழ்நாளில் உழ்ஹிய்யாவைக் கூட்டாகச் சேர்ந்து நிறைவேற்றியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்தால் நாமும் அப்படியே செய்வோம். எனினும் அவர்களது வாழ்க்கையில் இவ்வாறு நடந்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லலை.

என்று சில்மி கூறுகிறார்

நமது விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களும், அவர்களது தோழர்களும் உள்ஹிய்யாவைக் கூட்டாக நிறைவேற்றியுள்ளார்கள் என்பதை மேற்கண்ட இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. எனவே உள்ஹிய்யாவை கூட்டு முறையில் நிறைவேற்ற எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பது ஆய்வில் ஏற்பட்ட குறைபாடு தானே தவிர உண்மை நிலை அவ்வாறல்ல.

சில்மியின் ஆய்வு 3 (?)

ஹத்யு என்பது அல்லாஹ்வின் புனிதமான வீட்டைத் தரிசிக்க ஹஜ் உம்ராவை நிறைவேற்ற செல்லும் ஹாஜிகளின் மீது கடமையாக்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் இந்த ஹத்யு என்பதனைக் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அப்படி நிறைவேற்ற தவறுமிடத்து அதற்குப் பரிகாரமாக ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும், தமது இருப்பிடம் திரும்பியதும் ஏழு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும். என திருமறை வசனம் எடுத்துக் கூறுகிறது. (பார்க்க அல்பகறா 196) ஹாஜிகள் நிறைவேற்ற வேண்டியது. இந்த ஹத்யில் தான ஏழுபேர் கூட்டுச் சேர்ந்து கொடுக்க முடியும். எனவே ஹத்யு என்பது எந்த வகையிலும் உழ்ஹிய்யாவின் சட்டத்துடன் சேராது.

நமது விளக்கம்

மேற்கண்டவாறு இவர் கூறுவதற்கு காரணம் இவரது அறை குறை அறிவு தான்.

உள்ஹிய்யா என்பதற்கும் ஹத்யு என்பதற்கும் வித்தியாசம் உள்ளது உண்மை தான். ஆனால் இவர் சொல்லுகின்ற வித்தியாசம் அல்ல. உள்ஹிய்யா விரிந்த அர்த்தம் உள்ளது. ஹத்யு என்பது சுருங்கிய அர்த்தம் உடையதாகும். மனிதன் என்ற சொல்லுக்கும் உயிரினம் என்ற சொல்லுக்கும் என்ன வித்தியாசம் உள்ளதோ அதே வித்தியாசம் உள்ளது.

மனிதர்கள் அனைவரும் உயிரினம் என்று சொல்லலாம். உயிரினம் அனைத்தும் மனிதன் என்று சொல்ல முடியாது.

ஹாஜிகள் கொடுக்கின்ற குர்பானியை ஹத்யு என்றும் சொல்லலாம் உள்ஹிய்யா என்றும் சொல்லலாம்.

ஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள் பெருநாள் அன்று அல்லது அதற்கடுத்த மூன்று நாட்களில் கொடுக்கும் குர்பானியை உள்ஹிய்யா என்று சொல்லலாமே தவிர ஹத்யு என்று சொல்ல முடியாது.

அதாவது உள்ஹிய்யா என்ற வார்த்தை ஹாஜிகள் கொடுக்கின்ற குர்பானியையும், ஹாஜிகள் அல்லாதவர்கள் கொடுக்கின்ற குர்பானியையும் குறிக்கின்ற பொதுவான வார்த்தையாகும்.

இதற்குரிய ஆதாரங்களை நாம் பின்னால் குறிப்பிடவிருக்கின்றோம்.

எனவே ஹாஜிகள் கொடுக்கும் குர்பானிக்குக் கூறப்படும் சட்டம் ஹாஜிகள் அல்லாதவர்கள் கொடுக்கும் குர்பானிக்கும் பொருந்தக் கூடியதாகும்.

ஆனால் மேற்கண்ட ஆய்வாளரோ (?) தன்னுடைய அரைகுறை ஆய்வினால் ஹத்யு என்பது எந்த வகையிலும் உள்ஹிய்யாவின் சட்டத்தில் சேராது எனக் குறிப்பிடுகின்றார்.

ஹாஜிகள் கொடுக்கும் குர்பானியும் உள்ஹிய்யாவில் உள்ளடங்கியது தான் என்பதற்கான ஆதாரங்களைக் காண்போம்.

சான்று: 1

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் (“விடைபெறும்ஹஜ்ஜிற்காகப்) புறப்பட்டுச் சென்றோம். ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் நாங்கள் எண்ணவில்லை. (மக்காவிற்கு அருகிலுள்ள) “சரிஃப்என்ற இடத்தில் நாங்கள் இருந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருக்கவே, “உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்என்றேன்.

அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள், “இது (மாதவிடாய்) ஆதமின் பெண் மக்களுக்கு அல்லாஹ் விதியாக்கிய விஷயமாகும். ஆகவே நீ, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தையும் நிறைவேற்று! ஆனால், இறையில்லமாகிய கஅபாவை மட்டும்  சுற்றி (தவாஃப்) வராதேஎன்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த ஹஜ்ஜின் போது) தம் மனைவியர் சார்பாக மாட்டை உள்ஹிய்யா கொடுத்தார்கள்.

நூல்: புகாரி 294, 5548

நபியவர்கள் ஹஜ்ஜின் போது கொடுத்த குர்பானிக்கும் உள்ஹிய்யா  என்று கூறலாம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் தெளிவான சான்றாகும்.

இதனுடைய அரபி மூலத்தில்   நுóஹீóøரூ   (உள்ஹிய்யா கொடுத்தார்கள்) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

சான்று: 2

ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உள்ஹிய்யா பிராணியை அறுத்துவிட்டு, “ஸவ்பான்! இந்த இறைச்சியை (பயணத்தில் கொண்டு செல்வதற்கேற்ப) தயார் செய்என்று கூறினார்கள். நான் (அவ்வாறே தயார் செய்து) மதீனா வரும் வரை அதிலிருந்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்துக் கொண்டேயிருந்தேன்.

நூல்: முஸ்லிம் (3993)

இங்கு உள்ஹிய்யா பிராணி என்பதற்கு அரபி மூலத்தில் நுóஹீöலூóøனீ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

இது நபியவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவில் தமக்குரிய பலிப் பிராணியை அறுத்து விட்டுக் கூறியதாகும்.

சான்று: 3

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (ஹஜ்ஜின் போது அறுக்கப்படும்) உள்ஹிய்யா பிராணிகளின் இறைச்சிகளை (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு(ச் செல்லும் போது) பயண உணவாக எடுத்துச் செல்வோம்

நூல்: புகாரி (2980)

இதன் அரபி மூலத்தில் ளீகூúரீóநுóளீஹீöலூöø  (உள்ஹிய்யா பிராணிகள்) என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

ஹஜ்ஜை நிறைவேற்றும் போது கொடுக்கப்படும் குர்பானிக்கு உள்ஹிய்யா என்றும் கூறலாம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸும் தெளிவான சான்றாகும்.

மேற்கண்ட ஹதீஸில் “ஹஜ்ஜின் போது” “மக்காவிலிருந்து” என்ற வார்த்தைகள் அடைப்புக் குறிக்குள் இடம் பெற்றுள்ளது. மூலத்தில் அவ்வாறு இல்லையென்றாலும்  ஜாபிர் அவர்களின் பிற அறிவிப்புகளிலிருந்து இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் மினாவில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாட்களுக்கு மேல் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை உண்ணாமல் இருந்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இப்போது நீங்கள் உண்ணலாம்; சேமித்தும் வைக்கலாம்என்று கூறி, எங்களுக்கு அனுமதி வழங்கினார்கள். “நாங்கள் மதீனா வரும்வரை (சேமித்து வைத்தோம்)” 

நூல்: முஸ்லிம் (3988)

மேற்கண்ட ஹதீஸிலிருந்து ஜாபிர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜில் அறுக்கப்பட்ட பிராணிகளின் இறைச்சியை மக்காவிலிருந்து மதீனாவிற்கு கொண்டு வருவதைத் தான் புகாரி 2980வது ஹதீஸ் குறிப்பிடுகிறது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மேற்கண்ட சான்றுகளிலிருந்து உள்ஹிய்யா என்ற வார்த்தை ஹாஜிகள் கொடுக்கும் குர்பானிக்கும், ஹாஜிகள் அல்லாதவர்கள் கொடுக்கும் குர்பானிக்கும் உரிய பொதுவான வார்த்தை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

எனவே உள்ஹிய்யாவை ஹாஜிகளும், ஹாஜிகள் அல்லாதவர்களும் நிறைவேற்ற வேண்டும் எனும் போது ஹாஜிகள் உள்ஹிய்யாவில் கூட்டுச் சேரலாம் என்றால் ஹாஜிகள் அல்லாதவர்களும் உள்ஹிய்யாவில் கூட்டுச் சேர்ந்து கொள்ளலாம் என்பது தான் தெளிவான முடிவாகும்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி “தல்பியாசொன்னவர்களாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். எங்களுடன் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். நாங்கள் மக்காவிற்கு வந்ததும் இறையில்லத்தைச் சுற்றி வந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (சயீ) ஓடினோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலால் ஆகி)க் கொள்ளட்டும்என்றார்கள். நாங்கள், “எந்த வகையில் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “எல்லா வகையிலும் இஹ்ராமிலிருந்து விடுபடுங்கள்என்றார்கள். ஆகவே, நாங்கள் மனைவியரிடம் சென்றோம் (தாம்பத்திய உறவு கொண்டோம்); (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்தோம்; நறுமணம் பூசிக் கொண்டோம். துல்ஹஜ் எட்டாவது நாள் (யவ்முத் தர்வியா) வந்த போது, ஹஜ்ஜுக்காகத் தல்பியா கூறினோம். (ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும் சேர்த்து “இஹ்ராம்கட்டியிருந்த) நாங்கள் ஏற்கெனவே ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடியதே எங்களுக்குப் போதுமானதாக அமைந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களில் ஏழு பேர் ஓர் ஒட்டகத்திலும், ஏழு பேர் ஒரு மாட்டிலும் கூட்டுச் சேர்ந்து (பலியிட்டுக்) கொள்ள உத்தரவிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் (2325)

இது பல்வேறு வார்த்தை மாற்றங்களுடன் ஜாபிர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பலிப் பிராணியில் ஏழு பேர் வீதம் ஒட்டகத்திலும் மாட்டிலும் கூட்டுச் சேர்ந்து கொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் (2538)

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றபோது, ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அறுத்துப் பலியிட்டோம்.

நூல்: முஸ்லிம் (2539)

மேலும் முஸ்லிம் 2540, 2541, 2542 ஆகிய எண்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

ஹாஜிகள் அல்லாதவர்களும் கூட்டு முறையில் குர்பானி கொடுக்கலாம் என்பதற்குரிய ஆதாரத்தை நாம் முதலில் பார்த்து விட்டோம்.

மேலும் உள்ஹிய்யா என்பதில் ஹாஜிகளும், ஹாஜிகள் அல்லாதவர்களும் ஒன்றுபடுவதால் ஹாஜிகளுக்குக் கூறப்படும் சட்டம் ஹாஜிகள் அல்லாதவர்களுக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் கூட்டு முறையில் மாடு, ஒட்டகக் குர்பானியை நிறைவேற்றுவதற்கு மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரமாகும்.

பொதுவாக ஹாஜிகள் கொடுக்கின்ற ஹத்யு என்ற குர்பானியிலும், ஹுதைபியா ஆண்டில் உம்ராச் செய்வதிலிருந்து தடுக்கப்பட்ட போது ஹத்யாக கொடுக்கப்பட்ட குர்பானியிலும், ஹஜ்ஜுப் பெருநாள் அன்று ஹாஜிகள் அல்லாதவர்கள் கொடுக்கின்ற குர்பானியாக இருந்தாலும் கூட்டு முறையில் நிறைவேற்றலாம் என்பதைத் தான் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

எனவே கூட்டு முறையில் குர்பானி கொடுப்பது கூடாது என்று கூறுவது நபிவழிக்கு எதிரானதாகும்.

நபியவர்கள் பலிப் பிராணிகள் கிடைக்கவில்லை என்பதற்காக கூட்டு முறையில் கொடுக்கச் சொன்னார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. ஹுதைபியாவின் போது கொடுக்கப்பட்டதை ஒருவர் ஆதாரமாகக் காட்டினால் அதுவும் தவறானதாகும். நபியவர்கள் ஹஜ்ஜின் போதும் அவ்வாறு கூட்டு முறையில் நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.

ஒருவர் விரும்பினால் தனியாகவும் நிறைவேற்றலாம். கூட்டு முறையிலும் நிறைவேற்றலாம். அவரவரின் மனத் தூய்மைக்கும் தகுந்தவாறும், செலவீனங்களுக்குத் தகுந்தவாறும் அல்லாஹ் நன்மைகனை வழங்குவான்.

மேலும் ஒருவர் ஒரு ஆட்டைத் தனியாகக் குர்பானி கொடுப்பதும் கூட்டு முறையில் பத்து பேர் ஒரு ஒட்டகத்தில் பங்கு சேர்வதும் சமமானது தான்.

நபியவர்கள் பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக வைத்தார்கள்.

அறிவிப்பவர்: ராஃபிவு பின் ஹதீஜ் (ரலி)

நூல்: புகாரி (2488)

சில்மியின் ஆய்வு 4 (?)

அபு அய்யூப் அல் அன்சாரி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறுவதாவது

நாங்கள் ஒரு ஆட்டை அறுப்பவர்களாக இருந்தோம். அதனை ஒருவர் தனக்காகவும் தனது குடும்பத்தினருக்காகவும் அறுப்பார். பின்னவர் மக்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட ஆரம்பித்து விட்டார்கள். அதனால் அது பெருமைப்படக்கூடியதாக மாறிவிட்டது.

(ஸஹீஹ் இமாம் மாலிக்கின் முஅத்தாஃ, கிதாப் இலக்கம் 23, மிருகங்கள் குர்பான் கொடுத்தல் பாடம், இன்னும் எத்தனை பேர் மாட்டிலும் ஒட்டகத்திலும் பங்கெடுப்பது. ஹதீஸ் இலக்கம் 10)

நமது விளக்கம்

மேற்கண்ட ஹதீஸில் ஒருவர் தனது குடும்பத்தின் சார்பாக ஒரு ஆட்டை அறுத்தால் போதுமானது என்ற கருத்து தான் உள்ளடங்கியுள்ளது. இது ஒரு போதும் கூட்டுக் குர்பானி கூடாது என்பதற்கு ஆதாரமாகாது. ஒருவர் தமது குடும்பத்தினர் சார்பாக ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பது கூடும் என்றே நாமும் கூறி வருகிறோம்.

சில்மியின் ஆய்வு 5 (?)

மேற்குறித்த ஹதீஸை தனது நூலில் எடுத்து வைத்த இமாம் மாலிக் அவர்கள் அதனை தொடர்ந்து பின்வருமாறு கூறுகிறாகள்.

ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய உழ்ஹியாக் கொடுக்கும் பிராணிகளில் நான் செவிமடுத்தவைகளில் மிகவும் சிறப்பானது எதுவெனில் ஒரு மனிதன் தனக்காவும் தனது குடும்பத்தினருக்காவும் ஒரு ஒட்டகத்தை அறுப்பதாகும். இன்னும் ஒரு மனிதன் தனக்குச் சொந்தமான மாட்டையோ அல்லது ஆட்டையோ அறுப்பதாகும். அதனை அவரது குடும்பத்தினருக்காவும் அறுத்து அவர்களையும் அதில் சேர்த்துக் கொள்வார். இன்னும் சிலர் ஒட்டகம் அல்லது மாடு அல்லது ஆடு போன்ற ஏதேனும் ஒன்றை வாங்கி குர்பானி (நுஸ்க்) கொடுப்பதற்கு உழ்ஹிய்யாவில் கூட்டுச் சேர்ந்து கொள்கிறர்கள். அதன் பின்னர் அவரவர் தனது பங்கிற்குரிய தொகையை ஏற்றுக் கொள்கிறார்கள். இன்னும் அவரவருக்கு அதனது இறைச்சியிலிருந்து ஒரு பங்கை பெற்றுக் கொள்கிறர்கள். நிச்சயமாக இது வெறுக்கத்தக்கதாகும். நாங்கள் ஹதீஸில் செவிமடுத்ததில் வணக்கமாக செய்யப்படும் குர்பானியில் கூட்டுச் சேரமுடியாது. நிச்சயமாக ஒருவர் தனது பொறுப்பிலுள்ள குடும்பத்திற்காக மட்டுமே முடியும்   (முஅத்தா)

இமாம் மாலிக் அவர்களின் பத்வா இந்த விஷயத்தில் மிக உறுதியான பத்வாவாகும்.

நமது விளக்கம்

இங்கு தான் யஹ்யா சில்மி எப்படிப்பட்ட சில்மிஷக்காரர் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இமாம் மாலிக் அவர்களின் கருத்து சில்மியின் கருத்திற்கு எதிரானதாகும். ஆனால் இந்த மார்க்க வியாபாரிகள் தங்களுடைய சுயலாபத்திற்காக எத்தகைய புரட்டுதல்களை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு இமாம் மாலிக் அவர்களின் கருத்தை சில்மி மாற்றி மொழிபெயர்த்திருப்பது தெளிவான சான்றாகும்.

சில்மியின் கருத்துப்படி ஹாஜிகள் குர்பானி கொடுக்கும் போது கூட்டுச் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள் கொடுக்கும் குர்பானி உள்ஹிய்யாவாகும். அதில் கூட்டுச் சேர்வது கூடாது என்று அவர் கூறியிருந்ததை முன்னால்  கண்டோம்.

அரபி மொழியில் பலிப் பிராணிகளைக் குறிக்கும் போது நுஸ்க் என்றால் ஹஜ் செய்பவர்கள் குர்பானி கொடுக்கும் பிராணியாகும்.

உள்ஹிய்யா என்றால் இரண்டையும் குறிக்கும் என்றாலும் இங்கே இமாம் மாலிக் அவர்கள் ஹஜ் செய்யாதவர்கள் கொடுக்கும் குர்பானியைக் குறிக்க உள்ஹிய்யா என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

இமாம் மாலிக் அவர்கள் கூறுகிறார்கள்.

இன்னும் சிலர் ஒட்டகம் அல்லது மாடு அல்லது ஆடு போன்ற ஏதேனும் ஒன்றை வாங்கி ஹஜ்ஜில் கொடுக்கப்படும் பலிப் பிராணியிலும்  உள்ஹிய்யாவிலும் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள். அதன் பின்னர் அவரவர் தனது பங்கிற்குரிய தொகையை ஏற்றுக் கொள்கிறார்கள். இன்னும் அவரவருக்கு அதனது இறைச்சியிலிருந்து ஒரு பங்கைப் பெற்றுக் கொள்கிறார்கள். நிச்சயமாக இது வெறுக்கத்தக்கதாகும்.

இது தான் சரியான மொழிபெயர்ப்பாகும். ஆனால் சில்மி இங்கு கள்ளத்தனம் செய்து தனது சில்மிஷத்தைக் காட்டியுள்ளார்.

குர்பானி கொடுப்பதற்கு (நுஸ்க்) உழ்ஹிய்யாவில் கூட்டுச் சேர்ந்து கொள்கிறார்கள் என்று சில்மி மொழிபெயர்த்துள்ளார். இது முற்றிலும் தவறானதாகும். இவ்வாறு மொழிபெயர்க்க இங்கு இயலவே இயலாது. இங்கே நுஸ்க் என்பதற்கு குர்பானி கொடுத்தல் என்று மொழிபெயர்த்துள்ளார். இந்த இடத்தில் இவ்வாறு மொழிபெயர்க்கக் கூடாது.

ஏனென்றால் இங்கே நுஸ்க் என்பதற்கு ஹஜ்ஜில் கொடுக்கப்படும் பலிப் பிராணி என்ற சரியான பொருளைச் செய்தால் அதைத் தொடர்ந்து இமாம் மாலிக் கூறுகின்ற கருத்து சில்மிக்கு எதிராக அமைந்து விடும்.

இதோ இமாம் மாலிக் கூறுவதைப் பாருங்கள்:

நிச்சயமாக நாம் ஹதீஸில் செவியேற்றிருப்பது ஹஜ்ஜில் கொடுக்கப்படும் பலிப்பிராணியில் கூட்டுச் சேர்தல் என்பது கிடையாது. நிச்சயமாக அது ஒரு குடும்பத்திற்கு மட்டுமே உரியதாகும்.

இது தான் சரியான மொழிபெயர்ப்பாகும். அதாவது இமாம் மாலிக் அவர்கள் ஹஜ்ஜில் கொடுக்கப்படும் பலிப் பிராணியில் கூட்டுச் சேர்வது கூடாது என்று தான் கூறியுள்ளார்கள். (அது தவறானது என்பது தனி விஷயம்) இதிலிருந்து ஹாஜிகள் அல்லாதவர்கள் கொடுக்கின்ற உள்ஹிய்யாவில் கூட்டுச் சேர்ந்து கொள்ளலாம் என்பது தான் இமாம் மாலிக் அவர்கள் கூற வருகின்றார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் சில்மி தனது சில்மிஷத்தினால் இந்தச் சரியான மொழிபெயர்ப்பைத் திரித்து வணக்கமாகச் செய்யப்படும் குர்பானியில் கூட்டுச் சேர முடியாது என்று மொழி பெயர்த்துள்ளார்.

ஒரு வாதத்திற்கு இந்த மொழிபெயர்ப்பு சரியென்று வைத்துக் கொண்டால் ஹாஜிகள் கொடுக்கின்ற குர்பானி வணக்கம் கிடையாதா? ஹாஜிகள் அல்லாதவர்கள் கொடுக்கின்ற உள்ஹிய்யா மட்டும் தான் வணக்கமா? என்ற கேள்விகள் எழும்.

இரண்டுமே வணக்கம் என்றால் நபியவர்கள் ஹாஜிகள் குர்பானியில் கூட்டுச் சேரலாம் என்று கூறியுள்ளார்களே நபியவர்கள் தவறாகக் கூறி விட்டார்களா? என்ற கேள்விக்கு பதில் கூறியாக வேண்டும்.

எப்படி வைத்துக் கொண்டாலும் இந்த மொழிபெயர்ப்பு தவறானதாகும்.

தனக்கு எதிரான மாலிக் இமாமின் கருத்தை வளைத்து, தவறாக மொழி பெயர்த்து தனக்குச் சாதகமான கருத்தைப் போன்று கூறியுள்ளார்.

மார்க்கச் சட்டத்தில் கள்ளத்தனம் செய்யும் இத்தகையவர்கள் விஷயத்தில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இமாம் மாலிக் அவர்கள் ஹஜ்ஜில் கொடுக்கப்படும் பலிப்பிராணியில் கூட்டுச் சேரக்கூடாது என்று கூறியிருப்பது நபியவர்களின் தெளிவான ஹதீஸிற்கு எதிரானதாகும். எனவே அதன் பக்கம் திரும்ப வேண்டிய அவசியமில்லை.

இமாம் ஷாஃபி அவர்கள் இமாம் மாலிக் அவர்களின் கருத்து தவறு என்று தன்னுடைய அல்உம்மு என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

சில்மியின் ஆய்வு 6 (?)

எவரிடம் உழ்ஹிய்யா கொடுக்க சக்தியிருந்தும் அறுத்துப் பலியிடவில்லையோ கண்டிப்பாக அவர் தொழுமிடத்தை நெருங்க வேண்டாம்.   (இப்னுமாஜா 2. 123, ஹகிமா 2/289, அஹ்மத்)

இந்த ஹதீஸ் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவெனில் உழ்ஹிய்யாவுக்குரிய மிருகத்தை பெற்றுக் கொள்ள சக்தியுள்ளவர், வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்கள் இந்த உழ்ஹிய்யாவை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்பதாகும்.

நமது விளக்கம்

இது நபியவர்களின் கூற்று கிடையாது. இது (மவ்கூஃப்) நபித்தோழரின் சொந்தக் கூற்றாகும்.

இதனை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தமது ஃபத்ஹுல் பாரி என்று நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இந்த ஹதீஸிலிருந்து உள்ஹிய்யா கட்டாயக் கடமை என்பதை விளங்கிக் கொள்ள இயலாது என்றும் கூறியுள்ளார்கள்.

உள்ஹிய்யா கட்டாயக் கடமை என்பதற்கு ஆதாரமாக எடுக்கத் தக்கது அபூஹுரைரா அவர்கள் மர்ஃபூவாக அறிவிக்கூடிய, “யார் வசதியைப் பெற்றும் உலுஹிய்யா கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய தொழுமிடத்தை நெருங்க வேண்டாம்’ என்ற ஹதீஸாகும்.

இதனை இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். இதனுடைய அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்றாலும் இது நபியவர்களின் கூற்றா? ஸஹாபியின் கூற்றா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இது ஸஹாபியின் சொந்தக் கூற்று என்பது தான் சரியானதாகும். தஹாவீ மற்றும் சில அறிஞர்கள் இதனைக் கூறியுள்ளனர். அத்துடன் கட்டாயக் கடமை என்ற கருத்து இதில் மிகத் தெளிவாக இல்லை.

நூல்: ஃபத்ஹுல் பாரி, பாகம்: 10 பக்கம்: 3

சரியாக ஆய்வு செய்யாமல் ஆதாரத்திற்கு எடுக்க முடியாத செய்திகளையும் இந்த ஆய்வாளர் (?) மிக நுணுக்கமாக ஆய்வு செய்து கூறியுள்ளார். இதன் மூலம் இவருடைய ஆய்வின் தரத்தை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

மொத்தத்தில் கூட்டுக் குர்பானி கூடாது என்பதற்கு அவர் தன்னுடைய பிரசுரத்தில் எடுத்து வைத்துள்ள வாதங்கள் நபியவர்களின் தெளிவான வழிகாட்டுதல்களுக்கு எதிரானதாகும். மேலும் ஹதீஸ்களில் ஆழ்ந்த ஞானமின்றி அரை குறை ஆய்வுடன் எழுதப்பட்ட ஒன்றாகும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.