கொலைகாரர்களாகும் குறிகாரர்கள்

கொலைகாரர்களாகும் குறிகாரர்கள்

2012ஆம் ஆண்டு, ஜூன் 19 அன்று சவூதியிலுள்ள நஜ்ரான் என்ற ஊரில், முரீஃபின் அலீ பின் ஈஸா என்பவர் மக்கள் முன்னிலையில் தலை சீவப்பட்டு கொல்லப்படுகின்றார். இவர் செய்த குற்றம் என்ன? பில்லி, சூனியம், ஜோதிடத் தொழில் செய்தது தான் அவருடைய குற்றம். அத்துடன் இரண்டு பெண்களுடன் விபச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார். எல்லாவற்றுக்கும் சேர்த்து கணக்குத் தீர்க்கும் விதமாக அவருடய கழுத்து வெட்டப்பட்டது.

காவல்துறை கைது செய்த மாத்திரத்தில் தண்டனை அளிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்டு கீழ் கோர்ட், மேல் கோர்ட் வரை வழக்கு சென்று தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்தச் செய்தி சவூதியிலுள்ள அரபிய பத்திரிகைகளிலும் பி.பி.சி. செய்தியிலும் வெளிவந்தது.

இதே குற்றத்திற்காக சவூதியில் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டார். இதுபோன்று சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டார். இவருக்காக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் எனும் உலக மனித உரிமை இயக்கமும் குரல் கொடுத்தது. இதை சவூதி அரசாங்கம் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

இந்தியாவில் பில்லி, சூனியம், மாயம், மந்திரம் தாயத்து, தட்டு, பேய், பிசாசு என்ற பெயரில் ஒரு பெருங்கூட்டமே தொழில் நடத்தி வருகின்றனர். இவர்கள் கார், பங்களா என அசத்தலாக, ஆடம்பரமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

போதாத குறைக்கு தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் இவர்களுக்கென தனி நேரம் ஒதுக்கப்பட்டு விளம்பரம் அளிக்கப்படுகின்றது. காலை நேரங்களில் செய்திகள் ஒளிபரப்பாவதற்கு முன்னால் இவர்களது அக்கப்போர்கள் தாங்க முடியவில்லை.

* மனைக்கும் சோதிடம்

* மனைவிக்கும் சோதிடம்

* மனை கட்டுவதற்கும் சோதிடம்!

* மனைவியைத் தேர்ந்தெடுப்பதற்கும் சோதிடம்!

* வியாபாரம் தொடங்குவதற்கும் சோதிடம்!

* விவசாயத்தில் விதை விதைப்பதற்கும் சோதிடம்

இப்படி நமது நாட்டில் சோதிடம் களைகட்டிக் கொண்டிருக்கின்றது. நாட்டின் முதல் குடிமகனிலிருந்து, பிரதம அமைச்சர், முதலமைச்சர் உட்பட கடைக்கோடி குடிமகன் வரை அத்தனை பேரும் சாதி, மத வித்தியாசம் இல்லாமல் ஜோதிட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

இதில் பெயர் தாங்கி முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல! ஹஜ்ரத்மார்கள் இந்தக் குறி சொல்லும் தொழிலில் ஊறிப்போய்க் கிடக்கின்றனர்.

இதன் விளைவாக எத்தனையோ உயிர்ப்பலிகள் நடக்கின்றன. கொலையே நடக்கின்றது. மத்திய, மாநில அரசுகள் இதைக் கண்டுகொள்வதுமில்லை. நடவடிக்கை எடுப்பதுமில்லை. காரணம் அத்தனை பேரும் இந்த சோதிட அறியாமையில் உழன்று கொண்டிருக்கின்றனர்.

குழந்தையின் உயிரைப் பறித்த குறிகாரன்

சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒரு சிறுவனைக் காணவில்லை என்று தேடுகின்றார்கள். காணாமல் போன பையன் ஒரு முஸ்லிம். அதனால் அவனது பெற்றோர் ஒரு பெயர் தாங்கி முஸ்லிம் குறிகாரரிடம் சென்றுள்ளனர். சிறுவன் ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் போய்விட்டான் என்று குறிகாரன் விட்டு அடித்திருக்கின்றான்.

சிறுவனைத் தேடும் குடும்பத்தார், உற்றார், உறவினர் அத்தனை பேரின் கவனமும் ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் தான் இருந்தது. அருகில், அண்டை வீட்டில் அல்லது மொட்டை மாடியில் அவர்கள் கவனம் செல்லவே இல்லை.

இரண்டு, மூன்று நாட்கள் கழித்து வீட்டின் மொட்டை மாடியில் பிண வாடை வீசியிருக்கின்றது. வாடை வரும் இடத்தைப் பார்த்ததில் தண்ணீர் தொட்டியிலிருந்து நாற்றம் வந்தது. காணாமல் போன சிறுவனின் சடலம் தண்ணீர் தொட்டியில் ஊறி, உப்பி, பிய்ந்து நாறிக் கொண்டிருந்தது.

மாடியில் விளையாடச் சென்ற பையன், தொட்டியில் விழுந்து மரணத்தைத் தழுவியது பின்னரே தெரிய வந்தது. குருட்டு சிந்தனை கொண்ட குறிகாரனுக்கு, பையன் மாடி வீட்டில் தான் இருக்கிறான் என்ற உண்மை தெரியாததால் ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பால் என்று உளறியுள்ளான்.

இவனது உளறலுக்காக செலவழித்த கால நேரத்தையும், கவனத்தையும் இங்கே செலுத்தியிருந்தால் ஒருவேளை பையனை உயிருடன் கூட மீட்டியிருக்கலாம்.

இப்போது இந்த உயிர் பறிபோனதற்கு யார் காரணம்? இந்தக் குறிகாரன் தான். இதற்காக இத்தகையவர்களுக்கு சவூதியைப் போன்று மரண தண்டனை கொடுக்க வேண்டும்.

கொலைகாரனான குறிகாரன்

இந்தக் குறிகாரர்கள் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதற்குப் பின்வரும் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாகும்.

சுரேஷ் போரா (வயது 44) என்ற வியாபாரி புதிய முதலீடு செய்யும் போதெல்லாம் தன்னுடைய ஆஸ்தான ஜோதிடன் வசந்த் என்பவனிடம் கேட்காமல் எதையும் முதலீடு செய்வதில்லை.

இவ்வாறிருக்கையில், இரு தினங்களுக்கு முன்பு ஜோதிடன் வசந்த், தன்னுடைய வாடிக்கையாளர் சுரேஷ் போராவிடம், “இரண்டொரு நாட்களில் வருமான வரித்துறை உன் வீட்டை சோதனையிட உள்ளது. எனவே உன்னுடைய வீட்டில் பணம், நகையெல்லாம் வைத்திருக்காதே! எனது வீட்டில் கொண்டு வந்து வைத்துவிடு!” என்று ஆரூடமும் அறிவுரையும் சொல்லியிருக்கிறான்.

இந்த அப்பாவி வணிகர், அவனது வார்த்தைகளை அப்படியே நம்பி, தன் வசமிருந்த நகை, தொகை அத்தனையையும் அவனிடம் ஒப்படைத்துள்ளார். இதற்குப் பின்னர் அந்த வியாபாரியைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர். வணிகரை வலைவீசி காவல்துறை தேடுகின்றது. குடும்பத்தினர் தேடுகின்றார்கள். கூடவே இந்தக் குறிகாரனும் தேடுகின்றான். இதற்கிடையில், அந்த வியாபாரி ஆயிரம் விளக்கு பகுதியில் காணப்படலாம் என்று மேற்படி குறிகாரன் மீண்டும் ஒரு குட்டி ஜோசியம் கூறுகின்றான்.

ஆனால் காவல்துறையினர் வியாபாரியின் அழுகிப் போன சடலத்தை ஒரு பார்க் அருகில் நின்ற காரிலிருந்து மீட்கின்றனர். காவல்துறையின் சந்தேகம் சரியான திசையில், ஜோதிடன் பக்கமே திரும்புகின்றது. கைது செய்து நையப் புடைத்ததில் ஜோதிடன் வசந்த் வணிகரைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.

பழத்தில் சயனைட் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கின்றான் என்பது காவல்துறை விசாரணையில் துலங்கியது. குறிகாரனின் வீட்டை சோதனையிட்ட போது, இரண்டு கோடி ரூபாய் பெறுமான நகைகள், 28 லட்ச ரூபாய் ரொக்கத்தை காவல்துறை கைப்பற்றியது. இந்தக் கொலைகாரக் குறிகாரன் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டான். இந்தச் சம்பவம் பிப்ரவரி 2007ல் சென்னை செம்பியத்தில் நடைபெற்றது.

இப்போது சொல்லுங்கள். இந்தக் குறிகாரர்களை என்ன செய்ய வேண்டும் என்று! இவர்களுக்கு மரண தண்டனையை விட மாற்றுத் தண்டனை கிடையாது என்பதை இந்தச் சம்பவமும் நமக்குத் தெளிவாக உணர்த்தவில்லையா?

ஆத்தூரில் இறந்த ஆறு குழந்தைகள்

சேலம், ஆத்தூர், உதயப்பட்டியில் 2008, ஜனவரி 8ஆம் தேதியிலிருந்து சிறு குழந்தைகள் ஒவ்வொன்றாக இறந்தன. குழந்தைகளுக்குக் கடவுளின் சாபம் இறங்கிவிட்டது என்று ஒரு சிலர் ஊரையே காலி செய்து விட்டு, கோயிலில் போய் தங்கினர். துவக்கத்தில் ஏதோ தொற்று நோய் என்று பயந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆய்வு செய்து பார்த்ததில் தொற்று நோயால் குழந்தைகள் இறக்கவில்லை என்று முடிவானது.

இந்நிலையில் தினேஷ் என்ற ஆறு வயதுச் சிறுவனும், பிரியதர்ஷினி என்ற மூன்று வயது சிறுமியும் இறந்தனர். பயத்தில் நடுங்கிய கிராமத்தில் காவல்துறை களமிறங்கி, இரண்டு குழந்தைகளின் பிரேதங்களையும் பரிசோதனை செய்து பார்த்த போது, குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்தது.

தீவிர விசாரணையின் போது சந்தேகம், அந்த ஊரில் இருந்த இரண்டு ஜோதிடர்களை நோக்கிச் சென்றது. பெருமாயி, பழனிமுத்து ஆகிய தம்பதியர் தான் இந்தப் படுபாதகமான காரியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். குழந்தைகளுக்கு மிட்டாய் போன்ற இனிப்புப் பண்டங்களில் விஷத்தைக் கலந்து கொடுத்துவிட்டு, சம்பந்தப்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று, “உங்கள் குழந்தை ஒரு மணி நேரத்தில் இறந்துவிடும்’ என்று குறி சொல்லிவிடுவார்கள்.

சோகச் செய்தியாக இருந்தாலும் சொன்ன செய்தி பலித்தது அல்லவா? இந்த ஜோதிடத் தம்பதியின் மரியாதை கூட ஆரம்பித்துவிட்டது. இப்படி நாம் சொல்லவில்லை. அவர்களே காவல்துறையில் வாக்குமூலம் கொடுத்தனர்.

பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்படுகின்றனர். கணவன் பழனிமுத்து சிறையிலேயே தற்கொலை செய்து இறந்துவிடுகின்றான். அவனது மனைவி 2012, ஜூலை மாதம் சந்தேகத்தின் பலனாய் நீதிமன்றத்தால் விடுதலையாகி விடுகின்றாள்.

ஆறு குழந்தைகளை தனது குறி சொல்லும் தொழிலுக்காகக் கொலை செய்துவிட்டு, உதயப்பட்டிக் கொலைகாரியான குறிகாரி உத்தமியாக வெளியே வந்து விட்டாள். சட்டத்திற்கு முன்னால் இந்தக்  கொலைகளுக்கு தண்டனை பெறாமல் இவள் தப்பிவிட்டாள். ஆறு குழந்தைகளின் உயிர்கள் கால் காசுக்கு மரியாதை இல்லாமல் போனது தான் மிச்சம்.

இப்போது சொல்லுங்கள்! இந்தக் கயவர்களைக் கழுமரம் ஏற்றாமல் தப்ப விடுவது, தண்டிக்காமல் விடுவது நியாயமா?

கருவை அழித்த குறிகாரன்

2012, ஏப்ரல் 2 அன்று, “தி டெலிகிராப்’ பத்திரிகையில் பதிவான செய்தி:

ஆந்திராவில் குண்டூர் மாவட்டம் தெனாலி என்ற ஊரில் அல்லாபக்ஷ், முன்னி என்ற தம்பதிக்கு 2000ல் திருமணம் நடக்கிறது. திருமணம் முடித்ததிலிருந்து பிறந்ததெல்லாம் பெண் குழந்தைகள் தான். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. மூன்றாவது பிறந்த பெண் குழந்தை மர்மமான முறையில் மரணத்தைத் தழுவுகின்றது.

ஆண் குழந்தை வேண்டுமே! அதனால் ஜோதிட சாமியாரை அணுகுகின்றனர். அந்தப் பாவி, “இனி பிறக்கப் போவதும் பெண் குழந்தை தான். ஏழாவது குழந்தை தான் ஆண் குழந்தை’ என்று ஆரூடம் கூறியிருக்கின்றான். நான்காவது, ஐந்தாவது குழந்தைகளையும் கருவிலேயே கொலை செய்துள்ளார்கள். இரும்பு மனம் கொண்ட அவளது கணவன் அல்லாபக்ஷ் ஒரு வெல்டிங் தொழில் செய்யும் கொல்லன். ஆறாவதாக முன்னி கருவுற்ற போது கொலைகாரக் கொல்லனின் உறவினர்கள், மனைவியின் கைகளைப் பிடித்துக் கொள்ள, பெண் கருவைச் சுமந்த பாவத்திற்காக முன்னியின் அடி வயிற்றில் இரும்புக் கம்பியால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குகின்றான். அவ்வளவு தான். கலங்கியது முன்னியின் கரு மட்டுமல்ல! முன்னியும் சேர்த்துத் தான்.

32 வயதான முன்னி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்படுகின்றார். அங்கு அவருக்கு ஓர் அதிர்ச்சித் தகவல் காத்திருக்கின்றது. இனிமேல் முன்னியின் வயிற்றில் குழந்தை பெறும் பாக்கியமே இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தது தான் அந்த அதிர்ச்சித் தகவல்!

கொலைகாரக் கணவனும், அவனது தந்தை அப்துல் பாபு, தாய் தாஹிருன்னிஸா ஆகியோரும் கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள ஜோதிட சாமியாரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்று காவல்துறை ஆய்வாளர் ஷேக் உஸ்மான் தெரிவித்துள்ளார்.

“ஏழாவது தான் ஆண் குழந்தை பிறக்கும் என்று ஜோசியக்காரன் சொன்னதால், மூன்று தடவையும் என் மகள் கருவாகி, கருவாகி அநியாயமாகக் கலைக்கச் செய்தார்கள்” என்று முன்னியின் தாயார் பாத்திமா கூறினார்.

இந்த ஜோதிடக்காரனின் ஜோதிடத்தால் மூன்று குழந்தைகள் ஈவு இரக்கமில்லாமல் கலைக்கப்பட்டுள்ளன; கருவறுக்கப்பட்டுள்ளன.

இப்போது சொல்லுங்கள்! குறி சொல்லும் இந்தக் கொலைகாரப் பாவிகளை உயிருடன் விட்டு வைக்கலாமா?

பலிக்காத குறியால் பலியான ஜோதிடன்

22.12.2014 அன்று “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் கார்மேகம் என்ற பத்திரிகையாளர், குறி பார்க்கும் கலாச்சாரம் கீழ்தட்டு மக்களிடம் மட்டும் இல்லை, மேல்தட்டு மக்களிடமும் உள்ளது என்ற தலைப்பின் கீழ் சமூக அவலத்தைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

அறிவியல் வளர்ச்சி பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருந்தும், சமுதாயத்தில் இந்த அறியாமை இன்னும் ஒழியவில்லை. அதனால், புரையோடிப் போன மூடப்பழக்கங்களைக் கல்வியறிவு களைந்து விடும் என்று யாரும் வாதிட முடியாது.

தினசரி பத்திரிகைகள், மாத, வார இதழ்கள், தொலைக்காட்சிகளில் ஜோதிடம் பெரிய அளவில் ஆக்கிரமித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் கூட இதை ஒரு பாடமாக்கியுள்ளன. அதனால் இந்தப் பழக்கம் கீழ்தட்டு மக்களிடம் மட்டும் குடிகொண்டுள்ளது என்று சொல்லிவிட முடியாது என இதுதொடர்பாக ஆய்வு நடத்திய கலாச்சார ஆய்வு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பேய்க்கும் பார்! நோய்க்கும் பார்!

கிராமப்புற மக்களுக்குக் காய்ச்சலோ, தீராத நோயோ ஏற்பட்டுவிட்டால் அது நோயாக இருக்கலாம்; அல்லது பேயாகவும் இருக்கலாம். எனவே நோய்க்கும் பார்க்க வேண்டும்; பேய்க்கும் பார்க்க வேண்டும் என்று இரண்டுக்கும் சேர்த்தே பார்ப்பார்கள். உதாரணத்திற்கு அம்மை நோய், வைரஸ் காய்ச்சல் போன்றவை ஏற்பட்டு விட்டால் அம்மனிடம் செல்கின்றனர். காணாமல் போன பொருட்களை மீட்க வேண்டுமானால் அந்தத் துறைக்கு சுடலை மாடனை நாடுகின்றனர்.

அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என படித்த பட்டதாரிகள், பண்டிதர்கள் அத்தனை பேரும் ஜோதிடம் எனும் மாய வலையில் வீழ்ந்து கிடக்கின்றனர். விஞ்ஞானிகள் செயற்கைக் கோள்கள், ஏவுகணைகள், விண்கலங்களை ஏவுவதற்கும், அனுப்புவதற்கும் ஜோதிடம் பார்க்கின்றனர். அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடவும் கூட்டணி அமைக்கவும் ஜோதிடம் பார்க்கின்றனர்.

இவை அனைத்தும் நமக்குப் படம்பிடித்துக் காட்டும் விஷயம், இந்த ஜோதிடம் என்ற மாய மந்திர நோய் அடித்தட்டு மக்களை மட்டுமல்லாது, படித்த பண்டிர்கள் அனைவரையும் தன் வலையில் இழுத்துப் போட்டு அவர்களை ஆட்டி அலைக்கழிக்கின்றது.

நல்ல காலமா? நாச காலமா?

அண்மையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி அற்புதசாமி என்பவர் விக்கிரமசிங்கபுரம் அருகில் மாரியப்பன் என்பவரால் கொலை செய்யப்படுகின்றார்.

மாரியப்பன் இதற்கு முன்பு அவரது உதவியாளராக செயல்பட்டவர். மாரியப்பனின் குடும்பத்திற்கு நல்ல காலம் வரும்; வளமும் செழிப்பும் பெருகும் என்று அற்புதசாமி அருள்வாக்கு சொல்லியிருந்தார். ஆனால் ஒன்றுமே பலிக்கவில்லை. அதனால் ஆத்திரமும் கோபமும் கொண்ட மாரியப்பன் அற்புதசாமியை போட்டுத் தள்ளிவிட்டார். மாரியப்பனுக்கு நல்ல காலம் பிறக்கவில்லை. நாச காலமே பிறந்தது.

தனது உதவியாளராக இருந்த மாரியப்பனுக்கு, தான் சொன்ன வாக்கு பலிக்காமல் போய் அவர் தனது உயிருக்கே உலை வைக்கப் போகின்றார் என்ற அறிவு குறிகார அற்புதசாமிக்கும் இல்லாமல் போய்விட்டது.

இறுதியில் தனது எதிர்காலத்தை அறியாத அற்புதசாமி என்ற தற்குறி, குறி சொல்லும் தொழிலுக்கு பரிதாபமாகப் பலியாகி விடுகின்றார்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், கற்க வேண்டிய பாடம் இந்த ஜோதிடக்காரர்களின் சித்து விளையாட்டுக்களால், ஏமாற்று வேலைகளால் பல பேரின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பல பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. பல பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டுள்ளன. இத்தனைக்குப் பின்னரும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதிகப்பட்சம் இந்த நாட்டிலுள்ள நீதிமன்றம் ஒரு சில ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கின்றது. அதற்குப் பின்னால் பழைய குருடி, கதவைத் திறடி என்ற கதையாக குறிகாரர்கள் தங்கள் பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்து விடுகின்றார்கள். மக்கள் அந்த மாய வலையில் விட்டில் பூச்சிகளாய் மீண்டும் மீண்டும் விழுகின்றனர். இதற்கு விடிவும் முடிவும் இஸ்லாத்தில் மட்டும் தான் உள்ளது.

முதலில் இஸ்லாம் ஓர் அடிப்படையை முஸ்லிம்களுக்குத் தெரிவிக்கின்றது. ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட எந்தவொரு விஷயத்தையும் மனிதன் அறிய முடியாது. சிந்தனை அறிவின் மூலம் சிலவற்றை உணர்ந்து கொள்ள முடியும். மற்றபடி மறைவான செய்திகளை யாராலும் அறிய முடியாது என்று திருக்குர்ஆன் தெளிவாக பிரகடனப்படுத்துகின்றது.

யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

அல்குர்ஆன் 31:34

இந்த ஐந்து விஷயங்களையும் மனிதன் ஐம்புலன்களைக் கொண்டு அறிய முடியாது என்ற உண்மையை விளங்கிக் கொண்டால் இந்த ஜோதிடர்கள் தலையெடுக்க முடியாது. மீறி தலையெடுத்தால் இஸ்லாமிய மார்க்கம் கூறுகின்றபடி அவர்களைக் களையெடுத்தால் மனித சமுதாயம் இதுபோன்ற ஏமாற்று வேலைகளிலிருந்து பாதுகாப்பு பெற்றுவிடும்.