கடலில் விழுந்த ராக்கெட் கைவிட்ட ஏழுமலையான்

கடலில் விழுந்த ராக்கெட் கைவிட்ட ஏழுமலையான்

கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து “ஜிசாட்-4′ செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி – டி3 ராக்கெட் 29 மணி நேர கவுண்ட்டவுனுக்குப் பிறகு விண்வெளியை நோக்கி 4.27 மணிக்கு சீறிப் பாய்ந்தது.

மணிக்கு 36 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய இந்த ராக்கெட்டின் இன்ஜினுக்கு கிரையோ ஜெனிக் (Cryogenic) என்று பெயர். கிரையோஜெனிக் என்றால் “கடும் குளிர்விப்பு’ என்று பொருள். இந்த ராக்கெட்டைச் செலுத்துவதற்கு ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் ஆகிய இரு வாயுக்கள் கூட்டாகத் தேவை.

இந்த இன்ஜின் இயங்குவதற்கு இவ்விரு வாயுக்களையும் வாயு நிலையிலேயே பயன்படுத்த முடியாது. மாறாக இவ்விரு வாயுக்களையும் திரவ நிலைக்கு மாற்றித் தான் பயன்படுத்த வேண்டும்.

நமது வீட்டுச் சமையலுக்காக வருகின்ற கியாஸ், வாயு நிலையில் அதாவது காற்று நிலையில் வருவதில்லை. மாறாக, திரவ நிலையில் மாற்றப்பட்டுத் தான் வருகின்றது. இவ்வாறு மாற்றப்படுவதற்குக் காரணம் வாயுவுக்கு அதிகமான இடம் தேவை. வாயு நிலையில் தந்தால் இந்த சிலிண்டர்கள் போதாது. அதனால் அதைத் திரவ நிலைக்கு மாற்றி சிலிண்டரில் கொண்டு வரப்படுகின்றது. இந்த வாயுவை அழுத்தத்தின் மூலம் திரவ நிலைக்குக் கொண்டு வருகின்றார்கள்.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆக்ஸிஜனையும் ஹைட்ரஜனையும் திரவ நிலைக்குக் கொண்டு வர முடியாது. மாறாக இதற்கு வேறு தொழில்நுட்படம் அவசியம். ஆக்ஸிஜன் வாயுவை, மைனஸ் 183 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்விக்க வேண்டும். அப்போது அது திரவ நிலையை அடையும். ஹைட்ரஜனை, மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் வரை குளிர்விக்க வேண்டும்.

அண்மையில் செலுத்தப்பட்ட ராக்கெட் மூன்று கட்டமைப்புகளைக் கொண்டது. ஒவ்வொரு கட்ட ராக்கெட்டிலும் தனித்தனி இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

முதல்கட்ட ராக்கெட்டில், அதாவது அடிப்புற ராக்கெட்டில் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றது.

இரண்டாவது கட்ட ராக்கெட்டில் குளிர்விப்பு தேவைப்படாத எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றது.

மூன்றாவது கட்ட ராக்கெட்டில் அதாவது உச்சியில் பொருத்தப்பட்ட ராக்கெட்டில் திரவ ஆக்ஸிஜனும், திரவ ஹைட்ரஜனும் பயன்படுத்தப்படுகின்றன.

இங்கு தான் திரவ வடிவில் உள்ள இவ்விரு வாயுக்களும் ராக்கெட்டின் என்ஜின் பகுதிக்கு வந்ததும் வாயுக்களாக மாறி ஒன்று சேர்ந்து எரியும் போது 3000 டிகிரி செல்சியஸ் வெப்பம் தோன்றுகின்றது.

இந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட் சுமார் 200 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்ததும் இந்த கிரையோஜெனிக் ராக்கெட் செயல்பட ஆரம்பித்தது. சுமார் இரண்டரை டன் எடையுள்ள ஜிசாட்-4 செயற்கைக் கோளை மணிக்கு 36 கி.மீ. வேகத்தில் விண்வெளியில் வீசும்.

அதன் பின்னர் அந்தச் செயற்கைக் கோள் நீள்வட்டப் பாதையில் பூமியைச் சுற்ற ஆரம்பிக்கும்.

இப்படி ஓர் எதிர்பார்ப்பில் அனுப்பப்பட்ட ராக்கெட், பாதை தவறி கடலில் விழுந்தது. 420 கோடி ரூபாய், இந்த ராக்கெட்டை உருவாக்குவதற்குத் தேவைப்பட்ட உழைப்பு அனைத்தும் கடலில் கரைந்து போனது.

ஜிஎஸ்எல்வி-டி3 மற்றும் ஜிசாட் செயற்கைக் கோளின் மதிப்பு ரூ.420 கோடி. இதில் ராக்கெட்டின் மதிப்பு மட்டும் 170 கோடி!

இதன் எடை 416 டன்

இதில் ஈடுபட்ட விஞ்ஞானிகளின் எண்ணிக்கை 2000

இதைத் தயாரிக்க செலவான காலம் 18 ஆண்டுகள்

1992ஆம் ஆண்டு இதன் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு ரஷ்யா விற்பதாக இருந்தது. அவ்வாறு கொடுக்கக் கூடாது என்று ரஷ்யாவை அமெரிக்கா தடுத்து விட்டது. அதனால் இந்த ராக்கெட் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.

ஈயைக் கூட ஓட்ட இயலாத ஏழுமலையான்

இம்மாபெரிய ராக்கெட் உருவாக எவ்வளவு காலம் தேவைப்பட்டது? எவ்வளவு பணம் செலவானது? எத்தனை பேர்களின் உழைப்பு என்பதையெல்லாம் நாம் மேலே பார்த்தோம். இவை அத்தனைக்கும் மேலாக மனித மூளை இதற்கு மிக அவசியமானது. அந்த மூளையைத் தான் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் அடகு வைத்து விட்டார்.

ஏப்ரல் 10ஆம் தேதி இவர் திருப்பதிக்குப் போய் ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்கின்றார். இவ்வாறு தரிசிப்பது அவரது தனிப்பட்ட உரிமை; அவரது மதத்தின் நம்பிக்கை.

அங்கு போய் ஏழுமலையானின் பாதத்தில் ஜிஎஸ்எல்வி டி3 ராக்கெட்டிற்கான திட்ட அறிக்கையை வைத்து, அது வெற்றிகரமாகப் பறக்க வேண்டும் என்று வேண்டியது தான் இங்கு கேள்விக்குரிய விஷயமாகும்.

இந்த நாட்டின் இவ்வளவு பெரிய திட்ட அறிக்கையை இன்று ஏழுமலையானிடம் எடுத்துச் செல்வது போன்று, பக்கத்து நாடான நேபாளத்தில் ஏதாவது எட்டுமலையானிடம் கொண்டு சென்றால் என்ன ஆகும்? குருட்டு பக்தியின் காரணமாக இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வளவு பெரிய ஆவணத்தை எங்கும் எடுத்துச் செல்லலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

சரி! இவரது இந்த தரிசனத்திற்குப் பிறகு, வேதப் பண்டிதர்களின் வேத மந்திரத்திற்குப் பிறகு, தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்ட பிறகு ராக்கெட் தன்னுடைய வட்டப் பாதையை அடைந்ததா? என்றால் இல்லை.

விண்ணை நோக்கி எகிறிப் பாய்ந்த சிறிது நேரத்தில் இந்த ராக்கெட் இடறி கடலில் போய் விழுந்து விட்டது. எதிர்பார்த்த அத்தனை பேருக்குமே பெருத்த ஏமாற்றம்! சிவகாசிப் பட்டாசு போல் பொசுங்கிப் போனது; எல்லோரின் ஆசையும் கருகிப் போனது.

இது எதைக் காட்டுகின்றது?

ஏழுமலையானுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்பதையே காட்டுகின்றது.

ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் ஆகிய இரண்டும் இணைந்த ஓர் எரிபொருள் இருந்தால் தான் ராக்கெட் இயங்க முடியும் என்று தெரிந்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு, ஏழுமலையான் இயங்க வேண்டுமென்றால் அவனிடம், அந்தச் சிலையிடம் என்ன எரிபொருள் – ஆற்றல் இருக்கின்றது என்பது தெரியவில்லை. ஏழுமலையான் என்பது வெறும் சிலை என்பதைச் சிந்திக்கும் அளவுக்கு இவரது மூளை இயங்கவில்லை. இப்படிப்பட்ட கருத்துக் குருடர்களை விஞ்ஞானிகள் என்று எப்படி நாம் ஒப்புக் கொள்ள முடியும்? சாதாரண அறிவாளி என்று கூடச் சொல்ல முடியாது.

ஏழுமலையான் இராக்கெட்டை இயக்குவது இருக்கட்டும்! தன் மேல் உள்ள ஓர் ஈயை ஓட்ட முடியுமா?

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

அல்குர்ஆன் 22:73

திருக்குர்ஆன் கூறும் இந்தக் கருத்து ஒரு பாமரனுக்குக் கூட தெளிவாகப் புரிகின்றது. எத்தனையோ பாமரர்கள் இது போன்ற கல்லுக்கு முன்னால், களி மண்ணால் படைக்கப்பட்ட சிலைகளுக்கு முன்னால் போய் நிற்பதில்லை; பிரார்த்திப்பதில்லை. இவன் தான் அறிவாளி! இஸ்ரோ தலைவர் விஞ்ஞானியாக இருந்தாலும் அறிவிலி!

இந்த அறிவிலி தான் இராக்கெட் கடலில் விழுந்ததும், “கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!” என்று தத்துவம் பேசுகிறார். இனிமேல் மத்திய அரசு இவருக்குச் சம்பளம் கொடுக்கத் தேவையில்லை. காரணம், இந்த ஏழுமலையான் பக்தர், பலனை எதிர்பார்க்காமல் பணி செய்பவர். அரசு சம்பளத்தை நிறுத்தியதும், இவர் ஏன் என்று கேட்கும் போது இந்தப் பதிலைக் கூறினால் மிகப் பொருத்தமாக அமையும்.

மனித முயற்சியில் இது போன்ற தவறு ஏற்படுவது இயல்பு தான் என்று சொல்வதை விட்டு விட்டு, பகவத் கீதை வசனத்தைச் சொல்கிறார். பகுத்தறிவை சிலையின் பாதத்தில் கொண்டு அடகு வைக்கும் இவரிடம் வேறு என்ன பதிலை எதிர்பார்க்க முடியும்?

இஸ்ரோ போன்ற மிகப் பெரும் அறிவியல் ஆய்வு மையத்திற்கு இப்படிப்பட்ட விபரம் இல்லாதவர்களைத் தலைவர்களாக நியமிப்பது இந்தியாவிற்கு நல்லதல்ல என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.