இயற்கை வேதத்தின் இனிய பொருளாதாரம்
நாம் வாழ்கின்ற பூமியில் மேடு பள்ளங்கள் இருப்பது போலவே மனித வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள் இருக்கின்றன. ஆம்! ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கின்றது. இந்த ஏற்றத்தாழ்வு இயற்கையானது. மனித இனத்தின் செயல்பாட்டுக்காக இறைவன் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறான். இதை எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறுகின்றான்.
உமது இறைவனின் அருட்கொடையை அவர்கள் தான் பங்கிடுகிறார்களா? இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் வாழ்க்கையை நாமே பங்கிடுகிறோம். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பணியாளராக ஆக்குவதற்காகச் சிலரை விட சிலரின் தகுதிகளை உயர்த்தினோம். அவர்கள் திரட்டுவதை விட உமது இறைவனின் அருள் சிறந்தது.
அல்குர்ஆன் 43:32
செத்துப் போன செங்கொடி சித்தாந்தம்
இப்படி ஓர் ஏற்றத்தாழ்வு இல்லையெனில் மனித வாழ்க்கை ஸ்தம்பித்து விடும். இந்த இயற்கை நியதிக்கு எதிராகக் கிளம்பியது தான் செங்கொடி சித்தாந்தம், அதாவது கம்யூனிஸக் கொள்கை!
கிறித்தவர்கள் தங்களுடைய வேதத்தில் கைவரிசை காட்டியதால் அது கலப்படத்திற்கு உள்ளானது. அந்தக் கலப்பட, கரை பட்ட வேதத்தை பாதிரிகள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி மக்களை ஏமாற்றியதுடன் மக்களின் சொத்துக்களைச் சூறையாடினர்.
மதப் பாதிரிமார்கள் ஒரு பக்கம் மக்களைச் சுரண்டினர். மறு பக்கத்தில் பணக்காரர்கள் மக்களைக் கொத்தடிமைகளாக நடத்தினர். இதில் நிலவும் சுரண்டலை ஒழிப்பதற்குப் பதிலாக, பணக்காரர்களை ஒழிக்கப் பாடுபட்டதால் கம்யூனிஸ சித்தாந்தம் பெரும் தோல்வியைத் தழுவியது. வெகு சீக்கிரத்திலேயே ரஷ்யாவிலும், சீனாவிலும் சாவைத் தழுவியது.
இஸ்லாமிய மார்க்கம் ஓர் இயற்கை மார்க்கம். ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியவன் அந்த இயற்கை விதியின் நாயனான எல்லாம் வல்ல அல்லாஹ் அல்லவா? அதனால் தான் ஏழை, செல்வந்தர் இரு சாராருக்கும் மத்தியில் ஓர் இணைப்புப் பாலத்தை ஏற்படுத்துகிறான். இதன் மூலம் சுரண்டலைத் தடுக்கிறான். மூன்று விதமான வழிகளில் இவ்வாறு சுரண்டலைத் தடுக்கிறான்.
- கட்டாய தர்மம் (ஜகாத்)
- விரும்பி வழங்கும் தர்மம்
- கடன் வழங்குதல்
“இஸ்லாமிய மார்க்கம் ஏழைகளின் மார்க்கம், அந்த ஏழைகளுக்கு எதுவுமில்லாமல் பணக்காரர்கள் மட்டும் பொருளாதாரத்தை அனுபவிக்க நினைத்தால் அந்தப் பொருளாதாரத்தை இறைவன் அழித்து விடுவான்’ என்று திருக்குர்ஆன் அருளப்படத் துவங்கிய, ஆரம்ப காலத்திலேயே மக்களின் உள்ளங்களில் பதியச் செய்து விடுகின்றது.
தோட்டத்தைத் துடைத்தெடுத்த சோதனை
அந்தத் தோட்டத்துக்குரியோரை சோதித்தது போல் இவர்களையும் நாம் சோதித்தோம். “காலையில் அதை அறுவடை செய்வோம்” என்று அவர்கள் சத்தியம் செய்து கூறினர்.
இறைவன் நாடினால் (அறுவடை செய்வோம்) என்று அவர்கள் கூறவில்லை.
எனவே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது உமது இறைவனிடமிருந்து சுற்றி வளைக்கக் கூடியது அ(த்தோட்டத்)தைச் சுற்றி வளைத்தது.
அது காரிருள் போல் ஆனது.
“நீங்கள் அறுவடை செய்வதாக இருந்தால் உங்கள் விளை நிலத்துக்குச் செல்லுங்கள்! இன்று உங்களிடம் எந்த ஏழையும் நுழைந்து விட வேண்டாம்” என்று அவர்கள் குறைந்த சப்தத்தில் பேசிக் கொண்டே காலையில் ஒருவரை ஒருவர் அழைக்கலானார்கள்.
தடுக்க ஆற்றலுடையோராகவே அவர்கள் சென்றார்கள்.
அழிக்கப்பட்ட அ(த்தோட்டத்)தை கண்ட போது நாம் வழி மாறி (வேறு இடம்) வந்து விட்டோம் என்றனர்.
இல்லை! நாம் (அனைத்தையும்) இழந்து விட்டோம்.
அவர்களில் நடுநிலையாக நடந்து கொண்டவர் “நீங்கள் இறைவனைத் துதித்திருக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?” என்று கேட்டார்.
“எங்கள் இறைவன் தூயவன். நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்” என்றனர்.
அவர்களில் ஒருவர் மற்றவரிடம் குறை கூறியோராக முன்னோக்கினார்கள்.
“எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே! நாங்கள் வரம்பு மீறி விட்டோமே!” என்றனர்.
“இதை விடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாக்கித் தரக் கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள்” (என்றும் கூறினர்.)
இப்படித் தான் (நமது) வேதனை இருக்கும். மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?
அல்குர்ஆன் 68:17-33
ஒரு குருணை அளவு கூட ஏழைகளுக்குப் போய் விடக் கூடாது என்று குறியாக இருந்த அவர்களது விளைச்சலை ஒரு நொடியில் ஓய்த்துக் கட்டி விடுகிறான்.
கஞ்சன் காரூன் வரலாறு
காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். “மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்” என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!
அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்).
“என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது” என்று அவன் கூறினான். “இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்” என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.
தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். “காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப் பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்” என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர்.
“உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது” என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினர்.
அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.
“அந்தோ! தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும் வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்காவிட்டால் நம்மையும் பூமியில் புதையச் செய்திருப்பான். அந்தோ! (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்” என்று முதல் நாள் அவனது நிலைமைக்கு ஆசைப்பட்டோர் அன்று காலையில் கூறலானார்கள்.
பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர் களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.
அல்குர்ஆன் 28:76-83
ஏழைகளுக்குத் தர்மம் கொடுக்காதவர்களையும் அவர்களது சொத்துக்களையும் இந்தப் பூபாகத்தில் கூட வைத்திருக்க மாட்டேன் என்று பூமியில் புதையச் செய்து விடுகிறான்.
இவ்வாறு ஏழைகள் மீது அல்லாஹ் வைத்திருக்கும் மதிப்பையும் மரியாதையையும், குர்ஆன் இறங்கிய ஆரம்ப கால கட்டத்திலேயே நன்கு உணர்த்தி விட்டான்.
இவ்வாறு உணர்த்தி விட்டு, ஜகாத், தர்மம், கடன் போன்ற மூன்று வித தர்மங்களை முஸ்லிம்களிடம் அறிமுகப் படுத்துகிறான். அந்த மூன்று வித தர்மங்களை இப்போது பார்ப்போம்.
- கட்டாய தர்மம் (ஜகாத்)
செல்வந்தர்கள் தங்களிடமுள்ள பொருளாதாரத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஜந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 8
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக ஜகாத் என்ற கட்டாய தர்மம் அமைந்துள்ளதை நபி (ஸல்) அவர்கள் இங்கு குறிப்பிடுகிறார்கள்.
பணம், தங்கம், வெள்ளி, கால்நடைகள், விளைச்சல்கள் ஆகியவற்றில் மார்க்கம் நிர்ணயித்துள்ள விகிதப்படி ஸகாத் என்ற ஏழை வரி கொடுத்தாக வேண்டும். ஸகாத் தொடர்பான கட்டளைகள் திருக்குர்ஆனில் பல இடங்களில் காணப்படுகின்றன.
அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள். மறுமையையும் மறுப்பவர்கள்.
அல்குர்ஆன் 41:7
இந்த வசனத்தின்படி ஸகாத் கொடுக்காதவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் ஆவர்.
- விரும்பி வழங்கும் தர்மங்கள்
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.
அல்குர்ஆன் 2:177
நன்மையை அடைய வேண்டுமா? இறைவனின் அன்பைப் பெற வேண்டுமா? அதற்குத் திருக்குர்ஆன் கூறும் வழி இதோ:
நீங்கள் விரும்புவதை (நல் வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.
அல்குர்ஆன் 3:92
இதற்கு விளக்கமாகப் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.
அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது: அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ)க்கு எதிரில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அஙகுள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.
“நீங்கள் விரும்புவதை (நல் வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள்” என்ற (3:92) இறை வசனம் இறங்கியதும், அபூதல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, “நீங்கள் விரும்புவதை (நல் வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள்” எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் எனது மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே, அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” எனக் கூறினார்.
நபி(ஸல்) அவர்கள், “ஆஹா! இது அதிக லாபம் தரக் கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக் கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகின்றேன்” எனக் கூறினார்கள்.
அதற்கு அபூ தல்ஹா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்!” எனக் கூறி விட்டு, அத்தோட்டத்தைத் தமது நெருங்கிய உறவினருக்கும் தமது தந்தையுடன் பிறந்த சகோதரரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார்.
நூல்: புகாரி 1461
தர்மத்தை உறவினர்களுக்கு வழங்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இப்படி ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்தினரைக் கவனிக்க ஆரம்பித்து விட்டால் யாசகத்தின் வாசலை அடைத்து விடலாம். இவ்வாறு தாமாக முன் வந்து செய்யும் தர்மத்தையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
- கடன் வழங்குதல்
செல்வந்தர்கள், ஏழைகளுக்கு வழங்கும் உதவிகளில் மிகவும் முக்கியமானது கடன் உதவியாகும். இவ்வாறு கடன் கொடுத்து உதவுவதற்குக் குறுக்கே வந்து நிற்பது வட்டி! இந்த சுயநலச் சிந்தனை, சுரண்டல் நிந்தனையை இறைவன் மிக வன்மையாகக் கண்டிக்கிறான். ஏழைகளுக்குக் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்குபவர்களுக்கு நிரந்தர நரகம் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கின்றது.
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 2:275
இவ்வாறு வட்டியை இஸ்லாம் வேரறுத்து எறிகின்றது. மீறி ஈடுபடுவோருக்கு நிரந்தர நரகத்தைத் தருகின்றது. அதே வேளையில் வட்டியின் மூலம் லாபத்தைக் கண்டு பழகி விட்ட மனிதனுக்கு, வட்டியில்லாமல் கடன் வழங்கினால் அதற்காக மறுமையில் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் (ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும், (கடன் வாங்கி) சிரமப்படுபவருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் இரு மடங்கு தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் செவிமடுத்தேனே! (இரண்டில் எது சரி?)” என புரைதா (ரலி) கேட்டார்கள். அதற்கு, “கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்ததும் அவகாசம் அளித்தால் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் இருமடங்கு தர்மம் செய்த கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: சுலைமான் பின் புரைதா (ரலி)
நூல்: அஹ்மத்
“யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மது பின் அல்குரளி
நூல்: அஹ்மத்
இவ்வாறு ஓர் அழகிய பொருளாதாரத் திட்டத்தை வழங்கி ஏற்றத்தாழ்வுகளை அகற்றுகின்றது.
ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லையேல் மனித வாழ்க்கையே ஸ்தம்பித்து விடும்.
ஆனால் அதே சமயம், இந்தப் பாகுபாட்டின் காரணமாக ஏழைகள் பட்டினியால் சாக வேண்டும்; பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாக வேண்டும் என்று விட்டு விடவில்லை.
மனிதனைப் படைத்த இறைவனிடமிருந்து வந்த இயற்கை மார்க்கம் என்பதால் இஸ்லாம் இப்படியொரு பொருளாதாரத் திட்டத்தை அமைத்து அனைவரும் வாழ வழி வகை செய்கின்றது.