இஷ்ராக் தொழுகை இஸ்லாத்தில் உண்டா?

இஷ்ராக் தொழுகை இஸ்லாத்தில் உண்டா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத அனாச்சாரங்கள் வணக்க வழிபாடுகள் என்ற பெயரில் நம் சமுதாயத்தில் ஊடுருவி இருந்தன.

ஹதீஸ் கலையைப் படிக்காத, அல்லது படித்தும் அதனைச் செயல்படுத்தாத போலி ஆலிம்கள் இந்த அனாச்சாரங்களுக்குப் பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டினர்.

அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் ஏகத்துவம் வந்த பிறகு இந்த ஹதீஸ்களின் உண்மை நிலை மக்களுக்கு விளக்கப்பட்டு ஓரளவுக்கு இந்த அனாச்சாரங்கள் ஒழிந்துவிட்டன. இது போன்று பலவீனமான ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து இஷ்ராக் தொழுகை என்ற வணக்கத்தை மக்கள் செய்து வருகின்றனர்.

இஷ்ராக் என்றால் சூரிய உதயம் என்பது பொருள். சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவது தனிச்சிறப்பு வாய்ந்தது என்று நம் சமுதாயத்தில் பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தத் தொழுகைக்கு இஷ்ராக் தொழுகை என்று சொல்லப்படுகின்றது.

இவ்வாறு தொழுதால் ஹஜ் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்கள் அனைத்திலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுகின்றன.

அபூ ழிலாலுடைய அறிவிப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு பிறகு அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூர்கிறார். சூரியன் உதித்த பிறகு அவர் இரண்டு ரக்அத்கள் தொழுதால் ஹஜ்ஜும் உம்ராவும் செய்த நன்மையைப் போன்று அவருக்கு (நன்மை) கிடைக்கும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: திர்மிதி 535

இந்தச் செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அபூ ழிலால் என்பவர் அறிவிக்கின்றார். இவர் பலவீனமானவர் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். இமாம் யஹ்யா பின் முயீன், இமாம் நஸாயீ, இமாம் யஃகூப் பின் சுஃப்யான், இமாம் இப்னு ஹிப்பான், இமாம் இப்னு அதீ, இமாம் அபூதாவுத் மற்றும் ஹாகிம் ஆகியோர் இவரைப் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர். எனவே இந்தச் செய்தி பலவீனம் என்பது உறுதியாகின்றது.

மூசா பின் அலீ என்பவரின் அறிவிப்பு

அபூ உமாமா (ரலி) அவர்கள் வழியாகவும் இதே செய்தி தப்ரானியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு பிறகு அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூர்கிறார். சூரியன் உதித்த பிறகு அவர் எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுதால் ஒரு ஹஜ் மற்றும் உம்ரா செய்த நன்மையுடன் அவர் திரும்புகிறார்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)

நூல்: தப்ரானீ

இந்தச் செய்தியில் நான்காவது அறிவிப்பாளராக மூசா பின் அலீ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் யாரென்ற விபரம் தெரியவில்லை. இவருடைய நம்பகத்தன்மை அறியப்படவில்லை என்பதால் இவர் பலவீனமானவராவார்.

இவரிடமிருந்து உஸ்மான் பின் அப்திர் ரஹ்மான் என்பவர் அறிவிக்கின்றார். இவர் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாத நபர்களிடமிருந்தும் பலவீனமானவர்களிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவிக்கக்கூடியவர் என்று இமாம்கள் குறை கூறியுள்ளனர்.

மேற்கண்ட ஹதீஸை இவர் மூசா பின் அலீ என்பவரிடமிருந்து அறிவிப்பதால் மூசா பின் அலீ நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர் அல்லது பலவீனமானவர் என்பது மேலும் உறுதியாகின்றது.

மூசா பின் அலீ பின் ரபாஹ் என்ற பெயரில் நம்பகமான அறிவிப்பாளர் ஒருவர் இருக்கின்றார். மேலுள்ள செய்தியில் கூறப்படும் மூசா பின் அலீ என்பவர் இவராக இருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகின்றது. ஆனால் அறிஞர்களின் கூற்றைக் கவனித்தால் இவர் மூசா பின் அலீ பின் ரபாஹ் அல்ல என்பதை அறியலாம்.

இமாம் மிஸ்ஸி அவர்கள் உஸ்மான் பின் அப்திர் ரஹ்மானுடைய ஆசிரியர் பட்டியலில் மூசா பின் அலீ பின் ரபாஹைக் குறிப்பிடவில்லை. இவரிடமிருந்து உஸ்மான் அறிவித்திருந்தால் உஸ்மானுடைய ஆசிரியர் பட்டியலில் மூசா பின் அலீ பின் ரபாஹ் இடம்பெற்றிருப்பார். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. அதே போன்று மூசா பின் அலீ பின் ரபாஹ் அவர்களின் மாணவர் பட்டியலில் உஸ்மான் பின் அப்திர் ரஹ்மான் இடம்பெறவில்லை.

எனவே இந்தச் செய்தியை உஸ்மான் என்பவர் மூசா பின் அலீ பின் ரபாஹிடமிருந்து அறிவிக்கவில்லை. இதே பெயர் கொண்ட நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாத வேறு ஒரு மூசா பின் அலீயிடமிருந்து தான் அறிவித்துள்ளார் என்பது தெளிவாகின்றது. ஆகையால் இச்செய்தியும் பலவீனமாக உள்ளது.

அல்அஹ்வஸ் பின் ஹகீமுடைய அறிவிப்பு

உத்பா பின் அப்த் (ரலி) அவர்கள் வழியாகவும் இது போன்ற செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஃபஜ்ர் தொழுதுவிட்டு சூரியன் உதிக்கும் வரை அமர்ந்திருந்து லுஹா தொழுகையை நிறைவேற்றினால் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் நிகரான நன்மை அவருக்கு உண்டு.

அறிவிப்பவர்: உத்பா பின் அப்த் (ரலி)

நூல்: முஃஜமுஸ் ஸஹாபா

இதில் அல்அஹ்வஸ் பின் ஹகீம் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மது பின் ஹம்பல், அலீ பின் மதீனீ, யஹ்யா பின் மயீன், இமாம் அபூஹாதிம், இமாம் நஸாயீ, இமாம் இப்னு ஹஜர், இமாம் தஹபீ மற்றும் முஹம்மது பின் அவ்ஃப் ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர் வ-மையானவர் இல்லை என்று யஃகூப் பின் சுஃப்யான் மற்றும் ஜவ்ஸஜானி ஆகிய இரு அறிஞர்களும் கூறியுள்ளனர். எனவே இந்த அறிவிப்பும் பலவீனமாக உள்ளது.

இதே போன்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்ததாக ஒரு அறிவிப்பு இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் தொகுத்த அல்மஜ்ரூஹீன் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

முந்தைய செய்தியில் இடம்பெற்ற பலவீனமான அறிவிப்பாளர் அல்அஹ்வஸ் பின் ஹகீம் இதிலும் இடம் பெற்றுள்ளார்.

ஃபள்ல் பின் முவஃப்பக் என்பவரின் அறிவிப்பு

இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாகப் பின்வரும் செய்தி தப்ரானியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுதுவிட்டால் (சூரியன் உதித்த பிறகு) தொழும் வரை தான் அமர்ந்த இடத்திலிருந்து எழமாட்டார்கள். மேலும் அவர்கள் ஒருவர் ஃபஜ்ர் தொழுது விட்டுத் தன் இருப்பிடத்திலேயே அமர்ந்து பிறகு தொழுதால் அத்தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகவும் உம்ராவாகவும் ஆகிவிடுகின்றது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: தப்ரானி

இந்தச் செய்தியில் நான்காவது அறிவிப்பாளராக ஃபள்ல் பின் முவஃப்பக் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிக்கக்கூடியவர் என்றும் இமாம் அபூஹாதம் குறை கூறியுள்ளார். இவரிடம் பலவீனம் இருப்பதாக இமாம் இப்னு ஹஜர் அவர்களும் தெரிவித்துள்ளார்கள். ஆகவே இந்த அறிவிப்பும் பலவீனமாக இருக்கின்றது.

தய்யிப் பின் சல்மான் என்பவரின் அறிவிப்பு

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்ததாக இதே செய்தி தப்ரானியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுது விட்டு சூரியன் உதிக்கும் வரை தான் தொழுத இடத்திலேயே அமர்ந்து பிறகு நான்கு ரக்அத்கள் தொழுதால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: தப்ரானி

இதில் தய்யிப் பின் சல்மான் என்பவர் இடம்பெறுகிறார். தய்யிப் பின் சல்மான் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இவர் நம்பகமானவர் என்று ஏற்கத் தகுந்த எந்த அறிஞரும் சான்றளிக்கவில்லை. எனவே இந்த அறிவிப்பும் பலவீனமாக இருக்கின்றது.

சரியான செய்திகள்

நபி (ஸல்) அவர்கள் சூரியன் உதிக்கும் வரை பள்ளியில் அமர்ந்திருப்பார்கள் என்றும் சூரியன் உதித்த பிறகு எழுந்து சென்று விடுவார்கள் என்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழி கூறுகின்றது.

சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்! அதிகமாகவே (அமர்ந்திருக்கிறேன்). அவர்கள் சுப்ஹுத் தொழுகையை முடித்த பின் சூரியன் உதயமாவதற்கு முன் தாம் தொழுத இடத்திலிருந்து எழுந்திருக்க மாட்டார்கள். சூரியன் உதயமான பின்பே (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலத்தில் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (அதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 4641

சூரியன் உதித்த பிறகு தொழுவதால் ஹஜ்ஜும் உம்ராவும் செய்த நன்மை கிடைக்குமானால் இந்த வாய்ப்பை நபி (ஸல்) அவர்கள் தவற விட்டிருக்க மாட்டார்கள்.

எனவே இஷ்ராக் தொழுகை என்ற வணக்கத்தை இஸ்லாம் காட்டித் தரவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

அதே நேரத்தில் ஒருவர் சூரியன் உதித்த பிறகு உபரியாகத் தொழ நாடினால் இதற்கு மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை.

மற்ற நேரங்களில் உபரியான வணக்கங்களைத் தொழுதால் என்ன நன்மை கிடைக்குமோ அதே நன்மையே சூரியன் உதித்த பிறகு நிறைவேற்றப்படும் தொழுகைக்கும் கிடைக்கும்.

இந்நேரத்தில் தொழப்படும் தொழுகைக்கு பிரத்யேகமாக எந்தச் சிறப்பும் இல்லை. மாறாக தொழுவதற்கு அனுமதி மட்டுமே இருக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுப்ஹுத் தொழுகைக்குப் பின்னா-ருந்து சூரியன் (முழுமையாக) உதிக்கும் வரை எந்தத் தொழுகையும் இல்லை. அஸ்ர் தொழுகைக்குப் பின்னாலிருந்து சூரியன் (முழுமையாக) மறைவும் வரை எந்தத் தொழுகையும் இல்லை.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி (586)

சூரியன் முழுமையாக உதிக்கும் வரை எந்தத் தொழுகையும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே சூரியன் உதித்துவிட்டால் இதற்குப் பிறகு உபரியான தொழுகைகளை தொழுது கொள்ள அனுமதியுள்ளது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.