குடும்பவியல் தொடர்: 10
தவறுக்குத் தூண்டும் தனிமை சந்திப்புகள்
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.
குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நபியவர்கள் இந்த மனித சமூகத்திற்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்கள்.
ஆண்களோ பெண்களோ நாம் எவ்வளவு தான் ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் நம் மீது ஒழுக்க ரீதியாகப் பிறர் சந்தேகப்படுவதற்குரிய வாய்ப்புக்களிலிருந்தும், நம்மை ஒழுக்கத்திலிருந்து நெறி தவழச் செய்கின்ற காரியங்களிலிருந்தும் தவிர்ந்து வாழவேண்டும் எனவும் இஸ்லாம் நமக்கு வலியுறுத்துகிறது.
நாம் தூய்மையாக இருப்பது மட்டும் நமக்குப் போதாது. நமது தூய்மையைக் களங்கப்படுத்துகின்ற வாய்ப்புக்களையும் அதற்குரிய காரண காரியங்களையும் தவிர்க்க வேண்டும் என நபியவர்கள் நமக்கு பல்வேறு அறிவுரைகளையும் பல்வேறு எச்சரிக்கைகளையும் வழங்கியுள்ளார்கள்.
அதில் மிக முக்கியமான அறிவுரை, பெண்கள் மட்டும் தனியாக இருக்கும் வீடுகளில் அந்நிய ஆண்கள் எவரும் நுழைந்துவிடக்கூடாது என்ற கட்டளையாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: புகாரி 5232
இந்தச் செய்தியில் பெண்களுக்குத் தானே சட்டம் சொல்லப்படுகிறது; தனித்திருக்கும் ஆண்களிடம் பெண்கள் தாராளமாக, தனியாகச் சென்று வரலாம் என முடிவெடுத்துவிடக் கூடாது. ஆண்களுக்குச் சொல்லும் எல்லாச் சட்டமும் இஸ்லாத்தில் பெண்களுக்கும் பொருந்தும்.
எனவே ஆண் மட்டும் தனித்திருக்கின்ற வீடுகளுக்கு எந்தப் பெண்ணும் தனியாகச் செல்லக் கூடாது. பெண் மட்டும் தனியாக இருக்கும் வீடுகளுக்கு ஆண்களும் செல்லக் கூடாது என்பதைத் தான் இந்தச் செய்தி நமக்கு உணர்த்துகிறது.
இன்று பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சனைக்கு காரணமே, இது தான். ஆணோ, பெண்ணோ ஒழுக்கக் கேடாக நடந்துவிடுவார்கள் என்பதை விட அவர்கள் ஒழுக்கக் கேடாக நடந்திருப்பார்களோ என்ற சந்தேகம் தான் குடும்பங்களைச் சீரழித்துவிடுகிறது.
தனிமையில் இருக்கிற ஒரு பெண்ணைப் பார்ப்பதற்கு ஓர் ஆண் சென்றால், சமூகத்தின் பார்வை எப்படி இருக்கின்றது?
இன்னார் எதற்கு கணவனில்லாத வீட்டில் நுழைகிறார்? இந்தப் பெண் ஏன் இதை அனுமதிக்கிறாள்? அடிக்கடி இங்கே இவர் வந்து செல்வதற்கு என்ன காரணம்? இந்த நபருக்கு இவளிடம் என்ன இருக்கிறது? என்றெல்லாம் பல கோணங்களில் சந்தேகத்திற்கு வழிவகுத்து விடுகிறது. இதுவே பிரச்சனைகளை உருவாக்கி விடுவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.
இந்தச் செய்தி பிறர் மூலமாக கணவனின் காதுகளுக்குக் கிடைக்கின்ற போது அவன் தன் மனைவி மீது தேவையற்ற சந்தேகங்களை யூகிக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சந்தேகமே கணவன் மனைவி இருவருக்கிடையில் பிரிவினைக்கும் காரணமாக பல நேரங்களில் அமைந்துவிடுகிறது.
மேலும் மார்க்கம் அனுமதித்த வகையில் பேசுவதாக இருந்தாலும் கூட தனிமை என்னும் காரணம் அதைத் தவறாக்கி விடுவதைப் பார்க்கிறோம். இதைத் தான் நபியவர்கள் மேற்கண்ட செய்தியில் கணவரின் உடன் பிறந்த சகோதரனாக இருந்தாலும் கூட அவனிடத்திலும் அந்நியன் என்கிற உறவு முறையையே பேண வேண்டும் என்று எச்சரிக்கின்றார்கள்.
மனிதர்கள் பலவிதங்களில் இருக்கிறார்கள்.
நாம் தவறு செய்யக் கூடாது; இறைவனுக்குப் பயந்தவர்களாக இருக்க வேண்டும் என்று உண்மையில் இறைவனுக்குப் பயப்படும் ஆண்களும் பெண்களும் இருப்பார்கள்.
ஆண், பெண் ஆகிய இரண்டு பேரும் கெட்டவர்களாகவே இருப்பார்கள். இந்த ஆணும் அந்தப் பெண்ணும் தவறான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆண் நல்லவனாகவும் பெண் கெட்டவளாகவும் இருப்பதற்கு வாய்பிருக்கின்றது.
அதே போன்று பெண் நல்லவளாகவும் ஆண் கெட்டவனாகவும் இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.
இந்த நான்கு வகையில் எந்த வகையைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தனிமையில் இருப்பதால் நன்மை ஏற்படப் போவதில்லை.
இவர்களில் முதலாம் தரத்தில் இருக்கிற இறையச்சமிக்கவராகவும் தொழுகையாளியாகவும் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதில் விடாப்பிடியான நேர்மையான ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இருவரும் தனிமையில் சந்திப்பதற்கோ, பேசுவதற்கோ வாய்ப்புக் கிடைத்தால் ஒரு நேரம் இல்லாவிட்டாலும் ஒரு நேரம் நிச்சயம் தங்களது ஒழுக்கத்தைத் தொலைத்து விடுவார்கள். தங்களின் கற்புக்குக் குந்தகம் விளைவித்து விடுவார்கள். ஏனெனில் அவர்களுடன் ஷைத்தான் இருக்கிறான் என்பதை மறந்துவிடக் கூடாது.
கெட்டுப் போவதற்கென்று திரிகின்ற கூட்டத்தை விட்டு விடுவோம். கெட்டுப் போய்விடக் கூடாது என்று பேணுதலாக இருப்பவர்களைக் கூட சந்தர்ப்ப சூழ்நிலை கெடுத்து விடுவதை நடைமுறையில் பார்க்கிறோம்.
நாம் எவ்வளவு தான் நல்லவர்கள் என்று பெயர் எடுத்திருந்தாலும் ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் சந்தர்ப்ப சூழ்நிலை இலேசான சலனத்தை ஏற்படுத்திவிட்டால், நாம் இதுவரை கட்டிக் காத்த கண்ணியம் ஒரு நிகழ்வின் மூலம் நிர்மூலமாகி விடுவதைப் பார்க்கிறோம். இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் பணி புரிந்தவர்களின் மீது எழும் தொடர்ச்சியான பாலியல் குற்றச்சாட்டுக்களை இதற்கு ஒரு நிதர்சன சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.
அதனால் தான் திருக்குர்ஆனில் நபி யூசுப் அவர்களின் வரலாற்றை அல்லாஹ் நமக்குச் சொல்லித் தருகிறான். ஒரு நபியை விடவா நாமெல்லாம் பரிசுத்தவான்கள்? ஒருக்காலும் அவ்வாறு இருக்கவே முடியாது.
மனிதனின் மனம் அலைபாயக் கூடியதாகத் தான் படைக்கப்பட்டிருக்கின்றது என்ற பேருண்மையை நாம் உணர வேண்டும். எப்போதும் ஒருவன் தனது மனதை ஒரே மாதிரியான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாது. சில சூழ்நிலைகளில் மனிதன் தடுமாறிவிடுகிறான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதைப் புரிந்து கொள்ளாத பலர், தான் நல்லவன் என்ற காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு, நான் அப்படிப்பட்டவனா? அப்படிப்பட்டவளா? என்று கேட்பதைப் பார்க்கிறோம். இன்னும் சில பெற்றோர் தங்கள் பிள்ளைகள் குறித்து, என் மகன் அப்படிப்பட்டவன் கிடையாது, என் மகள் பத்தரை மாத்துத் தங்கம் என்றெல்லாம் பேசுவார்கள். அதற்குத் தான் நபியவர்கள், ஒருவர் எப்படிப்பட்ட ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும் சரிதான்; அவர்கள் தனித்து இருந்தால் அவர்களுடன் ஷைத்தான் மூன்றாவதாக இருப்பான் என்று எச்சரிக்கிறார்கள்.
இப்படித் தங்களையே பரிசுத்தம் என நினைப்பவர்களாக இருந்தாலும் உண்மையிலேயே உள்ளரங்கத்திலும் பரிசுத்தமாக நடப்பவர்களாக இருந்தாலும் ஒரு ஆணும் பெண்ணும் தனித்து இருக்கின்ற போது அவர்களுடன் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பது தான் பிரச்சனைக்கான காரணமாகும்.
ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் போது, அவர்கள் இருவரும் நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுடன் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கடைசியில் ஷைத்தான் தனிமையில் இருக்கிற இருவரிடமோ அல்லது ஒருவரிடமோ தனது வேலையைக் காட்டினால் அப்போது மூன்று பேரும் ஷைத்தானாக மாறிவிடும் சூழ்நிலையைப் பார்க்கிறோம்.
எனவே நான் நல்லவன், நான் நல்ல பெண் எனும் பேச்செல்லாம் ஏற்கத்தகுந்ததல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது முதலாவது புரிய வேண்டிய செய்தி!
இரண்டு பேருக்குள்ளும் எந்தத் தொடர்பும் ஏற்படவில்லை. இரண்டு பேரும் நல்லவர்கள் தான். வெறுமனே போய்விட்டு வருகிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதாவது மார்க்கம் தடுத்த எந்தக் காரியத்தையும் இருவரில் எந்த ஒருவரும் செய்யவில்லை என்று வைத்துக் கொண்டாலும், இரண்டு பேர்களின் சந்திப்பையும் தொடர்பையும் பார்க்கின்ற பிறரின் பார்வை எப்படியிருக்கும்?
இவன் எதற்காக இவளுடன் வருகிறான்? இவள் எதற்கு இவனிடமிருந்து புத்தகத்தை வாங்கினாள்? என்று தான் சந்தேகிப்பார்கள். கணவனில்லாத வீட்டிலிருந்து அந்நிய ஆண் வந்தால் அதைப் பார்க்கிறவர்கள் நிச்சயம் சந்தேகிக்கத் தான் செய்வார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் பலவிதத்தில் பார்க்கிறவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சந்தேகத்தை ஒருவர் இருவர் என்று பலரிடமும் பரப்புபவர்களாகவும் மனிதர்கள் இருப்பதைப் பார்க்கிறோம்.
முதலில் பார்த்தவன் தான் பார்த்ததைத் தான் சொல்வான். ஆனால் அவனிடம் கேட்டவன் அதில் கொஞ்சம் சேர்த்துச் சொல்வான். கேட்டவனிடமிருந்து சொல்பவன் இன்னும் அதில் சேர்த்துச் சொல்லி, இப்படியே சென்று கடைசியில் சொல்பவன் அவர்களிருவரும் தவறு செய்வதை நானே எனது கண்ணால் பார்த்தேன் என்று சொல்லிப் பரப்பிக் கொண்டிருப்பான். எத்தனையோ நடைமுறை நிகழ்வுகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன.
நாம் ஏன் இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதில்லை? கணவரில்லாத போது வீட்டுக்கு ஒருவர் வந்தால், “வீட்டிற்குள் வராதீர்கள்’ என்று சொல்வதற்கு ஏன் தயங்க வேண்டும்? அந்நியர் எவராக இருந்தாலும் கணவர் வெளியே சென்றிருக்கும் போது நம் வீட்டிற்கு வந்தால், “இப்போது கணவன் வீட்டில் இல்லை, போய்விட்டு கணவன் இருக்கும் போது வாருங்கள்’ என்று தனது பாதுகாப்பைப் பேணுகின்ற பதிலை கறாராகச் சொல்வதில் என்ன தயக்கம்?
இப்படிச் சொல்வதற்குக் கூச்சப்பட்டு, கடைசியில் வீட்டிற்குள் வந்தவரை வெளியில் உள்ளவர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்த்து விடுவார்களானால் அதவும் நம்முடைய கற்புக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதைப் பயந்து கொள்ள வேண்டும்.
அதாவது, நாம் நல்லவர்களாக இருந்து தவறு நடக்காவிட்டாலும் சரி! நம்மில் யாரேனும் ஒருவருக்கு அதுபோன்ற எண்ணங்கள் ஷைத்தானால் தூண்டப்பட்டு விடலாம். அல்லது பிறர் நம்மைத் தவறாக எண்ணுவதற்கு நாமே காரணமாகிவிட்டால் அதுவும் நம்மைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
ஆண் நல்லவனாக இருந்து அந்தப் பெண் கெட்டவளாக இருந்தால், நல்லவனைத் தவறு செய்வதற்கு ஒரு பெண் தூண்டிவிட்டால் அந்த நல்லவன் நிச்சயம் கெட்டு விடுவான் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இப்படி நடப்பதையும் பார்க்கத் தான் செய்கிறோம். இவனது ஒழுக்கம், நற்பண்பு, அத்தனையும் ஒருசேரக் கெட்டுவிடுவதைப் பார்க்கிறோம்.
அதேபோன்று பெண் நல்லவளாக இருந்து ஆண் கெட்டவனாக இருந்தாலும் மெல்ல மெல்லப் பேசி, பிறகு அவள் மனதை ஈர்க்கும்படி நடந்து கடைசியில் அவன் அவளை சீரழித்துவிடுகிற நிலையையும் நடைமுறையில் பார்க்கிறோம்.
பெண் கெட்டவளாக இருந்தால் ஆணிடம் குலைந்து பேசி ஆணின் மனதைக் கவர்ந்துவிடுகிறாள்.
ஆண் கெட்டவனாக இருந்தால் பெண்ணிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சியில் முதலாவதாக ஈடுபடுவான். பிறகு தனிமையில் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்துவான். பிறகு அவளுக்காகவே வாழ்வது போல் நடிப்பான். பிறகு அவளை தனது வலையில் வீழ்த்திவிடுவான். இப்படி ஆணும் பெண்ணும் கெட்டுப் போவதற்குரிய காரணங்களைப் பார்க்கிறோம்.
பெண்களை எந்த ஆண் புகழ்ந்து விட்டாலும் உடனே அந்த ஆணிடம் சரணடைந்து விடுவது பெண்களின் பலவீனம். இந்த பலவீனத்தையும் ஒரு கெட்ட ஆண் பயன்படுத்தப் பார்க்கிறான்.
ஆணின் பலவீனம் பெண் குலைந்து பேசுவதிலும், கண் சாடையிலும், பெண்ணின் சிரிப்பிலும் கூட இருக்கத் தான் செய்கிறது. பெண்ணின் பலவீனம் அவளைப் புகழ்வதில் இருக்கிறது.
ஆக, ஒருவரை இன்னொருவர் வீழ்த்தும் வகையில் ஒருவருக்கொருவர் கவர்ச்சியாக ஆணையும் பெண்ணையும் அல்லாஹ் படைத்திருக்கிறான் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். மேலும் நம்மை வீழ்த்துகின்ற அபாயகரமான இந்த பலவீனத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.
மேலே நாம் கூறியுள்ள இந்த விஷயங்களை அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளிலிருந்தும் அவை பத்திரிக்கைகளில் வெளியாவதிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்