இறுதி மூச்சுவரை ஏகத்துவம்

இறுதி மூச்சுவரை ஏகத்துவம்

அமீன் பைஜி, கடையநல்லூர்

அல்குர்ஆனில் இறைவன், முன்னர் வாழ்ந்த பல்வேறு நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகளையும், அவர்கள் சந்தித்த பிரச்சனைகளையும், அவர்கள் அதனை எப்படி எதிர்கொண்டார்கள் என்ற விஷயங்களையும் சொல்லிக் காட்டுகிறான். இவ்வாறு முந்தைய நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகளை அல்லாஹ் கூறுவதன் நோக்கம் அதிலருந்து நாம் படிப்பினை பெற வேண்டும்; நம்முடைய செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் அவர்களைப் போன்று ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாற்று நிகழ்ச்சியை குர்ஆனில் யூசுப் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் விரிவாக சொல்லிக் காட்டி விட்டு இறுதியில் அல்லாஹ் நபிமார்களின் வரலாற்று நிகழ்ச்சிகளில் அறிவுடைய மக்களுக்குப் படிப்பினை இருக்கிறது என்று சொல்லிக் காட்டுகின்றான்.

அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்பட்ட செய்தி அல்ல. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்தி, ஒவ்வொரு பொருளையும் விளக்கிக் கூறுகிறது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது.

(அல்குர்ஆன் 12.111)

இந்த வகையில் நபி இப்ராஹீம், யஃகூப் நபி ஆகிய இருவரும் தனது பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட அறிவுரைகளை வழங்கி வந்தார்கள் என்பதை அல்லாஹ், குர்ஆனில் 2:132 வது வசனத்தில் இவ்வாறு சொல்லிக் காட்டுகின்றான்.

“என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது” என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.

அதாவது நபி இப்ராஹிம்(அலை), நபி யஃகூப்(அலை) ஆகிய இருவரும் தமது பிள்ளைகளுக்கு அல்லாஹ் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை உங்களுக்காக தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கின்றான். எனவே இப்போது இஸ்லாத்தில் (ஓரிறைக் கொள்கையில்) வாழக்கூடிய நீங்கள், மரணம் வரும் போதும் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு முஸ்லிம்களாக (ஓரிறைக் கொள்கையை ஏற்றவர்களாக) மரணிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அதாவது இஸ்லாமியர்களாக (ஓரிறைக் கொள்கை எனும் ஏகத்துவத்தை ஏற்றவர்களாக) வாழ்வது பெரிதல்ல. மரணிக்கும் போதும் இஸ்லாமியர்களாக- ஏகத்துவவாதிகளாக மரணிக்க வேண்டும்.

இதே கருத்துப்பட அதற்கு அடுத்த வசனத்தில் 2:133ல் கொஞ்சம் விரிவாக அல்லாஹ் நபி யஃகூப் (அலை) அவர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் பற்றிய நிகழ்வை சொல்லிக் காட்டுகின்றான்.

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? “எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?” என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்ட போது “உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்றே (பிள்ளைகள்) கூறினர்.

நபி யஃகூப் அலை) அவர்கள் மரண வேளையில் கூட மற்ற விஷயங்களை பற்றிக் கவலைப்படாமல் தமது பிள்ளைகளின் இஸ்லாம் – ஏகத்துவம் குறித்துக் கவலைப்படுகிறார்கள். மரண வேளையில் இருக்கும் நாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் மரணமாகிவிடலாம். அப்படி மரணித்து விட்டால் ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருந்து ஒரே இறைவனை மட்டும் வணங்கும் தமது பிள்ளைகள், தமது மரணத்திற்குப் பிறகு எப்படி இருப்பார்கள்? அந்த ஒரே இறைவனை வணங்குவீர்களா? அல்லது திசைமாறி பல தெய்வங்களை வணங்கி வழிபடுவீர்களா? என்று கவலைப்பட்டுத் தான், எனக்கு பிறகு எதனை நீங்கள் வணங்குவீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு பிள்ளைகளும், “உங்களுடைய இறைவனும் உங்களுடைய மூதாதையர்களின் இறைவனுமான ஓரே இறைவனைத்தான் (உங்களுடைய மரணத்திற்கு பிறகும்) நாங்கள் வணங்குவோம்” என்று உத்தரவாதம் கொடுத்து பதில் கூறுகின்றார்கள்.

எனவே மேற்கூறப்பட்ட இரண்டு வசனங்களும் நமக்கு எதனை உணர்த்துகின்றது? இஸ்லாம் எனும் ஏகத்துவத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் கூறுவதோடு இஸ்லாமியர்களாக வாழ்வது மட்டும் போதாது. மரணமும் அதே நிலையில் ஏற்பட வேண்டும் என்று உணர்த்துகிறது.

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை நாம் தகர்த்தெறிந்து மரணத்தின் கடைசி மூச்சு வரை இஸ்லாம் எனும் ஏகத்துவத்தைக் கொண்டு செல்ல  வேண்டும்.

ஆரம்ப காலத்தில் ஏகத்துவத்தில் நம்முடன் ஒன்றாக இருந்த சகோதரர்கள் 5 அல்லது 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்து வந்த பாதைக்கே திரும்பி, ஏகத்துவத்தை விட்டு வெளியேறியிருக்கின்ற காட்சியைப் பார்க்கின்றோம். இதுபோன்றெல்லாம் இல்லாமல் மரணம் வரைக்கும் இந்த ஏகத்துவத்தைக் கொண்டு சென்று அத்துடன் மரணிக்க வேண்டும்.

இறுதி முடிவை பொறுத்துத் தான் அல்லஹ்விடம் நமது தீர்ப்பு அமைகின்ற காரணத்தால் முடிவு நன்றாக இருக்க வேண்டும்.

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் போரின்போது) நபி (ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டுக்கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்என்று (குஸ்மான் எனும் அந்த மனிதரைக் குறித்துக்) கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்துகொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். (குஸ்மான் என்ற) அந்த மனிதரோ (எதிரிகளுடன் கடுமையாகப்) போராடிக்கொண்டு இருந்தார். இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தனது வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, அதன்) கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக் (கொண்டு தற்கொலை செய்து)கொண்டார். வாள் அவருடைய தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார்.

(இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றனஎன்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 6493

போரில் கலந்து கொண்டு வீர தீரமாக அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு இறந்தவராக இருந்தாலும், அவர் சொர்க்கவாசி என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக, அவர் நரகவாசி என்று சொல்கின்றார்கள். காரணம். அவர் தன்னுடைய முடிவை  இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட தற்கொலையின் மூலம் ஆக்கிக் கொள்கிறார்.இந்த முடிவை வைத்து தான் அவரை அல்லாஹ் நரகில் நுழைக்கிறான்

மேலும் இஸ்லாம் எனும் ஏகத்துவத்துடன் தான் நமது மரணம் ஏற்பட வேண்டும். அதற்கு மாற்றமான முறையில் மரணம் அமைந்துவிடக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி 3:102வது வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே  தவிர மரணிக்காதீர்கள்!

இஸ்லாம் எனும் ஏகத்துவக் கொள்கையை ஏற்ற நிலையில் நாம் மரணிக்க  வேண்டும் என்ற அதே நேரத்தில் லாஇலாஹ இல்லல்லாஹூ எனும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற ஏகத்துவ சங்க நாதத்தை (சொல்லும் எண்ணமும்) ஒன்றுபட்டு மொழிந்தவர்களாக மரணிப்பது மிகப் பெரிய பாக்கியம். ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் மரணிக்க உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். மரணிக்கும் போது எவரது கடைசிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார். இதற்கு முன்பு அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: இப்னு ஹிப்பான் 7/272

ஏகத்துவக் கலிமாவோடு மரணித்தால் சொர்க்கம் கிடைக்கும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. இந்த பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தரவேண்டும்.

பின்வரும் ஹதீஸூம் ஏகத்துவத்தைத் தாங்கிய கலிமாவோடுதான் ஒரு மனிதன் இறக்க வேண்டும். அதற்கு மாற்றமான கொள்கையில் தனது மரணம் வந்து விடக் கூடாது என்பதை உணர்த்துகின்றது

அனஸ் (ரலி)  அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்தபோது, அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, ”இஸ்லாத்தை ஏற்றுக்கொள்!என்றார்கள். உடனே அவன் தன்னருகிரிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், ”அபுல் காசிம் – நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு!என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள், ”’இவனை நரகத்திரிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.  

நூல்: புகாரி 1356

நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்து வந்த சிறுவன் யூத மதத்தில் இருக்கிறான். அவனுக்கு நோய் ஏற்பட்டதும் அவனை நலம் விசாரிக்க வந்த நபியவர்கள், யூத மதத்தில் இருக்கும் இச்சிறுவனின் முடிவு என்னவாகுமோ என்றும், இதே நிலையில் இறந்து விட்டால் நரகம் சென்று விடுவானே என்ற கவலையுடனும் அவனுக்கு (ஏகத்துவக் கலிமாவைச் சொல்லி) இஸ்லாத்தைத் தழுவுமாறு அவனிடம் கூறுகிறார்கள். அவனும் இஸ்லாத்தை தழுவுகிறான். அதனால் தான் நபியவர்களும் சந்தோஷப்பட்டு அல்லாஹ்வை புகழ்ந்தவர்களாக சிறுவனின் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

இந்த குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் கூறுவது போன்று முஸ்லிமாக ஏகத்துவவாதியாக வாழ்வது முக்கியமல்ல. மாறாக இஸ்லாமியனாக ஏகத்துவவாதியாக மரணிக்க வேண்டுமென்பதே முக்கியம் என்று கூறுகிறது. இந்த உயர்ந்த பாக்கியம் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் ஈமான் எப்போதும் உள்ளத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.  அப்படி உறுதியாக இருந்தால் தான் மரணத்தின் கடைசி மூச்சின்போது ஏகத்துவத்தை  தாங்கிய கலிமாவைச் சொல்வதற்கான பாக்கியத்தைப் பெற முடியும்.

இப்படி, ஈமான் உறுதியாக இருப்பதற்கான சில வழிமுறைகளை மார்க்கம் கற்றுத் தந்துள்ளது.

1)            ஒவ்வொரு நாளும் ஓத வேண்டிய ஏகத்துவத்தைத் தாங்கிய கலிமாவைக் கூறுவது.

பின் வரும் துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்குப் பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹு அலா குல்லி ஷையின் கதீர்.

இதன் பொருள்:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

நூல்: புகாரி 3293

2) கடமையான தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய ஏகத்துவத்தை தாங்கிய கலிமாவை கூறுவது.

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதை(த்)த வலாமுஃதிய லிமா மனஃ(த்)த வலா யன்ஃபவு தல்ஜத்தி மின்(க்)கல் ஜத்து.

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. அவனுக்கே அதிகாரம். புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட் களின் மீதும் ஆற்றல் உடையவன். இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவன் இல்லை. செல்வமுடைய எவரது செல்வமும் உன்னிடம் பயனளிக்காது.

நூல்: புகாரி 844, 6330

3)            குர்ஆனோடு நம்முடைய தொடர்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம். (அல்குர்ஆன் 25.32)

இந்த வசனத்தில் நபியின் உள்ளத்தை ஈமானைக் கொண்டு வலுப்படுத்துவதற்காக சிறுக சிறுக இறங்கிய குர்ஆனைத்தான் காரணமாக இறைவன் கூறுகின்றான்.

எனவே நாமும் குர்ஆனோடு நமது தொடர்பை அதிகப்படுத்திக் கொண்டால் உள்ளத்தில் ஈமான் உறுதி பெறும்.

4)  குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களின் வரலாற்று நிகழ்வுகளில் படிப்பினை பெற்று அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தூதர்களின் வரலாற்றில் உமது உள்ளத்தைப் பலப்படுத்தும் அனைத்தையும் உமக்குக் கூறுகிறோம். உண்மையும், அறிவுரையும், நம்பிக்கை கொண்டோருக்குப் போதனையும் இதில் உமக்கு வந்துள்ளது. (அல்குர்ஆன்11.120)

இந்த வசனத்தில் நபிமார்களின் வரலாறுகள்,  நபியின் உள்ளத்தை  (ஈமானால்) பலப்படுத்தக்கூடியது என்று இறைவன் கூறுகிறான். நம்முடைய உள்ளங்களும் ஈமானால் வலுப்பெற நாமும் நபிமார்கள் வரலாற்றில் படிப்பினை பெற்று நடைமுறைப்படுத்தினால் போதுமானதாக இருக்கும்.

மரணிக்கின்ற தருவாயில் ஏகத்துவக் கலிமாவோடு மரணிக்கின்ற பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!