இறைவனைக் காண முடியுமா?

இறைவனைக் காண முடியுமா?

இதுவரை, அல்லாஹ்வுக்கு முகம் இருக்கின்றது; கண்கள் இருக்கின்றன; காதுகள் இருக்கின்றன; கைகள் இருக்கின்றன; கால்கள் இருக்கின்றன; அதனால் ஏகனான அவனுக்கென்று திருவுருவம் இருக்கின்றது. அவன் தகுதிக்கேற்ப அர்ஷில் அமர்ந்திருக்கின்றான். அவன் ஒரு போதும் அடியானுடன் ஒன்றாக மாட்டான். அடியானும் அல்லாஹ்வுடன் கலக்க முடியாது போன்ற விபரங்களைப் பார்த்தோம். இத்தகைய தன்மைகளைக் கொண்ட அல்லாஹ்வை நாம் பார்க்க முடியுமா? எங்கு பார்க்கலாம்? நிச்சயமாக மறுமையில் தான் அவனைப் பார்க்க முடியும். இதை நாம் குர்ஆன், ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது, “என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்எனக் கூறினார். அதற்கு (இறைவன்), “என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது, “நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்எனக் கூறினார்.

அல்குர்ஆன் 7:143

இந்த வசனத்தில், மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்க வேண்டும் என்று கேட்ட போது, அவர்களுக்கு அல்லாஹ் மறுப்புத் தெரிவித்து விடுகிறான். “என்னை நீர் பார்க்கவே முடியாது’ என்று கூறி விடுகின்றான். மூஸா (அலை) அவர்களால் அல்லாஹ்வைப் பார்க்க முடியவில்லை என்பதைத் திருக்குர்ஆன் நமக்கு விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், தாம் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தெளிவாக அறிவித்து விட்டார்கள்.

மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் “அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது நேரில்) பார்த்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்லி விட்டார்என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) “கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்எனும் (6:103ஆவது) வசனத்தையும், “எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லைஎனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். மேலும், “எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார்என்று கூறி விட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) “எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லைஎனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள். மேலும், “எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்து விட்டார்கள்என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார்என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) “தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்…எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். “மாறாக, முஹம்மது (ஸல்) அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 4855

இந்த ஹதீஸ் முஸ்லிமில் இன்னும் சற்று விளக்கமாக இடம்பெற்றுள்ளது.

நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) “அபூ ஆயிஷாவே, மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார் என்று கூறினார்கள். அவை எவை? என்று கேட்டேன் அதற்கு அவர்கள், “யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்என்று சொன்னார்கள். உடனே சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே, நிதானித்துக் கொள்ளுங்கள். அவசரப்படாதீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்” (81:23) என்றும் “அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்” (53:13) என்றும் கூறவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.

இந்தச் சமுதாயத்தில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான் தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப் பெற்றுள்ள (உண்மைத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறேப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரம்மாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்ததுஎன்று கூறினார்கள்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள்.

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (6:103)

அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.” (42:51)

(பின்னர் தொடர்ந்து மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்)

அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: முஸ்லிம் 287

இந்த ஹதீஸ்கள் மூலம் நபி (ஸல்) அவர்கள் மிஃராஜின் போதும் மற்ற சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்பது தெளிவாகின்றது.

இறைத்தூதர்களுக்கே இவ்வுலகில் அல்லாஹ்வைப் பார்க்கும் வாய்ப்புக் கிடையாது எனும் போது மற்றவர்களுக்கு நிச்சயமாக அந்த வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகின்றது. இருப்பினும் யாராலும் இவ்வுலகில் இறைவனைக் காண முடியாது என்று முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ் தெளிவுபடுத்தி விடுகின்றது.

உங்களில் எவரும் அவர் இறக்காத வரை தன் இறைவனைப் பார்க்க முடியாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5215

இந்த ஹதீஸ் சந்தேகமில்லாமல் அல்லாஹ்வை இந்தவுலகில் காண முடியாது என்பதைத் தெரிவிக்கின்றது.

மறுமையில் இறைவனைக் காண முடியும் என திருக்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

அல்குர்ஆன் 75:21, 22

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

நபி (ஸல்) அவர்களும் அல்லாஹ்வைக் காண்பது தொடர்பாக விரிவான விளக்கத்தைத் தருகிறார்கள்.

முன்னவன் அல்லாஹ்வின் மூன்று தோற்றங்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர்  “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம் (காண்பீர்கள்); மேகமே இல்லாத தெளிவான நண்பகல் நேரத்தில் சூரியனைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு சிரமப்படுவீர்களா? மேகமே இல்லாத தெளிவான பௌர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதற்கு நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள் “இல்லை, அல்லாஹ்வின் தூதரே!என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே மறுமை நாளில் – சுபிட்சமும் உயர்வும் மிக்க – அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள். மறுமை நாள் ஏற்படும்போது அழைப்பாளர் ஒருவர் “ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகத்தில்) தாம் வழிபட்டு வந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்என்று அழைப்பு விடுப்பார். அப்போது, அல்லாஹ்வை விடுத்து பொய்த் தெய்வங்களையும் சிலைகளையும் வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் கூட எஞ்சாமல் அனைவரும் நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை வழிபட்டுக் கொண்டிருந்த நல்லவர்களும் (அல்லாஹ்வை வழிபட்டுப் பாவங்களும் புரிந்து வந்த) பாவிகளும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்களும் தாம் எஞ்சியிருப்பர்.

அப்போது (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களிடம், “நீங்கள் எதை  வழிபட்டு வந்தீர்கள்?” என்று கேட்கப்படும். அவர்கள், “அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை நாங்கள் வழிபட்டுக் கொண்டிருந்தோம்என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லைஎன்று கூறப்படும். மேலும், “இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையை)ச் சுட்டிக் காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போன்று காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

பிறகு, கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, “நீங்கள் எதை வழிபட்டுக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) வழிபட்டுக் கொண்டிருந்தோம்என்று கூறுவர். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லைஎன்று சொல்லப்படும். மேலும், அவர்களைப் பார்த்து, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!என்று (யூதர்கள் கூறியதைப் போன்றே) கூறுவார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையை)ச் சுட்டிக் காட்டப்படும். பிறகு (அந்தத் திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போன்று காட்சி தரும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

இறுதியில் அல்லாஹ்வை வழிபட்டு(க்கொண்டு நன்மைகளும் புரிந்து) வந்த நல்லோர் மற்றும் (அல்லாஹ்வையும் வழிபட்டுக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். அவர்கள் ஏற்கனவே (அல்லது முதலில்) பார்த்த தோற்றத்திற்கு நெருக்கமான (வேறு) ஒரு தோற்றத்தில் தூயவனும் உயர்ந்தோனுமாகிய அகிலத்தாரின் இரட்சகன் அவர்களிடம் வருவான். அப்போது “நீங்கள் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றார்களே!என்று அவன் கேட்பான். அவர்கள், “எங்கள் இறைவா! உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின் தொடர்வோம்?)” என்று பதிலளிப்பார்கள்.

அப்போது இறைவன், “நானே உங்கள் இறைவன்என்று கூறுவான். (அவர்களால் உறுதிசெய்ய முடியாத தோற்றத்தில் அப்போது அவன் இருப்பதால்) அதற்கு அவர்கள், “உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம்; நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம்என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவார்கள். (அந்தச் சோதனையான கட்டத்தில்) அவர்களில் சிலர் பிறழ்ந்துவிடும் அளவுக்குப் போய் விடுவார்கள். அப்போது இறைவன், “அவனை இனங்கண்டு கொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள் “ஆம் (இறைவனின் கணைக்கால் தான் அடையாளம்)என்று கூறுவார்கள். உடனே (இறைவனின்) கணைக்காலை விட்டும் (திரை) விலக்கப்படும். அப்போது (உலகத்தில்) மனப்பூர்வமமாக அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து கொண்டிருந்தவர் யாரோ அவர் சிரம்பணிய இறைவன் அனுமதிப்பான். தற்காப்புக்காகவோ, பாராட்டுக்காகவோ சிரம் பணிந்து கொண்டிருந்தவருடைய முதுகை (நெடும் பலகையைப் போன்று) ஒரே நீட்டெலும்பாக அல்லாஹ் ஆக்கி விடுவான். அவர் சிரம்பணிய முற்படும் போதெல்லாம் மல்லாந்து விழுந்து விடுவார். (அவரால் சிரம் பணிய முடியாது.)

பின்னர் அவர்கள் தம் தலையை உயர்த்துவார்கள். அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்தில் இறைவன் காட்சியளித்து “நானே உங்கள் இறைவன்என்று கூறுவான். அதற்கு அவர்கள் “நீயே எங்கள் இறைவன்என்று கூறுவார்கள். பிறகு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும்; (பாவம் புரிந்த இறை நம்பிக்கையாளர்களுக்காகப்) பரிந்துரை செய்ய அனுமதி கிடைக்கும். அப்போது மக்கள், “அல்லாஹ்வே! காப்பாற்று; காப்பாற்றுஎன்று பிரார்த்திப்பார்கள்…. (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 269

முதல் தோற்றம்

இந்த ஹதீஸில் “முண்டியடிக்காமல் காண்பீர்கள்’ என்பதிலிருந்து, முதலிலேயே ஒரு தோற்றத்தில் அல்லாஹ் தோன்றி காட்சியளிக்கிறான். அந்தக் காட்சி தான் இறை நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் பதிந்து விடுகின்றது.

இரண்டாவது தோற்றம்

இதற்குப் பிறகு இரண்டாவது தடவையாக, முதல் தடவைக்குச் சற்று வித்தியாசமான வேறொரு தோற்றத்தில் தோன்றுகிறான். இதை நாம், “அவர்கள் ஏற்கனவே (அல்லது முதலில்) பார்த்த தோற்றத்திற்கு நெருக்கமான (வேறு) ஒரு தோற்றத்தில் தூயவனும் உயர்ந்தோனுமாகிய அகிலத்தாரின் இரட்சகன் அவர்களிடம் வருவான்” என்பதிலிருந்து இதை விளங்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு அவன் முதல் தோற்றத்திற்கு சற்று நெருக்கமான வேறு தோற்றத்தில் வருவதால் தான் இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகின்றார்கள்; தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றார்கள். அப்போது தான் அல்லாஹ், அவர்களிடம் அடையாளத்தையும் ஆதாரத்தையும் கேட்கிறான். அவர்களும் பதில் சொல்கின்றார்கள்.

“ஏற்கனவே பார்த்த’ என்று இந்த ஹதீஸின் வாக்கியப் பின்னணி மூலம் அல்லாஹ், இரண்டாவது தடவையாகக் காட்சியளிக்கிறான் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளங்கிக் கொள்ளலாம். இதற்குப் பின்னால் வருகின்ற வாக்கிய அமைப்பு இன்னும் இதைத் தெளிவாக விளக்குகின்றது.

மூன்றாவது தோற்றம்

பின்னர், “அவர்கள் தம் தலையை உயர்த்துவார்கள்; அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்திற்கு இறைவன் திரும்பி, “நானே உங்கள் இறைவன்” என்று கூறுவான். அதற்கு அவர்கள், “நீயே எங்கள் இறைவன்” என்று கூறுவார்கள்.

அதாவது இரண்டாவது தடவையாகத் தோன்றுவதற்கு முன்பாக, முதலில் ஒரு தடவை தோற்றமளித்து விட்டான் என்பதை இந்த வாசகமும் தெளிவாக நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது. மொத்தத்தில் அல்லாஹ் மூன்று முறை தோற்றமளிக்கின்றான் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

மறுமையில் அல்லாஹ் காட்சியளிப்பது தொடர்பான இந்த ஹதீஸ் புகாரியில் 806, 6574, 7438, 4581, 7440 ஆகிய எண்களிலும், முஸ்லிமில் 267, 269 ஆகிய எண்களிலும் பதிவாகியுள்ளது. ஆனால் முஸ்லிமில் பதிவாகியுள்ள ஹதீஸில் அல்லாஹ்வின் இம்மூன்று காட்சிகள் விளக்கமாக இடம் பெற்றிருப்பதால் இதை நாம் இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

இந்த ஹதீஸ்களில் புகாரி 4851, 7440 ஹதீஸ்களிலும், முஸ்லிம் 269 ஹதீஸிலும், “அல்லதீ ரஅவ்ஹு – முதலில் பார்த்த தோற்றத்தில்’ என்று இடம் பெறுகின்றது. புகாரி, முஸ்லிமின் தமிழாக்கங்களில் (அவனின் தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றத்தில்….” என்று இதற்கு மொழியாக்கம் செய்கின்றனர்.

அதாவது, “பார்த்த’ என்று மொழிபெயர்ப்பதற்குப் பதிலாக, “உள்ளத்தில் நினைத்திருந்த’ என்று மொழிபெயர்த்துள்ளனர். இப்படி இவர்கள் சொல்வதற்குரிய காரணமே இந்த ஹதீஸ்களில் அல்லாஹ்வின் முதல் தோற்றம் பற்றி வெளிப்படையாக இடம் பெறவில்லை என்பது தான். அவ்வாறு இடம்பெறவில்லை என்பது உண்மை தான். ஆனால் அதை முஸ்லிமில் இடம் பெறும் 269வது ஹதீஸ் நன்கு தெளிவாக விளக்கி விடுகின்றது.

“முதல் தோற்றத்திற்குத் திரும்பி” என்ற வாசகத்திலிருந்து, அல்லாஹ் மூன்று முறை தோற்றமளிக்கின்றான் என்பதைத் தெளிவாக்கி விடுகின்றது. எனவே, “உள்ளத்தில் நினைத்திருந்த…” என்று அர்த்தம் செய்வது தேவையற்றதாகி விடுகின்றது.

இங்கு முக்கியமான இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

  1. இந்த ஹதீஸில் “ரஅவ்ஹு’ என்பது இரண்டு இடங்களில் வருகின்றது. முதலில் வருகின்ற இந்த வார்த்தைக்கு, ‘உள்ளத்தில் கற்பனை செய்திருந்த..’ என்று அர்த்தம் கொடுக்கின்றனர். இரண்டாவது இடம் பெறும் “ரஅவ்ஹு’ என்ற வார்த்தைக்கு பார்த்தல் என்று அர்த்தம் செய்கின்றனர். ஒரே வார்த்தைக்கு, முதலில், உள்ளத்தில் கற்பனை செய்திருந்த’ என்றும், “பார்த்த’ என்றும் அர்த்தம் செய்வது ஒன்றுக்கொன்று முரண் என்பதைப் புரியத் தவறி விடடனர். இந்த மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும் போதே இந்த முரண்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.

எனவே, “ரஅவ்ஹு’ என்பதற்கு இரண்டு இடங்களிலும், “பார்த்த’ என்று அர்த்தம் கொடுத்து விட்டால் ஒரு முரண்பாடும் வராது. மாறாக இந்த அர்த்தம் அதற்கு விளக்கமாகவும் அமைந்து விடுகின்றது.

  1. மூன்றாவது தோற்றம் என்ற தலைப்பின் கீழ், “அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்திற்கு இறைவன் திரும்பி…’ என்று மொழிபெயர்த்துள்ளோம். இவ்வாறு மொழிபெயர்ப்பதற்குக் காரணம், இந்த ஹதீஸின் மூலத்தில், “தஹவ்வல’ என்ற அரபி வார்த்தை இடம் பெறுகின்றது. இதற்கு, மாறுதல், திரும்புதல் என்று பொருள்.

முஸ்லிம் தழிழாக்க நூல்களில், “முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்தில்” என்று தான் இடம் பெறுகின்றது. “தஹவ்வல’ என்பதற்குரிய, மாறுதல், திரும்புதல் என்ற அர்த்தம் இதற்குக் கொடுக்கப்படவில்லை என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருமுகம் காணும் அருட்பாக்கியம்

இவ்வாறு அல்லாஹ்வை மூன்று தடவை மக்கள் மஹ்ஷர் மைதானத்தில் காண்பார்கள். அல்லாஹ்வுடைய இந்தக் காட்சி இத்துடன் நின்று விடுவதில்லை. அந்தக் காட்சி சுவனத்திலும் தொடரும். இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வைக் காண்கின்ற அந்த மகிழ்ச்சியில் திளைத்து இருப்பார்கள்.

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன் 75:22, 23)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்து விடும் போது (அவர்களிடம்) அல்லாஹ், “உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள் “(இறைவா!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)?” என்று கேட்பார்கள்.

அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக் காண்பதை விட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.

அறிவிப்பவர்: சுஹைப் (ரலி), நூல்: முஸ்லிம் 266

நபி (ஸல்) அவர்கள், “நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமாகவும் உண்டுஎன்ற (10:26) வசனத்தை ஓதினார்கள். “சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்ததும், “சுவனவாசிகளே! (இதுவரை) உங்களுக்கு அளிக்கப்படாத ஒரு வாக்குறுதி உங்களுக்குக் காத்திருக்கின்றதுஎன்று அழைப்பு விடுக்கப்படுவர். “அவன் எங்களது முகங்களை வெண்மையாக்கி, எங்களை சுவனத்தில் நுழையச் செய்யவில்லையா?” என்று அவர்கள் பதிலளிப்பார்கள். மீண்டும், “(இதுவரை) அளிக்கப்படாத வாக்குறுதி ஒன்று உங்களுக்குக் காத்திருக்கின்றதுஎன்று அவர்களிடம் கூறப்படும். அவர்கள் அதே போன்று பதிலளிப்பார்கள். அப்போது, பாக்கியமிக்கவனும் உயர்ந்தோனுமான அவர்களது இறைவன் அவர்களுக்குத் தோன்றுவான். இது தான், “நன்மை செய்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமாகவும் உண்டுஎன்ற (10:26) அல்லாஹ்வின் சொல்லாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “பாக்கியமிக்கவனும், உயர்ந்தோனுமாகிய தங்களின் இறைவனுடைய முகத்தைப் பார்ப்பதற்கு வாக்களிக்கப்படுகின்றதுஎன்று விளக்கமளிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்: சுஹைப் (ரலி), நூல்: முஸ்னத் அல்பஸ்ஸார் 328

சுவனவாசிகள், சுவனத்திற்குள் நுழைந்ததும், “சுவனவாசிகளே! அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு ஒரு வாக்குறுதி காத்திருக்கின்றது. அதை அவன் அவசியம் உங்களுக்கு நிறைவேற்றுவான்என்று ஓர் அழைப்பாளர் அழைப்பு விடுப்பார். “அவன் எங்கள் முகங்களை வெண்மையாக்க வில்லையா? எங்களுடைய எடைகளைக் கனமாக்கி, எங்களை சுவனத்தில் நுழைவித்து நரகத்திலிருந்து காக்கவில்லையா?” என்று அவர்கள் கேட்பார்கள். அப்போது அவன் திரையை விலக்குவான். அவர்கள் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த தங்களுடைய இறைவனின் முகத்தை அவர்கள் பார்ப்பார்கள். அவனைப் பார்ப்பதை விட வேறெதுவும் அவர்களுக்கு விருப்பமானதாகவும் கண்களுக்குக் குளிர்ச்சியானதாகவும் இருக்காது. அதிகம் என்பது இது தான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: சுஹைப் (ரலி), நூல்: அர்ருஃயித்து லித்தாரகுத்னீ 112

இந்த ஹதீஸ்களிலும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் திருமுகத்தை சுவனத்தில் காண்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.

நேரடியாகக் காணுதல்

எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் எந்தவிதமான திரையும் தடையும் இருக்காது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் இறைவனை (மறுமையில்) கண்கூடாகக் காண்பீர்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 7435

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமை நாளில் தனித் தனியாகப்) பேசாமலிருக்க மாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்; தடுக்கின்ற திரையும் இருக்காது.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி 7443

யாருக்கு இந்தப் பாக்கியம்?

அல்லாஹ்வைக் காணும் இந்த மகத்தான பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கவில்லையோ அவர்களுக்குத் தான் இந்த அருட்பாக்கியம் கிடைக்கும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாக அறிவித்து விடுகின்றது.

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 18:110)

இணை வைக்காமல் இருந்தால் மட்டும் போதாது. நல்லமல் செய்பவர்களாகவும் தொழுகைகளைப் பேணித் தொழுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

(முழு நிலவுள்ள ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்து கொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழுநிலவைக் கூர்ந்து பார்த்தபடி, “இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் வெளிவேலைகள் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்என்று கூறிவிட்டு “சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள்எனும் (50:39ஆவது) இறை வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 554, 573, 4851, 7434

இந்த இனிய இறை தரிசனத்தைக் கேட்டுப் பிரார்த்திக்கவும் வேண்டும்.  இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரார்த்தனையையும் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

அம்மார் பின் யாஸிர் எங்களுக்குத் தொழுவித்தார்கள். மக்களில் ஒருவர், “நீங்கள் தொழுகையைச் சுருக்கி விட்டீர்கள்என்று அவரிடம் சொன்னார். “நான் இவ்வாறு சுருக்கித் தொழுதாலும் அல்லாஹ்வின் தூதரிடம் செவியுற்ற துஆக்களைக் கொண்டு அந்தத் தொழுகையில் துஆச் செய்தேன்என்று பதில் சொன்னார். அவர் எழுந்ததும் அவரை ஒருவர் பின்தொடர்ந்து அவரிடம் அந்த துஆ பற்றிக் கேட்டார். பிறகு வந்து அதை மக்களிடம் அறிவித்தார்.

அல்லாஹும்ம பி இல்மிகல் கைப வ குத்ரத்திக அலல் கல்கி, அஹ்யினி மாஅலிம்தல் ஹயாத கைரன்லீ வதவஃப்பனீ இதா அலிம்தல் வஃபாத கைரன்லீ அல்லாஹும்ம வஅஸ்அலுக கஷ்யதக ஃபில் கைபி வஷ்ஷஹாததீ. வஅஸ்அலுக கலிமதல் ஹக்கி ஃபிர்ரிளா வல் களபி வஅஸ்அலுகல் கஸ்த ஃபிஃபக்ரி வல்கினா வஅஸ்அலுக நயீமன் லாயன்ஃபது அ வஅஸ்அலுக குர்ரதி அய்னின் லா தன்கதிவு வ அஸ்அலுகர் ரிளாஅ பஃதல் களாயி அ அஸ்அலுக பர்தல் ஈஷி பஃதல் மவ்தி அ அஸ்அலுக லத்தத்தன் நள்ரி இலா வஜ்ஹிக வஷ்ஷவ்க இலா லிகாயிக ஃபீ கைரி ளர்ராஅ முளிர்ரத்தின் வலா ஃபித்னதின் முளில்லதின் அல்லாஹும்ம ஸ(ழ)ய்யின்னா பி ஸீ(ழ)னதில் ஈமானி வஜ்அல்னா ஹுதாத்தன் முஹ்ததீன்

பொருள்: மறைவானதை அறிகின்ற உன் ஞானத்தைக் கொண்டும், படைப்பின் மீதுள்ள உன் ஆற்றலைக் கொண்டும், (எனது) வாழ்வு நன்மை என்று நீ அறிந்திருக்கின்ற வரை என்னை வாழ வை! மரணம் எனக்கு நன்மை என்று நீ அறிந்தால் என்னை மரணிக்கச் செய்! அல்லாஹ்வே! மறைவிலும் நேரிலும் உன்னை அஞ்சுவதை உன்னிடம் கேட்கிறேன். திருப்தியிலும் கோபத்திலும் நேரிய வார்த்தையை உன்னிடம் நான் கேட்கிறேன். வறுமையிலும் செல்வத்திலும் நடுநிலையை உன்னிடம் நான் கேட்கிறேன். அழியாத அருட்கொடையை உன்னிடம் நான் கேட்கிறேன். அறுந்து விடாத கண் குளிர்ச்சியை உன்னிடம் நான் கேட்கிறேன். விதிக்குப் பின்னால் திருப்தியை உன்னிடம் நான் கேட்கிறேன். இறந்த பின்பு வாழ்க்கையின் இதத்தை உன்னிடம் நான் கேட்கிறேன்.

இடர் அளிக்கக்கூடிய துன்பம் மற்றும் வழிகெடுக்கக் கூடிய குழப்பம் இல்லாத சூழலில் உன் திருமுகத்தைப் பார்க்கின்ற சுவையையும், உன்னைச் சந்திக்கின்ற ஆசையையும் உன்னிடம் நான் கேட்கின்றேன். அல்லாஹ்வே! ஈமானின் அழகைக் கொண்டு எங்களை அழகுபடுத்துவாயாக! எங்களை நேர்வழி பெற்ற வழிகாட்டிகளாக ஆக்கு!

அறிவிப்பவர்: ஸாயிப் பின் மாலிக், நூல்: நஸயீ 1288

“இறைவனுக்கு உருவம் இல்லை; இறைவன் என்றால் சூனியம்” என்று கூறி இறைவன் இல்லை என்பதை வேறு வார்த்தைகளில் யார் கூறுகிறார்களோ அத்தகைய நிராகரிப்பாளர்களுக்கும் இணை கற்பிப்பவர்களுக்கும் இறைவனைக் காணும் பேரின்பம் நிச்சயம் கிடைக்காது.

எனவே இணை வைக்காமல், நல்லமல்கள் செய்து, இந்தப் பிரார்த்தனையைப் புரிந்து அல்லாஹ்வின் திருமுகத்தைக் காண்கின்ற பேறும் பாக்கியமும் பெற்றவர்களாக ஆவோமாக!

அல்லாஹ் உருவமற்றவனா? என்ற இந்தத் தலைப்பில் நீங்கள் பார்த்த ஆதாரங்கள் அனைத்தும் குர்ஆன், ஹதீஸில் உள்ளவையாகும். இவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கின்றது என்று நிரூபிக்கும் ஆதாரங்கள். இவை அனைத்திற்கும் எந்தவொரு விளக்கமும், வியாக்கியானமும் கூறாமல், திரிபு வாதம் செய்யாமல், திசை திருப்பாமல் ஒவ்வொரு முஸ்லிமும் நம்பியே ஆக வேண்டும். அவ்வாறு நம்பாதவர் இறை மறுப்பாளர் ஆவார்; நிரந்தர நரகத்தின் விறகாவார். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!