இடையூறு அளிக்காத இனிய மார்க்கம்

இடையூறு அளிக்காத இனிய மார்க்கம்

மனித சமுதாயத்திற்கு வழியைக் காட்டி, மனிதனைத் தீமையில் விழாமல் காப்பது தான் மதமாகும். அது தான் மதம் மனிதனுக்குச் செய்கின்ற உதவியாகும். மனிதனுக்கு இந்த உதவியைச் செய்யாவிட்டால் கூடப் பரவாயில்லை; உபத்திரம் செய்யாமல் இருக்க வேண்டும்.

ஜனவரி 14, தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. நல்ல விளைச்சலைக் கொடுத்ததற்காக பூமிக்கும், பூமிக்கு ஒளி கொடுத்த சூரியனுக்கும் வணக்கம் செலுத்துகின்ற நாள் தான் பொங்கல் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

பொங்கல் வந்தது; பொங்கினார்கள்; புசித்தார்கள் என்றால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. அவர்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் செயல்படுகிறார்கள். அதைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை.

பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை! பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பெயரில் பழைய பொருட்கள் அனைத்தையும் தீயிட்டுப் பொசுக்குகின்றார்கள். அதனால் எழுகின்ற புகை மூட்டம் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தி, சுற்றி வாழ்கின்ற மனிதர்களின், இன்னபிற உயிர்களின் சுவாசக் குழாயைப் பாதிக்கச் செய்கின்றது. அவர்களை சுகாதாரக் கேட்டில் விழச் செய்கின்றது.

பழைய டயர்களைப் போட்டுக் கொளுத்தும் போது ஏற்படுகின்ற புகை சுற்றுச்சூழலில் மிகப் பெரிய மாசை ஏற்படுத்துகின்றது. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என இந்த நாட்களில் வெடிக்கப்படும் பட்டாசு சப்தம் மனிதர்களையும் கால்நடைகளையும் பறவைகளையும் பாதிக்கச் செய்கின்றது. பொங்கலை அடுத்து வரும் நாள் மாட்டுப் பொங்கல். வயற்காட்டில் ஏரு பூட்டி, உணவு விளைச்சலுக்குக் காரணமாக இருந்த மாட்டிற்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக மாட்டை வணங்கும் நாள் தான் மாட்டுப் பொங்கல் எனப்படுகின்றது.

ஓரிறை என்பதைத் தாண்டி வணங்க ஆரம்பித்து விட்டால் கல்லையும், மண்ணையும், மரத்தையும், மாட்டையும் வணங்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படி வணங்குவதோடு நிறுத்தி விட்டால் அது அவர்களுடன் போய்விடுகின்றது.

பதம் பார்க்கும் மதப் பண்டிகை

மாட்டுப் பொங்கல் நாளிலும் அதைத் தொடர்ந்து வரும் நாட்களிலும் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அந்த மாடுகளை வதைக்கின்றனர். மாடுகளுக்கு போதைப் பொருளைக் கொடுத்து வெறியேற்றி அனுப்புகின்றனர். இதைத் தடுப்பதற்காகப் பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் போடப்பட்டு, நீதிமன்றமும் பல கட்டுப்பாடுகளுடன் இந்தக் கொடுமையை அனுமதித்துள்ளது.

மனிதனின் உணவு மற்றும் இதர தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இறைவனால் படைக்கப்பட்ட மாட்டை, உணவுக்காக அறுப்பதைக் குறை சொல்பவர்கள், அதே மாட்டை இப்படி அணு அணுவாகச் சித்ரவதை செய்வது நகைப்பிற்குரிய  முரண்!

இதே போன்று பொங்கலை முன்னிட்டு சேவல் சண்டை நடத்துவதும் பரவலாக நடைபெற்று வருகின்றது. இரண்டு சேவல்களை மோத விட்டு, வெற்றி பெறும் சேவலின் சொந்தக்காரருக்குப் பரிசுகள் வழங்குகின்றனர். இதையொட்டி பந்தயம் கட்டி சூதாட்டமும் நடைபெறுகின்றது. இதற்காகவும் சேவல்களுக்கு போதைப் பொருள் கொடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் மோதும் சேவல்களுக்குக் கடுமையான காயம் ஏற்படுவதும், இரண்டு சேவல்களில் ஏதேனும் ஒன்று உயிரிழக்கும் அநியாயமும் நடக்கின்றது.

இந்த அடிப்படையில் பொங்கல் என்ற பெயரில் மனித இனத்தைத் தாண்டி விலங்கினங்களுக்கும் இடையூறு செய்கின்றனர். இப்படி மனிதர்களையும் பிற உயிரினங்களையும் பதம் பார்ப்பது தான் மதப் பண்டிகையா? பாதிப்பை ஏற்படுத்துவது தான் பண்டிகை நாளா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இஸ்லாம் ஒரு மதமல்ல, மார்க்கம். அது ஓர் இயற்கை மார்க்கமாகும். அந்த மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இரண்டு பண்டிகைகளை வழங்கியுள்ளது. ஒன்று ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள். இந்த நாளில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கி அவர்களின் பசியைப் போக்க வேண்டும் என்று மார்க்கம் சொல்கின்றது. இன்னொரு பெருநாளான ஈதுல் அழ்ஹா அன்று ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிட்டு அதன் இறைச்சியை ஏழைகளுக்கு வினியோகிக்கச் செய்கின்றது.

அன்றைய தினம் ஏழைகளுக்கு உணவு வழங்குவதன் மூலம் ஏழைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஜகாத் போன்ற உதவிகளை வழங்குவதற்கு வகை செய்கின்றது. மதம், மார்க்கம் என்றால் அதன் பண்டிகைகள் இப்படிப் பிறருக்கு உதவும் வகையில் அமைய வேண்டும்.

நிலமும் மாசு! நீரும் மாசு!

இறந்தவர்களை எரியூட்டுவதன் மூலம் நிலத்தை மாசுபடுத்துகின்றனர். நிலத்தை மாசுபடுத்துவதுடன் நில்லாமல் நீரையும் மாசுபடுத்துகின்றனர். இறந்தவர்களின் பிணங்களைக் கொண்டு வந்து நீரில் கரைத்து ஆற்று நீரை மாசுபடுத்துகின்றனர். புனிதக் குளியல் என்ற பெயரில் பல இலட்சம் பேர்கள் ஆற்றங்கரைகளில் வந்து மலஜலம் கழித்து அதை நாற்றங்கரையாக்கி விடுகின்றனர். அதன் பிறகு குளித்து கங்கையைக் கலங்கடிக்கின்றனர். இத்துடன் அங்கு செல்கின்ற பக்தர்கள் கையோடு கொண்டு சென்ற பிளாஸ்டிக் பைகள், இதர பொருட்களை வீசி நிலத்தையும் நீரையும் மாசுபடுத்துகின்றனர்.

ஆற்று நீர் தான் குடிநீராகக் குழாயில் வருகின்றது. இதைக் குடிப்போருக்கு வாந்தி பேதி, காலரா, கொள்ளை நோய் ஏற்பட்டு மரணத்தைத் தழுவுகின்றனர்.

மதம் மனிதனை வாழ வைக்கின்றதா? மாள வைக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. இதன் மூலம் நமக்குத் தெளிவாகின்ற விஷயம், மனிதனை சடங்குகளின் மூலமே சாகடிக்கும் இந்த மதங்கள் உண்மையானவையாக இருக்க முடியாது என்பது தான்.

இஸ்லாம் தான் இறந்தவர்களைப் புதைக்கச் செய்து நிலம் மாசுபடுவதைத் தடுக்கின்றது. மலஜலம் கழிப்பதற்கும் இஸ்லாம் ஒரு கட்டுப்பாட்டை விதித்து சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கச் செய்கின்றது. அத்துடன், மனித குலம் தன்னைத் தானே அழிவில் ஆழ்த்தக்கூடாது என்ற பொதுத்தடை விதித்து மனித குலத்தையும் அவனது சுற்றுப்புறத்தையும் காக்கின்றது. இதுதான் மார்க்கமும் வாழ்க்கை நெறியுமாகும்.

உத்தர காண்டத்தில் கோரத் தாண்டவம்

அண்மையில் உத்தர்காண்டில் வெள்ளப் பெருக்கு ஒரு கோரத் தாண்டவமாடியது. பலியான மனித உயிர்களின் புள்ளி விபரம் துல்லியமாக இதுவரை கிடைக்கவில்லை.

பெரும் உயிர்ச் சேதம், பொருட் சேதத்தை ஏற்படுத்திய இந்த வெள்ளத்திற்குக் காரணம் என்ன?

மலைப் பிரதேசத்தில் அந்த யாத்திரைத் தலம் அமைக்கப்பட்டது தான் காரணம். புனிதத் தலமாகக் கருதி யாத்திரீகர்கள் சதாவும் அங்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். வரக்கூடிய பக்தர்களைக் கவனத்தில் கொண்டு பெரும் லாட்ஜ்கள், உணவகங்கள் பெருக்கெடுக்க ஆரம்பித்தன. மலைப் பிரதேசத்திற்கென உரிய கட்டுப்பாட்டு விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன.

கட்டடங்களின் அணிவகுப்புகள், சட்டத்திற்குப் புறம்பான ஆக்கிரமிப்புகள், இவை அனைத்தும் பெருக்கெடுத்து வரும் நீர்வரத்துப் பாதைகளை அடைக்கின்றன. வெள்ளம் என்ன செய்யும்? நான் வரும் பாதையை நீ அடைத்தால் உன் பாதையில் நான் வருகின்றேன் என்று தனது தடத்தை மாற்றி, தாறுமாறாகச் சென்று இவ்வளவு பெரிய உயிர்ச் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி விட்டது.

இஸ்லாத்திலும் மக்கா, மதீனா போன்ற பகுதிகளில் புனிதத் தலங்கள், பள்ளிவாசல்கள் உண்டு. ஆனால் அங்கு மனித இனத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. காரணம் இந்தப் புனித ஆலயங்கள் இறைவனின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்டவையாகும்.

மார்க்கம் என்றால் அது மக்களுக்கு வழிகாட்டியாகும். அவர்களுக்கு வாழ்க்கையில் பாதுகாப்பைத் தர வேண்டும். அப்படித் தரவில்லை என்றால் அது மார்க்கமல்ல.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமானஅல்லது “அறுபதுக்கும் அதிகமானகிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லைஎன்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 51

மனிதர்களின் கால்களைப் பதம் பார்க்கும் வகையில் பாதையில் கிடக்கும் முற்கள், கற்கள் போன்றவற்றை அகற்றுவது ஒரு முஸ்லிமின் இறை நம்பிக்கைகளில் ஒன்று என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

மார்க்கம் என்றால் மனிதனுக்கு வழிகாட்டி, நன்மை செய்வது தான் என்பதை அழகாகவும் அற்புதமாகவும் விளக்கிக் காட்டுகிறார்கள். இஸ்லாம் அல்லாத பிற மதங்களின் வழிபாட்டு முறைகள் எப்படி அடுத்தவர்களைப் பாதிக்கச் செய்கின்றது என்பதற்கு தினமணி நாளிதழில் “தேவையற்ற சடங்குகள்’ என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு கட்டுரை ஆதாரமாக அமைந்துள்ளது.

தேவையற்ற சடங்குகள்

அண்மையில் ஒருநாள் இரவு தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் ஆனந்தமாக வந்த அந்த இளைஞர் இன்று மருத்துவமனையில் படுத்திருக்கிறார். காரணம் சிறு தேங்காய்ச் சிதறல்; சாலையில் கிடந்த சிதறு தேங்காயைக் கவனிக்காத சிறு கவனக்குறைவு. அதன் காரணமாக, அவரது குடும்பமே இன்று மருத்துவமனையில்.

வெள்ளிக்கிழமை இரவுகளில் நகரங்களில் வாகனம் ஓட்டுவோர் மிகவும் கவனத்துடன் இருந்தாக வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் சாலையில் சறுக்கி விழுந்து மருத்துவமனைக்குப் போக வேண்டியது தான்.

அந்த ஒரு நாள் இரவில் மட்டும் நகரத் தெருக்களில் பல்லாயிரக் கணக்கான பூசணிக் காய்களும் தேங்காய்களும் உடைக்கப்படுகின்றன. சாலை நடுவே கிடக்கும் திருஷ்டிப் பூசணிக் காயைக் கவனிக்காமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் அதோகதி தான்.

வாரம் முழுவதும் கடைகளில் நடைபெறும் வர்த்தகத்தில் கண்ணேறு ஏற்படாமல் தவிர்க்கவே இந்த திருஷ்டி கழிக்கும் சடங்கு நிகழ்கிறது. வெள்ளிக்கிழமை தோறும் நடத்தப்படும் பூஜை முடித்தவுடன் இவை உடைக்கப்படுகின்றன. பூசணிக்காயை உடைப்பதிலும் தேங்காயைச் சிதறடிப்பதிலும் நமது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மிருகபலிச் சடங்கிற்கு மாற்றாக அறிமுகமான பூசணிக் காய் உடைப்பு இப்போது மனிதர்களை வதைக்கும் சடங்காக மாறியிருப்பதுதான் வேதனை.

அதுமட்டுமல்ல, வெள்ளிக்கிழமை இரவுகளில் சாலையில் உடைபடும் காய்களால் மட்டும் பல லட்ச ரூபாய் வீணாகிறது. நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு தெருக்களில் உடைக்கப்படும் பூசணி, தேங்காய்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் தெருவில் எறியப்படும் பணத்தின் மதிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

முழுத் தேங்காய் வாங்கக் காசில்லாமல் ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் “தேங்காய் பத்தை’ (துண்டுகள்) வாங்கும் ஏழைகள் நடந்து செல்லும் அதே சாலையில் சிதறிக் கிடக்கின்றன ஆயிரக்கணக்கான தேங்காய்கள்.

கிடுகிடுவென உயர்ந்துள்ள காய்கறி விலையைச் சமாளிக்க முடியாமல் நடுத்தரக் குடும்பங்களே காய்கறிப் பயன்பாட்டைக் குறைத்துவிட்டன. அதே சமயம், எந்தப் பயனும் இன்றி சாலையில் வாகனங்களால் அரைக்கப்பட்டு கூழாகிக் கிடக்கின்றன ஆயிரக்கணக்கான பூசணிக் காய்கள். இதை பொருளாதாரக் குற்றம் என்றும் கூறலாமல்லவா?

இதைவிட கொடுமையான இன்னொரு பழக்கம், இறுதி ஊர்வலத்தில் செல்வோர், சடலத்தின் மீது அணிவிக்கப்பட்ட மாலைகளைக் குதறி அதிலிருக்கும் பூக்களை சாலையில் வீசிச் செல்வது. எதற்காக இப்படிச் செய்கிறோம் என்பது அவர்களுக்கே புரியாத புதிர்.

இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்குக் கொண்டு செல்லும் போது சிற்றுயிர்களுக்கு உணவளிக்க பொரி வீசுவது கிராமங்களில் உருவான வழக்கம். ஒரு சடலத்தின் மீது பல மணி நேரம் அணிவிக்கப்பட்டிருந்த மலர் மாலைகளில் இருந்த பூக்களை போக்குவரத்து நிறைந்த சாலைகளில் வீசிச் செல்வது, எவ்வாறு அவரைப் போற்றுவதாக அமையும்? அது மாபெரும் சுகாதாரக் கேடல்லவா?

இத்தகைய தவறான பழக்க வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே, நாம் நாகரிக சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான அடையாளமாகும்.

யாரோ ஒருவரது திருஷ்டி கழிய உடைக்கப்படும் பூசணியால், வேறு யாரோ சிலர் சாலையில் அடிபட வேண்டுமா? மரணித்தவரின் மீது அணிவிக்கப்பட்ட மலர்கள், சாலையில் செல்வோரின் முகச்சுளிப்புக்கு வித்திட வேண்டுமா? நாம் சிந்திக்க வேண்டும்.

தினமணியின் இந்தக் கட்டுரையாளர் சில விஷயங்களுக்கு மதரீதியாக மாற்றுப் பரிகாரம் கூறுகின்றார். அவற்றில் நமக்கு உடன்பாடில்லை.

எனினும் பாதையில் கிடக்கும் சிதறு தேங்காயின் சில்லுகள் பாதங்களைப் பதம் பார்த்ததன் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷயத்தை நாம் கவனதில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று.

மனிதனைப் பதம் பார்க்கும் மதம் ஒருபோதும் இறை மார்க்கமாக இருக்க முடியாது என்பதையே இவை உணர்த்துகின்றன.