அவமானத்திற்கு அபராதம் நூறு கோடி
உத்தரபிரதேச மாநிலத்தில் காஜியாபாத் மாவட்டத்தில் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் நடைபெற்ற ஊழல் சில மாதங்களுக்கு முன்பு அம்பலத்திற்கு வந்தது. காஜியாபாத் மாவட்ட அரசுக் கருவூலத்திலிருந்து 7 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக மாவட்ட ஊழல் கண்காணிப்பு நீதிபதி உச்சநீதிமன்றத்திற்குப் புகார் செய்கின்றார். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது. இவ்வழக்கில் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி, 11 உயர் நீதிமன்ற நீதிபதிகள், 24 மாவட்ட நீதிபதிகள் சிக்கியுள்ளனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி பி.கே. சமன்தா என்பவரது பெயரை செப்டம்பர் 10, 2008 அன்று பண்ம்ங்ள் சர்ஜ் என்ற செய்தித் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பில் குறிப்பிட்டது. ஆனால் செய்தியின் படக் காட்சியில் காட்டும் போது, நீதிபதி சமன்தாவின் படத்தைக் காட்டுவதற்குப் பதிலாக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ். சவாந்த் என்பவரது படத்தை 15 வினாடிகள் காட்டியது.
தான் காட்டிய படம் சமன்தாவுக்கு உரியது அல்ல. சவாந்த் அவர்களின் படம் என்று தெரிந்தவுடன் தவறுக்காக சம்பந்தப்பட்ட சவாந்திடம் மேற்படி செய்தி நிறுவனம் மன்னிப்புக் கோரியது. ஆனால் நீதிபதி சவாந்த் விடவில்லை.
TIMES NOW தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அளவிட முடியாத நட்டம் என்ற அடிப்படையில் நூறு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று அந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பண்ம்ங்ள் சர்ஜ் நிறுவனம் மேல் முறையீடு செய்த போது, கீழ் கோர்ட்டின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. ஆனால் கீழ் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டை விசாரிப்பதற்கு முன் 20 கோடி ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும், 80 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதம் தர வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மேற்படி செய்தி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகிய போது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அதாவது 20 கோடி முன்பணமும், 80 கோடி வங்கி உத்தரவாதமும் செலுத்திய பின்னரே மேல் முறையீட்டை விசாரிக்க முடியும் என்ற மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்துள்ளது.
நாம் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்கு மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் போன்ற அனைத்து நிலையிலான நீதிமன்றங்களும் வரிந்து கட்டிக் கொண்டு நூறு கோடி ரூபாய் அபராதத்தை முன் தொகை, பின் தொகை என்று விதித்து தீர்ப்புகளைப் பொழிந்து தள்ளி விட்டன.
ஊடகம் இழைத்த தவறு, படத்தை மாற்றி ஒரு பதினைந்து வினாடிகள் காட்டியதற்கு இத்தனை பெரிய தண்டனை.
ஒரு சாதாரண, சாமான்ய மனிதன் பாதிக்கப்பட்டு இவ்வாறு வழக்குத் தொடர்ந்தால் இந்த அளவுக்கு வேண்டாம்; ஒரு குறைந்தபட்ச கண்டனத்தையாவது தெரிவிக்க இந்த நீதிமன்றம் முன்வருமா? பண்டிதருக்கு ஒரு நீதி, பாமரனுக்கு ஒரு நீதி என்பதையே இது காட்டுகின்றது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சமநீதி இங்கே அடிபட்டுப் போய் விடுகின்றது.
இந்தியாவின் எங்காவது ஒரு மூலையில் குண்டு வெடித்து விட்டால் போதும். உளவுத் துறைக்கு முன்பாகவே ஊடகத்துறையின் மூளையில் முஸலிம்கள் என்ற சிந்தனை வெடித்து விடும். அவ்வளவு தான். அந்த பயங்கரவாதச் செயலை முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி, திரும்பத் திரும்ப செய்தி அலைகளில் வெடித்துத் தள்ளுகின்றனர். ஆனால் இறுதியில் முஸ்லிம்கள் இல்லை என்றானதும் ஒரு ஒப்புக்காவது, ஒரு தடவை கூட வருத்தம் தெரிவிப்பதில்லை. மறுப்பும் வெளியிடுவதில்லை. தானாக முன்வந்து கண்டனம் தெரிவிக்க வேண்டிய நீதிமன்றங்கள், இவற்றைக் கண்டு கொள்வதில்லை.
அண்மையில் CNN IBN தொலைக்காட்சியின் பேட்டியாளர் கரண் தாப்பருக்குப் பேட்டியளித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் இந்தியாவின் பத்திரிகையாளர் சங்கத் தலைவருமான மார்கண்டேய கட்ஜு, ஊடகங்களின் இந்தப் போக்கை கடுமையாகக் கண்டிக்கின்றார். (அவருடைய பேட்டியின் சில பகுதிகளை தனித் தலைப்பில் தந்துள்ளோம்.) இது சற்று ஆறுதலான விஷயம்.
நாம் நீதிமன்றங்களிடமிருந்து எதிர்பார்ப்பது இந்த அளவுக்குரிய அபராதத்தை அல்ல. குறைந்தபட்சக் கண்டனத்தைத் தான்.
எந்த ஒரு செய்தியையும் அது வந்த மாத்திரத்தில் அதை நம்புவதையும், அதை அப்படியே அடுத்தவரிடம் வாந்தி எடுப்பதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இதோ முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 6
செய்தியை முதன் முறையாக ஒளிபரப்புதல், ஒரு பரபரப்பு, கிளர்ச்சி, அனல் பறப்பு போன்றவற்றை மூலதனமாகக் கொண்டு செய்திகளை ஊடகங்கள் வெளியிட விரும்புகின்றன. அந்தச் செய்திகள் வரும் வழி சரியானதா? செய்தி உண்மையானதா? என்று பார்ப்பதற்கு எந்த முன்னுரிமையும் முதன்மையும் அளிப்பதில்லை. வருவதை வாந்தியெடுப்பது, வருவாயைப் பெருக்குவது என்பதை மட்டும் குறியாகக் கொண்டு ஊடகங்கள் செயல்படுகின்றன.
புலனாய்வு ஊடகவியல் என்றெல்லாம் இவர்கள் பீற்றிக் கொள்கின்றனர். ஆனால் பொய்யை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளியலாகத் தான் செயல்படுகின்றன. இப்படிப்பட்ட ஊடகத்திற்கு இந்த நூறு கோடி ரூபாய் அபராதம் சரியென்றே தோன்றுகின்றது.