ஹதீஸ் கலை ஆய்வு தொடர்: 12
மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?
ஏகோபித்தக் கருத்தில் ஏன் தடுமாற்றம்?
மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்பதை அனைத்து அறிஞர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று சொல்பவர்கள் கூட சில நேரங்களில் கொல்லக் கூடாது என்றும் கூறுகிறார்கள்.
ஒரு பெண் மதம் மாறிவிட்டால் அவளைக் கொல்லக் கூடாது என்று ஹனஃபீ மத்ஹபைச் சார்ந்த பல அறிஞர்கள் கூறுகிறார்கள். பெண் ஆயுதங்களைத் தூக்கி போர் செய்ய மாட்டாள் என்பதே இதற்குக் காரணம். இஸ்லாத்திற்கு ஒருவன் புதிதாக வந்து விட்ட சிறிது நாளில் மதம் மாறிவிட்டால் இவனுக்கும் இச்சட்டம் பொருந்தாது என்றும் சிலர் கூறுகிறார்கள்.
மொத்தத்தில் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தைக் கூறுபவர்கள் கூட இச்சட்டத்தைச் சிலருக்குப் பொருத்துகிறார்கள்; சிலருக்குத் தளர்த்துகிறார்கள் என்பதே உண்மை. மதம் மாறியவரைக் கொல்ல வேண்டும் என்ற இந்தச் சட்டத்தில் மாற்றுக் கருத்துள்ளவர்களும் இருக்கிறார்கள்.
நாம் மட்டும் இதை மறுக்கவில்லை. இமாம் சுஃப்யான் சவ்ரீ மற்றும் அந்நஹயீ ஆகிய இருவரும், “மதம் மாறியவன் கொல்லப்படக் கூடாது. அவன் மரணிக்கும் வரை திருந்திக் கொள்ளும் படி அவனுக்குக் கூற வேண்டும்’ என்று கூறியுள்ளார்கள். இக்காலத்து அறிஞர்கள் பலர் நம்மை விட இச்சட்டத்தைப் பலமாக மறுத்துள்ளார்கள்.
எதிர் வாதங்களும், முறையான பதில்களும்
மதம் மாறியவனைக் கொல்லுமாறு மார்க்கம் சொல்லவில்லை என்பதற்குப் பல குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டினோம். எதிர்க் கருத்தைக் கொண்டவர்கள் இவற்றில் பெரும்பாலான ஆதாரங்களுக்குப் பதில் சொல்லாமல் ஒன்றிரண்டு ஆதாரங்களுக்கு மட்டும் அடிப்படையில்லாத பதிலைச் சொல்கிறார்கள்.
வாதம்: 1
மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற வசனம் யாருக்காக இறங்கியதோ அவர்களுக்கு மட்டும் தான் நிர்பந்தம் இல்லை என்ற சட்டம் பொருந்தும் இந்த அடிப்படையில் இஸ்லாத்திற்குள் வராமல் இருப்பவரை இஸ்லாத்திற்கு வருமாறு நிர்பந்திக்கக் கூடாது என்பதை மட்டும் தான் இந்த வசனம் சொல்கிறது. இஸ்லாத்திற்கு வந்து விட்டு மதம் மாறுபவனை நிர்பந்திக்கக் கூடாது என்று இந்த வசனம் சொல்லவில்லை என்று வாதிடுகிறார்கள். இந்த வசனம் இறங்கியதற்கான காரணத்தை விளக்கும் பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
குழந்தைகள் பிறந்து அக்குழந்தைகள் அனைத்தும் மரணித்து விடும் போது தனக்கு பிறக்கின்ற குழந்தை உயிரோடு இருக்குமானால் அக்குழந்தையை யூதனாக மாற்றி விடுவேன் என்று (அறியாமைக் காலத்தில்) பெண் தன் மீது கடமையாக்கிக் கொள்பவளாக இருந்தாள். பனூ னளீர் என்ற (யூதக் கூட்டம் ஊரை விட்டும்) வெளியேற்றப்பட்ட போது அன்சாரிகளுடைய குழந்தைகளில் சிலரும் அதில் இருந்தார்கள். எனவே அன்சாரிகள் எங்கள் பிள்ளைகளை நாங்கள் (யூத மதத்தில்) விட்டு விட மாட்டோம் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், “மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது” என்ற வசனத்தை இறக்கினான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 2307
பிறப்பிலே யூதர்களாக இருந்தவர்களை இஸ்லாத்திற்கு வரும்படி நிர்பந்திக்கக் கூடாது என்பதற்குத் தான் இந்த வசனம் இறங்கியது. இஸ்லாத்திற்கு வந்துவிட்டு மதம் மாறியவனைத் திரும்ப இஸ்லாத்திற்கு வருமாறு வற்புறுத்துவதற்குத் தடையாக வசனம் இறங்கவில்லை. எனவே மதம் மாறியவனை நிர்பந்திப்பதற்குத் தடையாக இந்த வசனத்தைக் காட்ட முடியாது என்று கூறுகிறார்கள்.
நமது விளக்கம்
இவர்கள் விளங்கியிருப்பது முற்றிலும் தவறானது. பெண்களை நிர்பந்தமாகச் சொந்தமாக்காதீர்கள் என்று குர்ஆன் கூறுகிறது. இந்த வசனம் இறங்குவதற்கு முன்பு அறியாமைக் காலத்தில் கணவன் இறந்த உடன் மனைவியை அக்கணவனின் சொந்தக்காரர்கள் மணம் முடித்துக் கொள்வார்கள். அல்லது தாங்கள் விரும்பிய ஆட்களுக்கு மணமுடித்து வைப்பார்கள். இதைக் கண்டித்து இந்த வசனம் இறங்கியதாக புகாரியில் 4579வது எண்ணில் இடம்பெற்றுள்ள செய்தி கூறுகிறது.
கணவனை இழந்த பெண்னை நிர்பந்தப்படுத்தக் கூடாது என்பதற்குத் தான் இந்த வசனம் இறங்கியது. எனவே திருமணமே செய்யாத பெண்ணை நிர்பந்திப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று இவர்கள் விளங்குவார்களா? நிச்சயமாக அவ்வாறு எவரும் விளங்க மாட்டோம். மாறாக பெண்ணை நிர்பந்திக்கக் கூடாது என்ற பொதுவான தடையை வைத்துக் கொண்டு எந்தப் பெண்ணையும் எந்த வகையிலும் நிர்பந்திக்கக் கூடாது என்றே விளங்குவோம். இது போன்று அமைந்த வசனம் தான் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற வசனம்.
மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் கிடையாது என்று குர்ஆன் சொல்வதால் எதுவெல்லாம் நிர்பந்தமாகுமோ அவை அனைத்தும் கூடாது என்று சொல்வது தான் குர்ஆனைப் புரிந்து கொள்ளும் முறையாகும்.
வாதம்: 2
மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறும் வசனம் மாற்றப்பட்டு விட்டது என்று கூறி அதற்கு ஆதாரமாக, இணை வைப்பவர்களிடத்தில் போர் புரியுமாறு கட்டளையிடும் வசனங்களைக் காட்டுகின்றனர். இந்த வசனங்களின் அடிப்படையில் மார்க்கத்தில் நிர்பந்தம் இருக்கிறது. எனவே இந்த வசனங்கள், நிர்பந்தம் இல்லை என்று கூறும் வசனத்தை மாற்றி விட்டன என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.
நமது விளக்கம்
மனோஇச்சையைப் பின்பற்றுவதற்குச் சிறந்த உதாரணமாக இந்த விளக்கம் அமைந்துள்ளது. குர்ஆனுடைய சட்டம் மாற்றப்படுவதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ சொல்ல வேண்டும். முரண்பாடில்லாத வசனங்களுக்கு மத்தியில் முரண்பாட்டை ஏற்படுத்தி ஒன்றை ஓரங்கட்டுவது முஸ்லிமிற்கு அழகல்ல.
நிர்பந்தம் கிடையாது என்று கூறும் வசனம் மாற்றப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்? மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கு அடுத்த வரியிலே ஒரு காரணத்தையும் அல்லாஹ் இணைத்துச் சொல்கிறான். அந்தக் காரணம் இருக்கும் போதெல்லாம் அந்தச் சட்டமும் நிலைத்திருக்கும்.
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:256
இஸ்லாம் தெளிவான மார்க்கம் என்பதால் உண்மை எது, பொய் எது என்பதைச் சிந்திப்பவர்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம். எனவே இவ்வளவு தெளிவான மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான். இச்சட்டத்தை மாற்றிவிட்டு நிர்பந்தத்தை மார்க்கம் ஏற்படுத்தியதென்றால் தெளிவாக இருந்த இஸ்லாம் தெளிவை இழந்து விட்டது. அதனால் நிர்பந்திக்கச் சொல்கிறது என்று பொருள் வரும்.
நபி (ஸல்) அவர்களால் இஸ்லாம் மென்மேலும் தெளிவுபடுத்தப் பட்டதால் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற சட்டம் மென்மேலும் வலுப்பெற்றது என்று தான் சொல்ல முடியும்.
(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா?
அல்குர்ஆன் 10:99
எல்லோருக்கும் நேர்வழி காட்டுவதை அல்லாஹ் நாடவில்லை. அல்லாஹ்வே நாடாத போது நபியே நீ எப்படி நிர்பந்திப்பாய்? என்று அல்லாஹ் கேட்கிறான். மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கு இது போன்ற காரணம் சொல்லப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு நிர்பந்தம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது என்று சொன்னால் அல்லாஹ் எல்லோருக்கும் நேர்வழி காட்ட மாட்டான் என்ற விதியை மாற்றிக் கொண்டான் என்று கூற வேண்டிய கட்டாயம். வரும்.
அதிகமான மக்கள் நேர்வழி இல்லாமல் மரணிப்பதை கண்ணால் பார்க்கக் கூடிய நாம் இதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்? எனவே காரணங்களோடு சொல்லப்பட்ட இந்த வசனம் மாற்றப்பட்டது என்று கூறுவது குர்ஆனை மறுத்த குற்றத்தில் நம்மைச் சேர்த்து விடும். அல்லாஹ் நம் அனைவரையும் இதை விட்டும் பாதுகாக்க வேண்டும்.
வாதம்: 3
நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை.
“நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று (முஹம்மதே!) எச்சரிப்பீராக!
அல்குர்ஆன் 4:137
மதம் மாறியவர்களைக் கொல்லக் கூடாது என்பதற்கு இந்த வசனத்தை நாம் முன் வைத்தோம். இந்த வசனத்தின் பின்பகுதி நயவஞ்சகர்களைப் பற்றிப் பேசுவதால் இங்கு சொல்லப்பட்டவர்கள் நயவஞ்சகர்கள் தான். மதம் மாறிகளைப் பற்றி இங்கு பேசப்படவில்லை. எனவே மதம் மாறிகளைக் கொல்லக் கூடாது என்பதற்கு இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டக் கூடாது என்று எதிர்த் தரப்பினர் கூறுகின்றனர்.
நமது விளக்கம்
இந்த வசனம் நயவஞ்சகர்களைக் குறிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை. நயவஞ்சகர்களைக் குறிப்பதால் நாம் வைத்த வாதத்திற்கு இந்த வசனம் எப்படிப் பொருந்தாமல் போகும்? நயவஞ்சகனாக இருப்பவன் மதம் மாறியாகவும் இருக்க முடியும். நயவஞ்சகர்களில் மதம் மாறியவர்களைப் பற்றி இந்த வசனம் பேசுகிறது.
இந்த நயவஞ்சகர்கள் ஈமான் கொண்டு பிறகு மறுத்து விட்டதாக அல்லாஹ் சொல்கிறான். ஈமான் கொண்டு விட்டுப் பிறகு இறை நிராகரிப்பாளனாக மாறியவன் மதம் மாறியவன் இல்லை என்று இவர்கள் சொல்லப் போகிறார்களா?
மதம் மாறிகளைக் கொலை செய்யக் கூடாது என்பதற்கு நயவஞ்சகர்களை நபி (ஸல்) அவர்கள் கொலை செய்யாமல் விட்டதை முன்பே ஆதாரமாகக் காட்டினோம். நயவஞ்சகர்களைப் பற்றி இந்த வசனம் பேசுவதால் இது மதம் மாறிகளைக் குறிக்காது என்று கூறுவது சிறுபிள்ளைத் தனமானது.
இமாம் புகாரி அவர்கள் ஸஹீஹுல் புகாரியில் மதம் மாறிய ஆண், மதம் மாறிய பெண் தொடர்பான சட்டம் என்று தலைப்பிட்டு அதற்குக் கீழே பல வசனங்களைக் குறிப்பிடுகிறார்கள். மதம் மாறிகளைப் பற்றி பேசவில்லை என்று எதிர்த் தரப்பினர் கூறிய மேலுள்ள வசனத்தையும் அங்கு பதிவு செய்துள்ளார்கள். மதம் மாறிகளைக் குறிக்காத வசனத்தை சம்பந்தமில்லாமல் இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்து விட்டார்கள் என்று இவர்கள் சொல்ல வருகிறார்கள்.
நமது கருத்திற்கு இந்த ஒன்றை மட்டும் ஆதாரமாக வைக்கவில்லை. நாம் பல வசனங்களைக் கூறியிருக்கும் போது இந்த ஒன்றுக்கு மட்டும் தப்பான விளக்கத்தைக் கொடுத்து விட்டு மீத வசனங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள்.
வளரும் இன்ஷா அல்லாஹ்