நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே!
கே.எம். அப்துந் நாசிர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்
பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதும் வழிகேட்டில் செல்வதற்கும் அடிப்படையான காரணம் அவர்களுடைய வளர்ப்பு முறை தான். பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்காற்றுபவர்கள் பெற்றோர்கள் தான். இதனை நபி (ஸல்) அவர்கள் மிக அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
“ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (1359)
குழந்தைகள் வளர்ப்பு முறையைப் பொறுத்து தான் அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
இதன் காரணமாகத் தான் குழந்தை வளர்ப்பிற்கு இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
எதிர்காலச் சமுதாயம் இன்றைய குழந்தைகள் தான். எதிர்காலச் சமுதாயம் சிறந்த சமுதாயமாக உருவாக வேண்டும் என்றால் இளம் பிராயத்திலேயே அக்குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் போதிக்கப்பட வேண்டும்.
இன்றைய கல்வி முறையில் குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் போதிக்கப்படாத காரணத்தினால் சமுதாயத்தில் நிலவி வரும் சீர்கேடுகளைப் பற்றி தினமணி நாளிதழ் டிசம்பர் 26ல் எழுதிய தலையங்கத்தை மக்களின் பார்வைக்கு தருகிறோம். இதோ அந்த தலையங்கம்:
நல்லவராவதும் தீயவராவதும்
மனித வாழ்க்கையின் பருவ அடுக்குகளில் முக்கியமானது, நுட்பமானது, சிக்கலானது வளர்இளம் பருவம். ஒரு நபர் படைப்பாளியாக, அல்லது நல்ல வாசகராக மாறவும், அரசியல் பார்வை பெறுவது, தன் முன்பான சமூகத்தை விமர்சனம் செய்வது, பாலியல் ஈர்ப்புகளுக்கு ஆளாவதும் என எல்லாமும் இந்த வளர்இளம் பருவத்தில் தான் உருவாகின்றன.
இதைச் சொல்லக் காரணம் இருக்கிறது. அண்மையில் தருமபுரியில் உள்ள சில அரசு மேனிலைப் பள்ளிகளில் நடைபெற்ற சம்பவங்களும், சென்னையில் மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவி கொலை மற்றும் 5 மாணவர்கள் கைது என்கிற செய்தியும், இன்றைய வளர்இளம் பருவத்தினரை பள்ளிகள் எவ்வாறு கண்காணிக்கவும், வழிநடத்தவும் வேண்டும் என்கிற அவசியத்தை வலியுறுத்துகின்றன.
தருமபுரியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து படிப்பவர்கள். இந்த மாணவர்களில் சிலர் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் நான்கு நாள் விடுப்பில் சென்றபோது, அந்த விடுப்பு நாள்கள் அனைத்தும் முகூர்த்த நாள்களாக இருந்திருக்கின்றன. அதைக் கவனித்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இந்த மாணவர்களை அழைத்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது.
இந்த மாணவர்கள் முகூர்த்த நாள்களில் பள்ளிக்கு வருவதுபோல வீட்டிலிருந்து கிளம்பினாலும், பள்ளிக்கு வராமல் கல்யாண மண்டபங்களில் சாப்பாடு பரிமாறுதல் மற்றும் சமையலுக்கு உதவி செய்யும் வேலைக்குச் செல்வதும் இதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தங்கள் விருப்பம் போல செலவிடுவதையும் ஒப்புக் கொண்டனர்.
இந்த மாணவர்கள் அனைவரும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களைக் குழந்தைத் தொழில் ஒழிப்பு சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்த வழியில்லை. தனியார் பள்ளிகளைப் போல, ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் “அப்பா-அம்மாவை அழைத்து வா’ என்று கண்டிப்புக் காட்டவும் முடியாது. ஏனென்றால், இந்த மாணவர்கள் ஒரேயடியாகப் பள்ளிக்கு வராமல் நின்று விடுவார்கள். அரசுப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையைக் குறையாமல் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமும் தலைமையாசிரியர்களுக்கு இருக்கிறது.
இந்த மாணவர்கள் உழைப்பது சரி தான். ஆனால், அந்த ஊதியத்தை என்ன செய்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு கல்யாணத்திலும் குறைந்தது ரூ. 200 ஊதியமும் நல்ல உணவும் கிடைக்கிறது. சில பெரிய வீட்டுத் திருமணங்கள் என்றால் டிப்ஸ் என்ற பெயரில் மேலும் சில நூறு ரூபாய்கள் கிடைக்கும். இவை அனைத்தையும் இவர்கள் சினிமா பார்க்கவும், புகை, மற்றும் மதுபானத்துக்குச் செலவழிப்பது பாதி என்றால், பாதிப் பணம் இவர்களது செல்போன்களுக்கு “டாப்-அப்’ செய்வதிலும், தங்கள் சக மாணவிகளுடன் உரையாடுவதற்காக அவர்களது செல்போனுக்கு “டாப்-அப்’ செய்வதிலும் தான் செலவாகிறது என்பது மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது ஏதோ அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரச்னை என்றும் கருதிவிட முடியாது. நகர்ப்புறத்தில் உயர்தரக் குடிமக்கள் பயிலும் பள்ளிகளிலும் இதே சிக்கல் வெவ்வேறு பரிமாணத்தில் இருக்கின்றது.
தங்கள் செலவுக்காகத் தாங்களே உழைத்து சம்பாதிக்கும் மனப்போக்கு மிகவும் ஆரோக்கியமானது தான். ஆனால், அந்த உழைப்பின் வலி தெரியாமல், அதை மதுவுக்கும் வெட்டி பந்தாவுக்கும் செலவழிப்பதென்பது, ஒரு தலைமுறையை வீணடிப்பதாகவும் சமூக விரோதிகளாக மாற்றுவதாகவும் இருக்குமெனில் அதைத் தடுத்தாக வேண்டும்.
மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் முடியாதவர்களாகப் பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளு மற்றும் வாழ்க்கைச் சுமையால், மனஅழுத்தத்தால் தலை சாய்ந்து கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் வளர்இளம் பருவத்து மாணவர்களை வழிநடத்தக்கூடிய இடம் பள்ளியாக மட்டுமே இருக்கின்றது. மேனிலைப் பள்ளிகளில் இந்த வளர்இளம் பருவத்து மாணவர்களைச் சரியாக வழிகாட்டிவிட முடியுமானால், வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்திவிட முடியுமானால், அவர்களது வாழ்க்கைப் பயணம் சரியான திசையில் அமைந்துவிடும்.
பள்ளி தலைமையாசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் இந்த மாணவர்களின் போக்கு, செயல்பாடுகளைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. சக மாணவர்களுடன் பேசினாலே போதுமானது. இதற்கான நேரம் ஒதுக்கவும், இவர்களது மனப்போக்குகளைக் கண்டறிந்து, அதில் உள்ள ஆபத்துகளைச் சொல்லி எச்சரித்தாலும்கூட போதுமானது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அதை ஆசிரியர்கள் தங்களது கடமையாகக் கருதிய காலம்போய், மதிப்பெண் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பள்ளியின் கடன் என்று பணியாற்றத் தொடங்கியதுதான் இந்நிலைமைக்கு தலையாய காரணம்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இன்றைய இளம்தலைமுறை காப்பாற்றப்பட வேண்டுமானால், பள்ளிக்கூடங்கள் மாணவர்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்தும் குருகுலங்களாகவும் மாற்றம் பெற்றாக வேண்டும். கல்வியாளர்களும் அரசும் இதைப்பற்றி சிந்தித்து வழி காண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது
பெற்றோர்களே பிள்ளைகளின் பொறுப்பாளர்
பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்து அவர்களை சிறந்தவர்களாக நல்லவர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கின்றார் தினமணி ஆசிரியர்.
ஆசிரியர்களில் பலர் பொறுக்கிகளாகவும், காமவெறி பிடித்தவர்களாகவும் உள்ள காலகட்டத்தில் பிள்ளைகளைப் பண்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களைச் சார்ந்தது தான் என்று குறிப்பிடுவது வேடிக்கையான ஒன்றாகும்.
பெற்றோர்கள் வேலைப் பழுவினால் பிள்ளைகளைக் கவனிக்க இயலாது என்று தினமணி ஆசிரியர் கூறுவது பிற சமுதாயத்தைக் கவனித்து வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.
ஆனால் நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் வாழ்வாதாரங்களைத் தேடும் பொறுப்பை ஆண்களுக்கும் பிள்ளைகளைப் பேணிப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பை பெண்களுக்கும் வழங்கியுள்ளது. எதிர்காலச் சமுதாயம் சிறந்த சமுதாயமாக உருவாக்கப்படவேண்டும் என்பது தான் இதன் அடிப்படையாகும்.
குழந்தைகளைச் சிறந்த குழந்தையாக உருவாக்கும் பொறுப்பை அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்தெடுக்கும் தாயிடம் தான் இஸ்லாம் ஒப்படைத்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப் படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி (2554)
ஒரு குழந்தையின் தாய்தான் அவனுடைய நல்லொழுக்கத்திற்கு பொறுப்புதாரி ஆவார். குழந்தைகளுக்கு நல்லதொரு ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பதும் பெற்றோர்களின் பொறுப்பு தான்.
முஃமின்களின் இலட்சியம்
“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” என்று (நல்லடியார்கள்) கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (25 : 74)
ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் எத்தகைய இலட்சியத்தில் வாழ வேண்டும் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.
மற்றவர்கள் நம்முடைய வாழ்வை ஒரு முன்மாதிரியான வாழ்வாகக் கருதும் அளவிற்கு ஒவ்வொரு பெற்றோரும் அவர்களுடைய பிள்ளைகளும் திகழ வேண்டுமென அல்லாஹ் குறிப்பிடுகிறான். நாம் நம்முடைய பிள்ளைகளை வளர்க்கும் முறைகளைப் பார்த்து, இது போன்றல்லவா நாம் நம்முடைய பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று மற்றவர்கள் எண்ணும் அளவிற்கு ஒவ்வொரு முஃமினும் தன்னுடைய குடும்பத்தை இறையச்சமுடைய குடும்பமாக உருவாக்க வேண்டும் என்பதும் அதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதும் தான் இறைவனின் வழிகாட்டுதல்.
சிறந்த சமுதாயம் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதற்கு மேற்கண்ட வசனம் தெளிவான ஆதாரமாகும்.
திருமணமே முதல்படி
குழந்தைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பை இஸ்லாம் தாயிடம் ஒப்படைத்துள்ளது. ஒரு குழந்தை நல்லொழுக்கமுள்ள குழந்தையாக உருவாக வேண்டுமென்றால் அக்குழந்தையின் தாய் நல்லொழுக்கங்களை அறிந்தவளாக இருக்க வேண்டும். ஒரு தாய் அதிகம் சினிமா பார்க்கக் கூடியவளாகவும், தர்ஹா வழிபாடுகள் செய்பவளாகவும், பில்லி, சூனியம், பேய், பிசாசு நம்பிக்கை உடையவளாகவும் இருந்தால் இவள் எப்படி தன்னுடைய குழந்தையை ஒரு நல்லொழுக்கமுள்ள, இறைநம்பிக்கையுள்ள குழந்தையாக உருவாக்குவாள்?
ஒரு சிறந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் குழந்தைகள் நல்லொழுக்கங்கள் உடையவர்களாக உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகள் நற்சிந்தனையைப் பெற வேண்டும் என்றால் அக்குழந்தையின் தாய் அதற்குத் தகுதியானவளாக இருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் நபியவர்கள் திருமணத்தின் போதே நல்லொழுக்கமுள்ள பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (5090)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (2911)
சிறந்த சமுதாயம் உருவாவதற்கு முதல் அடிப்படை நல்லொழுக்கமுள்ள பெண்ணைத் திருமணம் செய்வது தான் என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
இல்லறமும் இனிய சமுதாயத்திற்கே!
ஒருவன் திருமணம் செய்து தன்னுடைய உடல் இச்சையைத் தணிப்பதற்காக தன்னுடைய மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுகின்றான். இந்த இனிய இல்லறத்திலும் இனிய சமுதாயம் உருவாவதற்காக அல்லாஹ்விடம் நபியவர்கள் பிரார்த்திக்கச் சொல்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் (தாம்பத்திய உறவு கொள்ளும் எண்ணத்தில்) செல்லும் போது பிஸ்மில்லாஹ் – அல்லாஹ்வின் திருப்பெயரால்… இறைவா! ஷைத்தானை எங்களைவிட்டு விலகியிருக்கச் செய்! எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்! என்று பிரார்த்தித்து(விட்டு உறவு கொண்டாரெனில்) அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கு விளைவிப்பதில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (141)
“எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்!” என்ற பிரார்த்தனையின் முக்கிய அடிப்படையே நம்முடைய எதிர்காலச் சந்ததிகள் நல்லொழுக்கமுள்ள சந்ததிகளாக உருவாக வேண்டும் என்பதுதான்.
இஸ்லாம் நல்லொழுக்க சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கு எத்தகைய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது என்பதற்கு மேற்கண்ட நபிவழியும் மிகச் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
தொடர்ச்சி அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ்…