ஈமானை இழக்க வைக்கும் எம்.எல்.ஏ. சீட்டுகள்

ஈமானை இழக்க வைக்கும் எம்.எல்.ஏ. சீட்டுகள்

தமிழகத்தில் சமுதாய இயக்கங்கள் என்றழைக்கப்படும் முஸ்லிம் லீக்குகளில், ஒரு லீக் திமுகவுடன் இருக்கும் போது மற்றொரு லீக் அதிமுகவுடன் இருக்கும்.

ஒவ்வொரு அணியும் தாங்கள் கூட்டணி வைத்துக் கொண்ட கட்சிகள் சமுதாயத்திற்குத் துரோகமிழைத்தாலும் அதற்கு ஆதரவளித்து முட்டுக் கொடுத்துக் கொண்டு தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துவர்; தங்கள் அடிமை சாசனத்தை உறுதி செய்வர். அத்துடன் வஞ்சகமில்லாமல் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைவர்களை வானத்திற்கும் பூமிக்குமாகப் புகழ்ந்து தள்ளுவார்கள்.

தங்களுக்குக் கிடைக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றப் பதவிகளுக்காக தாங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைவர்களைக் கடவுளாக்கி மகிழ்வார்கள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் பேராசிரியர் காதர் மைதீன் ஒரு தேர்தல் கூட்டத்தில் கருணாநிதியைக் கடவுள் நிலைக்கு உயர்த்திப் பேசியதாகும்.

“சிறுபான்மை சமுதாயத்தின் உள்ளத்தில் உள்ளதை நீங்கள் அறிபவர்’ என்று கருணாநிதியை நோக்கி அவரை மேடையில் வைத்துக் கொண்டு இந்த இணை வைப்பு, இறை மறுப்பு வார்த்தையைக் குறிப்பிட்டார். இது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். காதர் மைதீன் வார்த்தையை குர்ஆன் வார்த்தையில், அரபியில் சொல்ல வேண்டுமானால் “அலீமுன் பிதாத்திஸ் ஸுதூர்’ என்று குறிப்பிடலாம். இது படைத்த இறைவனுக்கு மட்டும் சொந்தமான தனிப் பண்பு! இந்தப் பண்பில் வேறு யாரையும் கூட்டாக்க முடியுமா? ஒருபோதும் முடியாது. இருப்பினும் இவ்வாறு இவர்களைப் பேச வைப்பவது எது? ஒரு சில எம்.எல்.ஏ. சீட்டுகள், எம்,பி. சீட்டுகள்.

லீக்குகள் நிலை தான் இப்படி என்றால் சமுதாய மானம் காக்கப் புறப்பட்டதாகக் கூறிக் கொண்டு கிளம்பிய, சாக்கடையைச் சந்தனமாக்கக் களமிறங்கிய மாமாகவின் வாத்தியாரைப் பாருங்கள்.

மூன்று சீட்டுகள் தருகின்ற “அம்மா’விடம் அவர் காட்டுகின்ற முத்துப் பல்வரிசையைப் பார்த்தீர்களா? “அரசியல் களத்தில் உங்களைப் போன்று இளிக்கின்ற எத்தனையோ பேரைப் பார்த்து விட்டேன்; உங்களைப் போன்ற எச்சில் பேர்வழிகளை நான் பார்த்ததில்லை’ என்று கூறுவது போன்று அந்தப் பெண்மணியின் முகத்தில் ஒரு நமட்டுச் சிரிப்பு உருவாவதை யாரும் காணலாம்.

 சரி! மூணு சீட்டு மோகத்தில் இப்படி ஒரு இளிப்பு வந்திருக்கலாம் என்று விட்டு விடுவோம். இவரது கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடந்த கோவை பொதுக்கூட்டத்தில் இறைவனின் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அவர் பேசிய பேச்சைப் பார்த்தால் இவர்கள் எம்.எம்.ஏ. சீட்டுக்காக ஈமானை இழக்கவும் துணிந்து விட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

வருங்கால முதல்வர் ஜெயலலிதா தான் என்று அடித்துச் சொல்கின்றார். ஒரு கட்டத்தில் இன்ஷா அல்லாஹ் என்று சொல்ல வந்தவர் இன்ஷா என்ற சொல்லோடு நிறுத்திக் கொண்டார். அல்லாஹ் நாடத் தேவையில்லை, அவர் தான் முதல்வர் என்று வாத்தியார் முடிவு செய்தால் போதும் என்று நினைத்துக் கொண்டார் போலும்.

மறைவான ஞானத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு இறை மறுப்பு வார்த்தைகளை அவிழ்த்து விடுகின்றார். இவ்வாறு அவரைப் பேசத் தூண்டியது எது? இந்த எம்.எல்.ஏ., எம்.பி. சீட்டுக்கள் தான்.

அத்துடன் அன்புச் சகோதரரி என்று பாசம் பொங்க அழைத்து, மோடியின் சகோதரியான ஜெயலலிதாவை தனது சகோதரியாக ஆக்கிக் கொண்டார். இவரும் மோடியின் சகோதரராகத் தன்னை ஆக்கிக் கொண்டார்.

பதவி ஆசையும் பாத பூஜையும்

பதவிக்காக இவர்கள் எதையும் இழக்கத் தயார் என்று இறங்கி விட்டார்கள். அந்தப் பதவி சுகத்திற்காகப் பாத பூஜையும் செய்வதற்குத் தயார் என்பதற்கு இதோ எடுத்துக்காட்டு!

டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வெற்றிக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு உங்கள் பாதம் தொட்டுக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்:  மனிதநேய மக்கள் கட்சி

எதற்கும் விலை போக மாட்டோம் என்று மார் தட்டியவர்கள் கேவலம் மூன்று சீட்டுக்காக ஈமானையும் இழக்கத் தயார், எங்களுக்கு விலை எம்.எல்.ஏ. சீட் போதும் என்று தெளிவாகவே அடையாளப்படுத்திக் கொண்டனர்.

அவர்களே, நேர் வழியை விற்று வழி கேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர் வழி பெற்றோரும் அல்லர். (அல்குர்ஆன் 2:16)

இவர்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள். இதுபோன்ற நிலையை அடைவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

தன்னைக் காக்காதவர் தரணியைக் காப்பாரா?

தன்னையும் காத்து, தரணியையும் காப்பவன் தான் கடவுள். இது குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்த விபரமாகும். ஆனால் பருவமடைந்த பெரியவர்கள் மட்டுமல்ல! பண்டிதர்களுக்கும் இந்த விபரம் புரியாமல் இருப்பது வேதனையும் வினோதமும் ஆகும்.

தன்னைக் கடவுள் என்று பீற்றியும், பிதற்றியும் கொண்டிருந்த சாய்பாபா தன்னையும் காக்காதவர் என்பது அவருடைய வாழ்க்கையில் வெளிப்படையாக, வெள்ளிடை மலையாகத் தெரிந்த ஒன்று.

கடலில் ஒரு கப்பல் மூழ்குகின்றது. அந்தக் கப்பலில் உள்ளவர்கள் மூழ்கப் போகும் மற்றொரு கப்பலில் உள்ளவர்களைப் பார்த்து, நான் உங்களைக் காக்கப் போகின்றேன் என்று சொன்னால் அதைக் கேலிக் கூத்து என்று உலக விஷயத்தில் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஆன்மீக விஷயத்தில் இதைப் புரிந்து கொள்வதில்லை.

கடவுளைக் கைவிட்ட உடல் உறுப்புக்கள்

சாய்பாபாவின், அதாவது கடவுளின் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக அவருக்கு உதவி செய்ய மறுக்க ஆரம்பித்தன.

1963ஆம் ஆண்டு சாய்பாபாவைப் பக்கவாதம் தாக்கியது. மூளையில் இரத்த உறைவு ஏற்படும் போது கை கால்கள் செத்து விடுகின்றன. இது தான் வாதம் எனப்படுகின்றது. அதாவது கடவுளின் மூளையே வேலை நிறுத்தத்தில் இறங்கியதால் கை கால்களும் வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டன.

இயங்க மறுத்த இறைவனின் (?) இதயம்

ஒருவரின் உடலை இயக்குவது இதயம் தான். இந்தக் கடவுளுக்கோ அந்த இதயம் நான்கு முறை இயங்க மறுத்துள்ளது. வாத நோய் ஏற்பட்ட அதே ஆண்டு கடவுளுக்கு மாரடைப்பும் ஏற்படுகின்றது. இயங்க மறுத்த இதயத்துடன் மருந்துகளைக் கொண்டு சமாதான உடன்படிக்கை செய்த பின்னர் தான் கடவுள் இயங்கத் துவங்கினார்.

புட்டி உடைந்த புட்டபர்த்தியார்

2005ஆம் ஆண்டு சாய்பாபா தனது பக்தர்களை பரிபாலணம் செய்து கொண்டிருந்த போது ஒரு குட்டிப் பையன் இரும்பு நாற்காலியிலிருந்து அவர் மேல் விழுந்ததால் கடவுளின் புட்டி உடைந்தது. ஆம்! இறைவனின் இடுப்பு முறிந்தது. தன் பக்தன் மூலம் தனக்கு இப்படி ஒரு ஆபத்து ஏற்படப் போகின்றது என்று அறிய முடியாதவர் ஒரு கடவுளா? இதற்குப் பிறகு பாபாவின் கால்கள் தரையில் பாவ மறுத்தன. பாதங்கள் தரையில் பதியத் தவறின. அதனால் சக்கர நாற்காலியில் கட்டுண்டு கிடக்க ஆரம்பித்தார்.

பரவசத்துடன் வந்த பக்த கோடிகளை நகரும் நான்கு சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு ஆசி (?) வழங்கிக் கொண்டிருந்தார். பாவம் அந்த பக்தர்கள். பக்தர்கள் என்று சொல்வதை விட பைத்தியங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இதுவரை திடமாக நடமாடிய சாய்பாபா சக்கர நாற்காலியில் உட்கார்ந்து நடைப்பிணமாகக் கிடக்கின்றாரே! இவர் எப்படிக் கடவுளாக முடியும் என்ற சிந்தனை பறி போன இவர்களைப் பைத்தியங்கள் என்று குறிப்பிடாமல் வேறென்ன சொல்ல முடியும்?

மீண்டும் இயங்க மறுத்த இதயம்

மார்ச் 2011ல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு புட்டபர்த்தியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றார். படிப்படியாக ஒவ்வொரு உறுப்பும் செயல்படாமல் கடவுளுக்கு மறுப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றது.

கல்லீரல் கழுத்தறுத்தது. சிறுநீரகம் செயல்படாமல் படுத்துக் கொண்டது. அடுத்து தலைமை இயக்குனரான இதயமும் செயல்பட மறுத்தது. இயற்கை சுவாசம் போய், கடவுளுக்கு செயற்கை சுவாசம் உயிர்ப் பிச்சை கொடுத்தது. கடைசியில் இந்தக் கடவுள் மரணத்தைத் தழுவுகின்றார். மரணம் என்ற கழுகு கடவுளின் உயிரைக் கொத்திக் கொண்டு பறந்து விட்டது.

கவலைக்கிடமான கடவுள்

கவலைக்கிடமானவர்களைக் காப்பவர் தான் கடவுள். ஆனால் அந்தக் கடவுளே கவலைக்கிடமானது பக்தர்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியது. கடவுளின் ஒவ்வொரு உறுப்பும் இவ்வாறு செயல்பட மறுத்துக் கொண்டிருக்கும் போது புட்டபர்த்திக்கும் சேர்த்து ஒளியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் சூரியன் அன்றாடம் உதித்து, தன்னுடைய கடமையைச் செய்து கொண்டு தான் இருந்தது.

இரவில் சந்திரன் தன் பாட்டுக்குத் தன் பாட்டையில் பவனி வந்து பணி செய்து கொண்டிருந்தது.

காற்று சாய்பாபாவைத் தவிர்த்து மற்றவர்களுக்கு சுவாசத்தையும் கொடுத்து தனது சூறாவளி சுழல் பணியைச் செய்து கொண்டிருந்தது.

புட்டபர்த்தியை உள்ளடக்கிய பூமி தன்னையும் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் செயல்படாமல் போனது கடவுளின் உறுப்புக்கள் மட்டும் தான்.

இது எதைக் காட்டுகின்றது?

சாய்பாபாவின் உயிர் ஒருவனின் கைவசமிருக்கின்றது. அந்த ஒருவன் தான் சூரியன், சந்திரன், பூமி, காற்று அனைத்தையும் தன் கைவசத்தில் வைத்திருக்கின்றான். அவன் தான் உண்மையான கடவுள். அவனிடம் தான் இந்த சாய்பாபாவின் உயிரும் உள்ளது. அந்த உண்மையான இறைவன் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான்.

எவனது கைவசம் அதிகாரம் இருக்கிறதோ அவன் பாக்கியமுடையோன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

அல்குர்ஆன் 67:1, 2

உயிரினங்களின் உயிர்களைக் கைவசத்தில் வைத்திருப்பவன் தான் உண்மையான கடவுள் என்று குறிப்பிடுகின்றான். அவன் தான் சாய்பாபாவின் உயிரைப் பறித்துள்ளான்.

இங்கு ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிப்பிடுவது மிகப் பொருத்தமாகும்.

(நபி (ஸல்) இறந்த போது அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர் (ரலி) அவர்கள் வெளியில் வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் உமரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரலி) பக்கமிருந்து அபூபக்ர் (ரலி) பக்கம் திரும்பி விட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் “உங்களில் யார் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்து விட்டார். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவே மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான் (3:144)” என்றார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் மூலமாகத் தான் இதையவர்கள் அறிந்து கொண்டதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக்கொண்டிருந்தனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1242

அபூபக்ரின் அசத்தல் வார்த்தைகள்

தங்களின் உயிரினும் மேலான இறைத் தூதரைப் பிரிந்த சோகத்தில் உறைந்து போயிருந்த நபித்தோழர்கள் சற்று உணர்ச்சி வசமாகி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்று எண்ணத் தலைப்பட்டனர்.

அந்த வேளையில் திருக்குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி அபூபக்ர் (ரலி) அவர்கள், “இறவாமை என்பது இறைத் தன்மை, மனிதன் என்றால் மரணிக்கக் கூடியவன் தான்’ என்பதை உரிய நேரத்தில் பதிய வைக்கின்றார்கள். மயக்கத்தில் இருந்த மக்களை மீட்டெடுக்கின்றார்கள்.

நபித்தோழர்கள் கடவுள் தன்மைக்கும் மனிதத் தன்மைக்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு விளங்கி வைத்திருந்ததாலும், குர்ஆன் கூறும் இறைக் கோட்பாட்டை உள்ளத்தில் நன்கு பதிய வைத்திருந்ததாலும் எளிதில் மீண்டு விட்டனர்.

“தான் ஒரு மனிதன் தான், கடவுள் அல்ல’ என்று முஹம்மத் (ஸல் அவர்கள் விதித்து வைத்த கோட்பாட்டின் அடிப்படையில் நபித்தோழர்கள் நேர்வழியில் நிலைத்து நின்றனர். ஒட்டு மொத்த முஸ்லிம்களும் – ஷியாக்கள், பரேலவிகள் போன்ற வழிகேடர்களைத் தவிர உள்ள அனைத்து முஸ்லிம்களும் – முஹம்மத் (ஸல்) அவர்கள் மனிதர் தான் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

இந்த நம்பிக்கை இல்லாவிட்டால், சாய்பாபாவைப் போன்று ஏமாற்று வித்தைகள் செய்யாமல் உண்மையான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய, உண்மையையே பேசிய, ஒழுக்க சீலராக வாழ்ந்த முஹம்மத் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் கடவுளாக்கியிருப்பார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் அவரைக் கடவுளாக்கவில்லை. ஆக்கவும் செய்யாது. காரணம், முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு மனிதர். அவரையும் படைத்து, உலகிலுள்ள அனைத்தையும் படைத்த ஒரே இறைவனை மட்டுமே முஸ்லிம்கள் வணங்குகின்றனர். இந்தப் பகுத்தறிவுப் பாதையை பாபாவின் பக்தர்கள் பின்பற்ற முன்வர வேண்டும்.