பாஜகவின் பசுநேசம் ஒரு பகல்வேஷம்
எம். ஷம்சுல்லுஹா
புகை உயிருக்குப் பகை, புகை பிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது என்ற எச்சரிக்கைகளுக்கு இந்தியாவில் ஒன்றும் குறைச்சலில்லை. சிகரெட் பாக்கெட்டுகள் இந்த எச்சரிக்கை மணியைத் தாங்கித் தான் வருகின்றன. ஆனால் புகைப்பவர்களிடம் அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.
2011ல் வெளியான ஒரு புள்ளி விபரம் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் புகை பிடிப்பதன் காரணமாக உயிரிழப்பதாகக் கூறுகின்றது. இது புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டாகும்.
மதுவினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கொண்டால் அதற்கு இந்தச் சிறிய கட்டுரை தாங்காது. அண்மையில், இந்து நாளிதழில், “மெல்லத் தமிழன் இனி…” என்ற தலைப்பில் பல நாட்களாக ஒரு தொடர் வெளியானது.
பாமரனிலிருந்து பட்டதாரி வரை, தொழிலாளிகள் முதல் முதலாளிகள் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை, பழுத்த மனிதர்கள் முதல் பள்ளிக்கூடப் பையன்கள் வரை தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைத்துத் தரப்பு மக்களையும் மது என்ன பாடு படுத்தியது? எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதை விரிவாகப் படம்பிடித்துக் காட்டியது.
தேசிய அளவில் 2008ஆம் ஆண்டு 4308 என்ற எண்ணிக்கையிலிருந்த மது தொடர்பான மரணங்கள் 2012ல் 5478 என்ற சிகரத்தைத் தொட்டிருக்கின்றது என்ற புள்ளிவிபரத்தை தேசிய குற்றப் பதிவு ஆவணத்துறை வெளியிட்டுள்ளது. இந்த அளவுக்கு மது அரக்கன் இந்தியாவில் வெறியாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றான்.
மதுவுக்கு அடிமையானவன் முதலில் தான் சம்பாதிக்கும் காசு, பணம் அனைத்தையும் குடிப்பதில் கொட்டித் தீர்க்கின்றான். பின்னர் அவன் தொழிலில் எதுவும் ஈடுபட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றான். குடிப்பதற்குப் பணம் இல்லாமல், பணம் கேட்டு மனைவியை மாடு மாதிரிப் போட்டு அடிக்கின்றான். மனைவியின் நகை நட்டுக்களைக் களவாடி விற்றுக் குடிக்கிறான்.
முஸ்லிமல்லாத மக்களை எடுத்துக் கொண்டால் தாலி என்பது வெறும் கயிறல்ல! அது ஒரு புனிதக் கயிறு! மாங்கல்யம் என்பது அவர்களிடம் மங்களகரமானது. அந்த மங்களத்தை இந்தத் திமிங்கிலம் மனைவியிடமிருந்து பறித்துச் சென்று, அதை விற்று, குடித்துத் தீர்க்கிறான்.
பெற்ற மகளை விற்கும் மிருகம்
குடிப்பதற்குப் பண்ட, பாத்திரம் எதுவும் இல்லையென்றால் பெற்ற பிள்ளைகளை விற்பதற்கும் இந்த ஈவு இரக்கமற்ற மிருகம் தயங்குவதில்லை. இவர்களை மிருகங்களோடு கூட ஒப்பிட முடியாது. காரணம் எந்த மிருகமும் தான் ஈன்ற குட்டியை எந்தவொரு கட்டத்திலும் விட்டுவிடுவதில்லை. எதிரி இனம், தனது குட்டியைக் கவர வரும் போது அதை எதிர்த்து நின்று காக்கும் குணம் கொண்டது. அந்த உயர்ந்த இனத்துடன் பணத்திற்காக பாசத்தை விலை பேசும் இழிந்த மனித சடத்தை, சவத்தை, ஈனப் பிறவியை ஒருபோதும் ஒப்பு நோக்கக்கூடாது.
மதுவுக்காக, தான் பெற்ற பிள்ளைகளை விற்கும் ஜென்மமும் இருக்கின்றதா? என்று உங்களிடம் வியப்புக் குறி தோன்றும்; வினாக்குறி எழும். அதற்கு 07.07.2014 அன்று தமிழ் இந்து நாளிதழில் வெளியான செய்தியை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முன்பு பிரேம்ராஜ் தனது 4-வது பெண் குழந்தையை ரூ.30 ஆயிரத்திற்கு அங்கு வந்து செல்பவர்களிடம் விற்க முயற்சி செய்தபோது காவல் துறையிடம் பிடிபட்டார். எழும்பூர் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பிரேம்ராஜ் இதற்கு முன்பே தன்னுடைய 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையை மொத்தம் ரூ.1.30 லட்சத்துக்கு விற்றிருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது பிரேம்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த பெண் குழந்தை அவரது மனைவி மஞ்சுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது தாயும், குழந்தையும் பெரம்பூரில் பாதுகாப்பு இல்லம் ஒன்றில் அரசு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
கணவர் பிரேம்ராஜ் குறித்தும் குழந்தைகளை விற்ற சம்பவங்கள் குறித்தும் தி இந்துவிடம் மனம் திறந்தார் மஞ்சு.
கடந்த 2007-ம் ஆண்டில் எங்களுக்குத் திருமணம் நடைபெற்றது. அப்போது எனக்கு வயது 16 மட்டுமே. முதலில் வாடகை வீட்டில் இருந்தோம். பின்னர் வில்லிவாக்கத்தில் உள்ள அம்மன் கோயில் அருகே இருக்கும் பாலத்தின் அடியில் பிளக்ஸ் பேனர் கூடாரம் அமைத்து அதில் தங்கினோம்.
மேற்கூரை எதுவும் இல்லாமல் நடைபாதையிலேயே திருமண வாழ்வில் பாதிக்கும் மேல் கழித்திருக்கிறார்கள் இவர்கள். திருமணமான அடுத்த வருடமே மஞ்சுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
முதல் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்கள் அவசரச் சிகிச்சை பிரிவில் குழந்தை இருக்க வேண்டிய சூழ்நிலை. அந்தச் சமயம் வேறு ஒரு தம்பதி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள் என்று கூறி என்னுடைய கணவர் பிரேம்ராஜ் முதல் குழந்தையை அவர்களிடம் விற்றுவிட்டார்.
அப்புறம் பிறந்த இரண்டாவது ஆண் குழந்தை 10 நாள் மட்டும்தான் என்னுடன் இருந்தது. அதையும் விற்றுவிட்டார். மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தை பிறந்து 4 நாட்கள் தான் இருக்கும். அதற்கு முழுமையாகத் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பு குழந்தையை எடுத்துச் சென்று விட்டார்.
திருமணமான முதல் நாள் தொடங்கி இரவுகளில் பல கொடுமைகளை கணவரிடம் அனுபவித்திருக்கிறார் மஞ்சு. தினமும் அடி விழும். நான் குளத்து வேலை செய்து சம்பாதிக்கும் 100, 200 ரூபாயையும் குடிக்க பிடுங்கிச் சென்றுவிடுவார் என்று மஞ்சு சொல்லும்போது இப்போதும் அவருக்கு குரல் உடைகிறது.
வீடு இல்லாத நிலையில் மஞ்சுவை வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து தங்க வைத்திருக்கிறார் பிரேம்ராஜ். மஞ்சு எப்போதாவது குழந்தை பெற்றுத்தர முடியாது என்று சொன்னால் அன்று அவருக்கு கடுமையான அடி விழும். அவருக்கு நான் விற்பதற்குக் குழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாக இருந்தேன். குழந்தையை விற்கக் கூடாதுன்னு சண்டையெல்லாம் போட்டிருக்கேன். என்னுடைய வாழ்க்கைதான் இப்படி ஆகிடுச்சு என்னுடைய குழந்தைகளாவது வேறு ஒரு குடும்பத்துல சந்தோஷமா வளரும்னு சமாதானப் படுத்திக்குவேன் என்கிறார் மஞ்சு.
இப்போ மீட்கப்பட்ட நான்காவது குழந்தை பற்றி நிறைய கனவுகள் இருக்கின்றன. அவளுக்கு நல்லா தலைவாரி, பூச்சூடி, அழகா சட்டைபோட்டு விட வேண்டும். இந்தப் புள்ள மட்டும்தான் தற்போது எனக்கு இருக்கிற ஒரே சொந்தம் என்கிறார் அவர்.
பிரேம்ராஜ் போன்ற நபர்கள் இறுதிவரை சிறையிலேயே இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் பல பெண்களது வாழ்க்கை பாழாய் போகும் என்றும் தெளிவாகப் பேசுகிறார் மஞ்சு.
குடியைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கும் குடி
மதுவுக்காக, பெற்ற பிள்ளைகளை விற்கின்ற கணவனைச் சிறையில் போடுங்கள் என்று மனைவி கதறுகின்றாள் என்றால் அவளது பாதிப்பின் பரிமாணத்தை நம்மால் தெளிவாக விளங்க முடிகின்றது.
கணவன் வெளியே சென்றால் வழிமேல் விழி வைத்து, கண்கள் பூத்து, கணவன் வந்த பின் சாப்பிடுவோம் என்று காத்துக் கிடக்கின்ற பத்தினிப் பெண்கள் தான் இத்தகைய ஈனப் பிறவிகளுக்கு எதிராக இப்படித் தீப்பிழம்பாக மாறி கொழுந்துவிட்டு எரிகின்றார்கள்.
இந்த அளவுக்கு மது, குடும்ப அமைதியைக் கெடுத்து விடுகின்றது. வளருகின்ற பிள்ளைகளும் இந்த மதுவுக்கு, சில இடங்களில் மனைவியும் இதற்கு அடிமையாக, குடும்பமே சிதைந்து சின்னாபின்னமாகி விடுகின்றது.
குழந்தைகள் குடிகாரர்களாக மாறிவிடுவதோடு மட்டுமல்லாமல் கொலைகாரர்களாகவும் மாறிவிடுகின்றார்கள் என குடியின் கேடுகள் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. குடியின் கேட்டை விவரிக்க இந்தக் குட்டி எடுத்துக்காட்டுக்கள் போதும்.
இப்படிப்பட்ட குடியிலிருந்து குடியையும், குடும்பத்தையும் காப்பது மக்கள் நலம் நாடும் ஒரு குடியரசின் கடமையாகும்.
கொடிய நெருப்பின் கோர வேகத்தை மிஞ்சுகின்ற வகையில் குடிமக்களை அழித்துப் பொசுக்குகின்ற, மாய்த்துத் தள்ளுகின்ற இந்த மது அரக்கனைப் போர்க்கால அடிப்படையில் வீழ்த்துவது மத்திய அரசின் உடனடி வேலையாகும்.
போதைக்கு அனுமதி! புரதத்திற்குத் தடை!
உடலுக்குக் கெடுதியளிக்கின்ற புகையையும், போதையையும் உடனடியாகத் தடுக்க வேண்டிய மத்திய அரசு, புரத உணவை அளிக்கின்ற மாட்டிறைச்சியைத் தடை செய்யத் துடிக்கின்றது. மகாராஷ்டிர அரசு மாட்டிறைச்சியைத் தடை செய்ததையொட்டி, அனைத்து மாநிலங்களிலும் தடை செய்வதற்குப் பரிசீலிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழிகேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள்.
அல்குர்ஆன் 7:146
பா.ஜ.க. என்ற முஸ்லிம் விரோத அரசு, வழிகேடான பாதையை மட்டும் தனது வழியாக எடுத்துக் கொண்டுள்ளது. மாட்டிறைச்சி என்பது முஸ்லிம்கள் மட்டுமன்றி பெரும்பான்மையான இந்துக்களின் உணவாகவும், புரதமாகவும் அமைந்திருக்கின்றது. ஆட்டிறைச்சி ஒரு வகையில் பணக்கார உணவாகவே இருந்து வருகின்றது. மாட்டிறைச்சி ஏழைகளின் உணவாக அமைந்திருக்கின்றது.
மற்றவர்களுக்கு உணவாக அமைந்த ஒரு கால்நடையை இவர்கள் கடவுளாக ஆக்கிக் கொண்டு அதைச் சாப்பிடக்கூடாது, விற்கக் கூடாது, விற்றால் அவர்களுக்குப் பத்தாண்டு சிறைத் தண்டனை என்று கூறினால் அது மாபெரும் அநீதியும், அக்கிரமும் ஆகும்.
இதற்குரிய அடிப்படைக் காரணமே முஸ்லிம்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்பதைத் தவிர்த்து வேறு எந்தக் காரணமும் இல்லை.
மாடு, அது பசுவாக இருக்கட்டும்; அல்லது காளையாக இருக்கட்டும். அதைச் சாப்பிடுவதால் யாருக்கும் எந்தப் போதையும் ஏற்படுவதில்லை. அதனால் மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
மாட்டிறைச்சி சாப்பிட்டதால் இத்தனை பேர் இறந்தார்கள் என்ற ஒரு செய்தி எப்போதும் வெளியானதில்லை. அரசும் வெளியிட்டதில்லை. மாடு உடலுக்குக் கேடு என்று அரசு விளம்பரம் போட்டதில்லை. மாறாக, மது குடும்பத்தைக் கெடுக்கும் என்று அரசாங்கமே விளம்பரம் செய்கின்றது. புகை உடலுக்குப் பகை என்று அரசாங்கமே விளம்பரம் செய்கின்றது.
மாட்டிறைச்சியும் நாட்டு வளர்ச்சியும்
மாட்டினால் யாருக்கும் கடுகளவு கூடப் பாதிப்பு இல்லை என்பதைவிட மாட்டிறைச்சியின் மூலமாக மனிதனுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. மாட்டிறைச்சி புரதச் சத்தை மட்டும் தரவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் தருகின்றது.
உலகிலேயே பிரேசிலுக்கு அடுத்தபடியாக அதிக அளவு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடு (சுமார் 20 லட்சம் டன்) இந்தியாதான். இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி 2011-இல் 1.9 பில்லியன் டாலரிலிருந்து 2013-இல் 3.2 பில்லியன் டாலராக அதிகரித்தது. இப்போது சுமார் 5 பில்லியன் டாலராகி இருக்கக்கூடும். இந்தியாவின் 48% தோல் ஏற்றுமதி தமிழ்நாடு மூலம் நடைபெறுகிறது. இதில் 30% தோல் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வாங்கப்படுகிறது. (19.03.2015 – தினமணி தலையங்கம்)
தன்னுடைய இறைச்சியின் மூலம் மட்டுமல்லாமல் பாலிலிருந்து தோல் வரை, கொம்பிலிருந்து அதன் வால் முடி வரை, கால் குளம்பு வரை அத்தனையிலும் மனித சமுதாயத்தின் வருவாய், பிழைப்பு நடத்துவதற்கு மாடு வகை செய்கின்றது.
இப்படிப்பட்ட பொருளாதாரச் சுரங்கத்தைத் தான் நாடு முழுவதும் தடை செய்வதற்கு மத்திய அரசு ஆலோசனை செய்கின்றது.
இந்த வேகத்தையும், வீரியத்தையும் பல குடிகளைக் கெடுத்து, பிள்ளைகளைத் தலைமுறை தலைமுறையாகப் பாழாக்கி, பாதிக்கச் செய்து, பலரைக் கொலை செய்யவும் தற்கொலை செய்யவும் காரணமாக அமையும் மதுவைத் தடை செய்வதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும். குஜராத், மிஜோராம், நாகலாந்து ஆகிய மாநிலங்களில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. இருப்பினும் அதில் ஏகப்பட்ட குறைபாடுகளும், கோளாறுகளும் உள்ளன.
மகாராஷ்டிராவில் மது விலக்கு நடைமுறையில் இருந்தால் மருத்துவமனையில் சான்றிதழ் வாங்கி, உரிமம் பெற்றுக் கொண்டால் உரிமையுடன் மதுவை வாங்கி ஊற்றிக் கொள்ளலாம். இதுதான் மகாராஷ்டிரா மதுவிலக்கின் லட்சணம்.
இப்படி சில மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இருந்தாலும் அது தள்ளாடுகின்ற நிலையில் தான் உள்ளது.
தமிழ்நாடு, கேரளா, தில்லி மாநிலங்களில் அந்த மாநில அரசுகளே நேரடியாக மதுவை விற்பனை செய்கின்றன. ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனையின் இலக்கை உயர்த்தி சாதனை படைத்து வருகின்றது தமிழ்நாடு.
மாபெரும் இந்தத் தீமையை விட்டும் மக்களைக் காக்க வேண்டிய மத்திய அரசு இதில் தீவிரம் காட்டாமல் மாட்டிறைச்சியைத் தடை செய்வதில் தீவிரம் காட்டுகின்றது. மத்திய அரசின் முஸ்லிம் விரோதப் போக்கைத் தவிர்த்து இது வேறொன்றுமில்லை.
தவிடுபொடியாகும் தற்காப்பு வாதங்கள்
மாட்டிறைச்சி தடையைத் தூக்கி நிறுத்துவதற்காக பத்திரிகைகள் பல்வேறு தற்காப்பு வாதங்களை வைக்கின்றன. அவை அனைத்தும் தவிடுபொடியாகும் வாதங்களாகவே அமைந்திருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக தினமணி 19.03.2015 அன்று வெளியான தலையங்கத்தைக் குறிப்பிடலாம்.
தேவை தானா தடை? என்ற தலைப்பில் வெளியான அந்தத் தலையங்கம் மாட்டிறைச்சிக்கான தடையை எதிர்ப்பது போல் இருந்தாலும் தடையைப் பக்காவாக ஆதரித்திருக்கின்றது.
பல்வேறு நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மிருகங்களின் வதைக்குத் தடை விதித்திருக்கின்றன. யூத மதத்துக்கு எதிரானது என்பதால் இஸ்ரேலில் குதிரை மாமிசம் தடை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கம்யூனிஸ நாடான கியூபாவில் பசுவதை தடை செய்யப்பட்டுள்ளது. எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் பன்றி இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஏதோ இந்தியாவில் மட்டுமே மத நம்பிக்கையின் அடிப்படையில் பசுவதையும், மாட்டிறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டிருப்பதாகக் கூக்குரலிடுவது அர்த்தமற்றது. (தினமணி தலையங்கம்)
பல்வேறு நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக மாடுகளைத் தடை செய்திருப்பது உண்மை! ஆனால் மேற்குறிப்பிட்ட அந்த நாடுகள், அந்தப் பிராணிகளைக் கடவுள், புனிதம் என்ற காரணத்திற்காகத் தடை செய்யவில்லை. இஸ்லாமிய நாடுகள் பன்றியையும், அதன் இறைச்சியையும் தடை செய்திருக்கின்றன. இதற்குக் காரணம் அதன் புனிதத் தன்மைக்காக அல்ல! ஆனால் இந்தியாவில் பசுவைக் கொல்வதற்குத் தடை செய்யக் காரணம் அதன் புனிதத் தன்மைக்காகத் தான். எனவே இந்தத் தடையை அந்தத் தடையுடன் ஒப்பிடுவது தவறான ஒப்பு நோக்காகும். இந்த அடிப்படையில் அந்த வாதம் தவிடுபொடியாகி விடுகின்றது.
மாமிசத்துக்கான நீர்த் தேவை மிக அதிகம். ஒரு கிலோ மாட்டிறைச்சி உற்பத்திக்கு செலவாகும் தண்ணீர் 15,415 லிட்டர். ஆட்டிறைச்சிக்கு 8,763, பன்றி இறைச்சிக்கு 5,988 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. தாவர உணவுகளுக்கான நீர்த் தேவை, ஒரு கிலோ பருப்பு உற்பத்திக்கு அதிகபட்சமாக 4,000 லிட்டர் தான். மற்ற காய்கறிகளுக்கு அதிகபட்சமாக ஒரு கிலோவுக்கு 800 லிட்டர் தண்ணீர் தேவை. நீர்த் தேவை குறித்த விழிப்புணர்வு மூலம் மக்களை சைவ உணவுக்கு மாற்றுவது இயலும். ஆனால், சட்டம் போட்டு மாமிச நுகர்வைக் கட்டுப்படுத்த முடியாது. குறிப்பாக ஆடு, கோழியை விடுத்து, வெறும் மாட்டிறைச்சியை மட்டுமே தடை செய்வது பயனற்றது. (தினமணி தலையங்கம்)
தினமணியின் இந்த வாமும் அர்த்தமற்ற வாதமாகும். மாமிசத்திற்காகன நீர்த் தேவையைக் கணக்குப் பார்த்தால் பருப்பு உற்பத்திக்கு 4000 லிட்டர் தேவைப்படுகின்றது. அதுபோல் அரிசிக்கு 5000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது. மனிதன் அரிசியை மட்டும் சாப்பிடுவதில்லை. அரிசியுடன் பருப்பு, உளுந்து போன்ற தானியங்களையும் சேர்த்தே சாப்பிடுகின்றான். இவை ஒவ்வொன்றையும் கூட்டினால் ஒரு கிலோ மாட்டிறைச்சிக்குத் தேவையான தண்ணீரையும் தாண்டிப் போய்விடும்.
இவை அனைத்திற்கும் சேர்த்துத் தான் வான்மழை பொழிகின்றது. ஏதோ தண்ணீரை பாஜக அரசு தன் கருவூலத்திலிருந்து திறந்து விடுவது போன்று அர்த்தமற்ற கதையை அளந்து விடுகின்றது.
ஒரு பொருளை உருவாக்க இத்தனை லிட்டர் தண்ணீர் செலவாகும் என்பதைக் கணக்கிடும் மறை நீர் என்ற இந்தச் சித்தாந்தம் கிறுக்குத்தனமானது. ஒரு பொருளைத் தயாரிக்க எத்தனை ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவானாலும், அந்தத் தண்ணீர் உலகில் இருந்து காணாமல் போகாது. ஒன்று நிலத்தடியில் தேங்கி மீண்டும் நமக்குப் பயன்படும். அல்லது வானில் சேமிக்கப்பட்டு மழையாக திரும்பக் கிடைக்கும். இந்த வகையில் சிந்தித்தால் மறைநீர் என்ற தத்துவம் அறிவுப்பூர்வமானதல்ல. மனிதன் எதையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளி நாட்டைக் கெடுப்பதற்காக சில சதிகாரர்கள் கண்டு பிடித்த வறட்டுத் தத்துவம் என்பதையும் கூடுதலாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நமது அரசியல் சட்டத்தின் 48-ஆவது பிரிவான அரசுக்கான கொள்கை வழிகாட்டு நெறிமுறையில் பசுவதைத் தடுப்பு என்பதும் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பசுக்களும் விவசாயத்திற்கு பயன்படும் ஏனைய கால்நடைகளும் கொல்லப்படாமல் பாதுகாப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. (தினமணி தலையங்கம்)
இந்தத் தடையை அரசியல் சட்டம் கூறுவதாகத் தெரிவிக்கின்றது. அப்படி இருந்தாலும் காளை மாட்டையும் அறுக்கக் கூடாது என்பது அரசியல் சாசனத்தில் உள்ளது அல்ல என்பதை தினமணி நரித்தனமாக மறைக்கிறது.
இதற்கு முந்தைய 47வது பிரிவு மதுவிலக்கை அமல்படுத்தச் சொல்கின்றது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று பசுவை அறுத்துச் சாப்பிடுவதால் யார் குடியும் கெட்டுப் போவதில்லை. ஆனால் மது குடியைக் கெடுத்து விடுகின்றது.
அதில் காட்டாத அக்கறையையும், ஆர்வத்தையும், அவசரத்தையும் இதில் ஏன் காட்டுகின்றது? இதற்கு இது முஸ்லிம்களுடைய பொருளாதார வளத்தின் முதுகெலும்பாக இருக்கின்றது என்பதைத் தவிர்த்து இதற்கு வேறு காரணமல்ல.
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் பசுவதைத் தடுப்பு இடம் பெற்றிருந்தது என்பது மட்டுமல்ல, நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பசுமைப் புரட்சிக்கும், வெண்மைப் புரட்சிக்கும் பதிலாக இறைச்சி ஏற்றுமதியை ஊக்குவித்து “சிவப்புப் புரட்சி’ (பிங்க் ரெவல்யூஷன்) செய்து கொண்டிருக்கிறது என்று சாடியிருந்தார். மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி பா.ஜ.க. பசுவதைத் தடை மற்றும் மாட்டிறைச்சி விற்பனைத் தடை மூலம் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறது என்பதுதான் உண்மை. அந்தக் கருத்துடன் நாம் உடன்படாமலிருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தின் அங்கீகாரத்தை பா.ஜ.க. இந்தப் பிரச்னையில் பெற்றிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். (தினமணி தலையங்கம்)
தேர்தல் வாக்குறுதி என்ற வாதத்தையும் தினமணி வைக்கின்றது. இதுவும் ஓர் அர்த்தமற்ற வாதமாகும். பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டுகள் அடிப்படையில் 282 பெற்றிருக்கலாம். ஆனால் விகிதாச்சார அடிப்படையில் அது வெறும் 31 சதவிகிதம் வாக்குகளைத் தான் பெற்றிருக்கின்றது. அதாவது 69 சதவிகிதம் மக்கள் பாஜகவை எதிர்த்துத் தான் வாக்களித்துள்ளனர். இது எப்படி பாஜகவின் பசுநேசத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்? என்று தினமணி சிந்திக்கவில்லை. இந்த அடிப்படையில் இது ஒரு சொத்தை வாதமாகும்; ஒரு சார்பு சிந்தனை வாதமாகும்.
பல்டி அடிக்கும் பலே கில்லாடி
வித்தியாசமான கட்சி என்று தன்னைத் தானே பீற்றிக் கொள்கின்ற ஒரு கட்சி தான் பாஜக. உண்மையில் அந்தக் கட்சி மாதிரி எந்தக் கட்சியும் புரண்டு பேச முடியாது; பல்டி அடிக்க முடியாது. அதற்கு ஏற்றாற்போல் ஒரு பல்டி நாயகன் மோடி வாய்த்திருக்கின்றார்.
முதலில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆதார் அடையாள அட்டையை அட்டகாசமாக விமர்சித்தார். ஆட்சிக்கு வந்த பின் அதில் அப்படியே பல்டியடித்து, காங்கிரஸை விடப் பன்மடங்கு தீவிரமாக ஆதார் அட்டையை அமல்படுத்துகின்றார். சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக மக்களுக்கு வழங்குவதை காங்கிரஸ் கொண்டுவந்த போது அதைக் கடுமையாக விமர்சித்தார். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதைப் போன்று உள்ளது என்ற அளவிற்கு தினமணி உள்ளிட்ட காவி பத்திரிகைகள் விமர்சித்தன. ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் எரிவாயு மட்டுமின்றி அனைத்து வகையான மானியத்தையும் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.
வங்கதேசத்துடன் நிலமாற்றுப் பரிவர்த்தனை கூடாது என்று ஆட்சிக்கு வருமுன் மோடி கூறினார். தற்போது அதைச் செயல்படுத்துவோம் என்று கூறுகின்றார். ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் 25 விவகாரங்களில் இதுபோன்ற அந்தர் பல்டிகளை அடித்த ஒரே நாயகன் மோடி தான். இந்த வகையில் பாஜக ஒரு வித்தியாசமான கட்சி தான்.
மோடி கண்மூடித்தனமாகக் கிண்டல் அடித்த விஷயங்களில் ஒன்று தான் சிவப்புப் புரட்சி! அதாவது மாட்டிறைச்சி ஏற்றுமதியைக் கடுமையாகச் சாடினார். கடுமையாகக் கிண்டலடித்தார். இதற்குப் பதிலாக வெண்மை (பால்) புரட்சியைச் செய்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்திருந்தார்.
ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பின் இறைச்சி ஏற்றுமதியின் நிலவரம் என்ன? கடந்த ஆண்டு 10,56,118 மெட்ரிக் டன்னாக இருந்த இறைச்சி ஏற்றுமதி இந்த ஆண்டு 15,91,581 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 5,35,000 மெட்ரிக் டன் இறைச்சி அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று வணிக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கின்றார்.
வெறும் எருமை மாட்டு இறைச்சி மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை. பசு இறைச்சியும் சேர்த்துத் தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றது என்பது இங்கு வெளியான மறுக்கமுடியாத உண்மையாகும். 08.03.2015 அன்று இந்தச் செய்தியை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், இறைச்சி ஏற்றுமதியில் பாஜக கையும் களவுமாக மாட்டிக் கொண்டது என்று தெரிவித்துள்ளது. இங்கு தான் பாஜகவின் இரட்டை முகம் அப்பட்டமாக அம்பலமானது.
பசுநேசம் ஒரு பகல்வேஷமே!
உண்மையில் பாஜகவுக்கும் மோடிக்கும் பசு மீது நேசமிருக்குமானால் எடுத்த எடுப்பிலேயே பசு இறைச்சி ஏற்றுமதியைத் தடை செய்திருக்க வேண்டும். இங்கு காசு கடவுளாகி, பசு சாதாரண பொருளாகிவிட்டது. பசு நேசம் பகல் வேஷமாகிவிட்டது.
இவ்வளவு நாளும் பசு மூலம் காசு பார்த்துவிட்டு இப்போது மோடி முண்டா தட்டுவது அவரது முகமூடியைக் களைந்திருக்கின்றது. அவரது உண்மை முகத்தை அடையாளம் காட்டுகின்றது.
சிவப்புப் புரட்சியும் சிந்தனை வறட்சியும்
சிவப்புப் புரட்சி பற்றி மோடி கடுமையாக விமர்சிக்கும் போது, இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முஸ்லிம்களை தாஜா செய்யும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டிருந்தார். இப்படி விமர்சித்தவர் தான் அந்த அரசை விட அதிகம் ஏற்றுமதி செய்து சம்பாதித்திருக்கின்றார். அப்படியானால் இவரும் முஸ்லிம்களை தாஜா செய்வதற்காகத் தான் செய்தாரா? என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு மோடி ஒருபோதும் பதிலளிக்கப் போவதில்லை.
அடுத்து, மோடி வெண்மைப் புரட்சியைப் பற்றி பெரிய புத்திசாலி போன்று வெளுத்து வாங்குகின்றார். இவர் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவாகப் போகின்றது. இந்த ஓராண்டில் வெண்மைப் புரட்சியில் இவர் என்ன கிழித்து விட்டார் என்று தெரியவில்லை.
மாட்டிறைச்சியை விற்றாலோ அல்லது இறைச்சியைக் கையில் வைத்திருந்தாலோ 5 ஆண்டு சிறைத் தண்டனை, பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்று மகாராஷ்டிர அரசு சட்டம் போட்டிருக்கின்றது.
புனிதமான மாட்டின் திடப் பொருளுக்கு அதாவது இறைச்சிக்கு இப்படி ஒரு சட்டம் என்றால் திரவப் பொருளுக்கு (பாலுக்கு) இந்தச் சட்டம் ஏன் பொருந்தாது? இறைச்சியாவது பால் கறப்பதற்குத் தகுதியில்லாத மாட்டிலிருந்து தான் பெறப்படுகின்றது. ஆனால் பாலோ கன்றுக்குரிய உணவிலிருந்து மனித இனத்திற்கு அபகரிக்கப்படுகின்றது. உண்மையில் பசு பால் கறப்பது மனிதனுக்காகவா? கன்றுக்காகத் தான். பால் இல்லாமல் கன்று வாழ முடியாது. ஆனால் பசுவின் பால் இல்லாமல் மனிதன் வாழ முடியும் என்றிருக்கும் போது அந்தப் பாலை எப்படி அபகரிக்கலாம்? இது அநியாயம் இல்லையா? இந்த அநியாயத்திற்கு வெண்மைப் புரட்சி என்று பெயர் வேறு!
மாட்டு மூத்திரம் கோமியம் என்ற பெயரில் இவர்களால் ஏற்கனவே அருந்தப்படுகின்றது. இதபோன்று இன்னும் சாணம் போன்ற கழிவுகளைப் புனிதம் என்ற பெயரில் பயன்படுத்திக் கொள்ளட்டும். பாலை எப்படிப் பயன்படுத்தலாம்? எனவே இந்தச் சட்டம் முற்றிலும் ஓர் அறிவீனம்! இதை வைத்து ஒரு சமுதாயத்தைப் பழிவாங்குவது அநியாயமும் அக்கிரமும் ஆகும்.
இஸ்லாமிய சமுதாயத்தைப் பழிவாங்குவதைக் குறியாகக் கொண்டு இந்தச் சட்டம் மகாராஷ்டிராவிலும் ஹரியானாவிலும் இயற்றப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்படுவது இஸ்லாமிய சமுதாயம் மட்டுமல்ல! இந்து சமுதாயத்திலும் பெரும்பான்மையோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
ஒரு விவசாயி பால் கறப்பதற்கும், உழுவதற்கும் தகுதியில்லாத மாட்டைத் தான் விற்கிறான். அது தான் அறுக்கப்படுகின்றது. இதை அறுப்பது குற்றம் என்றால் ஒரு விவசாயி தன் பாட்டைக் கழிப்பதே பெரும் சுமையாகிவிடும். அதனால் தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குச் செல்கிறான். அவனை நோக்கி, பசு தானாகச் சாகின்ற வரை அதைப் பராமரிக்க வேண்டும் என்று சொன்னால் அவனுக்கு இது பொருளாதாரச் சுமையாக மாறி விடுகின்றது.
இது ஒருபுறமிருக்க, பெரும்பான்மை மக்களின் உணவுப் பொருளாகத் திகழும் மாட்டிறைச்சியைத் தடை செய்வதால் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சியின் விலை மட்டுமின்றி காய்கறிகளின் விலையும் கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும் இந்தத் தடையால் ஏற்பட்டுள்ள மறைமுக பாதிப்பாகும்.
மது என்பது அத்தியாவசிய உணவு அல்ல! மேலதிகமாகக் குடிக்கும் போதைப் பொருளாகும். மது விலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் சட்டத்திற்குப் புறம்பாக நடந்த மது விற்பனை வழக்குகள் நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன. போதை பானத்திற்கே இப்படி என்றால் மாட்டிறைச்சி என்பது அன்றாட, அத்தியாவசிய உணவு! இதனால் ஏற்படும் வழக்குகள் நீதிமன்றத்தின் பளுவையும் பராமரிப்பையும் அதிகரிக்கும். இப்படிப்பட்ட பக்க விளைவுகளையும் பாதகத்தையும் பார்க்காத பாஜக மதவெறி அரசு இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
உயர் சாதி என்று ஒரு சிறுபான்மை சமுதாயம், பெரும்பான்மை சமுதாயம் உணவாக உட்கொள்கின்ற ஒரு கால்நடையைக் கடவுளாக ஆக்கிக் கொண்டு அதை அவர்கள் சாப்பிடக் கூடாது என்று தடுப்பதும், அதற்காகத் தண்டனை வழங்குவதும் மாபெரும் அராஜகமாகும். இயற்கை நீதிக்கு எதிரான செயலாகும்.
இந்திய வாக்காளர்களின் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான, 30 சதவிகித மக்களே பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். இதை வைத்துக் கொண்டு பெரும்பான்மை மக்களின் உணவிலும், அது தொடர்பான தொழிலிலும் அடிப்பது மிகப் பெரும் கொடுமையாகும். அடுத்த தேர்தலில் இதற்குப் பெரும்பான்மை மக்கள் பலத்த பதிலடி கொடுப்பதற்கு இப்போதே ஆயத்தமாகி விட்டார்கள். இவர்களின் அஸ்தமன அத்தியாயம் இப்போதே தொடங்கி விட்டது.