தொழுகையின் ஆரம்ப துஆக்கள்

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை    தொடர்: 7

தொழுகையின் ஆரம்ப துஆக்கள்

அப்துந் நாசிர், கடையநல்லூர்

தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியங்களில் ஒன்று தொழுகையில் ஒவ்வொரு நிலையிலும் ஓதப்படும் துஆக்களாகும்.

நாம் அல்லாஹ்விடம் எதைக் கேட்க வேண்டும், எதைக் கேட்கக் கூடாது என்பதை அறியாத மக்களாகவே இருக்கின்றோம்.

நாம் எவற்றையெல்லாம் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

தொழுகை என்பதற்கு அரபியில் “ஸலாத்” என்று கூறுவார்கள். இதன் பொருள் “பிரார்த்தனை” என்பதாகும்.

தொழுகையில் தக்பீர் கூறி கைகளைக் கட்டியது முதல் ஸலாம் கொடுக்கின்றவரை பல்வேறு நிலைகளில் ஓதும் துஆக்களை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

ஒவ்வொரு துஆவும் நமக்கு இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறுவதற்குத் தேவையான அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கிய துஆக்களாகும்.

இறை அனைத்தும் பாவங்களிலிருந்து நம்மைப் பரிசுத்தமாக்கி, நேர்வழியில் நம்மை நிலைநிறுத்தி, இவ்வுலக வாழ்வில் ஈடேற்றமளித்து, ஈமானோடு நம்மை மரணிக்கச் செய்து, கொடும் நரகத்திலிருந்து காப்பாற்றி, நிரந்தர சுவர்க்கத்தில் நம்மை இணைத்திடும் அற்புத கருத்துக்களைப் பொதிந்துள்ள துஆக்கள். இறைவனால் இறைத்தூதருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட அற்புத துஆக்கள்.

இந்த அற்புத துஆக்களை ஓதும் பாக்கியத்தை தொழுகையாளிகள் பெற்றுக் கொள்கிறார்கள்.

என்றாவது ஒருநாள் நாம் துஆக்கள் ஏற்றுக் கொள்வதற்குரிய தகுதியைப் பெற்று, இந்த துஆக்களை ஓதும் போது இறையருளால் மிகப்பெரும் பாக்கியத்திற்குரிய மனிதர்களாகிவிடுவோம். இது தொழுகையாளிகளுக்கு இறைவனின் மாபெரும் அருளாகும்.

தொழுகைக்காக தக்பீர் கூறி கைகளைக் கட்டியவுடன் நபியவர்கள் ஓதிய துஆக்களையும் அதன் பொருளையும் காண்போம்.

அல்லாஹும்ம பாஇத் பைனீ

அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப், அல்லாஹும்ம நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், அல்லாஹும்ம ஹ்ஸில் கத்தாயாய பில் மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (744)

(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போன்று என் தவறுகளை விட்டும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!)

வஜ்ஜஹ்து

வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவாத்தி வல்அர்ள ஹனீஃபன். வ மா அன மினல் முஷ்ரிகீன். இன்ன ஸலாத்தீ வ நுசுகீ வ மஹ்யாய வ மமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லா ஷரீக்க லஹு வ பிதாலிக உமிர்த்து. வ அன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்த்தல் மலிக்கு. லா இலாஹ இல்லா அன்த்த. அன்த்த ரப்பீ வ அன அப்துக்க. ழலம்த்து நஃப்சீ. வஅதரஃப்த்து பி தன்பீ. ஃபஃக்ஃபிர்லீ துனூபீ ஜமீஆ. இன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. வஹ்தினீ லி அஹ்சனில் அக்லாக்கி, லா யஹ்தீ லி அஹ்சனிஹா இல்லா அன்த்த. வஸ்ரிஃப் அன்னீ சய்யிஅஹா, லா யஸ்ரிஃபு அன்னீ சய்யிஅஹா இல்லா அன்த்த. லப்பைக்க வ சஅதைக்க. வல்கைரு குல்லுஹு ஃபீ யதைக்க. வஷ்ஷர்ரு லைஸ இலைக்க. அன பிக்க, வ இலைக்க. தபாரக்த்த வ தஆலைத்த. அஸ்தஃக்ஃபிருக்க வ அதூபு இலைக்க

அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி)

நூல்: முஸ்லிம் ( 1419)

பொருள்: நான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன் பக்கம் நேராக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். நான் இணைவைப்போரில் ஒருவனாக இருக்க மாட்டேன். என் தொழுகையும் என் தியாகமும் என் வாழ்வும் என் மரணமும் அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியன. அவனுக்கு இணையே இல்லை. இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. நான் கட்டுப்பட்டு நடப்பவர் (முஸ்லிம்)களில் ஒருவன் ஆவேன். இறைவா! நீயே அரசன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என் இறைவன். நான் உன் அடிமை. எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டேன். நான் என் பாவங்களை (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! பாவங்களை மன்னிப்பவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர். நற்குணங்களுக்கு எனக்கு வழிகாட்டுவாயாக. நற்குணங்களுக்கு வழிகாட்டுபவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர். துர்குணங்களை என்னிலிருந்து அகற்றுவாயாக! துர்குணங்களை அகற்றுபவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர். இதோ வந்தேன். கட்டளையிடு (காத்திருக்கிறேன்). நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளன. தீமைகள் உன்னைச் சார்ந்தவை அல்ல. உன்னால் தான் நான் (நல்வாழ்வு கண்டேன்). உன்னிடமே நான் (திரும்பிவரப்போகிறேன்). நீ சுபிட்சமிக்கவன். உன்னதமானவன். நான் உன்னிடமே பாவமன்னிப்புக் கோருகிறேன்; பாவங்களிலிருந்து மீண்டு உன்னிடம் திரும்புகிறேன்.

இரவுத் தொழுகையில் ஓதும் ஆரம்ப துஆ

நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்:

அல்லாஹும்ம! லக்கல் ஹம்து. அன்த்த கய்யிமுஸ் ஸமாவாத்தி, வல்அர்ளி, வமன் ஃபீஹின்ன. வலக்கல் ஹம்து. லக்க முல்க்குஸ் ஸமாவாத்தி, வல்அர்ளி, வமன் ஃபீஹின்ன. வலக்கல் ஹம்து. அன்த்த நூருஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வலக்கல் ஹம்து. அன்த்த முல்க்குஸ் ஸமாவாத்தி வல்அர்ள். வலக்கல் ஹம்து. அன்த்தல் ஹக்கு. வ வஅதுக்கல் ஹக்கு. வ லிஆஉக்க ஹக்குன். வ கவ்லுக்க ஹக்குன். வல்ஜன்னத்து ஹக்குன். வந்நாரு ஹக்குன். வந் நபிய்யூன ஹக்குன். வ முஹம்மதுன் ஹக்குன். வஸ்ஸலாத்து ஹக்குன். அல்லாஹும்ம! லக்க அஸ்லம்த்து, வ பிக்க ஆமன்த்து, வ அலைக்க தவக்கல்த்து, வ இலைக்க அனப்து, வ பிக்க காஸம்த்து, வ இலைக்க ஹாகம்த்து. ஃபக்பிர்லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து. அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு. லா இலாஹ இல்லா அன்த்த வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (1120)

பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி அவற்றில் உள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றில் உள்ளவை அனைத்துக்கும் உரிமையாளன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மை. உன் வாக்குறுதி உண்மை. உனது தரிசனம் உண்மை. உனது கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மை. முஹம்மத் உண்மை. மறுமை உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன் மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே வழக்காடுவேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னிப்பாயாக! நீயே முற்படுத்துபவன். பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ நன்மை புரியும் ஆற்றலோ இல்லை.

இரவுத் தொழுகையின் மற்றொரு ஆரம்ப துஆ

நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையைத் துவக்கியதும்  பின்வரும் துஆவை ஓதுவார்கள்.

அல்லாஹும்ம ரப்ப ஜிப்ராயீல வ மீக்காயீல வ இஸ்ராஃபீல, ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாதத்தி, அன்த தஹ்குமு பய்ன இபாதிக ஃபீமா கானூ ஃபீஹி யக்தலிஃபூன். இஹ்தினீ லிமக்துலிஃப ஃபீஹி மினல் ஹக்கி பி இத்னிக, இன்னக தஹ்தீ மன் தஷாஉ இலா ஸிராதிம் முஸ்தகீம்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (1418)

பொருள்: இறைவா! (வானவர்களாகிய) ஜிப்ராயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமியை முன்மாதிரியின்றிப் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! நீ உன் அடியார்களிடையே அவர்கள் கொண்டிருந்த கருத்துவேறுபாடுகள் குறித்து (மறுமையில்) தீர்ப்பு வழங்குவாய். (இறைவா) கருத்து வேறுபாடுடைய விசயங்களில் சத்தியத்தின் பக்கம் உன் நாட்டப்படி எனக்கு வழிகாட்டுவாயாக! நீ நாடியவர்களை நேரான வழியில் நீயே செலுத்துகிறாய்!

சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதன் சிறப்புகள்

தொழுகையாளிகள் ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுகின்ற பாக்கியத்தைப் பெறுகின்றார்கள்.

சூரத்துல் ஃபாத்திஹா தொழுகைக்கு மிகவும் அவசியமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.

அறிவிப்பவர்:  உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

நூல்: முஸ்லிம் 651

தொழுகையில் ஓதவேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட சூரத்துல் ஃபாத்திஹாவிற்கு ஏராளமான சிறப்புகளை நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

மகத்தான குர்ஆன்

சூரத்துல் ஃபாத்திஹாவிற்கு பல்வேறு பெயர்களை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மகத்தான குர்ஆன் என்பதும், திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் என்பதும்  அல்ஹம்து சூராவிற்குரிய பெயர்களில் உள்ளதாகும்.

அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில் அல்ஹம்து சூராவை மிகவும் சிறப்பித்துக் கூறுகின்றான்.

(முஹம்மதே!) திரும்பத் திரும்ப ஓதப்படும் (வசனங்கள்) ஏழையும் மகத்தான குர்ஆனையும் உமக்கு வழங்கினோம்.

அல்குர்ஆன் 15:87

அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்த பின்), “அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்த போது) நான் தொழுது கொண்டிருந்தேன்என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்தூதர் உங்களை அழைக்கும் போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?” என்று கேட்டார்கள். பிறகு என்னிடம், “குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டார்கள்.

அவர்கள் வெளியே செல்ல முனைந்த போது நான் அவர்களிடம், “நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்என்று சொல்லவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்‘ (என்று தொடங்கும் அல்ஃபாத்திஹாஅத்தியாயம்) தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும். எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும் என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 4474

அல்லாஹ்வாலும், அல்லாஹ்வின் தூதராலும் மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்ட அல்ஹம்து அத்தியாயத்தை ஓதும் பாக்கியம் ஒவ்வொரு ரக்அத்துகளிலும் தொழுகையாளிகளுக்குக் கிடைக்கிறது.

நன்மைகளை வாரி வழங்கும் அற்புத ஒளி

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்த போது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)என்று கூறினார்கள். அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் “இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லைஎன்று கூறினார்கள்.

அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, “உங்களுக்கு முன் எந்த இறைத் தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப் பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். “அல்ஃபாத்திஹாஅத்தியாயமும் “அல்பகராஅத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லைஎன்று கூறினார்.

நூல்: முஸ்லிம் 1472

அல்ஹம்து சூராவின் எந்த வரிகளை ஓதினாலும் அதில் உள்ளவை நமக்கு வழங்கப்படும்.

இது எப்படிப்பட்ட பாக்கியம் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தப் பாக்கியங்கள் அனைத்திற்கும் சொந்தக்காரர்கள் தொழுகையாளிகள் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. ஏனெனில் அவர்கள் தான் ஒவ்வொரு ரக்அத்துகளிலும் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுகின்றனர்.

தொழுகை என்பதே அல்ஹம்து அத்தியாயம் தான்

ஹஜ் என்பது பல்வேறு காரியங்களை உள்ளடக்கியக்கியதாகும். அவற்றில் ஒன்று தான் அரஃபாவில் தங்குதலாகும். என்றாலும் நபியவர்கள் அரஃபாவில் தங்குவதின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக “ஹஜ் என்பதே அரஃபா தான்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அது போன்று தான் தொழுகையில் பல்வேறு நிலைகளும், துஆக்களும் உள்ளன. என்றாலும் அல்லாஹுத்தஆலா அல்ஹம்து சூராவை ஓதுவதை மட்டும் தொழுகை என்று குறிப்பிடுகிறான்.

அல்ஹம்து சூராவை அல்லாஹ் இரு பகுதிகளாக்கியுள்ளான். அதன் முதல் பகுதி அல்லாஹ்வைப் புகழ்ந்து பெருமைப்படுத்துவதாகும்.

இரண்டாவது பகுதி நம்முடைய தேவைகளை அல்லாஹ்விடம் கேட்பதாகும்.

அல்ஹம்து அத்தியாயத்தை இரு பகுதிகளாகப் பிரித்திருப்பதை அல்லாஹ் தொழுகையையே இருபகுதிகளாகப் பிரித்திருப்பதாக் கூறிக்காட்டுகிறான்.

தொழுகையில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவது எவ்வளவு பாக்கியம் நிறைந்தது என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

பின்வரும் நபிமொழி இதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  தொழுகையை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும்.

அடியான் “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்‘ (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ்,  “என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்என்று கூறுவான்.

அடியான் “அர்ரஹ்மானிர் ரஹீம்‘  (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைத் துதித்துவிட்டான்என்று கூறுவான்.

அடியான் “மாலிக்கி யவ்மித்தீன்‘ (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், “என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்தி விட்டான்என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் “என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான்என்றும்  கூறியுள்ளார்கள்.)

மேலும், அடியான் “இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன்‘ (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால்அல்லாஹ், “இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்என்று கூறுவான்.

அடியான் “இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்‘ (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் “இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்‘  என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 655

தொழுகையில் ஓதும் அல்ஹம்து அத்தியாயத்திற்குத் தான் இத்தகைய பாக்கியங்களை அல்லாஹ் வாரி வழங்குகிறான்.

தொழுகையாளிகளுக்கு அவர்களின் தொழுகை எப்பெரும் பாக்கியங்களை வாரி வழங்குகிறது என்பதற்கு இது மிகச் சிறந்த சான்றாகும்.

மலக்குமார்களின் ஆமீன்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுவிப்பவர் (இமாம்), ஆமீன் கூறும் போது நீங்களும் ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று கூறுங்கள். ஏனெனில், எவர் ஆமீன் கூறு(ம் நேரமா)வது வாவனவர்கள் ஆமீன் கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்து விடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 780

இமாம் ஜமாஅத்துடன் தொழுபவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தின் காரணமாக முன்பாவங்கள் மன்னிக்கப்படும் பாக்கியத்தைத் பெறுகிறார்கள்.

தொழுகை அதனை பேணித் தொழுபவர்களுக்கு இன்னும் ஏராளமான பாக்கியங்களை வாரி வழங்குகிறது. அவற்றை வரக்கூடிய தொடர்களில் விரிவாகக் காண்போம்.