அரஃபா நோன்பு ஓர் ஆய்வு

மறு ஆய்வு

அரஃபா நோன்பு ஓர் ஆய்வு

துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோன்பு நோற்கும் வழக்கம் நமது சமுதாயத்தில் உள்ளது. இந்த நோன்பு நோற்றால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற கருத்தில் ஹதீஸ் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் இந்த நோன்பை நோற்று வருகின்றனர்.

அரஃபா நோன்பு தொடர்பான இந்தச் செய்தி பலவீனமானது என்று சிலர் விமர்சனம் செய்துள்ளனர். இவர்கள் கூறுவது போல் இந்தச் செய்தி பலவீனமானதா? அல்லது பலமானதா? என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். இந்தச் செய்தி பலவீனமானது என்று கூறுவோர் இதற்குக் கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை. எனவே இது ஆதாரப்பூர்வமான செய்தி என்பது நமது ஆய்வின் முடிவாகும்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் எவ்வாறு நோன்பு நோற்கின்றீர்கள்?” என்று கேட்டார். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். நாங்கள் அல்லாஹ்விடம் அவனது கோபத்திலிருந்தும் அவனுடைய தூதரின் கோபத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கோபம் தணியும் வரை இவ்வாறு பல முறை சொல்லிக்கொண்டிருந்தார்கள். பிறகு “அல்லாஹ்வின் தூதரே! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர் “(முறைப்படி) நோன்பு நோற்றவருமல்லர்; (முறைப்படி) நோன்பை விட்டவருமல்லர்’ அல்லது “அவர் (முறைப்படி) நோற்கவுமில்லை; (முறைப்படி) நோன்பை விடவுமில்லை’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், “இரண்டு நாட்கள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்க, “இவ்வாறு நோன்பு நோற்பதற்கு எவரால் இயலும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், “ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “அதுதான் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்” என்று விடையளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், “ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எனக்குச் சக்தி அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்பினேன்” என்று கூறினார்கள். பிறகு, “மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பது, ஆண்டுதோறும் ரமளானில் நோன்பு நோற்பது ஆகியன காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி)

நூல்: முஸ்லிம் (2151)

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இந்தச் செய்தி திர்மிதீ, அபூதாவூத், இப்னு மாஜா, அஹ்மது, இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான், ஹாகிம் ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸின் அறிவிப்பாளர்கள் வருமாறு:

அபூ கதாதா (ரலி) அப்துல்லாஹ் பின் மஃபத் என்பாருக்கு கூறினார்.

அப்துல்லாஹ் பின் மஃபத் என்பார் கைலானுக்கு கூறினார்

கைலான் என்பார் ஹம்மாத் பின் ஸைதுக்கு கூறினார்.

ஹம்மாத் பின் ஸைத் என்பார் யஹ்யா பின் யஹ்யாவுக்கும் குதைபா பின் ஸயீத் ஆகிய இருவருக்கும் கூறினார்கள்.

யஹ்யா பின் யஹ்யா, குதைபா பின் ஸயீத் ஆகிய இருவரும் இமாம் முஸ்லிமுக்கு கூறினார்கள்.

இது தான் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் பற்றிய விபரம்.

இந்த அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த ஹதீஸை பலவீனமானது என்று கூறக்கூடிய அறிஞர்கள் கூட மேற்கண்ட அறிவிப்பாளர்களில் யாரையும் குறை கூறவில்லை. வேறு காரணத்தினாலேயே இது பலவீனமானது எனக் கூறுகின்றனர்.

அதாவது முதல் அறிவிப்பாளரான அபூ கதாதா என்ற நபித்தோழர் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஃபத் அறிவிக்கிறார். இவ்விருவரும் நம்பகமானவர்கள் என்றாலும் அபூ கதாதா, அப்துல்லாஹ் பின் மஃபத் அவர்களைச் சந்தித்ததில்லை. எனவே அப்துல்லாஹ் பின் மஃபத் அவர்கள் இதை அபூ கதாதாவிடம் நேரடியாகக் கேட்டிருக்க முடியாது. அபூ கதாதாவைச் சந்தித்த ஒருவர் கூற அதைத் தான் அப்துல்லாஹ் பின் மஃபத் கேட்டிருக்க வேண்டும். இடையில் ஒருவர் விடுபட்டுள்ளதாலும் விடுபட்டவர் யார் என்பது தெரியாத காரணத்தாலும் இது பலவீனமான ஹதீஸாகும் என்பது இவர்களின் வாதம்

அப்துல்லாஹ் பின் மஅபத் என்பார், நபித்தோழர் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுறவில்லை என இமாம் புகாரி அவர்கள் கூறியிருப்பதை இதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டுகின்றனர்.

இந்தக் காரணம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஹதீஸைப் பலவீனமாக்க இது தகுந்த காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்தக் காரணம் உண்மையானது அல்ல.

அப்துல்லாஹ் பின் மஅபத் அபூகதாதா (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என இமாம் புகாரி கூறவில்லை. மாறாக இவர் அபூகதாதா (ரலி) அவர்களிடம் நேரடியாகக் கேட்டதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றே கூறியுள்ளார்.

அப்துல்லாஹ் பின் மஅபத் அபூகத்தாதா (ரலி) அவர்களிடம் நேரடியாகக் கேட்டதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

நூல்: அத்தாரீகுல் கபீர், பாகம்: 3, பக்கம்: 68

நேரடியாகக் கேட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்ற சொல்லுக்கும் சந்தித்ததில்லை என்ற சொல்லுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

அப்துல்லாஹ்வும், அபூகதாதா (ரலி) அவர்களும் ஒரே காலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் தான் இவர் அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூற முடியும்.

காலத்தால் வேறுபட்டவர்கள் விஷயத்தில் இவர் அவரிடம் நேரடியாகச் செவியுறவில்லை என்று கூறுவது பொருத்தமற்றதும் அர்த்தமற்றதுமாகும்.

அபூகதாதாவிடம் அப்துல்லாஹ் எதையும் செவியுற்றதாகத் தெரியவில்லை என்று புகாரி இமாம் கூறுவதில் இருந்து இருவரும் சம காலத்தில் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிகிறது. புகாரி இமாம் கூறியதைத் தவறாக இவர்கள் அர்த்தப்படுத்திக் கொண்டனர் என்பது இதன் மூலம் தெரிய வருகின்றது.

இதை முதலில் மனதில் வைத்துக் கொண்டு இது குறித்து மேலும் நாம் அலசலாம்.

“அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் பிந்தைய அறிவிப்பாளர், முந்தைய அறிவிப்பாளர் காலத்தில் வாழ்ந்திருந்தாலே அவரிடமிருந்து செவியுற்றுத் தான் அறிவித்திருப்பார்; இடையில் யாரும் விடுபடவில்லை என்று முடிவு செய்ய இதுவே போதுமானது” என்ற நிலைபாடு சரியா?

அல்லது “சம காலத்தில் இருவரும் வாழ்ந்திருந்தாலும் ஒருவர் மற்றவரிடம் செவியுற்றார் என்பதற்கும் ஆதாரம் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் இடையில் யாரோ விடுபட்டிருக்க வேண்டும்” என்ற நிலைபாடு சரியா?

இதைப் பற்றி முடிவு செய்து விட்டால் இந்த ஹதீஸ் சரியானதா? இல்லையா? என்பது தெளிவாகி விடும்.

ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரும் முதல் நிலைபாட்டைத் தான் ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது பிந்தைய அறிவிப்பாளரும் முந்தைய அறிவிப்பாளரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தாலே முந்தைய அறிவிப்பாளரிடமிருந்து பிந்தைய அறிவிப்பாளர் செவியுற்றுள்ளார்; இருவருக்கும் இடையில் யாரும் விடுபடவில்லை என்று தான் கருத வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆனால் புகாரி இமாம் மட்டும் இதற்கு மாற்றமாக இரண்டாவது நிலைபாட்டில் இருக்கிறார்.

“இருவரும் சம காலத்தில் வாழ்ந்தாலும் “நான் அவரிடம் கேட்டேன்’ என்பது போன்ற வார்த்தைகளால் அல்லது சந்திப்பை உறுதி செய்யும் வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால் மட்டுமே அது சரியான அறிவிப்பாகும். இல்லாவிட்டால் இடையில் யாரோ விடுபட்டிருப்பார்” என்பது புகாரி இமாமின் நிலைபாடு. இந்த விதிமுறைக்கு ஒத்திருக்கும் ஹதீஸை மட்டுமே இமாம் புகாரி பதிவு செய்வார்.

அப்துல்லாஹ் பின் மஅபத் மற்றும் அபூகதாதா (ரலி) ஆகிய இருவர் விஷயத்திலும் தமது விதிமுறை பற்றியே புகாரி குறிப்பிடுகின்றார்.

ஆனால் முஸ்லிம் இமாம் அவர்களும் இன்னும் பலரும் புகாரியின் இந்த நிபந்தனையைப் புறக்கணிக்கின்றனர். சம காலத்தில் வாழ்ந்து சந்திக்கும் வாய்ப்பு இருந்தாலே அவர்களின் ஹதீஸ்களை முஸ்லிம் இமாம் தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள அரஃபா நோன்பு தொடர்பான செய்தியை இமாம் முஸ்லிம் அவர்கள் தமது நூலான ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்துள்ளார்கள்.

தொடர்பு முறிந்த பலவீனமான செய்தியை இமாம் முஸ்லிம் தமது நூலில் பதிவு செய்ய மாட்டார். அறிவிப்பாளர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருந்தால் தான் அதை இமாம் முஸ்லிம் ஏற்றுக் கொள்வார். சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றால் அந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

அப்துல்லாஹ் பின் மஅபத், அபூகதாதா ஆகிய இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பதற்கு வாய்ப்பு இருந்ததால் தான் இந்தச் செய்தியை இமாம் முஸ்லிம் ஏற்றுக் கொண்டு தமது நூலில் பதிவு செய்துள்ளார்.

இது தவிர இதை உறுதிப்படுத்தும் மேலும் பல ஆதாரங்களும் உள்ளன.

அபூகதாதா (ரலி) அவர்களின் இறப்பையும் அப்துல்லாஹ் பின் மஅபத் அவர்களுடைய இறப்பையும் கவனித்தால் இவ்விருவரும் சந்தித்துக் கொள்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதைத் தெளிவாக அறியலாம்.

அபூகத்தாதா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 38வது வருடத்தில் மரணித்தார் என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால் 54வது வருடத்தில் மரணித்தார் என்பதைச் சரியான தகவல் என இமாம் இப்னு ஹஜர் குறிப்பிடுகின்றார்.

அபூகத்தாதா (ரலி) அவர்கள் 38வது வருடத்தில் இறந்தார் என்ற தகவல் தவறானது. அவர்கள் 54வது வருடத்தில் மரணித்தார் என்றே அதிகமானோர் கூறுகின்றனர்.

அப்துல்லாஹ் பின் மஅபத் ஹிஜ்ரீ 100க்கு முன்பு மரணித்தார் என இமாம் தஹபீ குறிப்பிடுகின்றார்.

அப்துல்லாஹ் பின் மஅபத் நூறுக்கு முன்பு மரணித்து விட்டார்.

நூல்: சியரு அஃலாமிந் நுபலாஃ, பாகம்: 4 பக்கம்: 206

இவர்களின் இந்த வரலாற்றுக் குறிப்பு, இவர்கள் ஒருவரையொருவர் சந்திக்க வாய்ப்புள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அதாவது, அபூகதாதா அவர்கள் ஹிஜ்ரி 54ஆம் ஆண்டு மரணித்தார்கள். அப்துல்லாஹ் ஹிஜ்ரி 100க்கு முன் மரணித்தார். அப்துல்லாஹ் மரணிக்கும் போது அவருக்கு 50 வயது என்று வைத்துக் கொண்டால் கூட அவர் அபூகதாதாவை சந்தித்திருக்க முடியும்.

இமாம் இப்னு அபீ ஹாதிம் அவர்கள், அப்துல்லாஹ் பின் மஅபதைப் பற்றி விவரிக்கும் போது இவர் உமர், அபூகதாதா, அபூஹுரைரா மற்றும் அப்துல்லாஹ் பின் உத்பா ஆகிய நபித்தோழரிடமிருந்து அறிவிப்பதாகத் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு கூறிவிட்டு, அப்துல்லாஹ் பின் மஅபத், உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என இமாம் அபூஸுர்ஆ கூறியதைக் குறிப்பிடுகின்றார்.

உமர், அபூகத்தாதா, அபூஹுரைரா மற்றும் அப்துல்லாஹ் பின் உத்பா ஆகிய நபித்தோழரிடமிருந்து அப்துல்லாஹ் பின் மஅபத் அறிவிக்கின்றார். இவரைப் பற்றி அபூஸுர்ஆ அவர்களிடம் கேட்கப்பட்ட போது இவர் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என்று பதிலளித்தார்.

நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம்: 5 பக்கம்: 173

அப்துல்லாஹ் பின் மஅபத், அபூகத்தாதா (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என்றால் அல்லது அவருடைய காலத்தை அடையவில்லை என்றால் அதைக் குறிப்பிடவேண்டிய இடம் இது தான்.

இவர் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என்ற தகவலைக் குறிப்பிடும் இமாம் இப்னு அபீஹாதிம், இவர் அபூகத்தாதாவைச் சந்திக்கவில்லை என்று குறிப்பிடவில்லை.

எனவே அப்துல்லாஹ்வும் அபூகத்தாதா (ரலி) அவர்களும் ஒருவரையொருவர் சந்திக்கும் காலத்தில் வாழ்ந்துள்ளனர் என்பது இதன் மூலமும் தெளிவாகின்றது.

மேலும் அப்துல்லாஹ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்திருப்பது போல் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளார். இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூற்றுப்படி அபூஹுரைரா (ரலி) ஹிஜ்ரீ 57வது வருடத்தில் மரணிக்கின்றார். ஏறத்தாழ அபூகத்தாதா (ரலி) அவர்களின் மரணமும் (54) அபூஹுரைரா (ரலி) அவர்களின் மரணமும் (57) நெருக்கத்தில் உள்ளது. ஆனால் அப்துல்லாஹ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பது குறித்து யாரும் எந்த விமர்சனமும் செய்யவில்லை. எனவே இவர் அபூஹுரைரா (ரலி) அவர்களைச் சந்திப்பது சாத்தியம் என்றால் அபூகத்தாதா (ரலி) அவர்களைச் சந்திப்பதும் சாத்தியம் தான்.

அப்துல்லாஹ் பின் மஃபத் அவர்கள் உமர் (ரலி) அவர்களைத் தான் சந்திக்கவில்லை. அபூஹுரைரா, அபூகதாதா ஆகிய நபித்தோழர்களைச் சந்தித்துள்ளார் என்பது உறுதியாகிறது.

உமர் (ரலி) கூறியதாக அப்துல்லாஹ் பின் மஃபத் அறிவித்தால் அந்த அறிவிப்பில் இடையில் ஒருவர் விடுபட்டுள்ளார் என்று கருத வேண்டும். இதே அரபா நோன்பு பற்றிய ஹதீஸ் உமர் (ரலி) இடமிருந்து அப்துல்லாஹ் பின் மஃபத் அறிவிப்பதாக உள்ளது. அது பலவீனமானது என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். அது பலவீனமானது என்பதால் அபூகதாதா வழியாக அறிவிக்கப்படும் சரியான ஹதீஸ் எப்படி பலவீனமாகும்?

அப்துல்லாஹ் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வரும் அறிவிப்பாளர் தொடர் தவறானது என்று அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அப்துல்லாஹ் பின் மஅபத் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வரும் அறிவிப்பாளர் தொடரே சரியானது.

நூல்: அல்மதாலிபு ஆலியா (1153)

மேலும் இமாம் தாரகுத்னீ அவர்கள் அல்இலலு என்ற தனது நூலில் உமர் (ரலி) அவர்களைக் குறிப்பிட்டு வரும் அறிவிப்பாளர் தொடர் தவறானது என்றும் அப்துல்லாஹ் பின் மஅபத், அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வரும் அறிவிப்பாளர் தொடரே சரியானது என்றும் கூறியுள்ளார்.

எனவே அப்துல்லாஹ், உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வரும் தவறான அறிவிப்பாளர் தொடரை வைத்துக் கொண்டு அப்துல்லாஹ் தத்லீஸ் என்ற இருட்டடிப்புச் செய்பவர் என்று குறை கூற முடியாது.

அரஃபா நாளில் நோன்பு நோற்பதை சிறப்பித்து வரும் இந்தச் செய்தி பலவீனமானது என்று வாதிடுபவர்கள் மேலும் சில விமர்சனங்களைச் செய்கின்றனர்.

துல்ஹஜ் மாதம் பிறை 9வது நாளான அரஃபாவுடைய நாள் நோன்பு வைப்பதற்குத் தடை செய்யப்பட்ட நாள் என்று கூறுகின்றனர். இதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அரஃபாவுடைய நாள் (பிறை 9) நஹ்ருடைய நாள் (பிறை 10) தஷ்ரீக்குடைய நாட்கள் ஆகியவை முஸ்லிம்களே நமது பெருநாட்களாகும். இவை சாப்பிடுவதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: திர்மிதீ (704)

பிறை 9வது நாளன்று நோன்பு நோற்கக் கூடாது என இந்தச் செய்தி கூறுகின்றது. அரஃபாவுடைய நாளில் நோன்பு நோற்பதைச் சிறப்பித்து வரும் ஹதீஸ் இந்த ஹதீஸிற்கு முரணாக அமைந்துள்ளதால் அதை ஏற்கக் கூடாது என்று விமர்சனம் செய்கின்றனர்.

அறிவிப்பாளர் தொடர் குறித்த இவர்களின் விமர்சனம் எப்படி தவறாக உள்ளதோ அது போல் கருத்து அடிப்படையில் இவர்கள் செய்யும் இந்த விமர்சனமும் தவறாகவே உள்ளது

மேலுள்ள ஹதீஸில் மூசா பின் அலீ என்பவர் இடம் பெறுகிறார். இவர் நம்பகமானவர் என்றாலும் இச்செய்தியில் இவர் ஒரு தவறைச் செய்துள்ளார். அரஃபாவுடைய நாளைச் சேர்த்துக் கூறியிருப்பதே அவர் செய்த தவறாகும்.

ஏனென்றால் நம்பகமான பல அறிவிப்பாளர்கள் அரஃபாவுடைய நாளைக் குறிப்பிடாமல் ஹஜ்ஜுப் பெருநாள், நோன்புப் பெருநாள், தஷ்ரீக்குடைய நாட்கள் ஆகியவை தான் பெருநாட்கள் என்று அறிவித்துள்ளனர். பல நபித்தோழர்கள் வழியாக இவ்வாறே அரஃபாவுடைய நாள் கூறப்படாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மூசா பின் அலீ என்பவர் மட்டுமே தனது அறிவிப்பில் அரஃபாவுடைய நாளைச் சேர்த்து அறிவிக்கின்றார். பல நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக இவருடைய அறிவிப்பு உள்ளதால் இது பலவீனமானதாகும். இதை அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

உக்பா பின் ஆமிருடைய ஹதீஸை மூசா பின் அலீ என்பவர் மட்டும் தனித்து அறிவிக்கின்றார். இந்தச் செய்தியை பல வழிகளில் அதிகமானவர்கள் அறிவித்துள்ளனர். இவர்களில் இவரைத் தவிர வேறு யாரும் அரஃபாவுடைய நாள் என்ற வார்த்தையைச் சேர்க்கவில்லை.

நூல்: நாசிகுல் ஹதீஸ் வமன்சூகுஹு பாகம்: 1, பக்கம்: 180

மூசா பின் அலீ தனித்து அறிவித்தால் (அதை ஏற்றுக் கொள்வதற்கு) அவர் வலிமையானவர் அல்லர். இந்தச் செய்தியில் அரஃபாவுடைய நாள் சேர்த்துக் கூறப்பட்டிருப்பது தவறாகும். நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், தஷ்ரீக்குடைய நாட்கள் ஆகியவை உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகப் பல வழிகளில் வரும் செய்தியே சரியானது.

நூல்: தம்ஹீத், பாகம்: 21, பக்கம்: 163

எனவே பலவீனமான இந்தச் செய்தியை வைத்து ஆதாரப்பூர்வமான முஸ்லிமில் இடம்பெற்றுள்ள செய்தியை மறுக்க முடியாது.

ஒரு பேச்சுக்கு இதை ஆதாரப்பூர்வமானது என்று ஏற்றுக் கொண்டாலும் இந்தச் செய்தி நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியுடன் முரண்படாது.

ஹாஜிகள் பிறை 9வது நாளன்று நோன்பு நோற்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். எனவே ஹாஜிகளைக் கவனித்தே அரஃபா நாள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாள் என்று கூறப்பட்டுள்ளது என்று முரண்பாடில்லாமல் விளங்கிக் கொள்ள இயலும்.

அடுத்து அரபா நாள் நோன்பு பற்றிய ஹதீஸை பலவீனப்படுத்துவோர் மற்றொரு விமர்சனமும் செய்கிறார்கள்.

முஸ்லிமுடைய ஹதீஸில் அரஃபா நாளில் நோன்பு நோற்றால் முன்பு உள்ள ஒரு வருடத்துக்கும் அடுத்து வரக்கூடிய ஒரு வருடத்துக்கும் அந்த நோன்பு பாவப் பரிகாரமாகி விடும் என்று கூறப்படுகின்றது.

முன் பாவங்களும் பின் பாவங்களும் மன்னிக்கப்படுவது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சிறப்புத் தகுதி. ஆனால் இச்சிறப்பு அரஃபா நோன்பு வைப்பவர்களுக்கு உண்டு என அதற்கு மாற்றமாக இந்தச் செய்தி கூறுகின்றது என இந்த ஹதீஸை விமர்சிப்பவர்கள் குறை கூறுகின்றனர்.

ஆனால் இந்த விமர்சனம் ஏற்புடையதல்ல. ஏனென்றால் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்படுவது நபி (ஸல்) அவர்களுக்கும் மட்டும் உரிய சிறப்பு. வேறு யாருக்கும் இறைவன் இந்த பாக்கியத்தைத் தர மாட்டான் என்று இறைவனோ, இறைத்தூதரோ கூறவில்லை.

நபியவர்களுக்கு இந்தப் பாக்கியத்தை இறைவன் வழங்கினான் என்பது உண்மை. இதனால் அவர்களுக்கு மட்டுமே இச்சிறப்பு உண்டு. மற்றவர்களுக்கு இது வழங்கப்படாது என்று கூற முடியாது.

மேலும் நபி (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்கள் மன்னிக்கபட்டதற்கும் இந்த ஹதீஸில் கூறப்படும் மன்னிப்பிற்கும் இடையே வித்தியாசம் இருக்கின்றது.

நபி (ஸல்) அவர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய அனைத்து பாவங்களையும் ஒன்றுவிடாமல் மன்னித்து விட்டதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இந்தச் செய்தி இப்படிப்பட்ட எல்லையில்லாத மன்னிப்பைக் கூறவில்லை. மாறாக முன்புள்ள ஒரு வருடத்தின் பாவங்கள் பின்புள்ள ஒரு வருடத்தின் பாவங்கள் என எல்லையை நிர்ணயிக்கின்றது. இது முதல் வித்தியாசம்.

நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பைப் பொறுத்தவரை அது குறிப்பிட்ட ஒரு நபருக்கு வழங்கப்பட்ட சிறப்பு என்ற அடிப்படையில் உள்ளது. ஆனால் இந்தச் செய்தியில் கூறப்படும் மன்னிப்பு என்பது குறிப்பிட்ட நபருக்குரியதல்ல. மாறாக குறிப்பிட்ட நல்லறத்திற்கு உரியதாகும். இந்தக் காரியத்தைச் செய்யும் அனைவருக்கும் இந்த மன்னிப்பு கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது.

ஏனென்றால் எண்ணம் சரியில்லாத காரணத்தால் அல்லது வேறு காரணத்தால் இந்த நோன்பை வைத்தவருக்கு இந்தச் சிறப்பு கிடைக்காமல் போகலாம். இது இரண்டாவது வித்தியாசம்.

இந்த ஹதீஸை எப்படியாவது பலவீனமாக்கியே தீர்வது என்ற கருத்தில் உள்ளவர்கள் மற்றொரு வாதத்தை முன் வைத்து இந்த ஹதீஸை நிராகரிக்க முயல்கின்றனர்.

உமர் (ரலி) அவர்கள், “ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எனக்குச் சக்தி அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்பினேன்” என்று கூறினார்கள்.

இவ்வாறு அரஃபா நோன்பு குறித்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்களுக்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் நோன்பு நோற்பதற்கு இறைவன் தரப்பிலிருந்து ஆற்றல் தரப்பட்டு அவ்வாறு நோன்பு நோற்றதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. ஆனால் மேற்கண்ட செய்தி ஒரு நாள் நோன்பு வைத்து இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிட நபியவர்களுக்கு ஆற்றல் இல்லை எனக் கூறுகின்றது. இந்த அடிப்படையில் இது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கு மாற்றமாக உள்ளது என்று வாதிடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு சில நேரங்களில் இறைவன் தரப்பிலிருந்து சிறப்பு ஆற்றல் வழங்கப்பட்டாலும் பல நேரங்களில் அவர்கள் சாதாரண மனிதர்களைப் போலவே இருந்துள்ளார்கள்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் நோன்பு நோற்க சில நேரங்களில் அவர்களுக்கு இறைவனால் ஆற்றல் வழங்கப்பட்டது. பல நேரங்களில் மற்ற மனிதர்களைப் போன்று இதற்கு இயலாதவர்களாக இருந்தார்கள் என்று முரண்பாடில்லாமல் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு நோன்பு நோற்பதற்கு சக்தி அளிக்கப்பட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியது தன் விஷயத்தில் அல்ல. பொதுவான மக்களைக் கவனத்தில் கொண்டு, இது மக்களுக்குச் சிரமமானது என்ற கருத்தில் தன்னையும் அத்துடன் சேர்த்துக் கூறியுள்ளார்கள்.

இதே செய்தி முஸ்லிமில் ஷுஃபா வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள வாசகம் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.

ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விடுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, “இதற்கான வலிமையை அல்லாஹ் நமக்கு அளித்தால் நன்றாயிருக்கும்!” என்றார்கள். (முஸ்லிம் (2152)

அரஃபா நாளில் நோன்பு வைப்பதைச் சிறப்பித்து வரும் இந்தச் செய்தி பல வழிகளில் வந்துள்ளது. இவற்றில் பெரும்பாலான அறிவிப்புகள் பலவீனமாக இருந்தாலும் பலமான அறிவிப்பும் உள்ளது என்பதைக் கண்டோம். மேலும் பின்வரும் அறிவிப்புகளும் எந்தக் குறையும் இல்லாமல் ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளன. இந்த அறிவிப்புகளில் அப்துல்லாஹ் பின் மஅபத் இடம் பெறவில்லை.

அரஃபாவுடைய நோன்பு, கடந்து விட்ட வருடம், எதிர்வரும் வருடம் ஆகிய இரு வருடங்களின் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷூராவுடைய நோன்பு இரு வருடப் பாவங்களுக்குப் பரிகாரமாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி), நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா (2752)

இந்த அறிவிப்பு அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா வழியாக வந்துள்ளது.

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு அவர்கள் “(துல்ஹஜ் ஒன்பதாவது நாள்) அரஃபா அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி),  நூல்: முஸ்னதுத் தயாலிசி, பாகம்: 1 பக்கம்: 84

அப்துல்லாஹ் பின் மஅபதுடைய அறிவிப்பு பலவீனமானது என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் இந்த ஹதீஸ் பலவீனமாகாது. ஏனென்றால் அவர் இடம்பெறாத மேற்கண்ட ஆதாரப்பூர்வமான வழிகளில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது மார்க்கத்தில் உள்ளது என்பதைப் பின்வரும் செய்தி நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக உணர்த்துகின்றது.

அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கின்றார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பானம் அனுப்பி வைத்தேன். அதையவர்கள் குடித்தார்கள்.

அறிவிப்பவர்: உம்முல் ஃபள்ல் (ரலி), நூல்: புகாரி (1658)

அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருப்பது சம்பந்தமாக மக்கள் என்னிடம் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர்.  சிலர் “நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள்‘ என்றும் மற்ற சிலர், “இல்லை’ என்றும் கூறிக் கொண்டிருந்தனர். எனவே, நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் பால் கொடுத்தனுப்பினேன்; அவர்கள் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்து கொண்டே அதைக் குடித்தார்கள்.

அறிவிப்பவர்: உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி), நூல்: புகாரி (1661)

அரஃபா நாளில் நோன்பு நோற்கும் வழக்கம் நபித்தோழர்களிடம் இருந்துள்ளது. எனவே தான் அன்றைய தினத்தில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்களா? என அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படுகின்றது. இந்த நாளில் நோன்பு நோற்பது அவர்களின் வழக்கில் இல்லை என்றால் இவ்வாறு அவர்கள் சந்தேகப்பட்டிருக்க மாட்டார்கள்.

இந்த நோன்பு அரஃபாவில் உள்ள ஹாஜிகளுக்குக் கிடையாது என்பதை நபி (ஸல்) அவர்கள் பாலருந்தி நபித்தோழர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறார்கள். எனவே ஹாஜிகள் அல்லாத அனைவரும் அரஃபா நாளான துல்ஹஜ் பிறை 9 அன்று நோன்பு நோற்பது நபிவழி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.